அர்த்தமற்ற எல்லைகளின் கதைகள்
மணல் சமாதி
(நாவல்)
கீதாஞ்சலி ஸ்ரீ
தமிழில்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி
வெளியீடு:
காலச்சுவடு பதிப்பகம்
669 கே.பி. சாலை
நாகர்கோவில் - 1
பக். 605
ரூ. 750
‘சமாதி’ எனும் சொல்லுக்குப் பொது வழக்கில் இறந்தவர்களைப் புதைத்து வைக்கும் மேடு என்று அர்த்தம் கொள்ளப்படுகிறது. பௌத்த மதத்தில் ‘சமாதி’ எனும் சொல் யோகத்தின் நிலையாகக் கருதப்படுகிறது. தனிமனிதனுள் ஊறிக்கிடக்கும் மேலான ஒரு அர்த்தத்திற்கு முழுச் சிந்தனையையும் லயிக்கவிட்டு தன்னை முழுவதுமாக ஒப்படைத்தலை அச்சொல் குறிக்கிறது. இருக்கும் வாழ்விலிருந்து மரணத்தின் வழியே வேறொரு அர்த்தம் பொதிந்த வாழ்க்கையை நோக்கிப் பயணப்படுவது என்றும் கருதலாம். மரணம் இரண்டு வாழ்க்கைக்கு இடையிலான எல்லையாகச் சித்திரிக்கப்படுகிறது. மரணத்திற்குப் பிறகு மற்றொரு நிலைக்குப் பயணப்பட மண் அல்லது நீர் சமாதியை ஒரு ஊக்கியாகத் தத்துவங்கள் கருதுகின்றன. இந்த நிலை ஒரு வாழ்க்கையைக் கைவிடுவதற்கும், மரணத்தைத் தழுவுவதற்கும், மற்றொரு வாழ்க்கையை நோக்கி வாழ்தலின் கவனத்தைக் குவிப்பதற்கும் தொடக்கப் புள்ளியாக அமைகிறது.
இந்தச் சொல்லையும் அதன் தத்துவார்த்தப் பின்புலத்தையும் உவமையாக்கிச் சமகாலத்திற்கேற்ற கதையம்சத்துடன் இந்தி மொழியில் 2018ஆம் ஆண்டு கீதாஞ்சலி ஸ்ரீ எழுதிய ‘ரேத் சமாதி’ என்ற நாவல் 2022இல் டெய்சி ராக்வெல்லின் ஆங்கில மொழிபெயர்ப்பில் The Tomb of Sand என்ற பெயரில் வெளியானது, மொழிபெயர்ப்பிற்கான புக்கர் பரிசையும் இது வென்றது. இந்தியிலிருந்து நேரடித் தமிழ் மொழிபெயர்ப்பு ‘மணல் சமாதி.’ அனுராதா கிருஷ்ணஸ்வாமி மிகச் செழுமையாக இதைத் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார்.
நாவல், பண்பாட்டின் கதைகளைக் கூறுகிறது. இதனிடையில் சுதந்திரத்தின் குரலுடன் எழும் இரு பெண்களின் கதையே மணல் சமாதி. நாவலின் முதல் பக்கத்திலிருந்து விரிவான விவரணைகளாலும் அடுக்கடுக்கான கிளைக்கதைகளாலும் இரு பெண்களின் பார்வைகள், கதைசொல்லல்கள் முன்வைக்கப்படுகின்றன. அம்மா, மகள் எனும் பொதுச் சொற்களாலேயே இருவரும் நாவல் முழுக்க விளிக்கப்படுகிறார்கள். நாவல் முடியும் தருணத்தில் அம்மாவின் பெயர் சந்திர பிரபா தேவி என்று சொல்லப்படுகிறது. நாவலின் போக்கில் பெயர்கள் அர்த்தங்களற்றுப் போவதே நாவலின் பலம். அம்மா சிறியவளாகிக்கொண்டும் மகள் பெரியவளாகிக்கொண்டும் இருந்தார்கள் என்று நாவல் தொடங்குகிறது. இந்தியாவின் மத்திய தர வர்க்கத்தின் பிரதிநிதியாக இந்தக் குடும்பமும் அதன் கதையைச் சொல்லும் நாயகிகளாக அம்மாவும் மகளும் திகழ்கிறார்கள்.
அப்பா இறந்துவிட அறைக்குள் முடங்கிக்கொள்கிறாள் அம்மா. உணவும் அதிகம் உட்கொள்வதில்லை. யாரோடும் பேசுவதில்லை. ஆஸ்திரேலியாவிலிருக்கும் பேரன் சிட் வரும்போது மட்டும் உற்சாகத்துடன் அவனது கொண்டாட்ட உலகத்தோடு ஐக்கியமாகிறாள். அப்பாவின் அதிகாரத்தில் ஓடும் குடும்பம் அவருடைய மறைவிற்குப் பின் இயல்பாக மூத்த மகனின் அதிகாரத்தின் கீழ் வருகிறது. அவளுடைய மகள் சொந்த முடிவுகளால் வீட்டிலிருந்து விலகியிருக்கிறாள். அப்பாவின் மறைவிற்குப் பிறகு மீண்டும் குடும்பத்துடன் ஒன்றாகவும் அதே நேரம் ஒட்டாமலும் இருக்கிறாள். அம்மாவிடம் அவளுக்கு ஏற்படும் கரிசனம் அவளுடனான நெருக்கத்தை அதிகரிக்கிறது. அமைதியாகவே இருக்கும் அம்மா உள்ளோடியிருக்கும் பழைய கதைகளுக்கு உயிரூட்ட விரும்புகிறாள். எண்பது வயது மதிக்கத்தக்க அந்த அம்மாவின் சாகசக் கதையாக நாவல் விரிவடைகிறது.
நாவல் மூன்று பகுதிகளாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. முதல் பகுதி அப்பாவை இழந்தவுடன் அண்ணனின் அதிகாரக் குடையின் கீழ் மௌனித்துக் கிடக்கும் அம்மா. அவளுடைய செவிகள் இந்தப் பகுதியில் கூர்மையாக இருக்கின்றன. மொத்த வீட்டின் குரலை வைத்து அந்த வீட்டின் நிலையை அவதானிக்கிறாள். தன் சுதந்திரத்தையும் வீட்டில் கோலோச்சும் அதிகாரத்தையும் ஒன்றிணைத்துத் தனக்குள்ளாகத் தர்க்கம் புரிகிறாள். சமகாலத்தில் அர்த்தமற்றுக் கிடக்கும் நுகர்வோர் கலாச்சாரத்தையும் அவர்களின் பூர்வீகத் தொழில்களையும் இணைகோடாகச் சிந்தித்து அக்குடும்பத்தின் வேர்களை வாசகர்களுக்குப் பகடி கலந்த கதையாகக் கூறுகிறாள். பொருளீட்டும் முனைப்பில் இருக்கும் மத்திய தர வர்க்கத்தின் நுட்பமான சித்திரிப்புகள் பண்பாட்டளவில் கேலிச்சித்திரமாக நாவலில் பதிவாகின்றன. கூட்டுக்குடும்பத்தின் நவீன வடிவமாகவும் நாவலில் இந்தக் குடும்பம் கட்டமைக்கப்படுகிறது. பேரன்களில் ஒருவன் கொண்டாட்ட மனநிலை கொண்டவனாகவும் மற்றொருவன் படிப்பும் அதன் முனைப்புமாக உம்மென்று இருப்பவனாகவும் சித்திரிக்கப்படுகிறான். பெரிய நோக்கங்களற்றுப் பொருள் ஈட்டுவதில் மட்டும் அர்த்தம் இருப்பதாகக் கற்பிதம் செய்துகொள்ளும் மத்திய தர குடும்பத்தின் மீது விமர்சனத்தை நாவல் பதிவுசெய்கிறது.
அன்றாடத்தில் கவனிப்பாரற்று இருக்கும் சிறுசிறு விஷயங்களுக்கு நாவல் பேருருவம் கொடுக்கிறது. அமைதியாகப் படுத்துக்கொண்டிருக்கும் அம்மா விரிசல் விழுந்த சுவரைப் பார்த்துக்கொண்டேயிருக்கிறாள். மொத்தக் குடும்பத்திற்கும் முதுகைக் காட்டுகிறாள். அவளுடைய முதுகில் ஒரு செவி இருப்பதாகக் கற்பனை செய்யப்படுகிறது. அறை வாசலில் இருக்கும் கதவைக் கதைசொல்லியாக்கி ஆசிரியர் குடும்பத்தின் கதையைச் சொல்கிறார். மனிதர்கள் அமைதியாகப் போகும்போது அவர்களின் கதைகளை அங்கிருக்கும் பொருட்களே சுமந்து செல்வதை புனைவாகவே நாவலில் சித்திரித்திருக்கிறார்.
மேற்கூறிய விஷயத்தில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது வீட்டிலிருக்கும் புத்தர் சிலை. எலும்பு துருத்தி தெரியும் புத்தர் சிலையை மொத்தக் குடும்பமும் பத்திரமாகப் பாதுகாக்கிறது. அதை அருங்காட்சியகத்தில் கொடுத்தால் நல்ல விலை கிடைக்கும் என்று அண்ணன் காத்திருக்கிறார். ஆனாலும் அது தெய்வ அம்சம் பொருந்தியதாகக் குடும்பத்தால் அங்கீகரிக்கப்பட்டு, கடவுளர்களுக்கான அறையுள் வைக்கப்படுகிறது. இந்தச் சிலை நாவல் முழுக்க இரு பெண்களுடனும் பயணிக்கிறது. தொடக்கத்தில் அர்த்தமற்றுக் கிடக்கும் சிலையாக வாசகர்களிடம் சொல்லப்படும் புத்தர் நாவலின் இறுதியில் வரலாற்றோடு இணைக்கப்படுகிறார். பாகிஸ்தானில் அதேபோன்ற சிலை ஒன்று இருப்பதாகவும் காலத்தின் போக்கில் அந்த மண்ணிலிருந்து காணாமல்போன சிலைதான் இந்தக் குடும்பத்திடம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஒரு சிலைக்குச் சித்திரிக்கப்பட்டிருக்கும் முழுமை தரும் கதாபாத்திர வார்ப்பு இந்த நாவலின் தனித்துவம் என்று கூறலாம். வரலாற்றை நாம் கைவிடும்போது அதன் விழுமியங்கள் நம்மிடம் அர்த்தமற்ற பொருட்களாகத் தேக்கம் கொள்கின்றன. நாட்டின் வரலாறு சிலைகளில் பொதிந்துள்ளதைப் போல இனத்தின் வரலாற்றை வீட்டின் கதவுகளும், குடும்பத்தின் கதையைச் செவிமடுக்காத முதுகும் சொல்லிக்கொண்டிருக்கின்றன.
இது ஒரு பின்நவீனத்துவ நாவல் என்பது கூடுதல் தகவல். மரபான கதை சொல்லல் முறையை நாவல் கைக்கொள்வதில்லை. நாவல் முழுக்க ஒரே கதைசொல்லியால் விவரிக்கப்படுவதில்லை. மனிதர்களும் அசேதனங்களும் சேர்ந்தே அந்த அம்மா-மகளின் கதையை வாசகர்களுக்குச் சொல்கிறார் நாவலாசிரியர். தத்துவார்த்தப் பார்வைகளையும் இந்திய மண்ணின் தகவல்களுக்கு இடையே இருக்கக் கூடிய அபத்தங்களையும் நாவலின் போக்கில், அதே நேரம் அதன் போக்கைச் சிதைக்காத வண்ணம் எழுதியிருப்பது தனித்துவமாகிறது.
உதாரணத்திற்குப் புத்தரின் சிலை குறித்த விவரணைகள் நான்கைந்து பக்கங்களுக்கு நீள்கின்றன. புத்தர் மணல் சமாதியாவதும் பின் நீர்சமாதியாவதும் அவருடைய ஜாதகக் கதைகளிலிருந்து எடுத்தாளப்படுகின்றன. எழுதப்படும் போக்கில் புத்தர் நீங்கி அங்கே வரலாறு பேசப்படுகிறது. மண்ணுள் புதையுண்டு போகும் வரலாறுகள் எப்போதும் தோண்டியெடுக்கப்படும். சிதிலங்கள் அதன் கதைகளைப் பேசியே தீரும். ஆனால் தோண்டுபவர்களால் உரிமை கொண்டாடப்படும். கருத்தால் மட்டுமே வரலாற்றைக் கைப்பிடித்து இருப்பதற்கும் ஆதாரரீதியாக அதிகாரம் வரலாற்றின் மீது உரிமை கொண்டாடுவதற்குமான இடையில் வரலாறு தன்னுடைய அர்த்தத்தை இழந்துகொண்டிருக்கிறது.
அம்மா வீட்டிலிருந்து காணாமல் போகும் விஷயம் முன் கூறிய விவரிப்புகளின் நீட்சியாக நிகழ்கிறது. அப்போது நாவலின் ஒரு வரி “காணாமல் போனவை காணாமல் போனவைதான்” என்று தொடங்குகிறது. அந்த வரி குடும்பத்தின் சிறிய பொருட்களில் தொடங்கிச் சமகாலத்தில் காணாமல்போன தொல்லியல் பொருட்கள்வரை நீட்சிகொள்கின்றது. குடும்பத்தையும் சமூகத்தையும் இணைக்கும் சங்கிலியை நாம் தொலைத்திருக்கிறோம். சுயநலத்தின் கூடாரமாக உருக்கொள்ளும் குடும்பத்தின் மீதான காட்டமான விமர்சனமாக நாவலில் வரலாற்று அம்சங்கள் பேசப்படுகின்றன. படாடோபங்களால் சூழப்பட்டு, வெற்றுக் கேளிக்கைகளைக் கொண்டாடி, வேர்கள் குறித்த பிரக்ஞையின்றி, போலியான வாழ்வும், அந்த வாழ்வில் அமைதியாக அம்மாவும், வீட்டிற்கு வெளியே மகளும் சுதந்திரமாக இருக்கிறார்கள்.
குடும்பம்-வரலாறு குறித்த விமர்சனங்களும் பார்வைகளும் பெருவாரியாக நாவலின் முதல் பகுதியில் தென்படுகின்றன. நாவலின் இரண்டாம் பகுதி அம்மா மகளுடன் வசிப்பதாக நகர்கிறது. மகள் ஒரு ஃப்ரீலான்ஸ் எழுத்தாளர். நிர்ணயிக்கப்பட்ட பணி நேரம் இல்லை. முழுச் சுதந்திரமாக இருப்பவள். அவளுக்கு கேகே எனும் காதலன் நாவலில் அறிமுகப்படுத்தப்படுகிறான். மேலும் ஆணாதிக்கமற்ற வீட்டில் அம்மா புதிதாய்த் தோன்றுகிறாள். பழைய, முடங்கிய நிலைக்குச் செல்ல விரும்பாமல் சுதந்திரமாக மகளுடனே வசிக்கிறாள். அவளுடைய நவீனங்களை அறிந்துகொள்கிறாள். அம்மாவின் பாத்திரம் சற்று சுவாதீனமாகும்போது தன்னியல்பில் நாவல் மகளின் சங்கடங்களைப் பேசத் தொடங்குகிறது.
ஒரே உடலில் அம்மாவாகவும் காதலியாகவும் இருக்க முடியாது என்று ஒரு வரி மகளின் கதாபாத்திரத்தையும், அங்கு பேசாத அம்மாவின் கதாபாத்திரத்தையும் சேர்த்தே எடுத்துரைக்கிறது. குடும்பத்தைவிட்டு முற்றாக வெளியேறிய மகளுக்கு அம்மாவைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு ஏற்படுகிறது. அவள் தனக்காக ஏற்றுக்கொள்ளும் சவாலாகிறது. காலத்தின் போக்கில் அம்மா மகளின் நவீனத்திற்கு மாறுவதும் மகள் பழைமைக்குள் புகுந்துகொள்வதும் நாவலின் விசித்திரங்களுள் ஒன்று. தன்னுடைய சுதந்திரம் பணயம் வைக்கப்படுகிறதோ எனும் சந்தேகம் குடும்பம் நோக்கிய அவளுடைய பார்வையைப் பரிசீலனை செய்ய வைக்கிறது.
கூட்டுக் குடும்பமாகச் சித்திரிக்கப்படும் நாவலில் அக்குடும்பத்தைப் பற்றிய விவரிப்பு அம்மா, மகள் மற்றும் மருமகளின் குரலில் சொல்லப் படுகிறது. ஆனால் மூன்றும் ஒன்றோடொன்று முரண்பட்டதாக அமைகிறது. எல்லோரும் சுதந்திரத்தைப் பணயம் வைத்துக் குடும்பத்தைத் தக்கவைக்க விரும்புகிறார்கள். அதே நேரம் அதிகாரத்திற்கும் விழைகிறார்கள். ஆனால் பணயத்தை நிறுத்திக்கொண்டு சுதந்திரத்தை மட்டுமே சுவாசிக்க விரும்பும் அம்மாவால் மொத்த குடும்பத்தின் சிந்தனையும் அல்லோல கல்லோலப்படுகிறது.
இந்த நாவலின் தவிர்க்க முடியாத கதாபாத்திரமாக ரோஸி அமைந்துவிடுகிறார். இவர் ஒரு திருநங்கை என்பது குறிப்பிடத்தக்கது. அம்மாவின் தோழியாக நாவல் முழுக்கப் வருகிறார். சமத்துவமான சிந்தனையுடன் இருக்கும் மகளுக்கு ரோஸியுடனான உறவைப் புரிந்துகொள்ள முடியவில்லை. சித்தாந்தங்களால் கவரப்பட்டு அகத்தைச் செப்பனிட்டு வைத்திருக்கும் மகளுக்கு யதார்த்தத்தில் பேதங்களற்றுப் பழகுவது சிக்கலாகிறது. எல்லாவற்றையும் சந்தேகிக்க வைக்கிறது. ஒற்றைக் கருதுகோளுடன் செப்பனிடப்படும் வாழ்க்கையைக் கேள்விக்குள்ளாக்கும் யதார்த்தம் அவளை அச்சுறுத்துகிறது.
ரோஸியுடன் நெருக்கமாகப் பழகும் அம்மா மனதால் இளமைக்குத் திரும்புகிறாள். ரோஸியின் எதிர்பாராத துர்மரணத்தால் முடங்குகிறாள். ஆனால் வேறொன்றாக மாறித் தன் கடைசிக் காலத்தைச் சுற்றுலாவில் கழிக்க விரும்புகிறாள். பாகிஸ்தானுக்குச் செல்ல விழையும் அம்மாவின் மனம் குடும்பத்தால் விசித்திரமாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. மகளும் அம்மாவும் மேற்கொள்ளும் பாகிஸ்தான் பயணம் நாவலின் மூன்றாம் பகுதியாக விரிவடைகிறது. புதிய அடையாளத்துடன் வீட்டிற்குத் திரும்பிவர மறுக்கும் அம்மாவின் கதை வரலாற்றைக் காத்திரமாகப் பதிவுசெய்கிறது. துப்பறியும் நாவலுக்கு இணையாக எழுதப்பட்டிருக்கும் நாவலின் மூன்றாம் பகுதி கண்ணீரையும் சேர்த்தே வரவழைக்கிறது.
ரோஸி குறித்து இந்தக் கட்டுரையில் நிறைய குறிப்பிடவில்லை. அவருடைய கதாபாத்திர வார்ப்பு மொத்த நாவலையும் தாங்கிச் செல்லக்கூடியதாய் அமைந்திருக்கிறது. திருநங்கைகளின் உரிமைகள் குறித்து எழுப்பப்படும் கேள்விகள், அவற்றை வரலாற்றுடன் இணைக்கும் விதம் நாவலின் கனத்தைக் கூட்டுகின்றன. குரலற்றவர்களின் குரலே இலக்கியம் எனில் இந்த நாவலும் அரசியலில், பண்பாட்டில், வரலாற்றில் குரலற்றவர்களாக ஒடுங்கிய திருநங்கைகளின் குரலாக மாற்றம் கொள்கிறது.
முதல் பத்தியில் சமாதி எனும் சொல் குறித்துக் குறிப்பிட்டிருந்தேன். அதற்கொப்ப நாவலின் கதையமைப்பும் செப்பனிடப்பட்டிருக்கிறது. ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு எல்லோரும் மாறிக்கொண்டிருக்கிறார்கள். ஆணுடைய அதிகாரம் கோலோச்சும் வீட்டிலிருந்து சுதந்திரமான வீட்டிற்கு அம்மா மாறுகிறாள், குடும்பம் எனும் சிறு சட்டகத்திலிருந்து வரலாற்றின் கண்ணியாகக் கதாபாத்திரங்கள் பரிணமிக்கின்றன, சுதந்திரம் எனும் போர்வைக்குள் இருந்து மகள் குடும்பத்தின் சட்டகங்களை விரும்புபவளாக மாறுகிறாள்.
எல்லைகளால் வரலாறுகள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஆனால் அந்த எல்லைகளின் அர்த்தங்கள் சரிவர புரியாமல் போகும்பட்சத்தில் இழப்புகளே எல்லைகளின் அடையாளமாகின்றன. நாவலின் தொடக்கத்திலும், மூன்றாம் பகுதியில் அதிகமாகவும் குறிப்பிடப்படும் பாகிஸ்தானிய எழுத்தாளர் இந்துஜார் ஹுசேன். பாகிஸ்தான் சிறுகதை எனும் தொகை நூல் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கக் கிடைக்கிறது. அதற்கு அவர் எழுதியிருக்கும் முன்னுரை இந்த நாவலை அணுக்கமாகப் புரிந்துகொள்ள ஏதுவாய் இருக்கும். அதில் அவர் பாகிஸ்தானியச் சிறுகதைகளின் மூலமாக வேர்களைத் தேடும் மனிதர்களையே குறிப்பிடுகிறார். ஒன்றாக இருந்த நாடு எல்லைகளால் பிரிக்கப்படும்போது வேர்கள் இந்தியாவின் பக்கம் போய்விட்டன. வேர்களற்று இருக்கும் பண்பாட்டில் பிரிவினையும் அதன் வாதைகளுமே வேர்களாகின்றன. அதன் கோபாவேசங்களும் அழுகுரல்களும் காலத்தின் குரல்களாகின்றன. இந்த நாவல் அதன் மற்றொரு நவீன சாட்சியாகிறது.
இந்தக் கட்டுரையில் நாவலிலிருந்து சொல்லப்படாமல் விட்ட விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. பின்-நவீனத்துவ நாவலில் மொழியின் பங்கு முக்கியம் வகிக்கிறது. பல இடங்களில் மொழி விளையாட்டாகவே பகடிகளை வாசிக்க முடிகிறது. அதனால் நேரடித் தமிழ் படைப்பை வாசிக்கும் உணர்வை இந்த மொழிபெயர்ப்பும் நாவலின் அமைப்பும் அளிக்கின்றன. நம்மை வரலாற்றோடு பிணைத்துக்கொள்வதற்கான வாய்ப்பை இழந்திருக்கிறோம். அதற்கு இந்திய குடும்ப அமைப்பு முக்கிய காரணியாகிறது. வரலாற்றையும், இந்திய குடும்ப அமைப்பையும் நுட்பமாக விசாரிக்கும் மணல் சமாதி நாவல் நவீன பார்வையையும், யாருடைய வாழ்க்கையை/வரலாற்றை நாம் கையிலேந்தப்போகிறோம் எனும் கேள்வியையும் விட்டுச்செல்கிறது.
மின்னஞ்சல்: krishik10@gmail.com