கடிதங்கள்
மார்ச் இதழில் ‘சாதிக் குப்பையில்...’ கட்டுரையை வேதனையுடன் படித்தேன். கல்விக்கூடங்களிலேயே இந்நிலை என்றால், இம்மாணவர்கள் வளர்ந்தபின் சமூக முன்னேற்றம் எங்கு நடக்கப்போகிறது? தமிழ்நாட்டின் வளர்ச்சி உயர் படிப்பிலும் பொருளாதாரத்திலும் மட்டும்தான், மனித உரிமையிலும் மாண்பிலும் பின்செல்கிறோம். அதைப்பற்றி அரசியலரும் சரி பெரும்பான்மைச் சமூகமும் சரி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. உங்கள் சக ஆசிரியரின் தட்டுப் பிரச்சினை எனக்கு வேறு ஒரு செய்தியை நினைவு கூறியது: என் மாமா சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்தபோது ஒரு சக நீதிபதி வேறு ஒருவர் தொட்ட தண்ணீர்க் கிண்ணத்தைத் தொட மாட்டாராம்! என் மாமா இத்தகைய மனிதரிடமிருந்து எம்மாதிரியான நீதி வரும் என்று வருத்தப்படுவார். அறிவு கூர்ந்தவர்களும் அறிவு வளர்ப்பவர்களுமே இப்படி இருந்தால், எங்கே நமக்கான உய்வு? சுதந்திரம் தாண்டி நான் வளர்ந்த ஐம்பதுகளில் பள்ளியிலோ கல்லூரியிலோ சாதி மதம் பற்றிய மனப்பான்மை வெகுவும் குறைவாகத்தான் தெரிந்தது. தற்போது நடப்பது பெரும் பண்பாட்டுச் சிதைவு.
இந்த முக்கியமான பிரச்சினையை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த கட்டுரையாசிரியருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
சோ. அசோக்,
சென்னை.
••••••••••••••••
‘மாயப் பின்னல்’ சுவாரசியமான கதைதான். கதை மிகை புனைவு வகை என்று புரிகிறது. ஏதோ இரண்டு மூன்று இடங்களில்தான் தகவலாகச் சில விஷயங்கள் சொல்லப்படுகின்றன. அதிலும் இரண்டு தவறுகள் (நான் அறிந்தவரை); தவறு என்கிறபோது அது நெருடலைக் கொடுக்கிறது . முதலாவது “ஸ்டீபன் ஹாக்கிங்கூட இதைத்தான் சொல்லியிருக்கிறார் அறிவியலை ஆழமாகக் கற்கக் கற்கக் கடவுளை அதிகமாக நம்புகிறேன்” என்று வருகிறது. இதைச் சொன்னது ஸ்டீபன் ஹாக்கிங் அல்லர்; ஆல்பர்ட் ஐன்ஸ்டைன். இரண்டாவது “அமெரிக்காவின் தரைவழிச் சாலை ரூட் 66, சான்பிரான்சிஸ்கோவிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ்” என்று சொல்லியிருக்கிறார். ரூட் 66 சிக்காகோவிலிருந்து கலிபோர்னியா, சாண்டோமோனிக்காவரை செல்லக்கூடிய பாதை. சான்பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ் இரண்டுமே கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள நகரங்கள். இதில் அமெரிக்காவின் குறுக்கு வெட்டுத் தோற்றம் எப்படிக் கிடைக்கும்? இல்லை, இதையும் புனைவு என்று எடுத்துக்கொள்வதா என்று தெரியவில்லை. இதைப் படிப்பவர்கள் இதுதான் உண்மை என்று நம்ப வாய்ப்புண்டு. கதையின் சுவாரசியத்தில் கவனம் செலுத்துவதுபோல் கதையிலுள்ள தகவல்களையும் சரி பார்ப்பது அவசியம்.
கார்த்திக்
சேலம்
••••••••••••••••
மு. சாகுல் ஹமீதுவின் ‘காந்தி புன்னகைக்கிறார்’ கதைக் கரு இன்றைய தேவை. மொழித் திறன், தலைப்புப் பொருத்தம் என அனைத்தும் அருமை. ஆங்கிலத்திலும் இன்ன பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும். தமிழ்நாட்டோடு நில்லாமல், நமது இந்திய நாடு முழுக்கக் கொண்டு செல்லப்பட வேண்டிய கதை.
ராமசாமி தனசேகர்,
மின்னஞ்சல்.
••••••••••••••••
காலச்சுவடு அட்டையை ஆசையுடன் பார்த்துவிட்டுத் ‘தமிழ்நாட்டில் இரும்புக் காலம்’ என மகிழ்ச்சியுடன் திருப்பினால் தலையங்கம் ‘ஆணவத்தீ’. அந்த நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம் இன்னும் இருக்கிறது; ஆணவத்தீ இப்போதைக்கு அடங்குவதாக இல்லை. புல்லட் கம்பீரமான வாகனம். அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. புல்லட்டை இன்னின்ன ஜாதிகள்தான் ஓட்ட வேண்டும் என்ற சட்டம் ஏதாவது உள்ளதா?
எஸ். பஞ்சலிங்கம்,
மடத்துக்குளம்.
••••••••••••••••
‘கற்றனைத் தூறும்’ பத்தியில் ‘சாதிக் குப்பையில் அலைந்தலைந்து அழிதல் அழகல்லவே’ என்று எழுதிய சாரா அருளரசி சமூகத்தில் நடக்கும் சாதிய அவலத்தை மிக அழகாக வரலாற்றுப் பின்னணியோடு சாடியிருக்கிறார்; மனமுவந்த பாராட்டுகள்.
தான் ஒரு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியராக இருந்தாலும் சாதிக் கொடுமைகளைத் தைரியமாகவும் மனக்குமுறலுடனும் சொல்லியிருக்கிறார். அதிலும் சமீபகாலமாகப் பள்ளியில் பயிலும் மாணவிகள் மத்தியிலும் சாதிய வன்முறை பரவி வருவதைக் கண்டு ஒரு பெண்ணாக மிகுந்த வேதனையுடன் சொல்லியிருக்கிறார். தான் பணிபுரியும் பள்ளியில் நடந்த சம்பவத்தைப் பொதுவழியில் காட்சிப்படுத்திய விதம் மிகவும் பாராட்ட வேண்டிய ஒன்று. தாய் தந்தைக்குப் பிறகு ஒரு மாணவருக்குக் குருவாக இருந்து பாடம் சொல்லிக் கொடுத்து மாணவர்களைப் பக்குவப்படுத்திப் பண்புள்ளவராக வளர உதவிசெய்வதை விட்டு, சாதியப் பெருமைகளைப் பேசிப் பாகுபாடு பார்த்து வெறுப்புணர்ச்சியை விதைப்பதை அறியாமல் தானும் மிருகமாகி, வளரும் சந்ததியையும் மிருகக் குணம் உள்ளவர்களாக ஆக்குவது இன்றைய ஆசிரியர் தொழிலாகிவிட்டது. இதற்குச் சான்றாக சாரா அருளரசி எடுத்துக்காட்டிய நிகழ்வுகளும் அன்றாடம் செய்தித்தாள்களில் மாணவர்களிடையே மோதல்களால் ஏற்படும் உயிர்ச் சேதங்களும் சாட்சியாகும்.
தனிமனிதரின் மிருக உணர்ச்சியாலும் அறிவை வளர்க்கத் தவறியதாலும் இம்மாதிரியான சாதிய வன்முறைகளும் அராஜகமும் அரங்கேறுகின்றன. அரசாங்கம் என்பது மனிதர்களில் உள்ளடக்கிய ஒன்றே. எத்தனை கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தாலும் அதனை நடைமுறைப்படுத்த மனிதரே தேவைப்படுகிறார்கள். அவர்களும் சாதியச் சாக்கடையில் மூழ்கிவிடுகிறார்கள். சாதி என்ற ஒன்று மனிதர்களை ஏய்த்துப் பிழைக்கும் செயல். உயர்ந்த சாதி என்று யார் சொன்னார்கள், அப்படி சொல்லித் திரிபவருக்குத் தன்னுடைய உடலில் ஏதாவது விசேஷமாக, மற்ற மனிதருக்கு இல்லாத அவயவமும் தோற்றத்தில் வித்தியாசமும் ரெக்கைகள் முளைத்து இயல்பான மனிதனைக் காட்டிலும் மந்திர சக்தியும் பெற்றிருக்கிறாரா என்பதையெல்லாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
மனிதர்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் மனிதர்கள் என்போர் யார் என்று தெரியவரும். இந்தச் சிந்தனை செயல்பட வேண்டுமென்றால் நிறையப் புத்தகங்களை வாசிக்க வேண்டும். மாணவர்களுக்குச் சிந்திக்கப் பயிற்சி கொடுத்தால் போதும்; அவர்களை எந்தச் சக்தியாலும் மனதைக் கெடுக்கவோ திசை திருப்பவோ இயலாது.
சாரா அருளரசியைப் போல அனைவரும் தங்கள் கடமை உணர்ந்து மனசாட்சியோடு மாணவர்களுக்குச் சிந்திக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும். அதனால்தான் குருவை மூன்றாம் ஸ்தானத்தில் வைக்கிறோம்.
அந்தக் குருவுக்கான மதிப்பும் மரியாதையும் அவர்கள் உருவாக்கும் நல்மாணவர்களைப் பொருத்தே அமையும்.
ஜி. சிவகுமார்,
சென்னை.
••••••••••••••••