மனிதர்களை வாசித்தவர்
எனது சொந்த ஊரான கறம்பக்குடியில் பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு கலை இரவு நடத்தியபோது, அதற்கு நந்தலாலாவை அழைப்பது என்று முடிவெடுத்தோம்.அவரிடம் பேசினேன். அப்போது நான் அமைப்பிற்கு புதியவன். அந்தத் தயக்கத்துடன் அவரிடம் பேசினேன்.அதை உடைத்து எத்தகைய அன்போடு என்னை அணுகினாரோ அத்தகைய அன்பு கடைசிவரை எங்களுக்குள் கூடிக்கொண்டேதான் போனது. “சொல்லுங்க ஸ்டாலின்” என்று பேசியவர் பிறகான நாள்களில் “சொல்லு ஸ்டாலின்” என்று பேச ஆரம்பித்தார். இவ்வாறு வயதைப் பொருட்படுத்தாத நட்பைச் சிலரால் மட்டுமே பேண முடியும். அதில் நந்தலாலாவின் அணுகு முறை சிறப்பானது.நெருக்கம் கூடக்கூட எனக்கு அவர்மீதான மதிப்பும் சேர்ந்து கொண்டே போனதும் முக்கியமானது. அதையும் சிலரிடம் மட்டுமே உணர முடியும்.
கறம்பக்குடி கலை இரவுக்கு வந்து சென்ற அடுத்த வாரமே பட்டுக்கோட்டையில் நடைபெற்ற கலை இரவில் நந்தலாலா, எம்.ஆர். ராதா குறித்துப் பேசினார். ஏற்கெனவே எம்.ஆர். ராதாவை மிகவும் பிடிக்கும். எனவே எம்.ஆர். ராதாவின் கலையுலக வாழ்க்கையையும் அரசியலையும் அவர் அணுக்கமாக நெருங்கிப் பேசியதை நீண்ட நாட்களுக்கு என்னால் மறக்க முடியவில்லை. செல்லும் இடமெங்கும் அதை எல்லோரிடமும் சொல்லிக்கொண்டே இருந்தேன்.கடைசியாக ஒரு கூட்டத்தில் நந்தலாலாவைப் பேச அழைக்கும் போதுகூட அந்தப் பேச்சை நினைவிலிருந்து குறிப்பிட்டேன்.ஒரு பேச்சு ஆண்டுக்கணக்காகக் காதில் ஒலித்துக் கொண்டிருப்பது சாதாரணமல்ல.
நந்தலாலாவின் சொந்த ஊர் புதுக்கோட்டை என்றாலும் திருச்சிதான் அவரின் அடையாளம்.திருச்சியை ஆழமாக நேசித்தவர். அதை விகடன் இணையதளத்தில் “ஊறும் வரலாறு” தொடராக எழுதி நிரூபித்தும் உள்ளார்.திருச்சியின் கலை, இலக்கிய, அரசியல் ஆளுமைகள் மற்றும் இடங்களின் வரலாறு மட்டுமில்லாமல் நகரத்தின் எளிய மனிதர்கள் குறித்தும் தொடர்ந்து எழுத்திலும் பேச்சிலும் பதிவு செய்தவர்.எல்லாவற்றிலும் அவரின் பார்வையில் தெளிவு இருக்கும்.திருச்சியின் பல பெருமிதங்களைத் தன் எழுத்தில் குறிப்பிட்டவர், “தமிழ்நாட்டில் மத, இனக் கலவரங்கள் நடக்காத ஊர்களில் திருச்சி முக்கியமானது” என்று சொல்லிவிட்டு அதன் காரணத்தை உரைப்பதுதான் சிறப்பு.“ஏனெனில் திருச்சி கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு அவ்வாறானது” என்பார். திருச்சியில் உள்ள கல்லூரிகளைப் பட்டியலிட்டு அதில் 55,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள் என்ற எண்ணிக்கையைப் புள்ளி விவரங்களோடு தருவார்.கல்வி விழிப்புணர்வின் கொடைதான் திருச்சியின் அமைதிக்குக் காரணம் என்று நம்பினார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பொறுப்பில் இருந்தவர். கலை இரவு மேடைகளில் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து பேசியவர், மனதில் எண்ணுவதைப் பேசுவதோடு கொள்கைகள், தத்துவங்களைப் பார்வையாளர்கள் மிரளாத வண்ணம் அவர்களுக்கான மொழியில் பேசுவார். அவர் பேச்சின் சின்ன சின்ன வாக்கியங்கள்கூட மக்களை அந்தப் பேச்சுக்குள் கட்டிவைத்துக்கொள்ளும். பேச்சின் இடையிடையே, “அது மட்டுமில்லை நண்பர்களே”, “எப்படி சார், என்ன சார் அர்த்தம்?”, “கேள்வி புரியுதா சார்?” என்று எதையாவது கூறிக்கொண்டே வருபவர், “இதை நான் சொல்லவில்லை சார்” என்று ஆதாரமாக அறிஞர்கள் பெயரைச் சொல்லுவார். வ.உ.சி., திரு.வி.க., பெரியார், அரிஸ்டாட்டில், தால்ஸ்தோய் என்று பலரையும் தன் பேச்சில் கொண்டு வருபவர் திருச்சி திருலோக சீதாராமின் மொழிபெயர்ப்பையும் குறிப்பிட்டுச் சிலாகிப்பார். அவர் தன் பேச்சில் எதை எதோடு முடிச்சிட்டுப் பேசுவார் என்று கணிக்கவே முடியாது. என்னுடைய “கடவுளின் தாகம்” என்ற கவிதையை திருமூலரின் “நடமாடும் கோயில்...” என்ற செய்யுளுடன் ஒப்பிட்டுப் பல மேடைகளில் பேசியுள்ளார்.அவரின் பரந்துபட்ட வாசிப்பின் வெளிப்பாட்டை அவரின் பேச்சுகளில் உணர முடியும்.
பல புத்தகங்கள்,நூலாசிரியர்களைத் தன் பேச்சில் குறிப்பிட்டுக்கொண்டே இருப்பார். அந்தப் பேச்சில் இருக்கும் கலவை வித்தியாசமானதாக இருக்கும். எல்லீஸ், கால்டுவெல்லும் இருப்பார்கள். கி.ரா. கதையைச் சொல்லுவார். ஜி. காரல்மார்க்ஸ் கதையைக் குறிப்பிடுவார். அதே பேச்சில் சட்டென என்.எஸ். கிருஷ்ணனின் செல்லாத நோட்டு சம்பவமும் வரும். “எஸ்.ராமகிருஷ்ணனின் ‘யாமம்’ கதையை வாசிக்கும்போது “கையில் முகர்ந்து பார்த்தால் அத்தர் வாசம் வரும்” என்று கூறுவார். தி. ஜானகிராமனின் கதையைத் தன் பேரனிடம் கூறிக்கொண்டிருந்தபோது அந்தக் கதையின் முடிவைப் பேரன் சொல்லிவிட்டான் என்று மேடையில் கதையை முடிக்கும்போது பார்வையாளர்களிடம், “1956 இல் எழுதப்பட்ட ஒரு கதையின் முடிவை இன்று ஒரு குழந்தையால் எப்படி கணிக்க முடிகிறது?மனிதனின் அடிப்படை உணர்ச்சியும் குழந்தையின் உணர்ச்சியும் ஒன்றாக உள்ளன” என்று செய்தியை உணர வைப்பார்.
வள்ளுவரைப் பற்றிப் பேசக் கேட்டால் நந்தலாலா கொண்டாடத் தொடங்கிவிடுவார்.வள்ளுவரைப் பன்முகப் பார்வையிலும் கொண்டு செல்வார். “சமூகநீதி என்ற பெரியார் கோட்பாட்டிற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் திருவள்ளுவர்” என்று கூறத் தயங்க மாட்டார். ‘பிள்ளையார் சுழி’ என்ற பதத்தை முற்போக்காளர் பயன்படுத்தலாமா என்று யோசிக்கக்கூட மாட்டார். மக்களிடம் வள்ளுவரையும், பெரியாரையும் கொண்டுசேர்த்துவிட்ட பிறகு அவர்கள் மனதிலிருந்து பிள்ளையார் தானாகக் கிளம்பிவிடுவார் என்று நம்பினார். அதே வள்ளுவரைக் கையில் வைத்துக் கொண்டு நடப்பு அரசியலையும் தன் பேச்சில் கொண்டு வந்துவிடுவார். “திருக்குறளில் 14,000 வார்த்தைகள் உண்டு. ஆனால் இரண்டு பூக்கள்தான் இருக்கும். அனிச்சையும் குவளையும். தாமரை இல்லவே இல்லை” என்று தனது இடதுசாரி அரசியலை உறுதிப்படுத்துவார். இப்படிச் சாதாரண மக்களிடம் எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதில் திராவிட, பொதுவுடமைக் கருத்துகளைக் கொண்டு சேர்க்க முயல்வார்.
புதுக்கோட்டையில் ஒருமுறை நந்தலாலா பேசிமுடித்த பிறகு அம்பேத்கரிஸ்ட் நண்பர் என்னிடம் கேட்டார், “ஏன் நந்தலாலா காந்தியை இவ்வளவு தூக்கிப் பிடிக்கிறார்?” ஆனால் காந்தி இன்றும் ஏன் தேவை என்பதில் நந்தலாலா உறுதியாக இருந்தார். எதை, யாரைத் தூக்கிப் பிடிக்க வேண்டும் என்பதைக் காலமும் சேர்ந்துதான் முடிவு செய்கிறது. அதை என்னிடம் தனிப்பேச்சிலும் விரிவாகப் பேசினார்.
பட்டிமன்றங்களின் வாய்ப்புகளுக்காக நந்தலாலா, மலின நகைச்சுவைகளின் பக்கம் செல்லவே இல்லை என்பது மிக முக்கியமானது. கருத்தரங்கமாக இருந்தாலும் பட்டிமன்றமாக இருந்தாலும் வேறுபடுத்திப் பேச மாட்டார். தகவல்களைக் கொட்டிக்கொண்டே செல்வார்.
சில பத்து ஆண்டுகளுக்கு முன் இடதுசாரி கலை இலக்கிய மேடைகளில் பெரியாரைப் பேச இருந்த தயக்கத்தை உடைத்துப் பாதை போட்டுத் தந்தவர். அமைப்பின் பெயரில் கலைஞர்கள் என்ற வார்த்தையையும் அவர்களுக்கான அங்கீகாரத்தையும் பெறுவதற்கு நந்தலாலா தந்த குரல் முக்கியமானது. அரசியல் நிகழ்வுகளை மட்டுமல்ல கலை, இலக்கியக் கூட்டங்களையும் ரசனையோடு வடிவமைப்பவர்.
வாழ்நாள் முழுக்கப் பொதுத்தளத்தில் நீண்ட பயணத்தை நிகழ்த்தியவர். மக்களோடு மக்களாக நின்று அவர்களுக்காகப் பேசியவர்.
நந்தலாலாவின் புன்னகை தனித்துவமானது.வரைந்து முடித்த ஓவியத்தில் சிறு கோடு வரைந்து அதனைக் கொண்டு வருவதுபோல இருக்கும்.
நந்தலாலா, வீட்டிலிருந்து பயணம் கிளம்பும்போது தன் மகன்களின் கைகளில் முத்தமிட்டு, கன்னத்தில் செல்லமாகத் தட்டிவிட்டுச் செல்வாராம். இப்போது திரும்பி வர இயலாத பயணம் சென்றுள்ளார். தமிழ்ச் சமூகத்தின் கன்னத்திலும் கைகளிலும் அவரின் தொடுதல்கள், முத்தங்கள் நிலைத்திருக்கும்.
மின்னஞ்சல்: stalinsaravanan@gmail.com