அதீத எதிர்வினைகளின் ஆபத்து
சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவி கடந்த டிசம்பர் 23ஆம் தேதியன்று பல்கலை வளாகத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது தமிழக அளவில் பேசுபொருளானது. பல்கலை வளாகங்களில் மாணவிகளின் பாதுகாப்புக் குறித்து எதிர்க்கட்சிகளும் பல்வேறு ஊடகங்களும் கேள்விகளை எழுப்பின. அரசியல் களத்திலும் மரபார்ந்த ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் முன்வைக்கப்பட்ட கடுமையான விமர்சனங்கள் இவ்விவகாரம் தொடர்பில் அரசுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தின. 25ஆம் தேதி ஞானசேகரன் என்பவர் குற்றத்தை நிகழ்த்தியவராக மாணவியால் அடையாளங்காட்டப்பட்டுக் கைதுசெய்யப்பட்டார். இதேபோன்று புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளும் வடமாநில மாணவியொருவரைப் பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சித்த நிகழ்வும் கவனத்துக்கு வந்திருக்கிறது. சென்னை ஐஐடி வளாகத்திற்கு வெளியிலும் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்ட சம்பவங்கள் பாதுகாப்பற்ற சூழலை உறுதிசெய்கின்றன.
அண்ணா பல்கலைக்கழக வழக்கில் பாலியல் துன்புறுத்தல், கல்வி வளாகங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பு ஆகியவை தவிர வேறு சில பிரச்சினைகளும் எழுகின்றன. முதலில் பாதிப்புக்குள்ளான மாணவியின் அடையாளங்கள் வெளிப்படுத்தப்பட்டன. தொழில்நுட்பக் கோளாறால் அடையாளங்கள் வெளிவந்துவிட்டதாகச் சென்னை காவல் ஆணையர் அருண் பதிலளித்தார். குற்றம்சாட்டப்பட்டவர் திமுகவைச் சேர்ந்தவர் என்னும் தகவலும் வெளியானது. அவருடைய வாக்குமூலம் பெயர் குறிப்பிடாமல் அதிகாரப் பீடத்தில் இருக்கும் ஒருவரையும் இந்த விவகாரத்தில் இழுத்துவிட்டது. காவல்துறை ஞானசேகரனை எவ்வித விசாரணையும் இன்றிக் குற்றவாளி எனக் கூறியது. அவர் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். இது தொடர்பான வழக்கில் நீதித்துறை தீர்ப்பளிக்காமல் காவல்துறையினர் எவ்வாறு அவரைக் குற்றவாளி என அறிவிக்க முடியும் ஊடகங்களும் அவரைக் குற்றவாளி என அறிவிக்கின்றன.
இந்த விவகாரத்தில் தமிழக அரசின்மீது எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தபோது திமுக ஆதரவாளர்கள் பதிலடி கொடுக்கக் களமிறங்கினர். ஆனால் இந்தப் பதிலடிகள் பாதிக்கப்பட்ட பெண்மீது களங்கம் சுமத்துவதாக அமைந்தன. “அந்தப் பெண் அந்த நேரத்தில் அங்கு ஏன் போனார்? அங்கே என்ன செய்துகொண்டிருந்தார்?” என்பனபோன்ற கேள்விகளை அவர்கள் முன்வைத்தார்கள். நிர்பயா சம்பவத்தின்போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் உள்படப் பலர் முன்வைத்த அதே கேள்விகள் இவை. ஒரு பெண்ணின் நடமாட்டத்தையும் தான் எங்கே யாருடன் எப்போது இருக்க வேண்டும் என்பதில் அவருக்கு இருக்கும் சுதந்திரத்தையும் பற்றிய குறைந்தபட்ச அறிதல்கூட இல்லாத நுண்ணுணர்வற்ற கேள்விகள் இவை. நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளில் ஊறிய ஆணாதிக்கச் சமூகம் எழுப்பும் இந்தக் கேள்விகளை எழுப்பி இவர்கள் தமது நிஜ முகங்களை அம்பலப்படுத்திக்கொண்டார்கள். எதிர்க்கட்சிகளின் கேள்விகளை அமைச்சர்களும் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவும் பொறுப்புடன் எதிர்கொள்ளவில்லை. பொள்ளாச்சி கூட்டு வன்புணர்வு விவகாரத்தை முன்னிருத்திக் கேள்வியெழுப்பினார்கள். ஒரு பிரச்சினை குறித்த கேள்விக்கு அதேபோன்ற இன்னொரு பிரச்சினையைப் பதிலாக முன்னிருத்துவது இரு பிரச்சினைகளையும் மழுங்கடிக்கச் செய்யவே பயன்படும்.
கருத்தளவிலான எதிர்வினைகள் இப்படியிருக்க, தமிழக அரசு பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகளைக் கடுமையாக்கும் செயலில் இறங்கியது. 2023ஆம் ஆண்டில் மத்திய அரசு இயற்றிய சட்டங்களான இந்தியத் தண்டனைச் சட்டம் (பி.என்.எஸ்), இந்தியக் குடிமைப் பாதுகாப்புச் சட்டம் ஆகிய (பி.என்.எஸ்.எஸ்) சட்டங்களைத் தமிழ்நாட்டுக்கு ஏற்ற வகையில் திருத்தம் செய்யும் மசோதாக்களை, முதல்வர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்தார். வாக்கெடுப்பின் மூலம் அவை நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்தத் திருத்தங்களில், அதாவது தமிழக அரசு இணைத்துள்ள அம்சங்களில் உள்ள கடும்போக்கு குறித்துக் கவலை ஏற்படுகிறது. தண்டனைகளைக் கடுமையாக்குவதன் மூலம் குற்றங்களைக் களைய முடியும் என்று நினைப்பது வழக்கொழிந்துபோன சிந்தனை. பிரெஞ்சு எழுத்தாளர் ஆல்பர்ட் கமூய் குறிப்பிடும் உதாரணம் இதிலுள்ள அடிப்படையான பிரச்சினையை விளக்குகிறது. கொள்ளை, வழிப்பறியில் ஈடுபடுவோருக்குப் பொதுமக்கள் முன்னிலையில் கடும் தண்டனை அளிப்பதே குற்றத்தைக் களைவதற்கான வழிமுறையாக இருக்கும் என அன்றைய பிரெஞ்சு அரசு கருதியது. எனவே குற்றமிழைத்த நபருக்கு மரண தண்டனை வழங்கிப் பொதுவெளியில் அது நிறைவேற்றப்பட்டது. மக்கள் களியாட்டத்தைக் காணச் செல்வதுபோல் கூட்டம் கூட்டமாக மரண தண்டனையைக் காண வந்தார்களாம். வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பலரிடம் பிக்பாக்கெட் திருட்டு நடந்தது என்று கமூய் எழுதியிருப்பார். இதுபோன்ற தண்டனைகள் அப்போதைய கோபத்துக்கான தற்காலிகச் சமாதானமாகவும் எதிர்வினைகளின் கூர்மையை மழுங்கடிக்கும் முயற்சியாகவும் மக்களுக்கான குரூரமிக்க கேளிக்கையாகவும் அமைந்துவிடுகின்றன.
பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்கத்தான் வேண்டும். ஆனால் தண்டனைகளைக் கடுமையாக்குவதால் குற்றங்கள் குறைவதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. தவறு நடக்காமல் இருப்பதற்கான கண்காணிப்பு, பாதுகாப்பான சூழல், தவறு நிகழ்ந்த பிறகு நடக்க வேண்டிய நேர்மையான, சமரசமற்ற விசாரணை, தவறு செய்தவர்கள் தப்பிக்க இயலாத அளவுக்கு வலுவான சட்ட அமலாக்கம் ஆகியவைதாம் குற்றங்களைக் குறைக்க வழிவகுக்கும். கல்வி வளாகங்களிலும் அதுபோன்ற இதர இடங்களிலும் பொது வெளிகளிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்வது இதில் தலையாய கடமை.
நேரடியாகக் குற்றச்செயலில் ஈடுபடுபவர்களைப் பலியிடுவது அந்தப் பிரச்சினையின் தீவிரத்தைக் தற்காலிகமாக குறைக்கப் பயன்படலாம். ஆனால் அது நிரந்தரமான தீர்வாக, பாதுகாப்பான சமூகச் சூழலுக்கான வழிமுறையாக இருக்காது. பாலியல் வன்முறை ஒரு சமூகப் பிரச்சினை. பாலியல் குற்றங்களையும் சுரண்டல்களையும் வெறும் தனிமனிதப் பிரச்சினையாகப் பாவிப்பது மூல வேரை நோக்கிச் செல்லாமல் கிளையை மட்டும் முறிப்பது போன்றதே.
பாதிக்கப்பட்ட பெண்மீது அனுதாபம் காட்டுபவர்களும் அந்தப் பெண்ணை ஏதேனும் ஒரு காரணம் சொல்லிக் குற்றம் சுமத்துவதைப் பார்க்கிறோம். அந்த நேரத்தில் அந்த இடத்தில் அந்தப் பெண்ணுக்கு என்ன வேலை என்று பொதுமக்களில் சிலரும் கேட்கிறார்கள். அந்தப் பெண்ணுடைய காதல் முதலான தேர்வுகளைப் பற்றிக் கேள்வி எழுப்புகிறார்கள். பாதுகாப்பற்ற சூழலைத் தவிர்க்க அறிவுரை சொல்வது வேறு, ஒரு பெண்ணின் இயல்பான தேர்வுகள், நட்புகள், காதல்கள், அவர் விரும்பித் தேர்ந்தெடுக்கும் செயல்பாடுகள் ஆகியவற்றை முடக்கும் வகையில் அறிவுரை சொல்வது வேறு. நமது சமூகத்தில் இரண்டாவது வகைதான் அதிகம் நடக்கிறது. ஏதேனும் ஒரு காரணம் சொல்லிப் பாதிக்கப்பட்ட பெண்ணைக் குற்றம் சுமத்தும் மனநிலையை மாற்றுவதற்கான சமூக விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அது அரசாங்கத்தால் மட்டும் நடக்கக்கூடிய காரியம் அல்ல.
பொறுப்பான அரசு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதிலும் காவல்துறை உள்ளிட்ட சட்ட அமலாக்க அமைப்புகள் இத்தகைய வழக்குகளை அவற்றுக்குரிய முறையில் கையாள்வதையும் உறுதிசெய்ய வேண்டும். சட்டம், நீதி போன்றவற்றை அதிரடியாகக் கையாள்வதில் பலனில்லை. இப்போது முன்மொழியப்பட்டிருக்கும் மரண தண்டனையை நவீன சமுதாயத்தின் சிந்தனையிலிருந்து அணுக வேண்டும். இது உணர்ச்சிவசப்பட்டு அணுக வேண்டிய விவகாரம் அல்ல. மரண தண்டனை தொடர்பாக நிகழ்ந்துவரும் விரிவான விவாதங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அரசு செயல்பட வேண்டும்.
பாலினம், பாலினப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சக மனிதர்களுடனான கண்ணியமான உறவை மேம்படுத்தும் சூழலை வளர்த்தெடுத்தல், கல்விச் சாலைகளில் பாலினச் சமத்துவத்தை உறுதி செய்தல், அதற்கான செயல்திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மிக அவசியம். சட்டங்களும் சட்டத் திருத்தமும் சட்ட அமலாக்கத்திற்கும் தண்டனைகளுக்கும் முழு முக்கியத்துவம் தருவதை விடுத்து, பாலினச் சமத்துவத்தையும் தனிநபர்களின் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொள்ள வேண்டும். அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் காவல்துறை போன்ற அமைப்புகளும் தமது உறுப்பினர்களுக்கும் ஊழியர்களுக்கும் பாலினச் சமத்துவம், பாலியல் சுதந்திரம் ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பெருநிறுவனங்களில் பாலியல் வன்முறை, பாலினச் சமத்துவம், பெண்களுக்கான உரிமைகள் ஆகியவை குறித்துப் பணியாளர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டிய கட்டாய நடைமுறை உள்ளது. அதைச் சகல துறைகளுக்கும் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அமைப்புகளுக்கும் விரிவுபடுத்தினால் விழிப்புணர்வு அதிகரித்து அத்துமீறல்களும் குற்றங்களும் குறைவதற்கான வாய்ப்பு உருவாகும்.