வரலாற்றைச் சொல்லும் வாடிவாசல்
வரலாற்றைச் சொல்லும் வாடிவாசல்
வாடிவாசல் கிராஃபிக்ஸ் நாவல் வெளியீட்டு விழா
தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றான ஜல்லிக்கட்டு பற்றிய நவீன செவ்வியல் படைப்பான சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல் நாவல் வரைகலை வடிவில் வெளியாகியுள்ளது. கேரள ஓவியர் அப்புபனின் உயிர்த் துடிப்புள்ள ஓவியங்களால் உருவாகியிருக்கும் இந்த கிராஃபிக்ஸ் நாவலுக்கான பிரதியை எழுதியவர் பெருமாள்முருகன். காலச்சுவடு வெளியிட்டுள்ள இந்த நூலின் வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 6ஆம் தேதியன்று சென்னைப் புத்தகக் காட்சியில் காலச்சுவடு அரங்கில் வெளியிடப்பட்டது. நூலைத் தமிழகத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வெளியிட, எழுத்தாளர் கல்யாணராமனும் யாவரும் பதிப்பகத்தின் பதிப்பாளர் ஜீவ கரிகாலனும் பெற்றுக்கொண்டார்கள். நிகழ்ச்சியில் அமைச்சர் ஆற்றிய உரையின் சுருக்கத்தை இங்கே வெளியிடுகிறோம்.
ஏறு தழுவுதல் என்றும் சல்லிக்கட்டு என்றும் அழைக்கப்படும் விளையாட்டு தமிழ்ப் பண்பாடு, நாகரீகம், வரலாறு, இலக்கியம் என்று தமிழர்கள் வாழ்வுடன் பின்னிப் பிணைந்துள்ளது. இந்த வீர விளையாட்டு தென் மாவட்டங்களின் அடையாளம் என்னும் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை ஒரு மதுரைக்காரனாக என்னால் சொல்ல முடியும்.
சங்க இலக்கியத்தில், குறிப்பாகக் கலித்தொகையில் இதன் பெருமையைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். வெறும் ஆண்களைச் சார்ந்த விளையாட்டாக இல்லாமல், பெண்கள் வீரமிகு காளைகளை வளர்ப்பதையும், காளைகளைக் கட்டுப்படுத்தும் ஆண்மகனைத் திருமணம் செய்துகொள்வேன் என உறுதி ஏற்பதையும் நாம் சங்க இலக்கியத்தில் காண்கிறோம். “கொல்லேற்றுக் கோடு அஞ்சு வானை மறுமையும் புள்ளாலே ஆய மகள்” என்கிறது கலித்தொகை. காளையின் கொம்புக்கு அச்சம் கொள்பவனை ஆயர்மகள் அடுத்த பிறவியில்கூடக் கணவனாக ஏற்க மாட்டாள் என்பது அதன் பொருள்.
இந்தப் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் நான் பங்கேற்க போகிறேன் என்று அறிந்த என் சகோதரன் விஜய் ராஜன் என்னிடம் சல்லிக்கட்டு பற்றிய ஒரு கவிதையை அனுப்பினார். அந்தோணி முத்துப்பிள்ளை என்பவர் எழுதிய இந்த “சல்லிக்கட்டு சிந்து”, 1907ஆம் ஆண்டு உத்தமபாளையம் கருத்த ராவுத்தர் நடத்திய ஜல்லிக்கட்டை மய்யமாகக் கொண்டது. சி.சு. செல்லப்பா எழுதிய வாடிவாசல் குறுநாவல் 1949இல் வெளியாகிறது, அதற்கு 30 ஆண்டுகள் முன்பே இந்தக் கவிதை எழுதப்பட்டிருக்கிறது. சல்லிக்கட்டு நிகழ்ச்சியைத் தமுக்கடித்துச் சொல்லி மக்களிடம் கொண்டுசேர்ப்பது, பச்சை மூங்கிலால் வாடிவாசல் அமைப்பது, காளையை வாசலில் உருவி விடுவது, சல்லிக்கட்டு நிகழ்வையொட்டிக் கிராம மக்களின் வீட்டில் தோரணம் கட்டுவது என்றெல்லாம் இந்தக் கவிதையில் சித்தரித்திருக்கிறார்கள்.
மக்கள் கூட்டம் தாங்காமல் போவதும்
வியந்துபோய் மக்கள் மரங்கள் மீது ஏறிக்கொள்வதும்
என்ற கவிதையைப் படிப்பதில் நமக்குத் தமிழர் பண்பாட்டை ரசிக்க முடிகிறது. செல்லப்பாவின் நாவலில் ‘செல்லாயிபுரத்தில் நடக்கும் சல்லிக்கட்டு’ பற்றிக் கதை வடிவில் படிக்கும்போது அது நம்மை இன்னும் அதிகமாக ஈர்க்கிறது.
மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கும் இலக்கியம் மட்டுமே காலம் கடந்து உயிர்ப்புடனும் செழிப்புடனும் இருக்கும். தமிழர் வரலாற்றைச் சொல்லும் வாடிவாசல், இன்றைக்கும் உலகத் தமிழர்களை ஈர்க்கிறது. வீரமிகு மக்கள் எங்கிருந்தாலும் அவர்கள் நெஞ்சிலும் நீங்கா இடம் பிடிக்கிறது
தமிழ் இலக்கிய உலகில் தனக்கென்று ஒரு தனியிடத்தைப் பிடித்தவர் என் அன்பு அண்ணன் பெருமாள்முருகன். என்னிடத்தில் அவர் வைத்திருப்பது அன்பு மட்டும் இல்லை, அதீத அக்கறையும்கூட. அவரால் மாற்றியமைக்கப்பட்டு, மறுஉருவாக்கம் செய்யப்பட்ட வாடிவாசல் நூலை கிராஃபிக் நாவல் வடிவில் படிக்கும்போது நான் மீண்டும் அவர் சிறப்பை உணர்ந்தேன். “வெறிகொண்ட காளையை வெறும் கைகளால் அடக்கிக் கட்டுப்படுத்துவதுதான் இந்த விளையாட்டு. காளை புனிதமானது, அரங்கில் இரத்தம் சிந்தக் கூடாது” என்று எழுதும்பொழுது பெருமாள்முருகன் ஒரு கவிஞராகவும் பரிணமிக்கின்றார்.
ஓவியர் அப்புபன் பற்றியும் நான் குறிப்பிட்டாக வேண்டும். அவர் எழுதிய Dream Machine (Implications of AI) என்னும் நூல் என்னிடம் ஓராண்டிற்கு முன்பே வந்துசேர்ந்தது. தொழில்நுட்ப எதிர்கால உலகத்தை எந்தக் கலைநுட்பத்துடன் வரைந்திருக்கிறாரோ, அதற்கு முற்றிலும் வேறுவிதமாக வாடிவாசல் நூலில் இருபதாவது நூற்றாண்டின் தென்தமிழ்நாட்டின் கிராமப்புற வாழ்க்கையைச் சித்தரித்திருக்கிறார். இரண்டு நூல்களும் ஒரே கலைஞனின் உருவாக்கம் என்பது நம்மை வியக்க வைக்கிறது.
எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கும், ஓவியர் அப்புபன் இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டைத் தெரிவித்துக்கொள்கிறேன்.