படித்தவன் சூதும் வாதும்
அடிமைத் தளைகளிலிருந்து விடுதலை அடைவதற்கும் சமூகத்தில் வேரூன்றியிருக்கும் ஏற்றத்தாழ்வுகளைக் களைவதற்குமான வழிமுறையே கல்வி. இப்படியெழுதும்போதே இன்றைய கல்வி, அடிமைத்தளைகளைப் பெருக்குவதாகவும் ஏற்றத்தாழ்வுகளை மேலும் ஆழங்கால் படுத்துவதாகவும் மாறியிருப்பதும் மாற்றப்பட்டிருப்பதும் நம் கவனத்தைக் கோருகின்றன.
மாணவர்களிடையே சமநிலை பேண உருவானது சீருடை. ஆனால் சீருடைத் துணியில் வீற்றிருந்தது ஏற்றத்தாழ்வு. எல்லோருக்கும் கல்வி எனும் உயர்ந்த நோக்குடன் உருவாக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகளுக்குமிடையில் உயர்வு தாழ்வு புகுத்தப்பட்டது. அங்கு, சத்துணவு உண்போர் உண்ணாதாரிலும் உண்டு மேலும் கீழும். எனக்குத் தெரிந்த தனியார் பள்ளியில், தங்களின் பிறந்த நாள்களுக்கு வேர்க்கடலை, எள்ளுருண்டை போன்ற எளிய தின்பண்டங்களையே தர வேண்டுமென்று சுற்றறிக்கை அனுப்புமளவுக்கு, பிறந்த நாளன்று பிற மாணவர்கள் தரும் பரிசுப்பொருட்களில் வேற்றுமைகள் புகுந்தன. அது மாணவர்களிடையே பிளவுகளை உருவாக்குவதை, அவர்கள் மனம் நஞ்சாவதை உணர்ந்த பள்ளி நிர்வாகம், பெற்றோர்க்கான எச்சரிக்கையுடன் இப்படியொரு சுற்றறிக்கையை அன