களமும் வேர்களும்
நித்தியவல்லியின் கடனக்கழிப்பு
(கட்டுரைகள்)
அ.கா. பெருமாள்
வெளியீடு:
காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி. ரோடு
நாகர்கோவில் - 1
பக். 192 ரூ. 240
நாட்டார்க் கலைஞர்களின் பாதைகளிலும் வழக்காறுகள், சடங்குகளின் வரலாற்றிலும் ஊடுருவி, அரிதான செய்திகளை ஆவணப்படுத்தித் தருவதை வாழ்நாள் பணியாகக் கொண்டிருப்பவர் அ.கா. பெருமாள். அவரது பேருழைப்பின் மற்றொரு விளைச்சல் இந்நூல். இந்தத் தொகுப்பில் 25 கட்டுரைகள் உள்ளன.
இரண்டு கட்டுரைகள் (‘பாரதியும் திருவிதாங்கூரும்’, ‘ஓவியச் சக்கரவர்த்தி ராஜா ரவிவர்மா’) தவிர, பிற கட்டுரைகள் நாட்டார் பண்பாட்டு அம்சங்களோடு தொடர்புடையவை. நாட்டார் வழக்காறுகள், பாடல் வகைகள், ஆளுமைகள், நாட்டார் கலைகளின் வரவு, பரவலாக்கம், அழிவு, பார்வையாளர் ரசனை மாற்றமும் கலைகளின் தேய்வும் எனப் பல விஷயங்களைப் பேசுகின்றன. கட்டுரைகளில் பெரும்பாலானவை பத்திரிகைகள், நாளிதழ்களில் வெளிவந்தவை. எனவே, பொதுவாசகரை மனதில் வைத்து விஷய கனம் குறையாமல் சுவாரசியமாக எழுதப்பட்டிருக்கின்றன.
நாட்டார் நிகழ்த்துக் கலைஞர்களின் வாழ்முறை, சூழல்கள் குறித்த அ.கா. பெருமாளின் கவனம் பிற நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்களிடமிருந்து தனித்திருக்கிறது. பொதுப்புத்தியில் கலைகளுக்குக் கட்டப்பட்ட புனிதத்தன்மையை இவரது களஆய்வுத் தகவல்கள் தகர்க்கின்றன.
‘கடன்’ என்ற சொல்லில் தொடங்கிய தேடல் ‘கடனக்கழிப்பு’ என்னும் வழக்காறு நோக்கிப் பயணிக்கிறது. நாட்டார்க் கலைஞர்களின் யதார்த்த வாழ்வு சமூக ரசனையை அடிப்படையாகக் கொண்டே இயங்குகின்றது. அதிலும் குறிப்பாக, கரகாட்டக் கலைஞர்கள். ஆண்-பெண் உறவுசார்ந்த சைகைகள், வார்த்தைகள் இவற்றைத் தவிர்த்து இவர்கள் செயல்பட முடியாத நிலைக்குச் சமூகமே காரணமாக இருக்கிறது. சிறிது நேரம் கரகாட்டப் பெண் கலைஞர்களிடம் பேசுவதைக்கூட, உடல்சார்ந்த கற்பிதத்தோடு அணுகும் சமூகநிலையைக் களஆய்வாளர் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ‘வயிறு இருக்கில்ல’ என்பது கலைஞர்களின் பொதுக்குரலாக ஒலிக்கிறது. அதைவிடத் தம்மைத் தமிழ்ப் பண்பாட்டின் பாதுகாவலர்கள், கலை வடிவத்தைத் தூக்கிப் பிடிப்பவர்கள் என்று இவர்கள் ஒருபோதும் கூறியதில்லை என்ற பதிவே மனம் கனக்க வைக்கிறது.
உண்மையில், இவர்கள்மீது விழுமியங்களைச் சுமத்துகிற சமூகமே அவற்றை மீறவும் நிர்ப்பந்திக்கிறது. அதுவே கடனக்கழிப்பாகின்றது. கணியான் ஆட்டம், வில்லுப்பாட்டு, கூத்து உள்ளிட்டவை இன்றும் சடங்குகளுடனான விழுமியங்களுடன் பயணிக்கக் கரகாட்டம் மட்டும் அதிலிருந்து திரிந்து சென்றிருப்பதை உணர முடிகிறது. கலையைத் தாண்டிய சொந்த வாழ்க்கையில் அவர்களுடைய பயணம் மாறுபட்டு நிற்கிறது. அதுதான் கடன். பணிசெய்து கிடக்கும் கடன்; நித்தியவல்லியான கரகாட்டப் பெண்ணின் கடனக் கழிப்பும் கடனும் தெளிவாகவே கருக் கொண்டிருக்கின்றன.
திருவிழாக்களில் பாரதக் கூத்து பரவலாக நடத்தப்பட்டாலும் அதன் காட்சிகளை உள்வாங்குவதில் பார்வையாளரின் வட்டாரத் தன்மை முக்கிய பங்கினை எடுக்கிறது. திரௌபதியின் துகில் உரியும் காட்சிக்கு முன்னர் துச்சாதனன் வேடமிட்டவர் ஒரு நிமிடம் திரௌபதியம்மன் கோயிலை நோக்கித் திரும்பி வணங்கிவிட்டே காட்சிக்குள் செல்வார். இந்தச் சடங்கியல் விழுமியத்தை எல்லாப் பார்வையாளர்களாலும் புரிந்துகொள்ள முடியாது. இதுபோன்ற நுட்பமான செய்திகள் நூலின் கனபரிமாணத்தைக் கூட்டுகின்றன. 1990இல் ஆசிரியரால் தொகுக்கப்பட்ட 140 நாட்டார் கலைகளுள் சுமார் 40 கலைகள் மேல்நிலையாக்கத்தினாலும் கலைஞர்களின் வாழ்க்கைச் சூழல்களினாலும் நிகழ்த்தப்படுவதில்லை. இதன் எண்ணிக்கை கூடாமல் இருக்க வேண்டும் என்கிற நூலாசிரியரின் தவிப்பு வாசகருக்குள்ளும் ஏற்படுகிறது.
தோற்பாவைக் கூத்து எந்தச் சமூகத்தினரால் நடத்தப்படுகிறது? எந்த நூற்றாண்டிலிருந்து இக்கலை தமிழகத்தில் வேர்கொண்டு வளர்ந்திருக்கும் ஆகிய கேள்விகளுக்கான பதில்கள் வியக்க வைக்கின்றன. மராட்டிய மொழி பேசுபவர்களால் இங்கு நிலைகொண்ட கலைதான் தோற்பாவைக் கூத்து, மேலும் கணிகர் என்ற சாதியினரால் இது நடத்தப்பட்டிருக்கிறது ஆகிய தகவல்கள் இத்தளத்தில் புதியவை. கிருஷ்ணாராவ் (1860-1940), கோபால ராவ் (1882-1976), சுப்பையா ராவ் (1908-1999) என மூன்று தலைமுறைக் கூத்துக் கலைஞர்களுடனான வாசகரின் பயணம் தொடர்கிறது. தோற்பாவைக் கூத்தில் ஒரு காலத்தில் இதிகாசத்தின் மதிப்புமிகுந்த பாத்திரங்கள் காலப்போக்கில் நகைச்சுவைப் பாத்திரங்களாக மாறுகின்றன; தமக்குரிய முக்கியத்துவத்தை இழந்துபோகின்றன. சுகனும் சுகாசரணும் அப்படித்தான் மாறிப்போனார்கள். இதற்குக் காரணமும் மக்களின் ரசனை மாற்றமே. உச்சிக் குடும்பனும் உளுவத்தலையனும் (தெருக்கூத்தில் வரும் கட்டியங்காரனைப் போல), தோல்ப்பாவைக் கூத்தின் ஆணிவேர்களாக மண்பிடிப்பவர்கள். இவர்களே இக்கூத்திற்கு உயிர்நாடியாக இருந்து வழிநடத்துகிறார்கள். நாட்டார்க் கலைகளின் வரலாற்றை ஆராய்ச்சி செய்யும் பலர் தவறவிடும் ஒரு பகுதியான பார்வையாளர் மாற்றத்தை அ.கா. பெருமாள் தெளிவாகக் காட்டுகிறார். தோற்பாவையின் நிறம், தோல் ஆகியவை குறித்த நுட்பங்களை அறிந்துகொள்ள நூலாசிரியர் எடுத்துக்கொண்ட முயற்சி அவருடைய அர்ப்பணிப்பைக் காட்டுகின்றது. ஆமணக்கு எண்ணெய் விளக்கின் மூலம் கொண்டுவரப்படும் கறுப்பு நிறம், சப்பாத்திக்கள்ளியின் பழத்திலிருந்து சிவப்பு நிறம், பூவரசு மரத்தின் மொட்டிலிருந்து மஞ்சள், அவுரிச் செடியின் இலையிலிருந்து நீலம், வாராய்ச்சி மரத்தின் இலைச்சாறுடன் வேப்பம் பசை சேர்த்துப் பச்சை என இயற்கையிலிருந்தே எடுத்துக்கொள்கிறார்கள். தோல், ஆட்டுத்தோல். அதைப் பயன்படுத்துவதற்கு வேறு நுட்பம்; எளிதாகக் கடக்கக்கூடியதல்ல தோற்பாவைக் கூத்து; அது மிகுந்த உழைப்பைக் கோருவது.
ஆளுமைகள் குறித்த மூன்று கட்டுரைப் பதிவுகளும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை. விடுதலை வேட்கையில் திளைத்த பாரதிக்கும் காலனிய அதிகாரத்திற்கு அடிபணிந்து கிடந்த திருவிதாங்கூர் அரசாங்கத்திற்குமான முரணைக் கள ஆய்வாளராக விரித்துக் கொடுக்கிறார். கட்டுரையின் இறுதிப்பகுதி பாரதி, ரவிவர்மாவிற்காக எழுதிய இரங்கற்பாவுடன் முடிகிறது. உலகமே வியந்து பார்க்கின்ற ரவிவர்மாவின் ஓவியப் பின்புலத்தில் கடுமையான போராட்டங்களும் புறக்கணிப்புகளும் இருந்திருக்கின்றன. டச்சு ஓவியர் பயன்படுத்திய வண்ணக் கலவையின் நுட்பத்தை அறிந்துகொள்ள ரவிவர்மா எடுத்த முயற்சி; தமக்கு மட்டுமே முதல் பரிசு கிடைப்பதால் போட்டிகளுக்கு ஓவியங்களை அனுப்புவதில்லை என்று அவர் எடுத்த முடிவு என ரவிவர்மாவின் வாழ்க்கை மெருகேறிய வண்ண ஓவியமாகக் கண்முன் விரிகிறது. கடின உழைப்பும் காலமுமே கலைஞர்களைச் சாகாமல் வைக்கின்றது. அவர் ஓவியப் பாணியில் விமர்சனங்கள் இருந்தாலும் ஓவியச் சக்ரவர்த்தி ராஜா ரவிவர்மாதான் என்ற உணர்வெழுச்சியைத் தவிர்க்க முடியவில்லை.
இக்கட்டுரையை பாரதிக் கட்டுரையின் அடுத்தோ அல்லது முந்தைய கட்டுரையாகவோ வைத்திருக்கலாம். அக்கட்டுரையை நாட்டார்க் கலைகள் பகுதியில் சேர்த்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம். ஒருவிதத்தில் இந்த இரண்டு கட்டுரைகளுமே நூல் பொருண்மைக்கு வெளியே இருப்பவை.
பெற்ற கல்வி, கற்ற இசை, உணர்ந்த இலக்கியம் என பிச்சைக்குட்டியின் வாழ்க்கைப் பயணத்தில் வாசகரும் இணைந்துகொள்ள முடிகின்றது. அதே நேரம் குழிதோண்டப் பணமில்லாமல் மண்ணுக்குள் போன வில்லிசைக் கலைஞன் குப்புசாமியின் துயரம் மிகுந்த கணங்களும் நினைவில் ஊடாடுகின்றன.
தொல்லியல் ஆவணமான சதிக்கல் ஒன்றின் செய்தியில் தொடங்கி தேவதாசி வழிவந்த சின்னக்குட்டி, காளி, காளியின் பூட்டி, அவர்கள் வணங்கிய யட்சி என அடுக்கடுக்காகத் தேவதாசிப் பெண்களின் இருப்புடன் நாட்டார்க் கதைகள் வந்துபோகின்றன. கோயில் நிவந்தங்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் இவர்கள் இருந்திருக்கிறார்கள். அதற்காக வீடு, நிலங்களை மானியமாகவும் பெற்றிருக்கிறார்கள். பிரம்மதேயங்களை விவரிக்கும் வரலாற்றாய்வாளர்கள் இச்செய்திகளைப் புறக்கணிப்பதில் வியப்பில்லை. சமூகத்தில் தேவதாசிகள் பெற்றிருந்த அந்தஸ்து இடத்திற்கு இடம் மாறுபட்டிருக்கும் தன்மையைப் புரிந்துகொள்ள முடிகின்றது. வஞ்சிக்கப்பட்ட பெண்கள் நீலிகளாக, யட்சிகளாக அத்துவானக் காடுகளுக்குள்ளும் காவுகளுக்குள்ளும் மறைந்திருக்கிறார்கள். அவர்களைக் குளிர்விக்க, அவர்களின் அருளைப் பெற நடக்கின்ற சடங்குகளும் பலிகளும் தொடர்கதைகளாகின்றன.
இன்னும் வட்டார வரலாறு கல்வியாக்கப்பட வேண்டிய அவசியம், காணாமல் போன மாட்டு வைத்தியர் பரதேசியாப்பிள்ளை, கேரள இசைக்கருவிகளில் பாவியிருக்கின்ற தமிழின் அடையாளம், டாக்டர் பட்டங்கள், விருதுகள் விலைபோகும் அவலம் என நூலின் களங்கள் அனுபவத்தின் செழுமையில் விரிந்துகொண்டே செல்கின்றன. தமிழக நாட்டார் வாழ்வியல், சமயம், கலைகள்பற்றி மேலும் அறிந்துகொள்ள வாசகரைத் தூண்டும் நூல் இது.
மின்னஞ்சல்: mohanakateem1987@gmail.com