இசைப் பயன்
கடந்த அரை நூற்றாண்டாகத் தமிழ்ப் பொதுப் பண்பாட்டின் தவிர்க்கவியலாத கூறுகளில் ஒன்றாகக் கலந்திருப்பது இளையராஜாவின் இசை. திரையிசை அமைப்பாளராகவே பெரும்பாலும் செயல்பட்டிருந்தாலும் அவரது பெயர் தமிழ் வெகுமக்களின் உணர்வில் இசை அடையாளமாகப் பதிந்திருக்கிறது. பெருவாரியான நுகர்வாளர்களின் இசையுணர்வுக்குப் புகலிடமாகத் திரையிசையே நிலைகொண்டிருக்கிறது என்பதால் இந்த ஏற்பு இயல்பானது. இதை ஏற்றுக்கொண்டு செயல்பட்டவர் இளையராஜா. இந்த வரையறைக்குள் செயல்பட்டும்கூட நூற்றாண்டைக் கடந்த இந்திய சினிமாவில் தனக்கு முந்தைய இசை அமைப்பாளர்களைவிட மிக அதிகமான பரிசோதனைகள் மேற்கொண்டு அவற்றை விரிவான மக்கள் திரள் ஏற்றுக்கொள்ளும்படியான சாதனைகளாக மாற்றியவர் அவரே. திரை இசைக்குள் இயங்கி வந்தபோதும் அதை மீறிய முயற்சிகளைத் தொடந்து செய்துவந்திருக்கிறார். அவற்றில் உச்சமானது அவரது உருவாக்கத்திலான ‘வேலியண்ட் – சிம்பொனி 1 ’ இசைக் கோவையை உலகப் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் ஆர்க்கெஸ்ட்ரா, லண்டன் ஈவெண்டிம் அப்போலோ அரங்கில் மார்ச் 8 அன்று அரங்கேற்றிய நிகழ்வு. இது ஒரு வரலாற்றுச் சாதனை. இந்தியர் ஒருவரின், ஆசியர் ஒருவரின் இசையை இதுபோன்ற இசைக் குழு இசைத்திருப்பது சாதனைக்கு மேலதிக மதிப்பை அளிக்கிறது. இளையராஜாவின் மேதைமைக்கும் அரை நூற்றாண்டுக் கால இசை அனுபவத்துக்கும் அயராத உழைப்புக்கும் வாய்த்த உலகளாவிய அங்கீகாரம் இது.
மேற்சொன்ன மேதைமை, அனுபவம், உழைப்பு ஆகிய மூன்று பண்புகளுமே இளையராஜா என்ற கலைஞரை இன்று சிகரத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. அவரது வாழ்க்கைப் பயணத்தை உற்றுக் கவனித்தால் இது எளிதில் விளங்கும். குறிப்பிடத்தகுந்த இசைப் பின்புலம் எதுவும் இல்லாதவர். ஆனால் தனது இருப்பின் பொருள் இசை என்று உணர்ந்துகொண்ட பின் மேற்கொண்ட அபார உழைப்பு நிகரற்றது. வெறும் நாட்டார் இசையின் பின்னணியில் உருவான ஒருவர் கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை, மேலைச் செவ்வியல் இசைமுறைகளைக் கற்றுக்கொண்டதும் அதன் நுணுக்கங்களை உட்செரித்துக்கொண்டதும் அவற்றைக் கடந்து சென்றிருப்பதும் அரிதான நிகழ்வுதான். தான் ஈடுபட்டிருக்கும் துறையில் மேதைமை கண்ட அந்தக் கலைஞர் அரிதானவர்தான். அனேகமாக இளையராஜாவின் வயதை எட்டிய யாரும் தமது துறையில் ஓய்வை நாடுவார்கள். ஆனால் இளையராஜாவின் கலை அவரை மூப்பிலிருந்து கனிவுடன் விலக்கியிருப்பதும் அரிதான செயலாகும்.
இளையராஜா தனக்கு வாய்த்த சூழலில் செயல்பட்டவர். அதே சமயம் அந்தச் சூழலை மீறியும் செயல்பட்டவர். புதிய சூழலை உருவாக்கி நிலைநிறுத்தியவரும்கூட. ஏறத்தாழ ஐம்பதாண்டுக் காலம் இசைப் பணியில் ஈடுபட்டிருக்கிறார். 1975முதல் 1990களின் தொடக்கம்வரையான பதினைந்து ஆண்டுக் காலம் திரையிசை உலகில் அவரது செல்வாக்கு மங்காமல் இருந்தது. இந்த ஒன்றரைப் பதிற்றாண்டிலேயே தன் காலத்திலும் தனக்குப் பின்பு வந்த மூன்று தலைமுறைகளையும் அவரால் ஈர்க்க முடிந்திருக்கிறது. அது இன்றும் தொடர்கிறது. தமிழ்த் திரையிசையின், விரிவான பொருளில் இந்தியத் திரையிசையின் உரைகல்லாக அவரது இசையே அமைந்தது. திரையிசையில் அவர் நிகழ்த்திய மாற்றங்கள் அவ்வாறானவை.
சினிமாவின் வருகையோடு தமிழ் மக்களின் பொதுவான இசை ரசனை அதில் இடம்பெறும் இசை மட்டுமே என்றாகிப் போனது. கர்நாடக இசையும் நாட்டார் இசையும் அவற்றுக்கென்றுள்ள ரசிகர்களுக்கானது என்ற நடைமுறை நிலவியது. இந்தச் சூழலில் உடைப்பை ஏற்படுத்தியவர் இளையராஜா. திரையிசை ரசிகர்கள் விரும்பும் இசையைக் கொடுத்தார். கூடவே அவர்களை விரும்பச் செய்யும் வகையில் சூழலை மீறிய இசையையும் உருவாக்கினார். திரையிசை அல்லாத ஓர் இசை வகைமை இருந்திருக்குமென்றால் அதை ரசிக்கும் ஆர்வலர்களும் அமைந்திருப்பார்களானால் இளையராஜாவின் இசை வேறொரு பரிமாணத்தில் வெளிப்பட்டிருக்கும்.
திரையிசையில் இளையராஜா கொண்டுவந்த மாற்றங்கள் உண்மையில் திரையிசைக்கும் அப்பாற்பட்டவை. தனது கற்பனையில் உருவான ஒரு பேரிசையின் பகுதிகளைத்தான் திரைப்படங்களில் பயன்படுத்தியிருக்கிறார். ஒருவேளை திரைப்பட இசை அமைப்பாளராக இல்லாமல் முழுமையான ஓர் இசை உருவாக்குநராகச் செயல்படும் வாய்ப்பு அமைந்திருக்குமானால் இன்று அவர் பெற்றிருக்கும் புகழை வெகுகாலத்துக்கு முன்பே அடைந்திருக்கவும் கூடும். இசை அமைப்பாளர் – மியூசிக் டைரக்டர் – என்ற நிலையில் அல்லாமல் இசை உருவாக்குநர் – மியூசிக் கம்போசர் – என்று அறியப்பட்டுமிருக்கலாம்.
திரையிசையில் இளையராஜா நிகழ்த்திய மாற்றங்களில் முதன்மையானவையாகச் சிலவற்றைச் சொல்லலாம். சாஸ்திரீய சங்கீதமே திரையிசைக்கும் அடிப்படையானதாக ஆரம்பக் காலத்தில் இருந்தது. பின்னர் அது மெல்லிசையாக மாறியது. இளையராஜா இசையமைத்த தொடக்க காலத் திரைப்பாடல்களிலும் மெல்லிசைதான் (மெலடி) இடம்பெற்றது. தன்னை நிறுவிக்கொண்ட குறுகிய காலத்திலேயே அவர் இசைப் பரிசோதனைகளிலும் ஈடுபட்டார். மெல்லிசைக்கு முக்கியத்துவம் அளித்தபடியே ஒருங்கிசைக்கும் (ஹார்மனி) முதன்மை சேர்த்தார். இது அவர் நிகழ்த்திய முதல் மாற்றம். இசையைத் திரைப்படத்தின் உயிரோட்டமுள்ள முழுமையாகக் கற்பனை செய்தது இரண்டாவது மாற்றம். திரைப்படத்தின் மையப் பொருளை இசையாக வடித்ததும் – (தீம் மியூசிக்) – ஒலி வடிவமாகவே அமைந்த பாடல் இசையையும் பின்னணிக் கோவையையும் கட்புலனுக்கும் இயைந்ததாக அமைத்ததும் அடுத்தடுத்த மாற்றங்கள். இசைக் கருவிகளின் பயன்பாட்டில் மரபை மீறியது அவர் நிகழ்த்திய நுட்பமான சாதனை.
முதல் திரைப்படத்திலிருந்து இன்றைய சிம்பொனிவரையிலாக இளையராஜா உருவாக்கிய இசை ஆக்கங்கள் வியப்பளிக்கும் எண்ணிக்கையிலானவை; ஒன்றுக்கொன்று மாறுபட்ட வகையிலானவை. கேட்கும்தோறும் புதிய உணர்வுகளைக் கிளறச் செய்யும் பண்பு கொண்டவை. இவையெல்லாம் ஒரு துறையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட மேதை ஒருவரால் மட்டுமே நிகழ்த்திக் காட்ட முடிபவை.
டி.எஸ். இலியட் பெரும் கவிஞனின் இயல்புகளாக மூன்று அம்சங்களைக் குறிப்பிடுகிறார். எண்ணிக்கைப் பெருக்கம், வித்தியாசம், சீரான படைப்புத் திறன் ஆகியன அந்த இயல்புகள். இதை இளையராஜாவுக்கும் பொருத்திப் பார்க்கலாம். ஆயிரக்கணக்கான பாடல்கள், அவற்றுக்கு நிகரான ஆயிரமாயிரம் பின்னணி இசைக் கோவைகள், தனியிசைப் பேழைகள் என்ற பரந்த எண்ணிக்கை, நாட்டார் இசை, கர்நாடக, ஹிந்துஸ்தானி இசை, மேற்கத்திய மரபிசை, செவ்வியல் இசை அடிப்படையிலான வகைமைகள், எண்பதைக் கடந்த வயதிலும் தொடரும் படைப்பெழுச்சி இவையனைத்தும் அவரை நமது காலத்தின் மேதையாக முன்னிருத்துகின்றன. இதுவே அவரை மேற்கத்திய இசை மேதைகளான பீத்தோவன், மொஸார்ட், பாஹ், ஷூபர்ட், ப்ராம்ஸ் ஆகியோர் வரிசையில் வைத்துப் பார்க்கத் தூண்டுகிறது.
இவர்கள் எல்லாருக்கும் பொதுவான அடிப்படை, அவர்களது இருப்பு இசையால் தீர்மானிக்கப்பட்டது என்பதும் அவர்கள் இசையைப் புதிதாக உருவாக்கினார்கள் என்பதும்தான். இவர்களின் வாழ்க்கையையும் இசைச் சாதனைகளையும் உணர்ந்த ஒருவர் இளையராஜா. அவர்களுடன் தோளுரச நிற்கக் கனவு கண்டவர் அவர். அவரது கனவு இன்று மெய்ப்பட்டிருக்கிறது. அவர் கண்ட தனிக் கனவு; ஆனால் அதன் பயன் எல்லாருக்கும் உரியது. எல்லாரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துவது. அந்த மகிழ்ச்சியை அளித்த இசை மேதைக்குப் பல்லாயிரம் வாழ்த்துகள்.
காலச்சுவடு நிறுவனரும் முன்னோடி எழுத்தாளருமான சுந்தர ராமசாமி நேர்காணல் ஒன்றிலும் நாட்குறிப்பு ஒன்றிலும் இவ்வாறு குறிப்பிட்டார்; ‘இளையராஜா இன்று தமிழகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரே மேதை’. இந்தக் கூற்று மெய்யாகியிருக்கும் தருணம் இது.