எம்டி: சில நினைவுகள்
எம்டியை நான் முதலில் சந்தித்தது 1968இல். ஜான் ஆப்ரஹாமுக்கு எம்டியுடன் நெருங்கிய பழக்கமிருந்தது. ஒருநாள் ஜான் என்னிடம் கேட்டார். ‘எம்டியைச் சந்தித்திருக்கிறீர்களா?’ நான் சொன்னேன். ‘இல்லை’. அப்படியாக ஒருநாள் நானும் ஜானும் காஞ்சிரப்பள்ளியிலிருந்து எம்டியைப் பார்க்கப் போனோம். நான் மாத்ருபூமியில் கதையெழுதத் தொடங்கி அப்போது நான்கு வருடங்களாகியிருந்தன. 1964இல் என்னுடைய முதல் கதையை முதன்மை ஆசிரியர் என்.வி. கிருஷ்ண வாரியர், துணை ஆசிரியர் எம்டி இருவரும் இணைந்து மாத்ருபூமி வார இதழின் குடியரசு தினப் பதிப்பில் மலையாளக் கதையாக வெளியிட்டார்கள். அதன் பிறகு எம்டியுடன் கதைகள் குறித்து எப்போதாவது மட்டுமான கடிதத் தொடர்பே இருந்தது.
நானும் ஜானும் நண்பகலில் பத்திரிகை அலுவலகத்தின் படியேறிச் சென்றபோது எம்டி சக ஊழியர்களுடன் வேலைபார்த்துக்கொண்டிருந்தார். ஜான் என்னை அறிமுகப்படுத்தினார். எம்டி மகிழ்ச்சியடைந்தார். சற்று நேரம் குசல விசாரிப்புகள் நடத்தினோம். ‘சாப்பிடப் போகலாம்’ என்றார் எம்டி. தரித்திரர்களான எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சி. எம்டி சட்டைப் பையைத் துழாவினார். பாக்கெட் காலி என்று புரிந்தது. சக ஊழியர் ஒருவரிடம் கடன் வாங்கினார். எங்களையும் அழைத்துக்கொண்டு ஒரு பாருக்கு வந்தார். போதுமான அளவு பீரும் உணவும் வாங்கிக் கொடுத்து எங்களை உபசரித்தார். நிறையப் பேசினோம்; பிரிந்தோம்.
அடுத்த சந்திப்பு 1971இல். மறுபடியும் நானும் ஜானுமே கதாபாத்திரங்கள். கோயம்புத்தூர் வீட்டிலிருந்து ஒருநாள் திருச்சூர் கரண்ட் புக்ஸில் எனக்கு வர வேண்டியது என்று நான் யோசித்துச் சலித்துப்போன ராயல்டி தொகையைப் பெறுவதற்காகப் புறப்பட்டோம். ‘குன்று’ என்ற என்னுடைய முதல் தொகுப்பை கரண்ட் புக்ஸ்தான் வெளியிட்டிருந்தது. என் நினைவு சரியென்றால் அதன் விலை ரூ 1.75. எனக்கு ஆயிரக் கணக்கில் கிடைக்க வேண்டியிருந்தது என்று நானும் ஜானும் தீர்மானித்ததன் விளைவு அந்தப் பயணம்.
கரண்ட் புக்ஸுக்கு, அச்சுமொழியில் சொல்வதானால், நாங்கள் மது மயக்கத்தில் சென்றோம். உரிமையாளர் தாமஸ் முண்டசேரி அங்கில்லை. மானேஜர் மட்டுமிருந்தார். நானும் ஜானும் விரும்பத்தகாத முறையில் நடந்து எங்களுக்குப் பிடித்த நிறையப் புத்தகங்களைப் பலவந்தமாக எடுத்துக்கொண்டு வந்தோம். அங்கிருந்து எதற்கென்று தெரியாமலே நாங்கள் கோழிக்கோட்டில் எம்டியிடம்தான் போனோம். அங்கே போனபோது போதை தெளிந்திருந்தது. ஆனாலும் ராயல்டி நிலுவை பற்றிய கனவு முடிந்திருக்கவில்லை. நாங்கள் சென்றுசேர்வதற்குள் தாமஸ் தன்னுடைய நண்பர் எம்டியிடம் எங்கள் பராக்கிரமங்களைப் பற்றித் தொலைபேசிமூலம் புகார் சொல்லியிருந்தார். எங்களது முட்டாள்தனத்தைப் பற்றியும் புத்தக விற்பனை பற்றிய அறிவீனத்தைக் குறித்தும் எங்களுடைய செயல்களின் மரியாதைக் கேட்டைப் பற்றியும் எம்டி எங்களுக்கு எடுத்துச் சொல்லிப் புரியவைத்தார்.
மீண்டும் பீரும் உணவும் வாங்கிக்கொடுத்துத் திரும்பிச் செல்வதற்கான வண்டிக் கூலியையும் கொடுத்து அனுப்பி வைத்தார். எங்களுடைய போக்கிரித்தனத்தை வைத்து எம்டி எங்களை அளக்கவில்லை. அதுபோன்ற மாறா ஒழுக்கத்தின் வாளை உருவிவைத்துக்கொள்வது எம்டிக்கு அந்நியமான செயல். எங்களுடைய சாகசங்களை எம்டி ஒருவேளை ரசித்திருக்கலாம் என்பது என் அனுமானம். காரணம், எங்களுடைய நடவடிக்கைகளைப் பற்றிச் சொன்னபோது அவர் சிரித்துக்கொண்டிருந்தார்.
பின்னர் ஓய்வெடுப்பதற்காகவும் உரையாடுவதற்காகவும் கோயம்புத்தூருக்கு வருவார். என்னுடைய திருமணம் முடிந்ததும் வீட்டுக்கு வந்து என் மனைவி அளித்த சிறு விருந்தை ரசித்து உண்டார். கோடம்பாக்கத்துக்குப் பயணம் செல்லும்போது எனக்கு போன்செய்து முன்பே தெரிவிப்பார். பயணத்துக்கு உதவும் சாமக்கிரியைகளுடன் நானும் ஜானும் போத்தனூர் ரயில் நிலையத்தில் காத்திருப்போம். அவற்றை ஒப்படைப்போம்.
என்னையும் ஜானையும் எம்டி விரும்பியது நாங்கள் இளைஞர்கள், வாசிப்பில் பிரியமுள்ளவர்கள், கலை நேயர்களாய் இருந்ததால் மட்டுமே என்று நான் எண்ணவில்லை. நாங்கள் கபடர்கள் அல்லர் (என்று நம்புகிறேன்) என்பதனாலாக இருக்கலாம் என்று கருதுகிறேன். இளையவர்களான எங்களுக்கு எம்டி கொடுத்த சம மரியாதையை நாங்கள் துஷ்பிரயோகம் செய்யவில்லை, சுதந்திரத்தைச் சுரண்டவில்லை, நாங்கள் ஒருபோதும் எம்டியை வழிபட முயன்றதில்லை என்பதே ஜான்மீதும் என்மீதுமிருந்த நம்பிக்கைக்குக் காரணம் என்று எண்ணுகிறேன். ஏனெனில் வழிபாட்டின் உள் நோக்கம் என்னவென்று எம்டிக்கு நன்றாகவே தெரியும்.
பரமு அண்ணன் என்று நாங்கள் அழைத்திருந்த சோபனா பரமேசுவரன் நாயர் 90களின் மத்தியில் ஒரு நாள் என்னிடம் சொன்னார்: ‘அடேய், நாம் வாசுவை ஒருமுறை பார்க்க வேண்டும். ஒரு காரியம் பேச வேண்டியிருக்கிறது.’
திருச்சூரில் ஒரு ஓட்டல் அறையில் நாங்கள் மூவரும் உட்கார்ந்திருந்ததை நினைவுகூர்கிறேன். பரமு அண்ணன் சினிமா எடுக்க ஆசைப்படுகிறார். நான் திரைக்கதை எழுத வேண்டும் என்பதுதான் அண்ணனின் யோசனை. எம்டியிடம் தெரிவித்தபோது சொன்னாராம். ‘நான் முன்பு சக்கரியாவுக்கு ஒரு திரெட் கொடுத்திருந்தேன். சக்கரியா அதை நன்றாக எழுத முடியும். எழுதி முடித்தபின் நான் சரிபார்க்கிறேன்.’ வைதீகக் கிறித்துவக் குடும்பத்திலிருந்து கன்யாஸ்திரியாகச் சென்ற இளம் பெண் விரத உறுதிமொழி அளிப்பதற்கு முன்பே கன்யாஸ்திரி வாழ்க்கையைக் கைவிட்டுத் திரும்பி வந்தால் என்ன நடக்கும் என்பதுதான் எம்டி எனக்குக் கொடுத்த திரெட். எம்டி அன்று சொன்ன உண்மையான வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன. ‘கிறித்துவ வாழ்க்கையின் உள் விவகாரங்கள் எனக்குத் தெரியாது. சக்கரியாவுக்குத் தெரியும். சக்கரியா எழுதட்டும்.’ இரவு வெளுக்கும்வரை நாங்கள் அந்தக் கதையையும் பிற அநேகக் கதைகளையும் பேசிக்கொண்டு அந்த அறையில் இருந்தோம். நான் தாமதியாமல் திரைக்கதை எழுதத் தொடங்கினேன். அது முன்னோக்கி நகரவில்லை. பரமு அண்ணனின் திட்டமும் முன்னகரவில்லை.
துஞ்சன்பறம்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்க எம்டி முதலில் அழைத்தபோது தயங்கினேன். முதன்மை ஓட்டத்தைச் சேராத ஒருவனாக இருக்கவே விரும்பினேன். எம்டி எனக்குச் சொன்ன அறிவுரையை நினைத்துப்பார்க்கிறேன். ‘இதுபோன்ற பின்வாங்குதலில் அர்த்தமில்லை. வேறுபாடுகளை ஏன் ஒதுங்குதலாக மாற்ற வேண்டும்? அங்கே வந்து ஆட்களை எதிர் கொள்ளுங்கள். சொல்ல வேண்டியதைச் சொல்லுங்கள்.’
மாத்ருபூமியின் ஆசிரியத்துவத்திலிருந்து இறுதியாக விலகும்வரை எங்கள் கடிதத் தொடர்பு நீடித்திருந்தது. சில சமயம் கதை கேட்பார். சில சமயம் தில்லி வருகை பற்றித் தெரிவிப்பார். அரை நூற்றாண்டுக்கும் மேலாக நிலவிய உறவு. பல சமயங்களிலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகுதான் நாங்கள் சந்தித்திருந்தோம். ஆனால் கொஞ்சம் முன்பு நிறுத்தியிருந்த உரையாடலை மறுபடியும் தொடங்குவது போன்ற தொடர்ச்சியிலும் இருந்தோம். என்னைப் பற்றி எம்டிக்குச் சில உறுதிப்பாடுகள் இருந்தன என்பதே அதன் பொருள் என்று கருதுகிறேன். எம்டியைப் பற்றி எனக்கு இருந்ததைப்போல.
நானறிந்த எம்டி மனம் விட்டுப் பேசுகிறவர். வேடிக்கை சொல்கிறவர். சாதி மத வேறுபாடுகளை மனதின் மூலையில்கூட நுழைய அனுமதிக்காதவர். மனிதன் என்ற தகுதியில் தனது முழு எளிமையைக் கவனமாக நிலைநாட்டிக்கொண்டவர். இறுதிவரையிலும் எம்டி அப்படித்தான் இருந்தார்.
ஏறத்தாழத் தனிப்போக்காக மலையாள இலக்கியத்தில் நவீனத்துவ யுகம் உருவானபோதும் ஒன்றுக்கும் மேற்பட்ட நவீனத்துவத் தலைமுறைகள் மலையாளச் சூரியனின் கீழ் நிறுவப்பட்டபோதும் எம்டி செல்வாக்கு மிக்க இதழாசிரியராக இருந்தார். எனினும் நவீனத்துவ நடைமுறைகளைச் சார்ந்திருக்கவில்லை. அது தன்னுடைய வழியல்ல என்று அவருக்குத் தெரிந்திருந்தது. மரபான வெளிப்பாட்டு முறைகளையே தன்னுடைய எழுத்தில் நிலைநிறுத்தினார். நவீனத்துவம் ஒதுக்கிய உணர்வுகளை அநாயாசமாகவே எதிர்கொண்டார். கதை மாந்தர்களின் அக உலகங்களை மாந்திரீக ஈர்ப்புடன் மிக எளிய மொழியில் எழுத்திலும் சினிமாவிலும் முன்னிருத்தினார். மனதை உலுக்கும் அரிய உணர்ச்சித் தருணங்களைப் படைத்தார். அவையெல்லாம் இணைந்துதான் இலட்சக்கணக்கான இதயங்களில் எம்டியைக் குடியமர்த்தின. மிகவும் எளியவர்களின் அகத்தில் துடிக்கும் வாழ்க்கைத் தருணங்களில் ஊன்றிய கற்பனாவாதத்தையே எம்டி படைத்தார்.
எழுத்து, வரலாறு, சிந்தனை ஆகியவற்றின் மையத்தை நன்கறிந்தவராக இருந்தும் தன்னை ஓர் அறிவுஜீவியாக எம்டி கருதியதில்லை. நாட்டுப்புறத்தானின் இயல்புடன் தனது அறிவைக் கையாண்டார். அது எம்டியின் அடிப்படை மானுடப் பற்றின் முகமாக இருந்தது.
வழிபாட்டு விக்கிரமாகச் செதுக்கப்பட்டபோதும் தன்னைச் சுற்றிக் கூட்டத் துதிப்பாடல்களும் வழிபாட்டின் மிகையுரைகளும் புரண்டபோதும் அவற்றுக்கு மத்தியில் மனம் மயங்காமல் தன்னுடைய வேலையைச் செய்து வாழ்ந்த கலைஞனாக இருந்தார் நான் அறிந்த எம்டி. தான் யார் என்பதில் அவருக்குத் தெளிவான போதமிருந்தது. அதைப் போலவே தனது வரையறைகளைப் பற்றியும்.
சிரிக்காத எம்டி, கனவானான எம்டி போன்ற பொக்கான ஒப்பனைகள் அவருக்கு அணிவிக்கப்பட்டன. அந்த விலக்கம் வெளிப்படையாகச் சிரிக்காத ஒரு நாட்டுப்புறத்தானின் இயல்பு மட்டுமல்ல; அது தன்னைச் சூழ்ந்திருந்த முகஸ்துதிகளும் மிகைப் பேச்சுகளும் நிறைந்த உலகத்துடனான எதிர்ப்பும்கூட. ஆராதனையின் வெற்றுச் சொற்கள் சேம்பு இலைமேல் விழுந்த நீர்த்துளிகள்போல எம்டியைத் தொடாமல் மண்ணில் விழுந்தன. பஷீர் ஒருமுறை சொன்னதாகத் தோன்றுகிறது. ‘ஆராதனை கூடாது என்றால் அதையும் ஓர் ஆராதனையாக்குகிற சூழலில் எழுத்தாளன் செய்ய வேண்டியதெல்லாம் எழுதிக் கொண்டேயிருப்பது மட்டுமே.’
நானறிந்த எம்டி தன்னைச் சூழ்ந்த மகிமையின் நடுவிலும் புகழின் நடுவிலும் முழு அந்நியனாக வாழ்ந்தவர்.ஒரு கிராமத்தானின் எளிய சிந்தனையிலும் வாழ்க்கை அணுகுமுறையிலும் காலூன்றி நின்றவர் தனது கற்பனையுடனும் சிந்தனையுடனும் மனச்சாட்சியுடனும் கொண்ட பொறுப்பை மதிப்பார்ந்த முறையில் மேற்கொண்ட முழுமையான வெளியாள். எல்லாப் பெரும் கலைஞர் களையும் போலக் களங்கமற்ற தனியர்.
- மலையாளத்திலிருந்து தமிழில்: சுகுமாரன்