யதார்த்தத்திலிருந்து எழும் ஆன்மீக அனுபவம்
லிஜோ ஜோஸ் பெள்ளிச்சேரியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ திரைப்படம் அநாயாசமாகத் தொகுக்கப்பட்ட உள்ளடுக்குகளைப் போர்த்தியிருக்கும் எளிமைபோலத் தோன்றும் வடிவத்தைக் கொண்டது.
‘கதை’ என்று மேலோட்டமாகப் பார்த்தால், ஜேம்ஸ் என்னும் பாத்திரத்தினுடைய கனவோ அல்லது அவருடைய மனைவி யுடைய கனவோ, கற்பனையோ, பிரமையோ அல்லது பூர்வஜென்ம வாசனையோ அல்லது இவைபோன்ற ஏதோ ஒன்றோ என்ற தன்மைக்குள் நிகழும் ஒரு மனிதனின் ஒரு நாளைய நடவடிக்கைகள், அவற்றால் எழும் முரண்கள், அவற்றின் சிக்கல் விழும் விதம் ஆகியவைதான் கதை.
மனித அறிவுக்கு மீறி, எதிர்பாராதவற்றின் தொகுப்பே வாழ்க்கையாய் இருப்பதை, சாதாரணம்போலத் தோன்றும் தொனியில் ஆனால் முதுகுத்தண்டு சில்லிட, அடிவயிறு சுருள, விரிந்து வளரும் படம் இது. ஒரு தெறிப்பில் துவைத, அத்வைத மோதல் போலவும், அத்வைத விளக்கம் போலவும் தோன்றும் தத்துவ விசாரத்திற்கும், இன்னொரு நொடியில் நிறமற்ற, பேதங்களற்ற, லெளகீகத்திலிருந்து விடுபட்ட ஆழமான ஆன்மிக அனுபவமாகவும் ஆகிறது. வலிந்த பாவனைகளற்று, எந்தக் கூச்சலுமின்றி.
யதார்த்தமும் மீயதார்த்தமும் முயங்கும் இந்த ஓட்டம் காட்சிப்படுத்தியிருக்கும் விதத்தினாலேயே பூர்த்தியடைகிறது. சினிமாவில் காட்சியானது காட்சிப் புலம், அந்தப் புலம் பகுத்துத் தொகுக்கப்படும் விதம், அதனூடாக நடமாடும் மனிதர்களின் லயம், அந்த லயத்தைத் தீர்மானிக்கும் பாவம், பாவத்தைச் செலுத்தும் ரஸம் (அல்லது ரஸங்கள்), அந்த ரஸங்களின் சதிராட்டம் என்று பல்வேறு கண்ணிகளால் இணைக்கப்படுகிறது. மலையின் உட்புறத்தே, காடும் கரும்புக்கொல்லையுமாக உள்ள வெளிப்புறப் பரப்பு, நெருக்கமான வீடுகள் அமைந்த, குறுகலான தெருக்களால் இணைந்த கிராமத்தின் உட்புறம், அதிலும் ஒரு வீட்டின் உட்புறம் என்ற அடுக்குகளால் பொதியப்பட்டிருக்கிறது.
வேளாங்கண்ணிக்கு யாத்திரை வந்திருக்கும் மலையாளிகள் குழு யாத்திரை பூர்த்தியாகி ஊர் திரும்பும் இடத்தில் தொடங்கும் படத்தின் முதல் காட்சியே உறக்கச் சடவும் உறக்கத்திலிருந்து எழுப்பப்படுவதும்தான். முழுவதும் candid shot close upகளால் இழைத்த மாண்டேஜ் காட்சியில் “இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறான்” என்ற பாடலில் தொடங்கி, படம் முழுதும் தமிழ்த் திரைப்படப் பாடல்களும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் படக்காட்சிகளும் படத்தின் உட்கிடக்கையை வெளிப்படுத்தும் இணைக் கதைகூறலாக இழைகின்றன.
நாடக நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமானது என்று காட்டப்படும் பேருந்தில், வேளாங்கண்ணியிலிருந்து மலையாளி யாத்ரீகர்களின் வீடு திரும்புதலுக்கான குழுப்பயணம் தொடங்குகிறது. வழியில் சாப்பாட்டுக்கு நிறுத்தும் இடத்தில் ஸ்மால் அடிக்கும் ஆண்கள் குழுவும் கழிவறையின் நாற்றத்தை வெறுத்தபடியும் சிரித்தபடியும் கலைந்து சேரும் பெண்களுமாகப் பயணவழி ஓட்டலில் சாப்பிட்டுப் பயணத்தைத் தொடர்கிறார்கள்.
ஓட்டுநர் பாட்டுப் போடுகிறார். “பொன்னொன்று கண்டேன்” பாட்டு. “எதுக்கு தமிழ்ப் பாட்டு, மலையாளப் பாட்டுப் போடு” என்கிறார் ஜேம்ஸ் பாத்திரமாக மம்முட்டி. திரையில் மின்வெட்டாக நடிகர் மம்முட்டியின் முகம் தோன்றி மறைகிறது. மிகப்பழைய மலையாளப் பாட்டு அடுத்து வருகிறது. “மலையாளத்தில் சினிமா வரத் தொடங்கியபோது வந்த பாட்டுத்தான் கிடைச்சதாக்கும்” என்று அலுத்துக்கொள்கிறார் ஜேம்ஸ். பேருந்தின் அகத்தே மதுவினாலும் உண்ட மயக்கத்தினாலும் எல்லோரும் உறக்கத்தில் அமிழ்கிறார்கள். “ஆறோடும் மண்ணில் இந்த நீரோடும்” பாடல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. உறங்கும் முகங்களைக் காமிரா மேய்கிறது. ஜேம்ஸின் மனைவியின் உறக்க முகத்தின் மீது சற்றே நிலைக்கிறது.
ரோட் மூவி போலிருக்கிறது என்று பார்வையாளர் சாய்ந்து உட்காரப் போகும்போது, ஜேம்ஸ் பேருந்தை நிறுத்தச் சொல்லி இறங்குகிறார். மலையும் மலைசார்ந்த அடிவாரப் பகுதியும். நண்பகலின் அமைதியில் ஆழ்ந்திருக்கும் கிராமத்துக்குள் மண் வீடுகள், திண்ணைகளோடுள்ள கல் வீடுகள் அடுத்தடுத்து அமைந்திருக்கும் சின்னச் சின்னக் குறுகலான தெருக்களில் சர சரவென்று நடந்து ஒரு வீட்டை அடைகிறார். உடுத்தியிருக்கும் வேட்டியைக் களைந்து கொடியில் போட்டுவிட்டு லுங்கியை எடுத்துக் கட்டியபடி மாட்டோடு தமிழில் பேசியபடியே அதற்கு வைக்கோல் பிடுங்கிப் போடுகிறார். சமையலறைக்குள் நுழைந்து மளிகைப் பொருள் தீர்ந்திருப்பதைப் பார்த்து, குழலி என்று மனைவியைப் பெயர் சொல்லி அழைத்துத் தன்னிடம் சொல்ல வேண்டாமா, வாங்கி வந்திருப்பேனே என்கிறார். ஒரு கட்டன் சாயாவைத் தயாரித்து எடுத்துவந்து குடிக்கிறார். கறுப்புக் கண்ணாடி அணிந்து தூணில் சாய்ந்தபடி இருக்கும் அம்மாவைத் தவிர மற்ற எல்லோரும் விதிர்விதிர்த்துப்போகிறார்கள்.
காணாமலாகிவிட்ட தன் கணவன் சுந்தரத்தைப் போலவே நடந்துகொள்ளும், பேசும் இவரைப் பார்த்து ஏக காலத்தில் கலக்கமும் வியப்பும் அடையும் மனைவி, ஆழ்ந்த துயரம் மேவிய வியப்புடன் அவதானிக்கும் தகப்பன், இயல்புபோலவே ஏற்றுக்கொள்ளும் அம்மா, இவர்களுக்கு நடுவில், வீட்டிற்குள் நடமாடும், சுந்தரமாக மாறிவிட்டிருக்கிற ஜேம்ஸின் புதிய பாத்திரத்தின் வாலாயமான அடுத்தடுத்த நடவடிக்கைகளும், பேருந்திலிருந்து இறங்கிப்போன அவரைக் காணாமல் தேடிவரும் மலையாளிகளுக்கும் கிராமத்தின் மனிதர் களுக்கும் ஏற்படும் உராய்வு, பிணக்கு, பின்னர் இணக்கம் எல்லாமே இயல்பான கதியில் முன்னேறுகின்றன. ஸ்கூட்டரில் ஏறிப் போனானே, அந்த ஸ்கூட்டர் என்னு டையது என்று சைக்கிளில் தேடித் துரத்தும் காட்சியில், கிராமத்துத் தெருக்களில் ஜேம்ஸ் நடக்கும் காட்சியில், மலையடிவாரத்தின் அகன்ற திரைக் காட்சிகளில் எல்லாவற்றிலும் தேனி ஈஸ்வரின் காமிரா, படத்தின் விஸ்ராந்தியான லயத்தை அபாரமாகக் கட்டமைக்கிறது.
ஸ்கூட்டரில் போன ஆளைக் காணோமேயென்று ஒவ்வொருவரும் தவிக்கும்போதெல்லாம் இந்த நேரம் இன்ன இடத்துக்குப் போவான், இப்படி வருவான் என சுந்தரத்தின் அப்பா விவரிக்கும்போது ராமுவின் நடிப்பு ஓர் அற்புதம். சாதாரணம் போன்ற தொனியில் ஓர் ஆழ்ந்த கேவல்போல அந்த வசனம் வெளிப்படுகிறது. மகனைப் போலப் பேசி நடந்துகொள்ளும் ஒரு புதியவனில் மகனைப் பார்க்கும் அவருடைய பார்வையில் இழப்பின் வலியும் பரிதவிப்பும் அடங்கிய சோகம், ஒளித்துவைத்த மலரின் மணம்போலப் பரவுகிறது.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரத்தக் கண்ணீர் பட வசனங்கள், மதுவருந்தும் பாரில் ஒலிக்கும் கெளரவம் பட வசனங்கள் எல்லாமே தந்தை மகன் காட்சிகளின் ஒலிக்கலவைதான். படத்தின் ஆடியோகிராபர், ஒலிச்சேர்க்கை செய்தவரின் வேலை மிகத் துல்லியம். பேருந்தினுள், பேருந்துக்கு வெளியே, அருகில், தொலைவில், இவற்றுக்கும் மேலாக இரவின் அமைதியில் ஒலிக்கும் “பார்த்த ஞாபகம் இல்லையோ” பாடல் என ஒவ்வோர் இடத்திலும் அவ்வளவு நுட்பமாக வேலை செய்திருக்கிறார். ஒலித்துறையில் ஏழு பெயர்கள் இருக்கின்றன.
அவனுடைய உடுப்பை எடுத்து மார்போடு அணைத்துக்கொள்ளும் மனைவியின் தாபத்தைக் காட்சிப்படுத்தியிருக்கும் விதம், மகன் காணாமலாகியதற்கும் சுந்தரமாக நடமாடும் ஜேம்ஸின் வருகைக்குமிடையில் இடைவெளியே விழாததுபோல, “டிவி தொடருக்கு நேரமாகிறது, சீக்கிரம் வா” என்று கூப்பிடும் அம்மாவை எப்போதும் மாறாத நிலையில் (Static position) காட்சிப்படுத்தியிருப்பது அபாரமான வேலை. பள்ளிக்கூடத்திலேயே செய்தி கேட்டு “இப்படியெல்லாம் பிராடு பண்ண நிறையப் பேர் கிளம்பியிருக்காங்க, உடனே போலீஸில சொல்லணும்” என்று கோபத்தில் கொதித்து வீட்டிற்கு வரும் மகள் கொஞ்சம் கொஞ்சமாக இளகுவதும், “நான் இல்லாம சாப்பிட மாட்டாளே மகள், எப்போதும் என் பக்கத்தில் உட்காருவாளே” என்று சுந்தரமாகிய ஜேம்ஸ் மறுகிக் கேட்கும்போது மனம் குழைந்து அருகில் வந்து அமர்வதும் என அந்தப் பாத்திரத்தை நகர்த்தியிருக்கும் விதம் இன்னொரு அடுக்கைச் சேர்க்கிறது. ஜேம்ஸின் மனைவியும் சுந்தரத்தின் மனைவியும் ஒருவரையொருவர் எதிர்கொள்ளும் விதம் கற்பனை செய்யப்பட்டிருக்கும் விதம், படமாக்கப்பட்டிருப்பது இரண்டுமே சிறப்பு.
லிஜோ ஜோஸ் பெள்ளிச்சேரி
கோவில் புனரமைப்பு வேலை தொடங்கி எத்தனை நாளாகிறது, இப்படி இழுத்துக்கொண்டே போனால் எப்படி என்று கிராமத் தலைவர் வேலையாட்களோடு பேசும் காட்சியில் பதிவாகும் விவரம், பிற்பாடு சுந்தரமாக அவ்வழி நடக்கும் ஜேம்ஸுக்கு “கோயிலில் இவ்வளவு கட்டுமான வேலை எப்போது நடந்தது” என்று நேரும் குழப்பத்தை இணைத்துக்கொள்ளப் பார்வையாளருக்கு வேண்டிப் பொதியப்பட்டிருக்கிறது. செய்திகளைக் கோருவதாக, கலை சார்ந்து எழுப்பப்படும் இரண்டு மோசமான சொற்களான ‘புரிதல்’, ‘அர்த்தம்’ என்பனவற்றைக் கறாராக நிராகரித்துப் படத்தின் அடிப்படையான கட்டமைப்பை எழுப்பியிருக்கும் ஒரு படைப்பில் இது தேவையா என்ற கேள்வி எழுகிறது.
பயண வழியில் உண்ணும் காட்சியில், “இந்தத் தமிழ் சாப்பாடே எனக்குப் பிடிக்கிறதில்லை” என்று வெறுக்கும் ஜேம்ஸ், அதே தமிழ்ச் சாப்பாட்டை சுந்தரமாக மாறி விரும்பிச் சாப்பிடும் இடமும், “எதுக்கு தமிழ்ப் பாட்டு” என்று கேட்டதைத் தொடர்ந்து படம் முழுவதும் துணைப் பிரதியாகவே விரவிக் கிடக்கும் தமிழ் சினிமாப் பாடல்களும், ‘பாண்டி’ என்று பொதுவில் பல மலையாளப் படங்களில் இளக்காரமாகப் பேசும் விதமாக இல்லாமல் மலையாளம், தமிழ் என்ற வேற்றுமையைப் பாத்திரத்தின் மனப்பாங்காகக் கவனப்படுத்தியது இன்னொரு கதையைச் சொல்கிறது.
எளிய தமிழ்க் கிராமத்து நிலப்பரப்பை, வீடுகளை, வாழ்க்கையை, இவ்வளவு இயல்பாக, அழகாக எந்தத் தமிழ்ப் படத்திலும் இதுவரை பார்த்ததில்லை. திரைக்கதை, வசனம் இரண்டிலும் இயக்குநரின் உதவியாளராக கவிஞர், பத்திரிகையாளர் ஜெயக்குமார் (மண்குதிரை)பங்களித்திருக்கிறார்.
ஜேம்ஸாகவும் சுந்தரமாகவும் இரண்டு வேறுபட்ட உடல்மொழி, பேச்சு லயத்தைக் கொண்டுவரும் மம்முட்டியின் நடிப்பு ஒரு ரஸவாதம். அவரது உண்மை யான வயதில் ஏறத்தாழப் பாதி வயதுள்ள கதாபாத் திரத்தில் எந்த நெருடலுமின்றி அவரை ஒப்புக்கொள்ள முடிகிறது. ஒரு நடிகர் தன்னுடைய தோற்றத்தை, உடலைப் பேணுவதில் செலுத்த வேண்டிய கவனத்தைச் சரியாகச் செய்துவருகிறார் என்று தோன்றும்போதே, சில பத்தாண்டுகள் முன்பு அனந்தரம் படத்தில் அவருடைய தம்பியாக நடித்த அசோகன் ஏன் அதைச் செய்யத் தவறிவிட்டார் என்று தோன்றாமலில்லை.
ஜேம்ஸும் சுந்தரமும் ஒத்த தோற்றமுடையவர்கள் என்று காட்சியை அமைக்காதிருப்பதில், அப்படித் தோற்ற ஒற்றுமை இல்லையெனக் காட்சிபூர்வமாக உணர்த்துவதில் இருக்கும் அசாத்தியமான நுட்பம், கற்பனையோ கனவோ காவியமோ எதுவோ எதுவாகவும் இருக்கலாம் என்ற தன்மையைப் படத்துக்கு வழங்குகிறது.
சாவடி போன்ற ஓரிடத்தில் சுந்தரம் தமாசுக் கதை சொல்லும் இடமும் பார் காட்சியும் விறுவிறுப்பாக இருந்தபோதும் வலிந்து பொதிந்தவையாகின்றன. தமிழ்க் கிராமத்து மக்களுக்கும் தனித்தனி இருப்பும் இயல்பும் பாத்திர வார்ப்பும் வரையறுக்கப்பட செயல்பாடுகளும் இல்லையென்றாலும் அவர்கள் காட்சியமைப்போடு இயைந்து போகும்படி அமைந்திருக்கிறது. ஜேம்ஸோடு உடன் வந்த மலையாளிகளுக்குக் கிராமத்துக்குள் வந்த பின்னர், அவரை மீட்டு, தங்களோடு அழைத்துச் செல்வது எப்படி என்ற உரையாடல் பகுதிகள் இருந்தபோதிலும் அவர்கள் பாத்திரங்களாகத் திடப்படுவதில்லை. ஜேம்ஸின் கடந்த காலம் ஏதும் இருக்குமோ என்று அவளிடம் கேட்டறியலாமே என்று ஒரு பெண் கேட்க ஜேம்ஸின் மனைவியைப் பற்றி, “அவ பெரிய அமுக்குணி, செங்கனாசேரிக்காரியல்லவா” என்று ஒரு வசனம், போக்குவழியில் ஒரு காரை நிறுத்திக் கழன்றுகொள்ளும் இருவர் ஆகியவை தவிர மற்றெல்லா நேரங்களிலும் அவர்கள் கும்பல் அடையாளத்துக்குள் தத்தளிக்கிறார்கள். ஆனால் படத்தின் ஓட்டத்தைத் தடை செய்யும் விதமாக இல்லை.
இவை சிறு பிசிறுகள்; புறக்கணிக்கத்தக்கவை.
ஒரு மலையாள இயக்குநரின் இருமொழிப் படம் என்றோ, இல்லை தமிழ்ப் படமேதான் என்றோகூட நாம் பெருமை கொள்ளலாம். ஆனாலும் இந்தத் தரத்தில் ஒரு தமிழ்ப் படம் வரவே வராதா என்ற ஏக்கம் எழத்தான் செய்கிறது.
மின்னஞ்சல்: prasannarama@hotmail.com