மாற்றத்திற்கு முகம் கொடுக்கும் அடையாளம்
கர்னாடக இசைக் கச்சேரிகளுக்குக் கூட்டம் வருவது அரிதல்ல. அதுவும் சென்னையில் நடைபெறும் மார்கழி இசை விழாவின்போது மியூசிக் அகாடமி போன்ற முன்னணி இசை மையத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற விடுமுறை நாட்களில் ரசிகர்கள் பெரும் திரளாக வருவதும் வழக்கம்தான். ஆனால் கடந்த டிசம்பர் 25ஆம் தேதியன்று காலை நேரக் கச்சேரிக்கு வந்திருந்த கூட்டத்தை வழக்கமான இசைக் கச்சேரிக்கான கூட்டமாகக் கருத முடியாது. அதற்கு இரண்டு காரணங்கள். பல ஆண்டுகளாக மியூசிக் அகாடமியில் பாடாமல் விலகியிருந்த டி.எம். கிருஷ்ணா கலந்துகொண்ட கச்சேரி அது. இன்னொரு காரணம் 2024ஆம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது கிருஷ்ணாவுக்கு அறிவிக்கப்பட்டதையொட்டிச் சங்கீத உலகில் நடைபெற்ற கடுமையான சர்ச்சையும் நீதிமன்ற வழக்கும்.
கிருஷ்ணாவுக்கு விருது அறிவிக்கப்பட்டதும் அதை எதிர்த்து இசைக் கலைஞர்கள் சிலர் மியூசிக் அகாடமிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்க, சிலர் நீதிமன்றப் படியேறி விருதுக்குத் தடை கோரினார்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரை கிருஷ்ணா அவமானப்படுத்திவிட்டார், கர்னாடக இசையுலகின் மதிப்புக்குரிய கலைஞரான எம்.எஸ். சுப்புலட்சுமியை இழிவுபடுத்திவிட்டார், “இனத்துவேஷத்தை விதைத்த” பெரியாரைப் புகழ்ந்து பாடினார் எனப் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள். கிருஷ்ணாவுக்கு விருதளிக்கும் அகாடமியைப் புறக்கணிப்பதாகச் சிலர் அறிவித்தார்கள். கர்னாடக இசையுலகமே களங்கப்பட்டுவிட்டதாக சிலர் கூறினார்கள்.
இப்படிப் பல்வேறு குற்றச்சாட்டுக்களும் அவதூறுகளும் வழக்குகளும் கடந்த சில மாதங்களாக இசையுலகில் புயலைக் கிளப்பிக்கொண்டிருந்த சூழலில் நடைபெற்ற இந்தக் கச்சேரிக்கு வந்த பெரும் திரளான கூட்டத்தைச் சங்கீதம் கேட்க வந்த கூட்டமாக மட்டும் எடுத்துக்கொள்ள முடியாது. சர்ச்சைகளின் மையமாகவும் குற்றச்சாட்டுகளின் இலக்காகவும் இருந்துவரும் கிருஷ்ணாவுக்கு ரசிகர்கள் தெரிவித்த ஆதரவின் வெளிப்பாடாகவே பார்க்க வேண்டும்.
ரசிகர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து இடம் பிடித்ததும் அரங்கினுள் இடமின்றி நூற்றுக்கணக்கானவர்கள் அரங்குக்கு வெளியிலும் மாடிப்படிகளிலும் அமர்ந்தபடி கச்சேரியைக் கேட்டதும் இசைக்கு அப்பாற்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடு. கச்சேரி தொடங்குவதற்கு முன்பு திரை விலகியதும் கிருஷ்ணாவைக் கண்ட ரசிகர்கள் எழுந்து நின்று ஆரவாரம் செய்து வரவேற்றார்கள். அந்த ஆர்ப்பரிப்பு அடங்கச் சில நிமிடங்கள் ஆயின. “நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” என்று ரசிகர்கள் சொல்வதுபோல் இருந்தது இந்த ஆர்ப்பரிப்பு. “அனைத்து வயதினரும் கச்சேரிக்கு வந்திருந்தார்கள். இன்றைய தலைமுறையைச் சேர்ந்த கலைஞர்கள் பலரும் வந்திருந்தார்கள். தன் சமகாலத்தவர்களிடம் கிருஷ்ணாவுக்கு இருக்கும் மதிப்பிற்கான சாட்சியமாக அது விளங்கியது. திரை விலகியதும் ரசிகர்கள் எழுந்து நின்று கைத் தட்டி ஆரவாரம்செய்து கிருஷ்ணாவுக்குத் தங்கள் அன்பை வெளிப்படுத்தினார்கள். மேடையிலேயே நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்து கச்சேரியைக் கேட்டார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். இளைய தலைமுறையினரிடத்தில் கிருஷ்ணாவுக்கு இருக்கும் புகழை இது பறைசாற்றியது” என்று இந்தக் கச்சேரிக்காகவே அமெரிக்காவிலிருந்து வந்திருந்த ஒரு ரசிகர் ‘இலவசக் கொத்தனார்’ என்னும் பெயரில் தன் வலைப்பூவில் எழுதியிருக்கிறார் (https://elavasam.blogspot.com/).
பல்வேறு சர்ச்சைகளையும் மீறி இவ்வளவு பெரிய கூட்டம் வந்திருந்ததை கிருஷ்ணாவுக்கும் அவருக்குச் சங்கீத கலாநிதி விருது அளித்த மியூசிக் அகாடமிக்கும் கிடைத்த அறிந்தேற்பாகவே கொள்ள வேண்டும். அதே சமயத்தில் அந்தக் கச்சேரியை கிருஷ்ணா நடத்திய விதமும் குறிப்பிடத்தக்கது. அமைப்புகளுக்கு எதிராகவும் ஆகிவந்த மரபுகளுக்கு எதிராகவும் கேள்வி கேட்டுவந்த கிருஷ்ணா தான் எதிர்த்துக் கேள்வி கேட்ட அமைப்புகளில் ஒன்றே தனக்கு விருது கொடுத்தபோது தனது கேள்விகளிலோ நிலைப்பாடுகளிலோ சமரசம் செய்துகொள்ளவில்லை. எடுத்துக்காட்டாக, கச்சேரிக்கு அவர் அணிந்து வந்த உடை மரபார்ந்த கர்நாடக இசைக் கச்சேரிகளுக்கு அணிந்து வரும் உடை அல்ல. மேடை அமைப்பும் வழக்கமாகக் கச்சேரிகளில் காணப்படுவதல்ல. கலைஞர்கள் அமர்ந்திருந்த விதம் வழக்கமான பாணியில் அமையவில்லை. எடுத்த எடுப்பிலேயே முகாரி ராகத்தில் தொடங்கியதும் பொதுவான வழக்கத்திற்கு மாறானதுதான். கர்நாடக இசைக் கச்சேரிகளில் தமிழில் பாடுவது புதிதல்ல என்றாலும் சமகால நவீன எழுத்தாளரின் பாடலைப் பாடுவதைக் கிருஷ்ணா மட்டுமே செய்துவருகிறார். இந்தக் கச்சேரியிலும் பெருமாள்முருகன் எழுதிய பாடலைப் பாடினார்.
இப்படி எல்லா விதங்களிலும் கிருஷ்ணா தன்னுடைய பார்வையையும் நிலைப்பாட்டையும் சார்ந்தே அந்தக் கச்சேரியை வடிவமைத்து நிகழ்த்தினார். அமைப்புகளை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்கள் அந்த அமைப்பிலிருந்து அறிந்தேற்போ விருதோ கிடைத்துவிட்ட பிறகு தங்கள் கேள்விகளைச் சுருட்டி வைத்துக்கொண்டு தங்கள் செயல்பாடுகளையும் மாற்றிக்கொள்வதைப் பார்த்துவருகிறோம். ஆனால் கிருஷ்ணா எந்த அறிந்தேற்பும் தன் நிலைப்பாட்டை மாற்ற முடியாது, கேள்விகளை மழுங்கடிக்க முடியாது என்பதைச் செயலில் காட்டியிருக்கிறார்.
மியூசிக் அகாடமியோ மரபார்ந்த கர்நாடக இசை ரசிகர்களோ இதையெல்லாம் கண்டு முகம் சுளிக்கவில்லை; மாறாக வரவேற்றார்கள். பெருமாள்முருகனின் ‘எதையும் பாட சுதந்திரம் வேண்டும்’ என்ற பாடல் தொடங்கியதும் அரங்கம் கைத்தட்டலில் அதிர்ந்தது. கச்சேரி முடிந்த பிறகு மியூசிக் அகாடமியின் தலைவர் என். முரளி கிருஷ்ணாவுக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தபோது அந்தக் கச்சேரி தொடர்பாக இருந்த மனநிறைவு அவர் முகத்தில் தெரிந்தது. மரபார்ந்த இசை ரசிகர்கள் புதுமைகளையும் மாற்றங்களையும் விரும்ப மாட்டார்கள் என்ற கற்பிதம் அன்று தவிடுபொடி ஆயிற்று என்று சொல்லலாம்.
சங்கீத கலாநிதி விருது வழங்கும் நிகழ்வை ஒட்டிக் கருத்தரங்குகளை நடத்துவது மியூசிக் அகாடமியின் வழக்கம். விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரே அந்தக் கருத்தரங்குகளைத் தலைமையேற்று நடத்துவார். கிருஷ்ணா இந்த முறை செவ்வியல் இசை தொடர்பான கருத்தாழமிக்க விவாதங்களுக்கு நடுவில் செவ்வியல் இசையின் எல்லைக்கு வெளியில் இருக்கும் சில இசை வடிவங்களையும் அறிமுகப்படுத்தினார். ஒப்பாரி, கானா பாடல், தெருக்கூத்து ஆகியவற்றை அந்தந்தக் கலைஞர்களே வந்திருந்து நிகழ்த்திக் காட்டினார்கள். அந்த இசை, கலை வடிவங்களைப் பற்றிய உரைகளும் அரங்கேறின. மரபார்ந்த கர்நாடக இசை ரசிகர்கள் அவற்றை ரசித்ததுடன் ஒப்பாரி பாடலைக் கேட்டு நெகிழ்ந்தும்போனார்கள். கர்நாடக இசை உலகம் பிற இசை வகைகளை ஏறெடுத்துப் பார்ப்பதில்லை, அது கட்டுப்பெட்டித்தனமானவர்களின் கூடாரம், புதியவற்றை எதிர்க்கும் பழமையான கோட்டை ஆகிய கற்பிதங்களும் அன்று புதைகுழிக்குச் சென்றன. ஒப்பாரி, கானா ஆகிய இசை வகைகளைப் பற்றிக் கருத்தளவில் அல்லாமல் கலை சார்ந்து அவற்றின் வலிமையையும் இயல்பையும் கிருஷ்ணா செவ்வியல் இசை ரசிகர்களுக்கு உணர்த்தியிருக்கிறார்.
இசை நிகழ்ச்சியின் முடிவில் ரசிகர்கள் எழுந்து நின்று கை தட்டினார்கள். பல நிமிடங்களுக்கு இந்தக் கைத்தட்டல் நீடித்தது. கச்சேரி முடிந்து கிருஷ்ணா அரங்கத்தை விட்டு வெளியே வருகையில் பெரும் வரவேற்பை ரசிகர்கள் அளித்தார்கள். சூழலில் உற்சாகம் அலையடித்தது. பலர் கண்ணீர் சிந்தினார்கள். கிருஷ்ணாவுக்கு ரசிகர்கள் தெரிவித்த ஆதரவின் வெளிப்பாடாக அந்தக் காட்சி அமைந்திருந்தது என்று ‘இலவசக் கொத்தனார்’ பதிவுசெய்கிறார்.
கலை மட்டுமின்றி எந்தத் துறையிலும் காலப்போக்கில் படிந்துவிடக்கூடிய பல்வேறு களிம்புகளையும் கட்டிதட்டிப்போன இறுக்கங்களையும் பரிசீலித்து, வேண்டிய மாற்றங்களைச் செய்து புதுப்பித்துக்கொண்டு இருக்க வேண்டியது அவசியம். தான் சார்ந்த கர்நாடக இசைத் துறையில் டி.எம். கிருஷ்ணா இதற்கான முயற்சிகளை முன்னெடுத்துவருகிறார். இதனால் தனக்கு ஏற்படக்கூடிய எதிர்ப்புகள், நஷ்டங்கள் பற்றிய முழுமையான விழிப்புடன் இதை அவர் செய்துவருகிறார். அவர் எதிர்பார்த்திருக்கக் கூடியதைக் காட்டிலும் அதிக எதிர்ப்பும் அவதூறுகளும் வன்மங்களும் அவர்மீது கொட்டிக் கவிழ்க்கப்பட்டாலும் அயராமல் தனது பாதையில் தொடர்ந்து பயணித்துவருபவர் கிருஷ்ணா. உண்மை என்பது பாதையற்ற நிலத்தில் மேற்கொள்ளும் பயணம் என்று ஜே. கிருஷ்ணமூர்த்தி சொல்லுவதுபோல் கிருஷ்ணா கூர்மையான கேள்விகளுடனும் திறந்த மனத்துடனும் முன்தீர்மானிக்கப்படாத பாதையில் பயணித்துவருகிறார். இசை உலகிற்கு வெளியே அவருக்குப் பல இடங்களிலிருந்து கருத்தளவில் ஆதரவு கிடைத்தாலும் இசை உலகிற்கு உள்ளிருந்து இதுவரை அவருக்குக் கிடைத்தவை மிகுதியும் எதிர்ப்புகள்தான். மாற்றம் மெதுவாகத்தான் வரும் என்பதை உணர்ந்த கிருஷ்ணா தன் பணியைத் தொடர்ந்தார்.
தற்போது காலம் கனிந்திருக்கிறது. சூழலில் மாற்றம் வந்திருக்கிறது. பொதுவாகக் கருதப்படுவதுபோலக் கர்னாடக இசை உலகமும் அதன் ரசிகர்களும் மாற்றத்தை எதிர்ப்பவர்கள் என்னும் கருத்து இந்த இசை விழாவின்போது தகர்ந்திருக்கிறது. கர்னாடக இசையுலகின் முக்கியமானதொரு அமைப்பும் கர்னாடக இசையை ஆதரித்துக் காப்பாற்றிவரும் ரசிகர்களும் கிருஷ்ணாவிடம் மனம் திறந்து உரையாடத் தயாராக இருக்கிறார்கள். கருத்து வேற்றுமைகளைத் தாண்டி அவர் கலையை அங்கீகரித்திருக்கிறார்கள். கிருஷ்ணா உள்பட யாருமே எதிர்பார்த்திருக்க முடியாத அளவில் கர்நாடக இசை உலகின் உள்ளிருந்து அவருக்குக் கிடைத்திருக்கும் ஆதரவு அவரது கச்சேரியிலும் அவர் நடத்திய கருத்தரங்குகளிலும் தெளிவாக வெளிப்பட்டன. இது கிருஷ்ணாவுக்கும் அவரை ஆதரித்தவர்களுக்குமான வெற்றி என்பதைவிட மாற்றத்திற்கு முகம் கொடுக்கும் அடையாளம் என்ற அளவில் கர்நாடக இசை உலகின் வெற்றி என்று சொல்லலாம்.
அனைத்தையும் சொல்லும் சுதந்திரம் வேண்டும், அனைத்தையும் பற்றிக் கேள்வி கேட்கும் சுதந்திரம் வேண்டும், எல்லா மட்டங்களிலும் சமத்துவம் வேண்டும், சாதிய, பாலினப் பாரபட்சங்கள் நீங்க வேண்டும், மேலோட்டமான பாவனைகளையும் அர்த்தமற்ற சம்பிரதாயங்களையும் விட்டுவிட்டுக் கலையின் ஆன்மாவைத் தரிசிக்க வேண்டும், அதன் உண்மைப் பொருளை உணர வேண்டும் என்னும் கண்ணோட்டங்களின் அடிப்படையில் கேள்விகளை எழுப்பிவந்த கிருஷ்ணா, சரியான பொருளில் கலை உலகில் புரட்சி நிகழ்த்தியிருக்கிறார். நேர்மையான, கூர்மையான கேள்விகளின் மூலம், ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளின் மூலம் அமைப்பைச் சீரமைக்கும் புரட்சி இது. ஒவ்வோர் அமைப்பையும் காலத்திற்கேற்பப் புதுப்பிக்க வேண்டியது அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களின் கடமை. இந்த ஆண்டு மியூசிக் அகாடமியின் விருதும் அதை ஒட்டிய நிகழ்வுகளும் அந்தக் கடமையின் செயல்பூர்வமான அடையாளமாக விளங்குகின்றன.