புத்தகங்கள், வாசகர்கள், சக பயணிகள்
காலச்சுவடு இதழ் எண் 302 தொடங்கும் தருணத்தில் பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்றிருக்கிறேன். உடல்நிலையும் குடும்பச் சூழ்நிலையும் இதற்கான காரணங்கள். நாகர்கோவில் காலச்சுவடு அலுவலகத்தில் பிப்ரவரி 10ஆம் தேதியன்று பிரிவுபச்சார நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த நிகழ்ச்சி தந்த நெகிழ்ச்சியுடன் வீடு திரும்பிய பிறகு, கடந்த 17 ஆண்டுகளாகக் காலச்சுவடில் பணியாற்றிய நாட்களை நினைத்துப்பார்த்தேன். மனதின் கரை மீறித் ததும்பும் நினைவுகளில் சிலவற்றைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
சென்னையில் காலச்சுவடு கிளை அலுவலகம் இருந்தபோது ஒருமுறையும், நாகர்கோவில் சென்றபோது ஒருமுறையும் கண்ணன் நேர்காணல் செய்தார். “சென்னை ஆபீசிலிருந்து செயல்படுங்கள், காலச்சுவடு இதழ் விற்பனை உயர்வுக்காக இதழ் செல்லாத நகரம் கிராமங்களைக் கவனம் செலுத்துங்கள்” என்றார். மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு பணியில் சேர்ந்தேன். இது நடந்தது அனேகமாக 2008 மார்ச் மாதமாக இருக்கலாம்.
ஏற்கெனவே தமிழகத்தில் பல இடங்களிலும் பயணித்த அனுபவம், விற்பனையாளர்களின் அறிமுகம் போன்ற காரணங்களால் சுலபமாகப் பணியாற்ற முடிந்தது. அலைச்சல், ஓய்வின்மை, உணவு நேரங்கள் போன்றவை சவாலானதாக இருந்தன; இருப்பினும் மனம் விரும்பிச் செய்தேன். பணியில் சேர்ந்தபோது நாகம்மாள் சென்னைக் கிளை மேலாளராகவும், அவரது கணவர் முத்து வைரவன் சென்னையில் காலச்சுவடு நூல்கள் விற்பனைப் பொறுப்பாளராகவும், ராசு சென்னைப் பகுதியின் இதழ் வினியோகப் பொறுப்பாளராகவும் ஷர்மிளா அலுவலகப் பொறுப்பாளராகவும் பணியாற்றிவந்தனர். செல்லப்பா, மண்குதிரை, பெ. பாலசுப்ரமணியன், கீழ்வேளூர் ராமநாதன் ஆகியோர் எடிட்டோரியல் பணிகளில் இருந்தார்கள். தேவிபாரதி பொறுப்பாசிரியராக இருந்தார்.
பணிக்களனில் புதிய பார்வை
பதினைந்து இருபது நாட்கள் வெளியூர்ப் பயணங்கள் முடித்து அலுவலகம் வரும்போது, ராசுவோடு சென்னைப் பகுதிகளுக்கு இதழ் வினியோகம் செய்ய அல்லது சர்வே எடுக்கச் செல்வேன். காலை ஆறுமணிமுதல் சில நாட்களில் இரவு பதினோரு மணிவரைகூடப் பணிகள் நீடிக்கும். புத்தகங்களைப் பெட்டியில் அடுக்கி, பட்டி போடுவதை முத்துவிடம் கற்றுக்கொண்டேன். இதழ் விஷயமாக வெளியூர்ப் பயணம் செல்லும்போது புத்தகக் கடைகளுக்கும் சென்றுவருவேன். அவர்கள் முகவரி, கைப்பேசி எண், வாட்ஸ்அப் எண், மின்னஞ்சல் முகவரிகளை நாகர்கோவில் அலுவலகத்துக்கு அனுப்பிவைப்பேன்.
காலச்சுவடு இதழ்கள் சென்னையில் அச்சானபின், நாகர்கோவில் அனுப்பப்பட்டு அங்கிருந்து சந்தாதாரர்கள், நூலகங்கள், விற்பனையாளர்களுக்குத் தபால் / கொரியர் மூலமாகச் சென்றுகொண்டிருந்தன. கண்ணன் மாதாமாதம் சென்னை வருவார். அப்போதெல்லாம் கலந்தாய்வுக் கூட்டங்கள் நடக்கும். இதழ்களை இங்கிருந்தே அனுப்ப ஏற்பாடு செய்யலாம், வெளியூருக்கு ரயில்வே மூலமும், சந்தாதாரருக்கு ஆர்.எம்.எஸ்., மூலமாகவும் அனுப்பலாம் என்று சொன்னேன். அந்த யோசனையை ஏற்றுக்கொண்டார். அது சம்பந்தமான வேலைகளுக்கு முத்துவோடு ஓரிரு மாதங்கள் அலைந்து திரிந்தேன்.
இதிலுள்ள சில நடைமுறைகள் சிக்கல்களை கண்ணன் சென்னை வந்தபோது தெரிவித்தேன். கண்ணன் எளிமையாக ஒரு கேள்வியை முன்வைத்தார். “வேலை கஷ்டமா? வேலை செய்வது கஷ்டமா?” பிரச்சினையைப் புதிய கோணத்தில் பார்த்துத் தீர்வுகாண உதவிய கேள்வி அது.
சண்டைக்காரக் கூட்டாளி
புதிய பார்வை இதழுக்கு மணா ஆசிரியராகச் செயல்பட்டபோது, சென்னை புத்தகக் காட்சியில் புதிய பார்வை அரங்கு எடுத்தது. அந்த அரங்கை ஒன் மேன் ஷோவாகக் கவனித்துக்கொண்ட அனுபவம் இருந்தது. 2009இல் காலச்சுவடு அரங்கில் முதல் முறையாகப் பணியாற்றினேன். அரங்கிற்கு வெளியே நின்றுகொண்டு பழைய காலச்சுவடு இதழ்களை அன்பளிப்பாக வழங்கிக்கொண்டிருந்தேன். அப்போது வேறொரு பதிப்பகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த பத்தினாதனைக் கூட்டிவந்து என்னிடம் அறிமுகம் செய்துவைத்தார் கண்ணன். “இவர் பெயர் பத்தினாதன் எழுத்தாளர், நம்மிடம் இவரது புத்தகம் ஒன்று வந்துள்ளது” என்றார். அந்தப் பத்தினாதனோடுதான் அடுத்துவரும் பத்தாண்டுகள் பயணமிருக்கும் என்று அப்போது தெரியவில்லை. கண்ணனுக்குத் தெரிந்திருக்கலாம்.
பத்தினாதன் விரைவிலேயே காலச்சுவடில் முழுநேர ஊழியராகப் பணியாற்றத் தொடங்கினார். 2009க்குப் பிறகு 2018வரை தமிழகம் எங்கும் புத்தகக் காட்சிகளில் பத்தினாதனும் நானும்தான் இருப்போம். தற்போது இலங்கைக்குப் போயிருக்கிறார்.
பத்தினாதன் எழுத்தாளர், தேர்ந்த வாசகர் என்ற பிம்பம் எதுவுமின்றி எளிமையாகப் பழகினார். ஆனால், அவரிடம் ஓர் அச்ச உணர்வு எப்போதும் இருக்கும். சின்ன விஷயங்களுக்காகச் சண்டையிடுவார். அவரது ‘போரின் மறுபக்கம்’ நூலை வாசித்த பின்னரே அவர் மனநிலைக்கான காரணம் புரிந்தது. “புறாவைப் போல யதார்த்தமாக இரு, சர்ப்பம்போல எச்சரிக்கையாகவும் இரு என்கிறது பைபிள்” என்று அவரிடம் சொல்வேன்.
பத்தினாதனிடம் எழுத்தாளர்கள் வந்து சந்தித்துப் பேசிச்செல்வார்கள்; வாசகர்களும் உரையாடுவார்கள். மதுரையில் சு. வெங்கடேசன் சந்தித்துப் பேசிக் கைகுலுக்கிச் செல்வார். எனக்கு ஆச்சரியமாகவும் பொறாமையாகவும் இருந்தது. பத்தினாதன் வாசகர்களிடம் அளந்து பேசுவார். அரங்கைப் பிரமாதமாக அலங்கரிப்பார். புத்தகங்களைத் தலைப்புவாரியாக அடுக்குவார். ஒரு பேராசிரியர் அவரிடம் ‘நீங்கள் நூலகப் பராமரிப்புத் துறை சார்ந்து படித்தவரா’ என்று கேட்டார். அந்த அளவுக்கு அவருடைய வேலை நேர்த்தியாக இருக்கும். அரங்கை அழகுபடுத்துவது, நூல்களை அவற்றின் உள்ளடக்கம் சார்ந்து அடுக்குவது, வாடிக்கையாளர்களிடம் பேசுவது இதையெல்லாம் பத்தினாதனிடமிருந்தே கற்றுக்கொண்டேன். விடாப்பிடியான கடும் முயற்சிக்குப் பத்தினாதனை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். பத்தினாதனின் இலங்கைத் தமிழ்ப் பேச்சும் எனக்குப் பிடிக்கும்.
புத்தகக் காட்சிகளில் அவருக்கும் எனக்கும் எப்போதும் சிறுசிறு கருத்து மோதல்கள், சண்டைகள் இருக்கும். ஆனால், அவரது உழைப்பைப் பாராட்டுவதால் சண்டைகள் சிறுத்துப்போயின. 2009க்குப் பிறகு இலங்கை சென்ற பத்தினாதன் மீண்டும் சென்னை வருவது ஏதோவொரு காரணத்தினால் தள்ளிப்போனது. வாசகர்களின் கண்கள் அவரைத் தேடின. நானிருக்கிறேன் என்று கூறி, பத்தினாதனின் இடத்தைத் தொட முயன்றேன்.
பொறுப்பும் முனைப்பும்
புத்தகச் சந்தைகளுக்குப் பொறுப்பேற்றுச் செயல்படும்போது கண்ணன் என்னிடம் சொன்ன ஒரு வாக்கியம் நினைவுக்கு வரும். “உங்களிடம் ஒரு பொறுப்பு வழங்கப்படும்போது அதனை நீங்கள் செய்யாவிட்டால் இயல்பாக அடுத்த நிலைப் பணியாளரிடம் அந்த வேலை சென்றுவிடும். அப்போது உங்கள் நிலை பின்னுக்குத் தள்ளப்படும்” என்பார். என்னுடைய பொறுப்பை உணர்ந்துகொண்டு செயலாற்ற வேண்டியதன் அவசியத்தை உணர்த்திய வார்த்தைகள் இவை. பத்தினாதனின் இடத்தை இட்டு நிரப்பும் முனைப்புடன் செயல்பட்டேன்.
புத்தகச் சந்தைகளில் வாசகர்களோடு உரையாடுவதற்காகத் தேர்ந்தெடுத்துப் புத்தகங்களை வாசித்தேன். புத்தகங்களின் உள்ளடக்கங்களைத் தெரிந்துகொண்டேன். வாசகர்களிடமிருந்தும் புதியதாக ஏதேனும் தகவல்கள் கிடைக்கும்போது மாவீரன் நெப்போலியனைப் போல மூளையில் பதிவேற்றம் செய்துகொண்டேன். (என் மூளை புறாக் கூண்டு போன்றது என்றான் மன்னன் நெப்போலியன்.) அரங்கிற்கு வரும் வாசகர்களிடம் சில சமயம் கவிதைகளை வாசித்துக்காட்டியிருக்கிறேன். இசையின், ‘பூனைக்குட்டியைத் தடவித் தருதல்’, சுகுமாரனின் ‘கண்களே சகல நோய்களுக்கும் காரணம்’ போன்ற கவிதைகளை வாசிக்கும்போது வாசகர்கள் மகிழ்ந்துபோவார்கள்.
புத்தகச் சந்தைகளில் வாசகர்களைச் சந்தித்ததில் பலவித அனுபவங்கள். ஒருமுறை பிளஸ் டூ படிக்கும் மகளை அழைத்து வந்த ஒரு வாசகர், ‘பாரதியார் கவிதை’களை வாங்க விரும்பினார். ஏதோவொரு காரணத்தினால் வாங்காமல் திரும்பினார். நான் அவரிடம், ‘நீங்கள் இந்தப் பொக்கிஷத்தை வாங்க வேண்டாம், ஒரேயொரு கவிதை அதிலிருந்து வாசிக்கிறேன் கேட்டுவிட்டுச் செல்லுங்கள்’ என்று சொல்லிவிட்டு, “தீயே நின்போல் அறிவு சுடர்க” என்றேன். அவர்களின் கண்களில் மின்னல். நூலை வாங்கிக்கொண்டு என்னோடு ஒரு படம் எடுத்துக்கொண்டார்கள்.
யாருக்கு நன்றி சொல்வது? பாரதியாருக்கா, காலச்சுவடுக்கா, பத்தினாதனுக்கா?
மோதலும் அன்பும் கலந்த உறவு
புத்தகச் சந்தைகளால் வாசகர்களுடன் ஏற்படும் நட்பைத் தவிரச் சக பணியாளர்களுடனான நட்பும் நான் பெற்ற பேறுகளில் ஒன்று. பத்தினாதன் சென்ற பிறகு, புத்தகக் காட்சிகளில் என்னோடு அதிகம் பயணித்தவர்கள் ஜேமியும் மகேஷும். இவர்கள் இருவரும் பில் டேபிளில் இருந்துவிட்டால் என் பணி மிகவும் சுலபம். எவ்வளவு கூட்டமிருந்தாலும் அசராமல், முகம் சுளிக்காமல் சிரித்த முகத்துடன் அவர்கள் செய்யும் பணியைப் பலமுறை ரசித்திருக்கிறேன். வாசகர்கள் ஏதாவது சந்தேகம் கேட்டால், ஜேமியின் கை என்னை நோக்கி நீண்டுவிடும்.
சக பணியாளர்களுடனான அனுபவங்கள் பல விதமானவை. எல்லோரிடத்திலும் ஆழ்ந்த அன்பும் நட்பும் இருந்தாலும் பெரும்பாலான சமயங்களில் மோதல்கள்தான் எங்கள் உரையாடல்களில் தூக்கலாக இருக்கும். எதையும் நேர்த்தியாகச் செய்ய வேண்டும் என்று விரும்புபவன் நான். புத்தகச் சந்தைகளுக்கும் விற்பனை நிலையங்களுக்கும் நூல்களை அனுப்புவது, அது தொடர்பான இதரப் பணிகள் ஆகியவற்றில் குறைபாடுகள் தென்படும்போது அமைதியிழந்துவிடுவேன். நாகர்கோவில் அலுவலகத்திலும் கிடங்கிலும் பணிபுரிபவர்களிடம் சத்தம்போட்டுப் பேசியிருக்கிறேன், சண்டையிட்டிருக்கிறேன். குறிப்பாக, பி.எஸ். என அன்போடு அழைக்கப்படும் மூத்த ஊழியர் பி. சிவகுமாரிடமும் நூல்களை அனுப்பும் பிரிவின் பொறுப்பாளர் நிஷாவிடமும் கிடங்கில் பணிபுரிபவர்களிடமும் சண்டையிட்டிருக்கிறேன். இது புகாராக கண்ணனின் பார்வைக்குச் சென்றது. “அவர் ஊர் ஊராகத் திரிபவர். பஸ் நிலையத்திலிருந்து பேசியிருப்பார். சத்தம்போட்டுப் பேசுவது கோபமாகத் தெரிந்திருக்கும். அவர் சொல்லவருவது என்ன என்று பார்த்துக் குறை இருந்தால் சரி செய்யுங்கள்” என்று அவர் சொல்லியிருக்கிறார். பதிப்பக ஒருங்கிணைப்பாளர் ஜெபாவிடமும் மோதல்கள் நிகழும். ஒரே வார்த்தையில் அடக்கிவிடுவாள்: “சித்தப்பா…”
இந்த உரசல்கள், முரண்பாடுகள், மோதல்கள் எல்லாம் கலந்தாய்வுக் கூட்டங்களில் விவாதத்திற்கு வரும். கண்ணன் உரிய விளக்கம் கேட்டு உள்வாங்கிக்கொள்வார். கண்ணன் ஒரு சிந்தனையாளர். தன்னிடம் பேசுபவரின் உள்ளத்தைக் கணிக்கும் ஆற்றல் பெற்றவர். காலச்சுவடு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திச்செல்வதற்கு அவருடைய இந்த ஆற்றல் கணிசமாக உதவுகிறது என்பது என் எண்ணம்.
சுந்தர ராமசாமியை நான் பார்த்தே இல்லை. அவரைப் பார்த்திருந்தால் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டிருப்பேன்.
ஆளுமைகளுடனான அனுபவங்கள்
‘பேச மாட்டார்களா’ என்று ஏங்கிய எழுத்தாளர்கள் எல்லாம் புத்தகக் கண்காட்சிகளில் என்னைப் பார்த்து, “ஹாய் அய்யாசாமி” என்று கைகுலுக்கி, தோள் தட்டிப் புன்னகைத்துப் பேசினார்கள். ஆ.இரா. வேங்கடாசலபதி, ஆர். சிவகுமார், பெருமாள்முருகன், பழ. அதியமான், ஜி. குப்புசாமி, சல்மா, சுகிர்தராணி எனப் புத்தகச் சந்தைகளில் நான் சந்தித்து நட்புக்கொண்ட ஆளுமைகளின் பட்டியல் நீளும்.
2010-11ஆம் ஆண்டுகளில் சென்னை காலச்சுவடு ஆபீசில்தான் முதல்முதலாக அரவிந்தன், பெருமாள்முருகன், பழ. அதியமான், கவிஞர் சுகுமாரன் ஆகியோரைப் பார்த்தேன். எடிட்டோரியல் பணிகள் அப்போது நாகர்கோவில் மாறியிருந்த சமயம் என்று நினைவு. ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ என்ற புத்தகம் டிஸ்கவரி புக் பேலஸில் வெளியிடப்பட்டது. அதில் கலந்துகொண்டு பேசுவதற்காக சுகுமாரன் சென்னைக்கு வந்திருந்தார். பெருமாள்முருகன் காலச்சுவடின் ஒரு இதழுக்குப் பொறுப்பாசிரியராகப் பணியாற்ற ஆபீஸ் வந்திருந்தார். பழ. அதியமான் ஏதோவொரு ஆய்வுக் கட்டுரையைச் செப்பனிட வந்திருந்தார். நிர்வாக விஷயமாக நாகம்மாளிடம் அரவிந்தன் பேசிக்கொண்டிருந்தார்.
கவிஞர் சுகுமாரனோடு பழகிய நாட்கள் அருமையானவை. ஒருமுறை வழக்கமான சந்திப்புகள், மார்கெட்டிங் மீட்டிங் போன்றவற்றுக்காக நாகர்கோவில் சென்றுவிட்டு, திருவனந்தபுரம் ஹிக்கின்பாதம்ஸ் செல்ல வேண்டியிருந்தது. சுகுமாரன் அப்போது திருவனந்தபுரவாசி. டி.டி.பி. பிரிவின் பொறுப்பாளர் கலாவிடம் சுகுமாரன் எண் வாங்கிச் சென்றேன். திருவனந்தபுரம் ரயில் நிலையத்திலிருந்து கவிஞருக்கு போன் செய்தேன். ‘திருவனந்தபுரம் வந்திருக்கிறேன். தங்களைச் சந்திக்க முடியுமா‘ என்று கேட்டேன். ‘முடியும், அங்கேயே இருங்கள்?’ என்று கூறியவர் பத்து, பதினைந்து நிமிடங்களில் வந்துவிட்டார். அவருடன் இரண்டாவது சந்திப்பு அது.
அதன் பிறகு பலமுறை சந்தித்திருக்கிறேன். அவரிடம் எனக்கு அண்ணனைப் போன்ற உணர்வே ஏற்பட்டிருக்கிறது. எப்போது போன் செய்தாலும் இரண்டாவது மணி அடிப்பதற்குள் “சொல்லுங்கண்ணா” என்பார். முகநூலில் நான் எழுதும் குறிப்புகளைப் படித்துப் பாராட்டுவார். உரிமையோடும் ஒட்டுதலோடும் அவரிடம் எனக்கு ஒரு நெருக்கம். அவரிடம் என் குடும்ப விஷயங்களையும் பகிர்ந்துகொள்ளுமளவுக்கு நெருக்கம் இருக்கிறது.
காலச்சுவடு பதிப்பக நிர்வாகியும் பதிப்பாசிரியருமான அரவிந்தனிடமும் அப்படித்தான். அலுவலகப் பணி சார்ந்த யாரைப் பற்றியும் அவரோடு தயக்கமின்றி உரையாடலாம். கருத்துகளைத் தெரிவிக்கலாம். ஆலோசனைகள், தீர்வுகள் அவரிடம் இருக்கும்.
நிர்வாகம் என்னும் கலை
பி.எஸ்., புத்தகங்களைக் கடைகளுக்கும் புத்தகக் காட்சிகளுக்கும் அனுப்பும் பொறுப்பில் இருந்தார். குடோனில் தலைமைப் பொறுப்பில் ஸ்ரீதரன் என்பவர் இருந்தார். இவர்களோடு போராடாத நாளில்லை. கடை விற்பனைகள், புத்தகக் காட்சி விற்பனை நிலவரங்கள் உயர்ந்துகொண்டே இருந்தன. நூல்களை அனுப்புவதற்கான வேலைகள் தாமதமாகிக்கொண்டிருந்தன. கடைகளுக்குப் புத்தகங்களை அதிக எண்ணிக்கையில் அனுப்புவதில் உள்ள சிக்கல்கள், சவால்கள் தொடர்பான தயக்கம் அலுவலகத்தில் இருப்பதை உணர்ந்துகொண்டேன். அப்போது ஒரு கடிதம் அனுப்பினேன். அதில், “கப்பல் கரையில் நிற்பது பாதுகாப்பானது, ஆனால், அதற்காக அது கட்டப்படவில்லை” என்று குறிப்பிட்டேன்.
அந்தக் கடிதம் கண்ணனின் பார்வைக்குப் போயிருக்கிறது. ஒருங்கிணைப்பிலும் பரஸ்பரப் புரிதலிலும் உள்ள இடைவெளிகளை உணர்ந்த அவர், பணியாளர்களை உள்ளடக்கிய வெவ்வேறு வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கினார். சிவக்குமார், முத்து, அய்யாசாமி உள்பட அனைவரையும் ஒருங்கிணைத்து உடனுக்குடன் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும் பிரச்சினைகளைத் தீர்க்கவும் ஏற்பாடுசெய்தார். வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் அவ்வப்போது சந்தித்து மனம் விட்டு விவாதிக்க ஏற்பாடுசெய்தார். அனைவரின் கருத்துகளையும் கேட்பார். அதுதான் அவரது தொடர் வெற்றிக்கான காரணம்.
குழுமங்களில் அதிகம் பதிவிடுவது நான்தான். அதிகம் குறைசொல்பவனும் நான்தான். என்னுடைய எல்லாத் தொல்லைகளையும் நிர்வாகம் பொறுத்துக்கொண்டது.
மைதிலி என்னும் அன்னபூரணி
கண்ணனின் மனைவியும் காலச்சுவடு பதிப்பகத்தின் இயக்குந்ர்களில் ஒருவருமான மைதிலியைப் பற்றிச் சில விஷயங்கள் சொல்ல வேண்டும். என்னுடைய அன்றாடப் பணிகள் சார்ந்து அவரிடம் பேச வேண்டிய தேவை பெரும்பாலும் இருக்காது. ஆனால், சென்னைப் புத்தகக் கண்காட்சிகளில் அவருடன் இணைந்து பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். ஒருமுறை அரங்கை அமைப்பதற்கான பணிகளைக் கவனிக்க வந்திருந்தார். இரவு ஒன்பது மணிக்கு வேலை முடிந்ததும் என்னையும் வடிவமைப்பாளர் ராமநாதனையும் திருவல்லிக்கேணி ரத்னா கபேவிற்கு அழைத்துச்சென்றார்கள். “மேடம், எனக்கு வீடு அருகில்தான். வீட்டிற்கே செல்கிறேன்” என்றேன். “பரவாயில்லை. சாப்பிட்டுவிட்டுப் போகலாம்” என்றார். பணியாளர்களின் உணவு விஷயத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது அவருடைய குறிப்பிடத்தக்க குணங்களில் ஒன்று.
2015 சென்னை புத்தகக்காட்சியில் ஒரு சாதனை நிகழ்ந்தது. இதழ் சந்தா, வாசகர் திட்டம், புரவலர் திட்டம் மூலமாக நான்கு லட்சத்திற்கும் அதிகமான தொகையை நானும் ஜெபாவும் திரட்டினோம். மதியம் 3.30 மணிக்கு எங்களிடம் வந்த மைதிலி, “சாப்பிட்டீர்களா” என்றார்.
“இல்லை, மாற்றிவிட ஆளில்லை, தொடர்ந்து வாடிக்கையாளர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள்” என்றோம்.
எங்கோ யாருக்கோ போன் செய்தார். பத்து நிமிடத்தில் உணவு வந்தது. “முதலில் சாப்பிடுங்கள்” என்று கூறிவிட்டு மேசையில் அமர்ந்து எங்களிருவரின் பணியைச் செய்தார்.
புத்தகக் காட்சி நாள்களில் முதல் இரண்டு தினங்கள், கடைசி இரண்டு தினங்களில் தவறாமல் அரங்கில் இருப்பார். அரங்கு ஒப்பனை, புத்தகங்கள் அடுக்குவதிலும் எங்களோடு இணைந்து பணியாற்றுவார். சிறிதுகூட முதலாளி என்ற பாவனை இருக்காது. இடையில் ஊருக்குச் சென்றுவிட்டுத் திரும்புகையில் வீட்டிலிருந்து நொறுக்குத் தீனிகள் செய்து எடுத்துவருவார்.
ஒவ்வொருவரிடமும் வந்து இரண்டு கைகளையும் அகல விரிக்கச்சொல்லிக் கைநிறைய கொடுத்து, சாப்பிட்டு விட்டு வேலையைத் தொடருங்கள் என்பார்.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கண்ணனோடு மார்கெட்டிங் மீட்டிங் நடைபெறும். மரியாதை நிமித்தமாக மைதிலியையும் சந்திப்பேன். எனக்கு முதுகுத்தண்டிலும் காலிலும் வலி என்று சொல்லியிருந்தேன். அடுத்த முறை வரும்போது ஒருநாள் அதிகமாகத் தங்குவது போலத் திட்டமிட்டு வாருங்கள் என்று சொன்னார். அதன்படியே சென்றிருந்த என்னை தெரிசனங்கோப்பு டாக்டர் மகாதேவனிடம் அழைத்துச் சென்று சிகிச்சைபெற ஏற்பாடுசெய்தார்.
ஆண்டுக்கு இரு முறையாவது காலச்சுவடு பணியாளர்களுக்கான சுற்றுலாவை மைதிலி ஏற்பாடுசெய்வார். அத்தகைய சுற்றுலாவில் ஒரு முறை கலந்துகொண்டேன். தனியாக ஒரு பஸ் அமர்த்திக்கொண்டு வர்கலா சென்றோம். பேருந்து குலுங்கக் குலுங்க ந்டனம், சிரிப்பு என மகிழ்ச்சிக் கொண்டாட்டம்.
இதுபோன்ற பயணங்களில் அனைவரும் அவரவருக்குப் பிடித்த உணவை வயிறாரச் சாப்பிடுகிறார்களா என்பதில் மைதிலி தனிக் கவனம் செலுத்துவார். “வயிறு நிறைய சாப்பிடுங்கள், ஆனால் வேஸ்ட் செய்யக் கூடாது” என்பார்.
காலச்சுவடு அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி எனக்கு நடைபெற்ற வழியனுப்பும் நிகழ்ச்சியில் மைதிலியின் உரை மிகவும் மகிழ்ச்சி தந்தது. ஒரு பாக்கெட் டைரியில் குறித்து வைத்துக்கொண்டு பேசினார். தொடர் புத்தகக் காட்சிகள், தொடர் பயணங்கள் என்று நான் பணிபுரிய ஒத்துழைத்த என்னுடைய மனைவிக்குத்தான் நன்றி தெரிவிக்க வேண்டும் என்று சொன்னவர், என் மனைவிக்கென்று தனியாக ஒரு பரிசு தந்தார்.
பிரிவுபச்சாரக் கூட்டத்தில் ஜேமி பேசியது மனதைத் தொட்டது. “ஆரம்பத்தில் எல்லாம் அய்யாசாமி சார் பார்க்கக் கரடுமுரடாகவும் கோபக்காரராகவும் தெரிந்தார். சின்னத் தவறு என்றாலும் சத்தம்போடுவார். குறைசொல்லுவார். அவரைப் பார்த்தாலே பயமாக இருக்கும். ஆனால், போகப்போகத்தான் அவருடைய மனமும் அதில் உள்ள அன்பும் புரிந்தது. புத்தகங்கள், வாசிப்பு, வாசகர்கள் என்பதற்கே முதலிடம் தருகிறார் என்பதைப் போகப் போக உணர்ந்தேன். அவரிடம் நிறையக் கற்றுக்கொண்டேன். சார் we miss you” என்றார்.
நானும்தான் என்றேன்.
மின்னஞ்சல்: kaiyaswamy@gmail.com