கோபுரம்
அவமானத்தின் அஸ்தமன நிழலாய், தலைமுறைகளைத் தாண்டி நீளவிருக்கும் அந்தச் சம்பவத்தை அன்று நடத்திவைக்கவே அந்தப் பாடல்பெற்ற கோவில் இருந்த சிற்றூரை நோக்கி அவனை விதி தள்ளிக்கொண்டு வந்துகொண்டிருந் தது என்பதை அந்த நாடோடிக் குருட்டு ஓவியன் அறிந்திருக்க இருந்த அற்ப சொற்ப வாய்ப்புகூட அந்த ஊர் மக்களுக்கு இருக்கவில்லை.
திரித்து முறுக்கேறியிருந்தாலும் பிரிபிரியென கரடுமுரடாய் இருக்கும் திருஷ்டிக்
கயிறு போல இருந்தான் அவன். அவனைப் போலவே தண்ணீரைப் பார்த்தறியாது வலதுதோளில்
நீளமாய்த் தொங்கிக்கொண்டு இருந்தது துணிப்பை. அதில் இருந்த அலுமினியத்தட்டும்
நசுங்கிய குவளையும் சில கரித்துண்டுகளுமே அவனது உடைமைகளாக இருந்தன. அநாமத்தாய்
வளர்ந்த தாடியும் விழிகளற்ற குழிகளுமாகச் சேர்ந்து அவன் வயதைக் கூட்டிக்காட்டின.
கூடவே, அவனது உயரம் காரணமாய் கூன் விழுந்ததுபோல வளைந்திருந்த முதுகும் சேர்