அன்பில் சிறிய பாதைகள்
ஓவியம்: மு. நடேஷ்
1.
ஒரு ஆடையை வரைகிறேன்!
எப்போதும் போல் அது உனக்கு சிறியதாகயிருக்கிறது.
கூர்மையான ஒரு சொல்லின் தீண்டல் போல்
நீ சிரிக்கப் பழகியிருக்கிறாய்.
ஒரு உடலை வரைகிறேன்!
முன்னெப்போதும் போலில்லாமலது
உன் ஆன்மாவிற்கு மிகப் பொருத்தமாக அமைந்து
விடுகிறது.
சிறு விரல்களில் தொட்டுணரும் புண்ணொன்றிற்கான
ஆறுதலை நீ சொல்லிக்கொண்டிருந்தாய்.
ஒரு உலகை வரைகிறேன்!
கைவிடப்பட்டவர்களோடு நீ திரிந்தலைவதற்கு
அது போதுமானதாகயிருக்கிறது.
கைகளால் பின்னிய ஒரு துணியின் பிரியத்தை
அப்பொழுது நீ நூல்நூலாகப் பிரித்துக்கொண்டிருந்தாய்.
*
2.
காயத்தொடங்கும் உடலை மூடுவதற்கென
மணலைக் கொண்டுவரும் கைகளுக்கிடையில்,
அவ்வுடல் சுவாசிப்பதற்கென
சிறுசிறு சன்னல்களை அடுக்கிவரும்
பிஞ்சுக்கைகளை அப்போது நான் கவனித்தேன்.
அதற்கு வேறெதுவும் தெரியவில்லை.
புதைமேட்டின் கடைசிப் பிரார்த்தனைக்கு நடுவே
தான் சுமந்து வந்தவைகளை விட்டுவிட்டு
அது நகரத் தொடங்கியது.
இதற்கு மேல் இங்கு ஒன்றுமிருப்பதில்லை.
எப்போதும் திடீரென முடிந்து போகக்கூடியவை!
அன்பின் இந்தச் சிறிய பாதைகள்.
3.
பேரன்பின் ஒரு துளியினைச் சிமிழியினுள் பொதித்து
மிகக் கவனமாக எல்லோரின் கைகளுக்கும்
விநியோகித்துக்கொண்டிருந்தவள்,
ஒருமுறை அதைத் தவறவிட்டுப் பார்க்கிறாள்.
ரகசியம் உடைந்த அத்தருணத்தில்
பிரபஞ்சத்தில் எதுவும் மாறியிருக்கவில்லை.
உடைந்த ஆயிரமாயிரம் சில்களில்
தெரிந்திடும் துக்கத்தை மறைத்து
நீட்டப்பட்ட பல்லாயிரம் கைகளுக்குக் கொடுத்தனுப்புகிறாள்.
அப்பொழுதும் பிரபஞ்சத்தில் எதுவும் மாறவில்லை.
அன்பை உடைத்துப் பார்ப்பதென்பது
அது சிதையும் துக்கத்தைப் பார்ப்பதுதான்.
4.
கேன்வாசில் உதிர்ந்திடும் இலைகளைச் சேகரிப்பவன்
உலர்ந்த தன்னிதயத்தில் அவற்றை நிரப்பிப் பார்க்கிறான்.
சீழ் நிறைந்த கொப்புளங்களை அவன் இப்படித்தான்
மறைத்துக் கொள்கிறான்.
அதிசயங்களை வரவேற்றிடும்
உலகின் பார்வையாளர்கள்
அச்சிறிய பிறழ்வைக் கண்டு பீதியடைகின்றனர்.
இனிப்புக் கட்டியைப் போலானச் சொற்களைக் கொண்டு
இப்பூமியின் வழியெங்கும்
அலங்கரிக்கப் போவதாக அவன் சொன்னபோது
அரங்கம் ஒருமுறை சலித்து அடங்கியது.
இறுகிய முடிச்சுகள் நிறைந்த தன்னை அவிழ்த்து
எல்லோரையும் அணைத்துக்கொள்ளும் பாவனையில்
ஒன்றைச் செய்து காட்ட முற்பட்டபோதுதான்
கூட்டம் அவனை முழுவதுமாக வெளியேற்றியது.
*
5.
பற்றிக்கொண்டிருக்கும் கைகளை அவன் ஒவ்வொன்றாக
விடுவித்துக்கொண்டபோது
அவனிடமிருந்தது,
நெடிய வாசம் வீசும் மலரின் இதழொன்றும்
சன்னமான வலி நிரம்பிய கீறலொன்றும்தான்.
இதழைக் கீறலினுள் வைத்துத் தைத்து முடித்தான்.
பிரிவுக்கானச் சொல்லொன்றை தேடிக்கொண்டிருந்தபோது
அவனிடமிருந்தது,
ஒரு கூர்மையான ஆயுதமும்
ஒரு இறுக்கமான அணைப்பின் கதகதப்பும்தான்.
எப்போதும் கடைசியில் மிஞ்சும்
ஒன்றுக்கு மேற்பட்டவைகளைக்
கையில் வைத்திருக்கும் தன்னிலையை
அவன் வெறுக்கத் தொடங்கியிருந்தான்.
6.
திரும்பும் வழியில் அவனைப் பார்க்க நேர்ந்தபோது
கொஞ்சம் என்னை மாற்றிக்காண்பித்தேன்.
அவன் நம்பமுடியாமல் என் கண்களையே
வெறித்தபடியிருந்தான்.
அசௌகரியத்தில் மாற்றிக்கொள்ளக் கூடியதான
வாழ்வொன்றை
அவன் ஏனின்னும் தேர்ந்தெடுக்கவில்லை?
அவனைக் கடந்து வெகு தூரம் சென்று திரும்பிப் பார்க்கையில்,
நான் கழற்றிக் கொடுத்த முகத்தினை
கைகளில் வைத்துப் பார்த்தபடியேயிருந்தான்.
மீண்டும் மீண்டும் தனக்குத் தெரிந்த முகங்களின் சாயலைப்
பார்க்க நேரும்போதெல்லாம்
வலிகளைச் சிரிப்பில் கடந்துசெல்லும் வாழ்வொன்றைப்பற்றிக்
கத்திக்கொண்டிருந்தான்.
மின்னஞ்சல்: jeevanbenniepoems@gmail.com