எதிர்ப்பின் கவிஞன்
எதிர்ப்பின் கவிஞன் (Poet of Resistance) என்று அழைக்கப்படும் ஷ்யாம் பெனகல் எழுபதுகளுக்குப் பின் அறியப்படும் இந்தியப் புதிய அலைத் திரைப்பட முன்னோடிகளில் முக்கியமானவர். இணை சினிமா என்கிற நல்ல சினிமாவுக்கான பகுப்பில் அற்புதமான படைப்புகளை அளித்தவர். திரைப்படக் கலை அவர் உயிராக இருந்தது. 1976இல் ஐந்து லட்சம் விவசாயிகளின் தயாரிப்பில் அவர் இயக்கி உருவான ‘மன்த்தன்’ உயர்தர பதிப்பாக மீள் பதிவுசெய்யப்பட்டு இந்தியா முழுவதும் 2024 ஜூன் மாதம் 50 நகரங்களில் 100 காட்சிகளாகத் திரையிடப்பட்டது இந்தியத் திரைப்பட வரலாற்றில் முக்கியமான நிகழ்வு. அந்த வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பெனகல் நாற்பத்தெட்டு வருடங்களுக்கு முன் படமெடுத்த விவரங்களைத் தெளிவாக நினைவுகூர்ந்தார். சில மாதங்கள் கழித்து டிசம்பர் 23 அன்று தனது 90ஆவது வயதில் இயற்கை எய்தினார்.
பெனகல் ஹைதராபாத்தில் 1934இல் பிறந்தார். தந்தை புகைப்படக் கலைஞர். அவரிடம் கையால் இயக்கித் திரைப்படமெடுக்கும் காமெரா ஒன்று இருந்தது. குழந்தைப் பருவ ஷ்யாமின் வளர்ச்சியை அந்தக் காமெரா கொண்டு அவர் பதிவு செய்திருக்கிறார். ஆறு சகோதரர்களும் நான்கு சகோதரிகளும் எனப் பத்துக் குழந்தைகள் கொண்ட பெரிய குடும்பம். பெனகல் பிறந்ததிலிருந்தே காமெராக்களின் பரிச்சயத்துடன் வளர்ந்தவர். 12 வயதானபோது படமெடுக்கும் காமெராவைப் பயன்படுத்தத் தந்தை அனுமதியளித்தார். பள்ளி விடுமுறை நாட்களைக் கழித்ததைப் படமாக எடுத்த பெனகல் அதற்கு ‘விடுமுறை நாட்களில் வேடிக்கை’ என்று பெயரிட்டார். அதுவே அவரின் முதல் படம்.
அவருடைய தந்தை அவ்வப்போது இரவு உணவுக்குப் பிறகு தான் எடுத்த படங்களைக் குடும்பத்திற்குத் திரையிட்டுக் காட்டுவார். லாரல்–ஹார்டி, பஸ்ட்டர் கீட்டன் படங்களையும் ஐந்து நிமிடம் ஓடும் அமெரிக்கப் படங்களையும் திரையிடுவார். பெனகலுக்குத் திரைப்படங்கள்மீதான ஆர்வம் வளரத் தொடங்கியது. உறவினர் பலர் நமது சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்றவர்கள்; நேதாஜியின் படையில் பணியாற்றியவர்கள். பள்ளியிலும் கல்லூரியிலும் படித்தபோது மார்க்சியம் அறிமுகமானது. பெனகல் தெளிவான அரசியல் சிந்தனைகளுடன் வளர்ந்தவர். அவர் வசித்த கன்ட்டோன்மெண்ட் பகுதி திரையரங்கில் திரையிடப்பட்ட ஹாலிவுட் படங்களைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். உலகக் கவனம் பெற்ற டி சிகாவின் ‘பைசைக்கிள் தீவ்ஸ்’, சத்யஜித் ராயின் ‘பதேர் பாஞ்சாலி’ போன்ற படங்கள் அவரை வெகுவாகப் பாதித்தன. புதோவ்கின், ஐசென்ஸ்டைன் ஆகிய திரைப்பட மேதைகளின் புத்தகங்கள் படிக்கக் கிடைத்தன. திரைப்படக் கலைபற்றி அதிகம் படித்தார். இலக்கிய ஆர்வமும் அதிகரித்தது. நாடகக் கலையும் அவருக்குப் பிடித்த ஒன்று.
சத்யஜித் ராய் கொல்கத்தாவில் திரைப்படச் சங்கம் தொடங்கியதைப் பின்பற்றித் தானும் ஒன்றைத் தொடங்கி நடத்தினார். மும்பை திரைப்படத் துறையில் பிரபலமாக இருந்த பிமல் ராய் அவருடைய நெருங்கிய உறவினர். திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற அவர் விருப்பத்திற்குக் குடும்பத்தில் தடையேதுமில்லை.
1959இல் மும்பை சென்றார். கலையுலகில் முக்கியமான ஆளுமையான அலெக் பதம்சீயின் லிண்ட்டாஸ் விளம்பர நிறுவனத்தில் சேர்ந்தார். ரெக்ஸோனா, கோலினாஸ் பற்பசை (பண்டிட் ரவிசங்கர் இசையுடன்), லக்ஸ் சோப் என்று பெனகல் சிறப்பாக எடுத்திருந்த அக்கால விளம்பரக் குறும்படங்கள் பிரபலமானவை. ஆயிரம் விளம்பரப் படங்களுக்கு மேல் எடுத்திருக்கிறார். பல முக்கியமான கலைஞர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அலெக் பதம்சீ மும்பை ஆங்கில நாடக உலகின் தந்தை. பெனகல் அவர் நாடகங்களில் உதவியாளராக இணைந்தார். நீரா முகர்ஜியை அங்கு சந்தித்தார். இருவரும் 1963இல் திருமணம் செய்துகொண்டனர். மனைவி நீரா முகர்ஜியும் மகள் பையாவும் அவருடன் இணைந்து 1991இல் அவருடைய திரைப்படங்களுக்காக உருவாக்கிய நிறுவனம் ‘ஷ்யாம் பெனகல் சஹயாத்ரி பிலிம்ஸ்’.
ஷ்யாம் பெனகலின் முதல் திரைப்படம் 1974இல் வெளியான ஆங்க்கூர். ஆந்திராவில் நடந்த உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு கல்லூரி நாட்களில் அவர் எழுதியிருந்த கதை. மும்பையில் விளம்பரத் துறையில் பணிபுரிந்துகொண்டிருந்த நேரம். ‘ஆங்க்கூர்’ கதையைப் படமாக்கத் தயாரிப்பாளரைத் தேடிக்கொண்டிருந்தார். ஒருவரும் முன்வரவில்லை. பல முயற்சிகளுக்குப் பிறகு 14 வருடங்கள் கழித்துப் படமெடுக்க வழி பிறந்தது. அதுவரை திரைப்படங்களைத் தயாரித்திராத, பிரபல Blaze விளம்பர நிறுவன உரிமையாளர் முன்வந்தார். பெனகலின் அடுத்த நான்கு படங்களும் Blaze தயாரிப்பில் வெளிவந்தவை.
‘ஆங்க்கூர்’ அப்போதைய ஆந்திரப் பிரதேசக் குக்கிராமம் ஒன்றில் மேட்டுக்குடி நிலக்கிழார்களால் அடிமைகளாக நடத்தப்பட்ட சிறுபான்மை இனத்தவர் பற்றியது. நகரத்தில் படித்துக்கொண்டிருக்கும் நிலக்கிழாரின் மகன் தனது கிராமத்திற்குத் திரும்புகிறான். மேலும் படிக்க விரும்புபவனைத் தந்தை தடுத்துத் தன் வாரிசாக நிலங்களைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளக் கட்டாயப்படுத்துகிறார். அவனுடைய பண்ணை வீட்டைக் கவனித்துக்கொள்ளும் இளம் தலித் பெண்ணுக்கும் அவனுக்கும் இடையே உருவாகும் உறவையும் குடியிலும் சீட்டாட்டத்திலும் காலத்தைக் கழிக்கும் அப்பெண்ணின் ஊமைக் கணவன் எதிர்கொள்ளும் வன்முறையையும் கொண்டு சொல்லப்பட்டிருக்கும் கதை.
கிராம வாழ்க்கைக்குத் திரும்பும் படித்த இளைஞனாக ஆனந்த் நாகும், பண்ணை வீட்டில் வேலை செய்யும் பெண்ணாக ஷபானா ஆஸ்மியும் நடித்திருக்கின்றனர். பெனகல் போல் ஷபானா ஆஸ்மிக்கும் இதுவே முதல் படம். முதலில் திட்டமிட்டபடி தெலுங்கில் எடுக்காமல் இந்தியிலும் தக்கிணி மொழியிலும் எடுத்தது படத்திற்கு மேலும் வரவேற்பைக் கூட்டியது. பார்வையாளரை உலுக்கிவிடும் இறுதிக் காட்சியுடன் முடியும் ‘ஆங்க்கூர்’ ஆடல் பாடல் நிறைந்த நட்சத்திர மும்பையின் பாலிவுட் பட உலகில் எழுபதுகளில் அதிர்வலைகளை உருவாக்கிய படம். நாற்பதுக்கும் மேற்பட்ட விருதுகளை இந்தியாவிலும் உலகளவிலும் பெற்றதுடன் பெர்லின் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.
மூன்று வருடங்களில் வெளிவந்த பெனகலின் முதல் முப்படத் தொகுப்பான ‘ஆங்க்கூர்’, ‘நிஷாந்த்’, ‘மன்த்தன்’ ஆகிய மூன்று படங்களும் சமகால இந்தியாவின் நிலைமையை வெளிப்படுத்துபவை. மிகவும் மெதுவாக மாறிக்கொண்டிருக்கும் அல்லது மாற மறுக்கும் நிலப்பிரபுத்துவ நிலைபற்றிப் பேசுபவை. ‘ஆங்க்கூர்’, ‘நிஷாந்த்’ இரு படங்களும் உண்மைக் கதைகளின் அடிப்படையில் உருவானவை; ‘மன்த்தன்’ கூட்டுறவுமூலம் குஜராத் கிராம விவசாயிகளின் எழுச்சி பற்றிய கதை. மூன்றும் மாற்றங்களைச் சொல்லும் கிராமப்புறக் கதைகள்.
‘நிஷாந்த்’ 1975இல் வெளிவந்தது. ஆந்திராவிலிருக்கும் சக்திவாய்ந்த ஜமீன் குடும்பம் ஒன்றின் கட்டுப்பாட்டில் உள்ள சிறு கிராமம். அவர்கள் ஊராரின் நிலத்தை எடுத்துக்கொள்ளலாம்; எவரையும் தண்டிக்கலாம்; எந்தப் பெண்ணையும் பயன்படுத்திக்கொள்ளலாம். அந்த ஊர் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒரு வீட்டில் மனைவியுடனும் மகனுடனும் தங்கியிருக்கிறார். தற்செயலாக அவர் மனைவியைக் காணும் நிலக்கிழாரின் சகோதரன் அவள்மீது ஆசைகொள்கிறான். ஆசை வெறியாக மாறி நினைத்துப்பார்க்க முடியாத அளவில் தொடராகப் பல நிகழ்வுகளுக்கு இட்டுச் சென்றுவிடுகிறது.
ஒரு நாள் அவளைக் கவர்ந்து தன்னுடைய மாளிகைக்குக் கொண்டுசென்றுவிடுகிறான். அந்த நிகழ்வு வெளிப்படையாக ஊரார் அறிய நடக்கிறது. கேட்பார் யாருமில்லை. ஆசிரியர் உடைந்துபோகிறார். காவல் நிலையத்தில் புகார் செய்தும் வழக்குப் பதிவுசெய்ய முயன்றும் ஒன்றும் நடக்கவில்லை. நாட்கள் செல்கின்றன. படிப்படியாகப் பல்வேறு நிகழ்வுகள் கிராமத்தாரைத் தொடர்ந்து பாதிக்க இறுதியில் ஊரார் ஒன்று சேர்ந்து கிளர்ந்தெழுகின்றனர். காலம் காலமாக ஆட்டிப்படைத்த நிலக்கிழார் குடும்பத்தையும் அவர்களின் மாளிகையையும் மக்கள் அழித்தொழிக்கும் இறுதிக் காட்சியுடன் படம் முடிகிறது.
இந்தியச் சுதந்திரத்திற்கு முன் ஆந்திரப் பிரதேசக் கிராமம் ஒன்றில் நடந்த மக்கள் எழுச்சியை அடிப்படையாகக் கொண்டு விஜய் டெண்டுல்கர் எழுதிய திரைக்கதை. ஆசிரியராக கிரிஷ் கர்னாடும் மனைவியாக ஷபானா ஆஸ்மியும் நடித்திருக்கின்றனர். ஸ்மிதா பாட்டீல், கிரீஷ் கர்னாட், ஆனந்த் நாக், அம்ரிஷ் பூரி, நஸ்ருதீன் ஷா என வழக்கமாக பெனகல் படங்களில் நடிக்கும் நடிகர் குழு இப்படத்திலிருந்து உருவாகிறது. இவர்கள் நடிப்பை முறையாகப் பயின்றவர்கள். ‘நிஷாந்த்’ இந்திய சினிமாவில் ஒரு மைல் கல்லாகக் குறிப்பிடப்படும் படம். கான் திரைப்பட விழாவில் பங்கு பெற்றது.
‘ஆங்க்கூர்’ (1974)
1976இல் வெளியான ‘மன்த்தன்’ இன்றும் ஷ்யாம் பெனகலின் பெயரை உலகளவில் உயர்த்திப் பிடித்துக்கொண்டிருக்கும் படம். அமுல் கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர் சங்கம் டாக்டர் வர்கீஸ் குரியன் தலைமையில் குஜராத் விவசாயிகள் இணைந்து உருவாகிய அமைப்பு. அதுபற்றிய ஆவணப்படங்கள் தொடர்பாக பெனகல் அங்கு அறிமுகமானவர். அவரும் விஜய் டெண்டுல்கரும் இணைந்து ‘மன்த்தன்’ படக்கதையை எழுதியிருந்தனர். படத்தைக் கூட்டுறவுச் சங்க விவசாயிகள் தயாரிப்பதுதான் சரியானது என்று கருதிய டாக்டர் குரியன் ஆளுக்கு இரண்டு ரூபாய் என அச்சங்கத்தைச் சேர்ந்த ஐந்து லட்சம் விவசாயிகளிடமிருந்து தயாரிப்புக்கான பணத்தைத் திரட்டினார். ‘மன்த்தன்’ திரைப்படம் முழுக்க விவசாயிகளின் தயாரிப்பாக உருவானது.
குஜராத்திலிருக்கும் ஒரு கிராமத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கான கூட்டுறவுச் சங்கம் அமைக்கக் கால்நடை மருத்துவர் உதவியாளர்களுடன் வருகிறார். சாதிச் சண்டைகள் நிறைந்த அந்த ஊரில் நிகழும் கதை. பல இடையூறுகளையும் சாதிப் பிரச்சினைகளையும் தாண்டி விவசாயிகளின் கூட்டுறவுச் சங்க முயற்சி வெற்றி பெறுவதை விளக்கும் படம். குஜராத்திலிருக்கும் சங்கன்வா என்ற சிறு கிராமத்தில் 45 நாட்களில் படம் எடுக்கப்பட்டது.
‘மன்த்தன்’ (1976)
‘மன்த்தன்’ உலகம் முழுவதும் குறிப்பாக ஐ.நா. பொதுச்சபையிலும் திரையிடப்பட்டது. சென்ற வருடம் Film Heritage Foundation மூலம் உயர்தர டிஜிட்டல் மறுபதிப்பு செய்யப்பட்டபின் 2024 கான் திரைப்பட விழாவில் பெனகல், நஸ்ருதீன் ஷா ஆகியோர் பங்கேற்க ‘உலகின் சிறந்த படங்கள்’ தொகுப்பில் திரையிடப்பட்டது.
பூமிகா ஹன்ஸா வாட்கர் என்ற நிஜ நடிகையின் வாழ்க்கைச் சரிதத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான படம். பிரபல நடிகை ஊர்வசி என்ற உஷாவாக ஸ்மிதா பாட்டீல் நடித்திருக்கிறார். 11 வயதிலேயே படத்தில் நடிக்கச் செய்வதற்காக மும்பை திரையுலகின் ஸ்டுடியோக்களுக்குக் கொண்டுசெல்லப்படுகிறாள். நடிக்கும் வாய்ப்பு தற்செயலாகக் கிடைக்க அவளின் வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிடுகிறது. அப்போதிருந்து நடிகையின் உறவுகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. மன உறுதியும் துணிச்சலும் மிக்க உஷா அனைத்தையும் எதிர்கொண்டு தனக்கு உகந்த வழியில் வாழ முயல்கிறாள்.
மனித வாழ்வின் சிக்கல்களை வெளிப்படுத்தும் கதை களை பெனகல் தன் படங்களுக்குத் தேர்ந்தெடுக்கிறார். ‘மண்டி’ - 1983 ஒரு சிறு நகரில் பாலியல் தொழிலாளர் பணிபுரியும் அமைப்பையும் அதன் தலைவியையும் பற்றிய கதை. பாகிஸ்தானிய எழுத்தாளர் குலாம் அப்பாஸ் எழுதிய உருதுச் சிறுகதை ‘ஆனந்தி’யைத் தழுவியது. த்ரிகால், ஜுனூன், கலியுக் , மம்மோ என்று தொடர்ந்து பல படங்களுடன் நேரு, நேதாஜி, மகாத்மா காந்தி என்று பல ஆவணப்படங்கள் என எழுபதுக்கு மேலான படைப்புகள் பெனகலுடையவை. இறுதி மூச்சுவரை திரைப்படக் கலைக்காக வாழ்ந்தவர் பெனகல்.
2023இல் அவருடைய 89ஆவது வயதில் வெளிவந்த ‘முஜிப்’ (Mujib: The Making of Nation) பெனகலின் இறுதிப் படம். பங்களாதேஷின் தேசத்தந்தை முஜிபுர் ரஹ்மானின் வாழ்க்கைச் சரிதத்தை அடிப்படையாகக்கொண்டது. அப்போதிருந்த அந்நாட்டுப் பிரதமரான முஜிபுர் ரஹ்மானின் மகள் ஷேக் ஹசீனா, பெனகல் தான் படத்தை இயக்க வேண்டும் என்று விரும்பினார். 11 வருடங்களுக்குப் பிறகு பெனகல் இயக்கிய இப்படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தபோதிலும் பங்களாதேஷில் அது ஒரு வெற்றிப்படம். ஐரோப்பாவிலும் நன்றாக ஓடிய படம். உலகம் முழுவதுமுள்ள பங்களாதேஷிகளால் கொண்டாடப்பட்ட படம்.
இந்தியத் துணைக்கண்டத்தின் அரசியல் நிலைகளைப் பிரதிபலிக்கும் படைப்புலகம் பெனகலுடையது. அவர் படங்களின் ஆரம்பக் காலமான எழுபதுகளில் நேருவின் ஆட்சி முடிந்திருந்தது. ஆயுதப் புரட்சிகள், கிளர்ச்சிகள், ராணுவம் கொண்டு அடக்கப்பட்ட எதிர்ப்புகள் என அனைத்தும் நிகழ்ந்துகொண்டிருந்த காலம். நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்துப் பல இடங்களில் போராட்டங்கள் உருவான நேரம். பெனகல் மக்களின் நிலையைத் தன் படங்களில் வெளிப்படுத்தத் தயங்க வில்லை, உண்மையை எவ்வகையிலும் மறைக்காமல் பார்வையாளரிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என்பது அவர் கொள்கை. அவர் பெண்ணிய ஆதரவாளர். தனது படங்கள் வழியாகப் பெண்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகளையும் வேதனைகளையும் சொல்லாமல் இருந்ததில்லை. அற்புதமான பெண் பாத்திரங்களை அவர் படங்களில் சந்திக்கிறோம். அவருடைய படமெடுக்கும் குழு முழுவதுமே சமுதாய நோக்குடைய அடக்குமுறைக்கு எதிரான கருத்துடைய கலைஞர்களைக் கொண்டது. அவருடைய ஒளிப்பதிவாளர் கோவிந்த் நிஹலானி, அவருடன் படக்கதை எழுதிய விஜய் டெண்டுல்கர், நடிகை ஷபானா ஆஸ்மி என்று அவருடைய குழுவினர் ஒவ்வொருவரையும் சொல்லிக்கொண்டு போகலாம்.
தான் விரும்பிய வழியில் கலைப்பணியை மேற்கொண்டு சிறப்பாக வாழ்ந்து முடித்த திரையுலக மேதைக்கு எம் மனமார்ந்த அஞ்சலி.
மின்னஞ்சல்: anandsiga@gmail.com