கடிதங்கள்
ஆ.இரா. வேங்கடாசலபதியின் ‘வ.உ.சி., வரலாறு: ஒரு தேடலின் பயணம்’ என்ற உரையாடல் வ.உ.சி. பற்றிய பல அரிய தகவல்களைத் தேடி எடுத்துப் பொதுவெளிக்குக்கொண்டுவருகிறது, சலபதியின் பணி மிகவும் போற்றத்தக்கது. அவர் வ.உ.சி.யை நோக்கித் தீவிரமாகச் செல்ல காரணமாக, அவர் படித்த பள்ளிப் பாட நூலில் வ.உ.சி.யின் பெயரோ, அவரைப் பற்றிய குறிப்போ இல்லாதது மனதை உறுத்தியதால், வ.உ.சி.யைப் பற்றி அதிகமாகப் படிக்க ஆரம்பித்தேன் என்கிறார்.
1967இல் பிறந்த இவர், அநேகமாக 1980இல் ஒன்பதாம் வகுப்பு படித்திருப்பார். அப்போது வ.உ.சி.பற்றிய பாடம் இடம்பெறவில்லை என்று அவர் சொல்வது, 1966இல் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. நான் பள்ளிப் பாடத்தில் படித்தது அரைகுறையாக நினைவில் வந்துபோனது. எனவே, நான் படித்தபோது வ.உ.சி. பாடம் இருந்ததா என்பது குறித்து, என்னுடன் படித்த நண்பர்களிடமும், தஞ்சையில் வசிக்கும் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் வைத்தியநாதேஸ்வரனிடமும் தொடர்புகொண்டு விசாரித்தேன். அவர் எனது நினைவு சரியே என்று உறுதிப்படுத்தினார்.
இடையில் ஏன் வ.உ.சி. பற்றிய பாடம் பள்ளிப் பாடத்திட்டத்தில் இடம்பெறாமல் போனது என்று தெரியவில்லை. இந்நிலையில் ஆ.இரா. வேங்கடாசலபதியின் உரையாடலைப் படிப்பவர்களில் பலரும், பள்ளிப் பாடநூல்களில் வ.உ.சி. பற்றிய பாடம் எக்காலத்திலும் இடம்பெற்றதில்லை என்று நினைத்துக்கொள்ளக்கூடும். ஏற்கெனவே வ.உ.சி.க்கு உரிய மரியாதையை காந்தியும் காங்கிரஸும் தரவில்லையென்று சிலர் குறைகூறி வருகிறார்கள். அவர்கள் ஆ.இரா.வே.யின் இக்கருத்தை அன்றைய காங்கிரஸ் கட்சியின் மீதும், ஆட்சியின் மீதும் குற்றச்சாட்டாக வைத்துச் சமூக ஊடகங்களில் பரப்பவும் வாய்ப்பு உள்ளது. எனவே, ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி இதனையும் ஆய்வுசெய்து, எந்த ஆட்சிக் காலத்தில், பள்ளிப் பாடத்திட்டத்தில் இருந்து வ.உ.சி.யின் பாடம் அகற்றப்பட்டது என்பதையும் பதிவுசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
சீ. இளங்கோவன்,
சேலம்.
பொறுப்பாசிரியருக்கு,
நான் குறிப்பிட்டது சிபிஎஸ்சிக்கான என்சிஈஆர்டி பாடப்புத்தகம்.
ஆ.இரா. வேங்கடாசலபதி
மின்னஞ்சல் வழி
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
தனது 36 ஆண்டுகாலப் பன்முகப் படைப்புச் செயல்பாடுகளை விவாத அடிப்படையில் மீள்பார்வை செய்யும் பொருட்டு, காலச்சுவடு ‘சிறப்புப் பகுதி’ யைத் தொடங்கியுள்ளது. 301ஆவது இதழான 2025 ஜனவரி இதழில் துறைசார்ந்த நான்கு படைப்பாளிகள், கால ஓட்டத்தின் முக்கியத்துவம் வாய்ந்த நான்கு பொருண்மைகள் சார்ந்து தமது கட்டுரைகளைப் படைத்துள்ளனர்.
முந்தைய காலச்சுவடு இதழ்களில் நமது முன்னணிப் படைப்பாளிகள் பலர் எழுதிய கட்டுரை களைக் கூராய்வுசெய்து, தமது கருத்துக்களை வாசகர்களின் மறுபரிசீலனைக்குக் கொண்டு வந்துள்ளனர். இன்றைய தமிழ் இதழியல் உலகில் இம்முயற்சி ஒரு புதிய பார்வைக்கு வித்திட்டுள்ளது. காலச்சுவடு தனது தனித்துவ மான இதழியல் தடத்திற்கு வருங்காலங்களிலும் நல்ல வீரியமிகு ஒளியைப் பாய்ச்ச, இந்த ‘சிறப்புப் பகுதி’ ஒரு சுயமதிப்பீடாகவும் மீள்பார்வையாகவும் அமையும்.
முதல் கட்டுரை, சமகாலத் தொழில் வளர்ச்சியுடன் தமக்கே உரித்தான நவீன மொழியியல் அறிவுப் புலத்தைத் தகவமைத்துக்கொண்டு ஒரு செம்மாந்த பார்வையுடன் வெற்றிநடை போடுவதை மிக விரிவாக எடுத்துரைக்கிறது. இக்கட்டுரையின் உள்ளீடு, ஒரு மேலோட்டமான வாசிப்பால் மட்டுமே உள்வாங்கக் கூடியது அல்ல. ‘காலச்சுவடு’ வாசகர்களின் தேர்ந்த புரிதல் மிக்க விமர்சனக் கண்ணோட்டம் இதற்குத் தேவைப்படுகிறது. இக்கண்ணோட்டம், பரந்துபட்ட தற்காலத் தமிழ் இதழியல் உலகில் பல்கிப் பெருகிட வேண்டும்.
கடந்த காலக் காலச்சுவடு இதழ்களின் ஐம்பதுக்கும் மேலான படைப்புகள் கட்டுரையாளரின் கூரிய பகுப்பாய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இலக்கியப் புலம்சார்ந்த அனைத்துப் படைப்பாளிகளும் மொழிக்கும் சமூகத்திற்குமிடையேயுள்ள மேம்பட்ட ஒரு உறவைக் கூடுதலாகப் புரிந்துகொள்ளும் விதமான உரையாடலை, வாசகர்களிடம் நடத்துவதாகக் கூறும் கட்டுரையாளரின் மதிப்பீடு இந்த இதழுக்குச் சாலப் பொருந்தும்.
இதேபோன்று, ‘காலத்தில் மறையாத காந்தியச் சுவடுகள்’ என்ற அடுத்த கட்டுரை, காந்தியடிகளது ஆக்கப்பூர்வமான பங்களிப்பை நிகழ்காலத் தலைமுறை சிந்திக்கும்படியான வெளியைக் ‘காலச்சுவடு’ அமைத்துக் கொடுத்திருப்பதே சிறப்பு.
அடுத்த ‘கதவைத் திறந்த காலச்சுவடு’ கட்டுரை, காலப்போக்கில் தவிர்க்க முடியாத அதிர்வுத் தடங்களைப் பதித்துள்ள தலித் இலக்கியக் கோட்பாட்டு விவாதங்களையும், அவற்றின் மறுதலிக்க முடியாத சமூக அழுத்தங்களையும் மீள்பார்வை செய்கிறது. பல்வேறு ஆளுமைகளின் கடந்த காலக் கட்டுரைச் சாரங்கள் இந்த ஆய்வினை நன்கு முடுக்கிவிட்டுள்ளது நன்றாகத் தெரிகிறது. இத்தகைய சமூக நீதித்தராசு மிடுக்குடன் நிமிர்ந்து நிற்பதற்கு சு.ரா.வின் ‘தோட்டியின் மகன்’ நூலின் மொழிபெயர்ப்புகூட ஆதார சுருதியாய்த் துலக்கம் கொடுத்திருக்கலாம். ‘காலச்சுவடும் சூழலியலும்’ என்ற கட்டுரை, இன்றைய மனித சமூகத்திற்குச் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அவசியமாயிருப்பதைக் காட்டுவதுடன் இவ்விதழ் தனது தொடர் கவனத்தில் கொண்டுள்ள அறிவியல் பார்வையையும் விரித்துரைக்கிறது. இலக்கியம், சமூகம், அரசியல் தளங்களுக்கு அப்பாற்பட்ட இப்பொருண்மை, காலச்சுவடின் பன்முகப் பணிக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.
சி. பாலையா,
புதுக்கோட்டை.
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
மருதனின் ‘மீட்டெடுக்கப்படும் வரலாறு’ படித்தேன். அதில் ரணஜித் குஹாவின் மேற்கோள் கூற்றுப்படித் தற்பொழுதெல்லாம் கிளர்ச்சிகளை, வெகுஜனப் போராட்டங்களை அதன் தொடக்கப்புள்ளியில் அலசி ஆராயும் அரசியல் பார்வை காணாதுபோக, போராடுபவர்கள் வெளிநாட்டுக் கூலி அல்லது இடதுசாரித் தீவிரவாதி என்று கடந்துபோவது வழக்கமாகிப்போனது. திருநெல்வேலி எழுச்சி குறித்த தரவுகள், நீதிமன்ற ஆவணங்கள் ஆகியவை காலனியச் சார்பு ஆவணங்களாக இருந்துள்ள நிலையில் வரலாற்றைத் தெளிவுற விளக்குவதில் உள்ள சிரமத்தை அறியவைத்துள்ளார் சலபதி. வ.உ.சி.க்கு எந்த மாதிரியான தண்டனை வழங்க வேண்டும் என்பது நீதிபதிகளுக்கு முன்கூட்டியே வழிகாட்டப்பட்டுள்ளது எனும் செய்தி “எல்லா சாலைகளும் ரோமுக்கு இட்டுச்செல்கின்றன” எனும் பழமொழியை நினைவூட்டுகிறது. வரிவிலக்கில் ‘கப்பலோட்டிய தமிழன்’ திரைப்படம் தந்த சுவாரசியமான ஆர்வம் இன்றும் கனன்றுகொண்டிருக்கிறது. சாகித்திய அகாதமி விருது ஆ.இரா. வேங்கடாசலபதியின் ‘திருநெல்வேலி எழுச்சியும் வஉசியும்’ (1908) புத்தகத்தின் மீது வாசிப்பைத் தூண்டும் விறுவிறு டிரெய்லராக இருந்தது அக்கட்டுரை.
ம. விஜய் ஆரோக்யராஜ்,
கும்பகோணம்.
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••