நறுமணத் தோழமை
தோழர் இரா. நாறும்பூநாதன் காலமாகியபோது அவரது வயது 64. இந்த ஆயுளில் மூன்றில் இரண்டுபங்கு காலத்திற்கும் மேலாக அவர் இலக்கியப் பணியிலும் சமூகப் பணியிலும் ஈடுபட்டிருக்கிறார். அவருடைய வயதுக்கும் அவர் தொடர்ந்து களத்திலிருந்து செயலாற்றியமைக்குமான தொடர்புகளைக் கணக்கிடும்போது அவருடைய மரணம் உண்மையிலேயே இளவயது மரணம்தான்; எல்லோரையும் கலங்கடித்துவிட்ட மரணமும்கூட!
எழுத்தாளர் என்கிற ஈடுபாட்டை அவர் வீடும் மேசையும் வாசிப்பும் எழுத்துமாக அமைத்துக்கொண்டிருக்கவில்லை. இதுதான் அவருடைய முதன்மையான செயல்தோற்றம். தோளில் பையைத் தொங்கவிட்டபடி நெல்லை மாநகரைத் தொடர்ந்து சுற்றிக்கொண்டிருந்தார். அவருடைய தோள்ப்பட்டையிலிருந்து அந்தப் பையை எப்படிப் பிரித்துப் பார்க்க முடியாதோ அப்படியே அந்த முகத்திலிருந்து புன்னகையையும் பிரித்துப் பார்க்க முடியாது. சில மாதங்களுக்கும் முன் நான் முகநூலில் நெல்லை மண்ணுக்கான இலக்கிய விசாவை அவர்தான் வழங்கிவருகிறார் என்று குறிப்பிட்டிருந்தேன். இது அதிகாரம் மிக்கவராக அவரைக் காட்டுகிற வர்ணனையன்று; நெல்லை மண்ணின் நாடிநரம்புகளோடு அவர் கொண்டிருந்த உறவை விவரிப்பது.
அவர் தமுஎகசவின் நிர்வாகப் பொறுப்பில் இருந்தார்; ஆனால் செயல்பாடுகள் அந்த இயக்கத்திற்காக மட்டுமானதாய் அமைந்திருந்ததில்லை. இலக்கியத் துறைசார்ந்த வெவ்வேறு கொள்கைகளைக் கொண்ட ஒவ்வொருக்கும் பொதுவான ந(ண்)பராக அவர் செயல்பட்டுவந்தார். யாதொரு அதிகாரத் தோற்றமும் தன்மீது மேல் தோலாகப் போர்த்தியிருக்கின்றது என்ற எண்ணத்தைக் கொண்டிராமல் இயங்கிவந்ததால்தான் எல்லோருடைய மதிப்புக்கும் அணுக்கத் தோழமைக்கும் உரியவராகத் திகழ்ந்தார்.
மாநில அளவில் தமுஎகச முன்னெடுத்த அனைத்துச் செயல்பாடுகளிலும் நாறும்பூநாதன் பங்கெடுத்து வந்திருக்கிறார். ஒருவேளை அச்செயல்பாடுகளுக்கான ஆர்வத்தையோ திட்டத்தையோகூட அவர் இயக்கத்திற்குள் முன்மொழிந்திருக்கக்கூடும். இது என் கணிப்புத்தானே தவிர எந்த அளவிற்கு உண்மையென்று எனக்குத் தெரியாது. ஆனால் இப்படிக் கருதுவதற்கான நடவடிக்கைகள் அவரிடம் தென்பட்டன.
2022ஆம் ஆண்டிற்கான உ.வே.சா. விருதை அவருக்குத் தமிழ்நாடு அரசு வழங்கிக் கௌரவித்தது. அவர் தன் கட்சிக்கும் இயக்கத்திற்கும் அப்பாற்பட்டுச் செயல்பட்டிருப்பதால் மட்டுமே இது சாத்தியமானது. ஆனால் நுட்பமான விசயம், அவருடைய பேச்சும் செயலும், தான் சார்ந்த இயக்கத்திற்கு உடனடிப் பெருமையை வழங்கக்கூடியதாக, அதைவிட்டுத் தான் ஒருகணமும் பிரிந்திருக்கவில்லை என்று பிறருக்கு உணர்த்துவதாக அமைந்திருந்தன. தன்னுடைய இயக்க விசுவாசத்தை விட்டுவிலகி நிற்க முடியாத ஆளுமையை ஒருவர் ஒவ்வொரு நொடியும் கொண்டிருப்பது அரிதினும் அரிதானது.
நாங்குநேரியிலிருந்து வள்ளியூர் சென்று கல்வி பயின்றவன் சின்னத்துரை. சாதீய ஆணவத்தினால் அவனும் அவனுடைய தங்கையும் அரிவாளால் வெட்டப்பட்டார்கள். தம் பேரக் குழந்தைகள் வெட்டுப்படுவதைப் பார்த்த அதிர்ச்சியில் அவர்களுடைய தாத்தாவும் அவ்விடத்திலேயே உயிரிழந்தார். செய்தியைக் கேள்விப்பட்ட நாறும்பூநாதன் உடனடியாக நாங்குநேரி சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். நெல்லை மேட்டுத்திடல் அரசு மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பெறுவதற்கான ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட ஆட்சியர்மூலம் விரைந்து செய்தார். அந்தத் தருணத்திலும் அங்கிருந்து நலம்பெற்று அவர்கள் இருவரும் வெளியேறிய பின்னரும் தோழர் தொடர்ந்து அவர்களோடு இருந்தார்; கல்வியைத் தொடர்வதற்கான வேலைகளைக் கவனித்தார். நாங்குநேரியில் அவர்கள் வசிக்க இயலாத சூழலைக் கருத்தில்கொண்டு ரெட்டியார்பட்டி குடிசைமாற்று வாரிய நிலத்தில் தனியாக வீடு கட்டவைத்துக் குடியேறச் செய்ததும் பின்னர் அந்தப் பையனின் கல்லூரிப் படிப்பை நெல்லையில் பயில ஏற்பாடு செய்ததும் தோழர்தான்.
‘பரியேறும் பெருமாள்’ படத்தில் நடித்த நாட்டுப் புறக் கூத்துக் கலைஞர் தங்கராஜூவுக்குப் பாராட்டு விழா நடத்தியதோடு அவருக்குச் சொந்தமாக வீட்டைக் கட்ட ஏற்பாடு செய்தார்; அதற்காக அவர் பட்ட சிரமங்கள் அநேகம். தங்கராஜின் குடிசை இருந்த இடம் பட்டா இல்லாமலும் குடும்பத் தகராறிலும் இருந்தது. நாறும்பூநாதன் முன்னின்று அதன் சிக்கல்கள் அனைத்திற்கும் தீர்வுகண்டு வீட்டை அமைத்துக் கொடுத்தார். தங்கராஜ் இறந்தபின் அவருடைய மகளுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி வாய்ப்பையும் ஏற்படுத்தினார்.
இந்தச் சூழல்களிலிருந்துதான் அவர் பணிபுரிந்துவந்த பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து ஏன் விருப்ப ஓய்வைப் பெற்றிருக்க வேண்டும் என்ற கேள்விக்கான விடையைத் தேட வேண்டியிருக்கிறது. அந்த விருப்ப ஓய்வில் எழுதிக் குவித்தே தீர வேண்டுமென்கிற நோக்கத்தில் விருப்ப ஓய்வு பெற்றிருக்க வாய்ப்பில்லை. அவர் எழுத்தாளர்தானே தவிர இயந்திரமாக எழுதிக் குவித்தவரன்று. தன் உடல் நலத்தைப் பேணுவதோடு தான் ஒரு சமூகச் செயற்பாட்டாளராக மண்ணின் மக்களோடு இனி எப்போதும் இசைந்திருக்க வேண்டுமென்றே உளமார விரும்பியிருக்கிறார். தன் காலம் முழுவதும் பணிசார்ந்ததாக மட்டும் அமைந்திருந்தால் அதில் சிறப்பேதும் இல்லையென்று நம்பியிருக்க வேண்டும். பணிவிலகி வருவதற்கான குடும்பப் பிரச்சினைகள் இல்லை; தோழரின் செயல்களில் அப்படிப்பட்ட பிரச்சினைகள் ஏதும் சூழ்ந்திருந்ததைப் பார்க்க முடியவில்லை. அதற்கேற்பவே சுற்றிச் சுழன்றார். பொன்னான நிமிடங்களைப் பொன்போன்ற செயல்களுக்காக அர்ப்பணித்திருக்கிறார்.
மரணத்தையொட்டி அமைச்சர்களும் அரசியல்கட்சித் தலைவர்களும் வெளியிட்டிருந்த அறிக்கைகள் தோழரின் அளவிலாக் குணாம்சங்களை வெளிப்படுத்துகின்றன.
நெல்லைப் புத்தகக் காட்சியை ஆண்டுதோறும் நடத்த முனைந்ததில் அவருடைய பங்களிப்பு நெல்லை மாவட்ட ஆட்சியரின் பங்களிப்புக்குப் பெரும் பலமாக இருந்துவந்தது. மாவட்டம் முழுவதுமுள்ள எழுத்தாளர்களை அழைத்துவந்து உரையாற்றச் செய்ததிலும், அம்மாவட்ட எழுத்தாளர்களின் கதைகளைத் தொகுப்பாக்கியதிலும் தோழர் நாறும்பூநாதன் விரைந்து செயல்பட்டு அப்பணிகளை நிறைவேற்றினார். அதனால்தான் சமீப காலத்தில் பிற எழுத்தாளர்களுடைய மரணச் செய்திகளுக்குக் கிடைக்காத முக்கியத்துவம் அவர் மரணத்திற்குக் கிடைத்தது. தொலைக்காட்சிகளோ நாளிதழ்களோ அவருடைய மறைவுச் செய்தியைப் பெரிய அளவில் வெளியிட்டமை அதற்கான சான்று.
தமிழில் பல சொற்கள் கால மாற்றங்களினால் தலைகீழான அர்த்தங்களைப் பெற்றிருக்கின்றன. நாற்றம் என்ற சொல்லுக்கு நறுமணம் என்ற பொருள் ஆரம்பக் காலத்தில் வழங்கப்பட்டு வந்தது; புராணரீதியாக சிவபெருமானுக்கு நல்ல மணம்கமழும் மாலைகளைச் சூட்டி அவரை நாறும்பூநாதர் என்று அழைத்திருக்கிறார்கள் தேவர்கள். அந்தப் பெயரையே கொண்டிருக்கும் தோழர் நாறும்பூநாதனும் தன் செயல்களால் மணம்வீசிப் புகழ்பெற்றிருக்கிறார். அந்தக் கால நெல்லை மாவட்டத்தில் கோவில்பட்டிக்கு அருகிலுள்ள கழுகுமலையில் பிறந்து நெல்லையில் வந்து குடியேறிவிட்டார். அவருடைய இயக்கத்திற்கு நெல்லை ஏற்ற மண்ணாக இருந்திருக்கிறது; இறுதிவரையும் அதனையே பற்றிக்கொண்டார்.
அவருடைய மறைவுக்கு அஞ்சலி செலுத்தச் சென்றபோது அங்கு கூடியிருந்த எல்லோருக்கும் என்னைத் தெரியவில்லை; எனக்கும் அவர்களில் யாரையும் தெரிந்திருக்கவில்லை. அந்த அளவிற்குத்தான் எனக்கும் நாறும்பூநாதனுக்குமான நட்பு தொட்டும் தொடாமலும் பட்டும்படாமலும் இருந்துவந்தது; ஆனால் கெட்டியானது. அன்னாரின் பூதவுடலை மார்க்சிஸ்ட் கட்சியின் கொடியால் போர்த்தியிருந்தார்கள். அவருடைய முகத்தைக் கடைசியாகப் பார்த்துவிட்டு வெளியே வரும்போதுதான் அவரை அந்தக் கோலத்தில் பார்த்திருக்க வேண்டாமென்று தோன்றியது. நிரந்தரமான புன்னகை தவழ்ந்த அவர் முகத்தை அப்படியே நிரந்தரமாக்கிக்கொள்ள முடியாத உணர்வுக்கு ஆளாகிவிட்டோமோ!