நான்கு நூல்கள்
காடன் கண்டது
(சிறுகதைகள்)
தேர்வும் தொகுப்பும்:
ந. இரத்தினகுமார்
யாவரும் பதிப்பகம்
24, கடை எண் BSGP நாயுடு காம்ப்ளக்ஸ்,
பாரதியார் பூங்கா எதிர்புறம்
வேளாச்சேரி, சென்னை
பக். 322 ரூ. 399
நவீன இலக்கியங்களில் இனவரைவியல் செய்திகளைத் தொகுத்த என் மாணவி, “தமிழகப் பழம் இனக்குழுக்களைப் பற்றிய செய்திகள் பெரும்பாலும் நாவல்களில்தான் பதிவுசெய்யப்பட்டுள்ளன” என்று சொல்லிவிட்டுத் தமிழில் வந்த இனவரைவியல் நாவல்களைப் பட்டியலிட்டார். அத்தோடு சிறுகதைகளில் இனக்குழுக்கள் பற்றிய செய்திகள் குறைவாகவே உள்ளன; சாட்டையடி நாயக்கர், கணியன் என ஒரு சில குழுக்களைப் பற்றிய சிறுகதைகள் மட்டுமே வந்துள்ளன என்றும் சொன்னார்.
ஒரு இனக்குழுவில் படைப்பாளி தோன்றித் தன் சொந்த அனுபவத்தை எழுதுவது தமிழில் மிகக் குறைவாகவே நடந்திருக்கிறது. இனக்குழுபற்றி ஏற்கெனவே வந்த செய்திகளை அடிப்படையாகக் கொண்டு எழுதிய படைப்புகளே அதிகம் வந்துள்ளன. இது இன்றைய நிலைக்கு மட்டுமல்ல, கடந்த 2000 ஆண்டுகளாக இப்படித்தான் நடந்திருக்கிறது என்று தோன்றுகிறது.
‘காடன் கண்டது’ என்ற இந்தச் சிறுகதைத் தொகுப்பில் 26 கதைகள் உள்ளன. இரத்தினகுமார் தேர்ந்தெடுத்துத் தொகுத்திருக்கிறார். 1933 இல் வ.ரா. எழுதிய ‘மைக்குறத்தி’ முதல் கதை. கடைசிக் கதை பாண்டிய கண்ணனின் ‘கல்குறி’; இது, 2024இல் எழுதப்பட்டது. ஆக 91 ஆண்டுகளில் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. எல்லாமே தமிழகக் குறவர் இனக்குழு தொடர்பானவை. இப்படியான தொகுப்புகள் மிகக் குறைவாகவே வந்திருக்கின்றன.
குறிப்பிட்ட இனக்குழுவின் தோற்றம், வளர்ச்சி, மாற்றம் போன்ற செய்திகளைச் சேகரிப்பவருக்கு இந்தக் கதைகள் முழுமையாக உதவும் என்று சொல்ல முடியாவிட்டாலும், வாசகர்கள் பார்க்காத உலகம் என்று தோன்றுகிறது. இந்தக் கதைகளைத் தேர்வுசெய்வதற்கென்றே தொகுப்பாசிரியர் தனி அளவுகோலை வைத்திருக்கிறார். குறவர் இனக் கருத்து உருவாக்கம், அடையாளமெல்லாம் எப்படி நடந்துள்ளன, குறவர் இனத்திற்கும் பிற இனங்களுக்கும் உள்ள உறவும் முரண்பாடும் எப்படி விரவிக் கிடக்கின்றன என்கிற கேள்விகளின் அடிப்படையில் சிறுகதைகளைத் தேர்வுசெய்திருக்கிறார்.
தமிழகத்தில் அகால மரணம் அடைந்து தெய்வமானவர்களின் பட்டியல் மிக நீண்டது. இப்படி தெய்வமானவர்கள் பற்றிய ‘பார்வதி’ (சரோஜா ராமமூர்த்தி), ‘குறவர்களின் நாடோடி வாழ்வைக் கூறும் தூரம்’ (உதயசங்கர்), ‘குறி சொல்ல வரும் மைக் குறத்தி’ (வ. ராமசாமி), குற்றப்பரம்பரைச் சட்டம் வந்த பின்பும் குறவர்களைக் குற்றவாளிகளாகக் கருதுவதைப் பின்னணியாகக் கொண்ட ‘காடன் கண்டது’ (பிரமிள்), தத்துவார்த்தமான பார்வையோடு கூடிய ‘கயிற்றரவு’ (ஜெயமோகன்) ஆகிய கதைகள் குறிப்பிடத் தகுந்தன.
இந்தத் தொகுப்பிலுள்ள 43 பக்க முகவுரையும் பின்னிணைப்பாகச் சிறுகதைப் படைப்பாளிகளைப் பற்றிக் கொடுத்திருக்கிற விரிவான குறிப்புகளும் முக்கியமானவை. இனிவரும் தொகுப்பாசிரியர்கள் இந்தப் புத்தகத்தை மாதிரியாக பயன்படுத்தலாம்.
அலைமோதும் நினைவுகள்
(அனுபவங்களும் அறிந்தவையும்)
சீ. இளங்கோவன்
கிர்ஜீஸ் பதிப்பகம்,
சேலம்.
பக். 324
ரூ. 255
இந்நூலாசிரியரின் 30 ஆண்டுகால (1950 - 1981) அனுபவங்களின் தொகுப்பு இந்நூல்.
20 கட்டுரைகள்; பின் இணைப்பில் அனுபவம் தொடர்பான படங்கள். அனைத்தும் முகநூலில் வந்தவை; புத்தகத்திற்காகத் திருத்தப்பட்டுச் செப்பம் செய்யப்பட்டவை; அனுபவங்கள் நூலாசிரியரின் சொந்த வரலாற்றின் தொடர்ச்சியாக உள்ளன. ஒருவகையில் திட்டமிட்டு எழுதப்பட்டவை.
மொத்த அனுபவங்களில் நூலாசிரியரின் தந்தை காமராஜரைச் சந்தித்த நிகழ்ச்சிகளின் பாதிப்பு அதிகம். நூல் ஆசிரியர் திமுகவிலிருந்து மாறிக் காங்கிரஸ் அனுதாபியானவர். இதனால் இவரது அரசியல், சமூகத் தொடர்புகள் நீண்டதாக உள்ளன. இந்த அனுபவங்கள் எல்லாமே நூலில் பதிந்துகிடக்கின்றன.
தகவல் பிழைகளும் புரட்டுகளும் மறுப்புகளும்
சீ. இளங்கோவன்
கிர்ஜீஸ் பதிப்பகம்,
சேலம்.
பக். 88
ரூ. 65
தமிழறிஞர்கள் அரசியல் தலைவர்கள் பற்றிய தவறான தகவல்களைச் சுவாரசியத்திற்காகப் பரப்பிவிடுகிறவர்கள் சிலர் இருக்கிறார்கள். சென்னை ராஜதானி கல்லூரியில் பாரதியை அனுமதிக்கவில்லை, வ.உ.சி.க்கு வந்த 5000 ரூபாயை மகாத்மா எடுத்துக்கொண்டார், நாதுராம் கோட்சே தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக்கொண்டார் என எவ்வளவோ விஷயங்கள் தவறாகப் பரப்பப்பட்டுவிட்டன. இந்த மாதிரி விஷயங்களை முகநூலில் மறுத்து நூலாசிரியர் எழுதிய 46 குறிப்புகளே இந்த நூலில் உள்ளன. இவை பெரும்பாலும் ஆதாரம் இல்லாத செய்திகளுக்கு மறுப்பாக வந்தவை.
அதோடு காமராசர்பற்றி தவறாகப் பரப்பிய செய்திகளுக்குப் பதில் கொடுக்கும்படியான பல குறிப்புகளும் இந்நூலில் உள்ளன.
நெல்லைச் சீமையின் நாட்டார் நிகழ்த்துக் கலைகள்
தொ-ர்: நா. இராமச்சந்திரன்
பொருநை
இலக்கியக் கழகம்
நெல்லை மாவட்ட நிர்வாகி
திருநெல்வேலி
பக். 300
ரூ. 183
தமிழகத்தின் பண்பாட்டுக் கூறுகளில் நாட்டார் நிகழ்த்துக் கலைகளுக்கு முக்கிய இடம் உண்டு. நிகழ்த்துக் கலைகள் மொழிப் பண்பாட்டைத் தாண்டி மண்ணின் மணத்தைக் காட்டுவன. இவை வட்டாரச் சார்புடையவை. தமிழ் இலக்கியப் பங்களிப்பில் நெல்லைச் சீமைக்கு முக்கிய இடம் உண்டு. இதுபோலவே நாட்டார் நிகழ்த்துக் கலையில் இன்னும் சற்று ஒருபடி மேலான இடத்தை அச்சீமை பெறுகிறது. இந்தத் தொகுப்பிலுள்ள நிகழ்த்துக் கலைகளெல்லாம் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இந்நூலில் 16 கலைகள்பற்றிய விரிவான விளக்கங்கள் உள்ளன.
இவற்றில் பெரும்பாலானவை நெல்லைச் சீமையின் வரலாற்றுடனும் பண்பாட்டுடனும் தொடர்புடையவை. மொழி, உரையாடல் சார்ந்தவை 10 கலைகள். ஏனையவை இசைக்கருவி, ஆட்டம் சார்ந்தவை. இந்தக் கலைகளின் பொதுத் தன்மையிலிருந்து நெல்லைச் சீமை மக்களின் ரசனையைப் பிரித்து எடுக்க முடியும். இதை இந்தக் கட்டுரைகள் நுட்பமாக வெளிப்படுத்துகின்றன. இராமச்சந்திரனின் வில்லுப்பாட்டுக் கட்டுரை துல்லியமானது, விளக்கமானது. நெல்லைச் சீமை மலைப் பகுதிகளில் வாழும் காணிக்காரப் பழங்குடிகளின் சாற்றுப் பாட்டு எனும் கலை சடங்கியல் சார்ந்தது. சடங்கிலிருந்து இதைப் பிரிக்க முடியாது. இந்த நுட்பத்தைப் பேராசிரியர் ஞா. ஸ்டீபன் கள ஆய்வுகளின் வழியே விளக்குகிறார். இந்தக் கலை தற்போது அழிவின் விளிம்பிலுள்ளது.
இந்நூலில் கூறப்படும் கலைகளுக்குரிய 59 வண்ணப் படங்களும் இசைக் கருவிகளுக்குரிய வரைபடங்களும் உள்ளன.
மின்னஞ்சல்: perumalfolk@gmail.com