கல்வியாளுமையும் மானுட ஆளுமையும்
‘
‘இலக்கியவாதியின் மொழியியல்’ பயணம் எனும் பேராசிரியர் இரா. அறவேந்தனின் அவர்களின் கட்டுரையை வாசித்தேன். அது மொழியியல் பேராசிரியர் சு. இராசாராம் பற்றியதாயிருப்பதால் இந்தக் கடிதத்தை உங்களுக்கு அனுப்ப வேண்டிய கடமையை நான் உணர்ந்து எழுதுகிறேன்.
நான் எழுதுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, அவரிடம் நான் கிட்டத்தட்டப் பத்தாண்டுகள் பணிபுரிந்தவன். இரண்டு, என்னுடைய இன்றைய வாழ்வு வரை அவரின் வழிகாட்டல். எனவே என்னுடைய மனவுணர்வுகளையும் பேராசிரியர் குறித்து இத்தருணத்தில் பகிர்ந்துகொள்கிறேன்.
ஒருபோதும் தன்னைப் பேராசிரியர் என்று காட்டிக்கொண்டதில்லை. தனக்குக் கீழ்ப் பணிபுரிபவர்களிடம் ஒரு சிறு சொல்கூடக் கடிந்து பேசியதில்லை. அதிகபட்சக் கோபமாக அவர் பேசாமல் இருப்பார். என்ன இப்படிச் செய்துள்ளீர்கள், வேறு செய்து வாருங்கள் என்பார். உபசரிப்பில் பாரபட்சம் காட்டமாட்டார். வாருங்கள் சாப்பிடலாம் என்றே அழைத்துப்போவார். நீ, வா என்று ஒருமையில் யாரையும் அழைக்கமாட்டார். பணிசெய்து கொண்டேயிருப்பார்; எழுதிக்கொண்டேயிருப்பார். யாரேனும் துன்பப்படுகிறார்களென்றால் தன்னால் முடிந்ததை உடனே செய்வார். ஆனால் காட்டிக்கொள்ளமாட்டார்.
அவரிடம் பணியாற்றிய காலத்தில் நான் முனைவர் பட்ட ஆய்வாளராக வேறொரு பேராசிரியரிடம் இருந்தேன். ஆய்வு தொடர்பாக எது கேட்டாலும் ஆழமாக அதேசமயம் எளிமையாகக் கூறுவார். ஒரு சமயம் அயல்நாட்டு மலரொன்றிற்கு அவரிடம் கட்டுரை கேட்டபோது என்னை அழைத்து நீங்களும் ஒரு கட்டுரை தாருங்கள் என்று கேட்டு வாங்கிப் பிரசுரிக்க வைத்தார்.
அவர் மேசையெங்கும் தாள்கள், அலுவலக ஆணைகள், அறிக்கைகள் எல்லாமும் இறைந்துகிடக்கும். அதற்கிடையில் அவர் எழுதிக்கொண்டேயிருப்பார். தேவையானவற்றைச் சரியாக அக்குவியலிலிருந்து எடுத்துப் பதிலுரைப்பார்; எதையும் மறக்கமாட்டார். அவரின் ஒலியியல் எனும் நூல்தான் நான் முதலில் வாசித்தது. மிக எளிமையான நூல். தெளிவான நடை கொண்டது. ஆனால் ஆழமாக விவாதங்களையும் கருத்துகளையும் வைத்திருப்பார்.
மொழிப்புல அரங்கில் ஏதேனும் சொற்பொழிவு நிகழ்ந்தால் என்னை அழைத்துப்போய்க் கேட்டு வாருங்கள் என்பார். இளநிலை உதவியாளர் என்பதைத் தாண்டி ஆய்வாளராக என்னை மதித்தவர்.முதுநிலைப் பேராசிரியர், பேராசிரியர், துறைத்தலைவர், எட்டாம் உலகத்தமிழ் மாநாட்டுக் கருத்தரங்க அமைப்புச் செயலாளர் எனப் பல பொறுப்புகளை வகித்தவர் பேராசிரியர்; எந்தவொரு பொறுப்பினின்றும் விலகாதவர். அதேசமயம் பரபரப்பின்றிச் செயல்படுவார். திட்டமிடல் தெளிவாக இருக்கும். மனத்துள்ளிருந்து செயல்பாடுகள் குறித்து வகுத்துப் பிரித்து அதனை எங்களுக்கு வழங்கிச் செய்யவைப்பார். தேநீர் இடைவேளைகளிலும் எங்களுடன் அருந்துகையில் செயல்பாடுகளின் திட்டமிடல்களைப் பகிர்ந்துகொள்வார். ஆய்வாளர்களுக்கு வழிகாட்டல்கள் நடந்துகொண்டேயிருக்கும். அவர்கள் எழுதும் ஆய்வேட்டு இயல்களையும் உடனுக்குடன் திருத்திக்கொடுத்து ஆலோசனைகள் நல்குவார்.
நான் அலுவல்நிலைப் பணியிலிருந்து கல்விநிலைப் பணிக்காக மாறிய உபசரிப்பு விழாவில் என்னைப்போல ஒருவர் பணி செய்ய முடியாது என்று கூறினார். இது எனக்குக் கிடைத்த பெரிய விருது. எத்தனை பேர் வந்தாலும் அன்பழகன்போல வேலை செய்ய முடியாது என்று பாராட்டுச் சான்றிதழ் அளித்தவர்.
இன்றுவரை நான் ஒரு நல்ல கல்வியாளன் என்று பேராசிரியர்களும் மாணவர்களும் பாராட்டும் நிலையில் இருந்து பணியோய்வு பெற்றாலும் இதற்கெல்லாம் வழிகாட்டியவர், சு.இராசாராம்.
மொழியியல், இலக்கணம் சார்ந்த அவரின் ஆய்வுகள் பரந்துபட்ட தளத்தில் பல்வேறு ஆக்கங்களை மொழிக்குத் தந்துகொண்டிருப்பவை.
வீரசோழிய இலக்கணக் கோட்பாடு, ஒலியியல், பெடகாகிகல் அகராதிகள், ஜெர்மானிய அகராதிகள் என அவரின் ஆய்வு நூல்களில் அவர் எடுத்துரைக்கும் ஆய்வுக் கருத்துகள் மொழியியல் கற்றவர்க்கு ஆர்வங்குன்றாத அனைவருக்கும் நிறைய மேலாய்வுக் களங்களை விரித்துக் கொடுப்பவை. அவரின் வழிகாட்டலில் ஆய்வு மேற்கொண்டு முடித்துள்ள மாணவர்களின் முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்புகளும் தனித்துவமிக்கவை.
இன்றும் ஆய்வாளராக, கல்வியாளராக, படைப்பாளியாக இயங்கும் என்னுடைய வாழ்வில் பேரா. சு. இராசாராம் ஒரு கைவிளக்கு. வழிகாட்டும் திசை விளக்கு என்றால் அது புகழ்ச்சியில்லை, உணர்ந்த சத்திய உண்மை.
க. அன்பழகன் (ஹரணி)
அண்ணாமலை நகர்
அண்மையில் U.K. சென்று கடந்த வாரம் திரும்பினேன். உடனே காலச்சுவடு இதழ்களைப் படிக்கத் தொடங்கினேன். தற்போது ஜனவரி 2023 இதழைப் படித்துக் கொண்டிருக்கிறேன். சிறப்புப் பகுதியான ‘இன்றும் காந்தி’ கட்டுரைகளைப் படித்து வருகிறேன். காந்திஜியின் பல்வகைப்பட்ட போராட்டங்கள், அவரது சிந்தனைகள் அனைத்தையும் அவ்வவ் துறை
அறிஞர்களைக் கொண்டு அருமையான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு, காந்தியச் சிந்தனைகள் என்றும் நிலையானவை, பின்பற்ற வேண்டியவை என்பதனைத் தெளிவாகத் தொகுத்துள்ளீர்கள். அருமையான பணி. அனைத்து நூலகங்களிலும் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் இவற்றைப் பயன்படுத்தினால் இன்றைய தலைமுறைக்குக் காந்திஜியின் அரும்பணிகள் சென்று சேரும்.
குறிப்பாக நமது தலித் சகோதரர்கள் எல்லாமே அம்பேத்கர் என்ற கருத்தி யலிலிருந்து காந்திஜியின் தீண்டாமை ஒழிப்புப் பணியின் மேன்மையை உணரச் செய்யும் வண்ணம் ‘இன்றும் காந்தி’ அமைந்துள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் ‘M.A. Gandhian Thoughtt’ பயின்று பட்டச் சான்றிதழ் பெற்றுள்ளேன். அதன் பாடப் பகுதிகளைவிட இத்தொகுப்பு சிறப்பானது என்பது எனது உறுதியான கருத்து. தங்களின் இலக்கியப் பணி, காந்தியச் சிந்தனை மேலும் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.
கே. வைத்யநடேஷ்வரன்
நெய்வேலி