குறிப்பு ( 1 )
இந்தக் குறிப்பை நான் எழுதத் தொடங்கும்போது (11.05.2009) நேற்றிரவு வரை வன்னியிலுள்ள முள்ளிவாய்க்கால் பாதுகாப்பு வலயத்தை நோக்கி சரமாரியான எறிகணைத் தாக்குதல், விமானக்குண்டு வீச்சால் 1200 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் 1112 பேர்வரை படுகாயமடைந்திருப்பதாகவும் இவர்களை மீட்க முடியாதவாறு தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணத்தவன் ஒவ்வொருவனும் காலையில் தவிர்க்க முடியாமல் இத்தகைய செய்திகளைத்தான் வாசிக்கவோ கேட்கவோ வேண்டியிருக்கிறது. நாளிதழ்களின் முகப்புப்பக்கங்களைத் தாக்குதலுக்குள்ளாகி இறந்தவர்களது, படுகாயமடைந்தவர்களது புகைப்படங்களே நிரப்புகின்றன. ‘மனிதப் பேரவலம்’ என்று சொல்வதுகூட மிகச் சாதாரணமான வார்த்தைதான்.
இரவுபகலாகத் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் தாக்குதல்களால் பதுங்குகுழிகளுக்குள்ளும்
கூடாரங்களுக்குள்ளும் உறங்கிக்கொண்டிருக்கும் பெருமளவிலான மக்கள் கொல்லப்பட்டும்
காயங்களுக்குள்ளாகியும் வருகின்றனர். அத்துடன் மீட்க முடியாத நிலையில்
பதுங்குகுழிக்குள் காணப்படுவதாகவும் காயமடைந்தவர்களில் பலர் தங்களைக் காப்பாற்றுமாறு
அவலக்குரலெழுப்புவதாகவும் தெரிய வருகின்றது.
முள்ளிவாய்க்காலில் இதுவரை 1112 பேரினது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கானோர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் பெருஞ்சிரமத்தின் மத்தியில் வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர். முள்ளிவாய்க்காலில் தற்காலிகமாக இயங்கும் வைத்தியசாலைக்குப் படுகாயமடைந்த நிலையில் இதுவரை கொண்டுவரப்பட்ட 1100 பேரில் 251 சிறுவர்களும் உள்ளடங்குவதாக முல்லைத்தீவு மாவட்ட வைத்திய அத்தியேட்சகர் வீ. சண்முகராஜா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் வைத்தியசாலையில் 378 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 106 பேர் சிறுவர்கள் என்றும் உடல்களை அடக்கம்செய்யும்போது ஒரே புதைகுழிக்குள் 30, 40 என்ற எண்ணிக்கையில் போட்டு மூடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதில் வேடிக்கையென்னவென்றால் சில மாதங்களுக்கு முன் ‘வன்னியில் சில நூறு புலிகளே எஞ்சியுள்ளனர்’ என அறிக்கைவிட்டிருந்த அமைச்சர் ஹெகலிப ரம்புக்வெல முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த சம்பவங்குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும்போது ‘அரசபடையினர் முள்ளிவாய்க்காலில் புலிகளின் முக்கியத்தள மொன்றைத் தாக்கியழித்ததில் 1300 புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். 1000 புலிகள் படுகாயமடைந்துள்ளனர்’ எனக் குறிப்பிட்டார். வன்னியில் சில நூறு புலிகளே எஞ்சியிருந்த நிலையில் எப்படி 2000 பேருக்கு மேற்பட்ட புலிகள் தாக்குதலுக்குள்ளாகினர்? என்பதை அமைச்சர்தான் விளக்க வேண்டும்.
இத்தகைய கண்மூடித்தனமான தாக்குதல்களால் பெருமளவிலான அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்தும் படுகாயமடைந்தும் வருகின்ற அதேவேளை பட்டினிச் சாவை எதிர்நோக்குவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. அண்மையில் வெளியான ஒருதகவலின்படி புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் ஒரு சில கடைகளே இயங்குவதாகவும் ஒருகிலோ கோதுமை மா350/-, ஒருகிலோ சீனி 2000/-, ஒருகிலோ அரிசி 300/-, ஒருகிலோ வெங்காயம் 9000/-, 400 கிராம் பால்மாப்பைக்கற் 2000/-, ஒருகிலோ மிளகாய் 9000/- என்ற அடிப்படையில் விற்கப்படுவதாகவும் அறிய முடிகின்றது. வன்னியில் நிகழ்ந்துவரும் மனிதப் பேரவலத்தின் உச்சமாகத் தலைவிரித்தாடத் தொடங்கியிருக்கும் பட்டினி நிலைப்பாட்டால் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 12 பேர் பலியாகியுள்ளனர். இங்கே போசாக்கின்மையால் பெருத்த தலை, வீங்கிய கண்கள், உலர்ந்து ஒட்டிய கன்னங்கள், எலும்புகள் வெளித்தள்ளி உப்பிய வயிற்றுடன் வன்னியிலுள்ள சிறுவர்கள் உருமாறி வருவதை நெஞ்சில் ஈரமுள்ள எவராலும் தாங்கிக்கொள்ள முடியாது என்கிறார் தாயகன் என்ற பத்திரிகையாளர்.
தொடர்ந்து உயிர்வாழ்வதற்கு எந்த நிச்சயமுமற்ற சூழலில் வாழ்ந்து வரும் இச்சிறார்கள் கண்மூடித்தனமான எறிகணை, குண்டு வீச்சுக்களால் பெற்றோரை இழந்த துயரத்தைக்கூட உணர முடியாதவாறு வன்னியில் இன்று பிரதான உணவாகிவிட்ட கஞ்சியைப் பெறுவதற்காகக் கைகளில் சிரட்டைகளை ஏந்தி (கொட்டாங்கச்சி) வயிற்றைத் தடவியவாறு அலைந்து திரிகின்றனர். கஞ்சி காய்ச்சி வார்க்கப்படும் இடங்களில் நீண்ட வரிசையில் சிறார்களும் வயது வந்தவர்களும் காத்திருக்கின்றனர். அவர்களில் சிலர் மயங்கிவிழுகின்றனர். திடீரென எறிகணைகள் வந்து வீழ்வதால் பலர் அவ்விடத்திலேயே துடிதுடித்துச் சாவதும் ஏனையோர் சிதறியோடுவதும் மீளவும் கஞ்சிக்காக வரிசையில் முண்டியடித்து நிற்பதும் இன்று வன்னியில் சாதாரண நிகழ்வுகளாகிவிட்டன.
இவ்வாறான மோசமான நிகழ்வுகளால் வன்னிச் சிறார்கள் போசாக்கின்மையால் மாத்திரமின்றி வேறு விதங்களில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதாவது தொடர்ச்சியான எறிகணை, குண்டு வீச்சுக்களால் சிறார்களின் கேட்கும் திறன் பாதிப்படைந்துள்ளதுடன் எறிகணை மற்றும் குண்டுகள் விழுந்து வெடிக்கும்போது இங்குள்ள சிறார்கள் தப்பியோட எத்தனிக்காது பித்துப்பிடித்தவர்களைப் போல் வெறித்துப் பார்த்தபடி இருக்குமளவுக்கு உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
01.01.2009 தொடக்கம் 11.04.2009 வரை நிகழ்ந்துள்ள தாக்குதல்கள் வன்னி மருத்துவர்கள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி
(1) கொல்லப்பட்டோர் 4795 பேர் (இவர்களில் சிறுவர்கள் 1207 பேரும் கர்ப்பிணித் தாய்மார் 51 பேரும் உள்ளடங்குவர்).
(2) படுகாயமடைத்தோர் 9869 பேர் (இவர்களில் சிறுவர்கள் 2864 பேரும் காப்பிணித்தாய்மார் 149 பேரும் உடல் உறுப்புக்களை இழந்தவர்கள் 1437 பேரும் உள்ளடங்குவர். மேலும் உடல் உறுப்புக்களை இழந்தவர்களில் 394 பேர் சிறுவர்களென்பது குறிப்பிடத்தக்கது.)
வன்னியில் அரசாங்கமானது திட்டமிட்ட வகையில் பட்டினி நிலைப்பாட்டை ஏற்படுத்தி வருகின்றது. வன்னியில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இருந்துவருவதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டாசுகுமார் தெரிவித்திருந்தபோதிலும் அரசாங்கமானது புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதியில் 70,000 வரையான மக்கள் மட்டுமேயிருப்பதாகக் கூறிப் பல மாதங்களாக உணவுப் பொருட்களை இடைக்கிடையே அனுப்பிவந்துள்ள நிலைமையை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.
போசாக்கின்மை காரணமாக வன்னியிலுள்ள சிறுவர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியின்றி எளிதில் தொற்றுநோய்த் தாக்கங்களுக்குள்ளாகிச் சாவடைந்தும் வருகின்றனர். இதனால் தற்போது சிறுவர் மரணவீதம் மிக மோசமாக அதிகரித்துச் செல்கின்றது. ஒருபுறம் மோசமான எறிகணை மற்றும் குண்டுவீச்சுத் தாக்குதல்களும் மறுபுறம் படுகாயமடைந்த, தொற்று நோய்த் தாக்குதலுக்குள்ளான சிறுவர்களுக்கு மருத்துவச் சிகிச்சையளிக்கக் கூடிய மருந்துப் பொருட்களோ மருத்துவமனை வசதிகளோ - வன்னியில் இல்லையென்பதால் இச்சிறுவர்களைக் காப்பாற்ற எந்தவொரு மாற்றுவழியுமில்லாத நிலைமையும் காணப்படுகின்றது. இத்துடன் தொடர்ந்து நடைபெற்று வரும் தாக்குதல்களால் எறிகணைகள், குண்டுகள் வீழ்ந்துவெடிக்கும்போது வெளியேறும் கந்தகம் போன்ற நச்சு இரசாயனப் பொருட்களால் குறைப் பிரசவங்கள் அதிகளவில் நிகழ்ந்து வருவதுடன் விகாரமான உருவங்களில், அங்கக் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. வன்னியில் இனிவரும் நாள்கள் எப்படியிருக்கப் போகின்றன? என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
குறிப்பு (2)
வன்னியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குக் கொண்டுவரப்படும் மக்கள் புல்மோட்டை, வவுனியா, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் புனர்வாழ்வு முகாம்கள் அமைக்கப்பட்டுத் தங்கவைக்கப்படுகின்றனர். இவர்களுக்கான குடிநீர், மலசலகூட வசதிகள் மோசமாகக் காணப்படுகின்றன. இதனால் சுகாதாரச் சீர்கேடுகள் மிகுந்துள்ளன. இதன்விளைவாகப் புனர்வாழ்வு முகாமில் தங்கியிருப்போர் கொப்புளிப்பான், வாந்திபேதி போன்ற நோய்த்தொற்றுகளுக்குள்ளாகி அவதிமிகுந்த வாழ்க்கை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் இப்புனர்வாழ்வு முகாமில் வசித்துவரும் இளம் வயதினரின் பாதுகாப்பு நிலைமை மிகுந்த அச்சுறுத்தலுக்குள்ளாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. பொதுவாக இம்முகாம்களில் தங்கியுள்ள இளம்வயதினர் புலிகளிடம் ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அரச படையினரால் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்படுகின்றனர். இவ்வாறு அழைத்துச் செல்லப்படுவர்கள் பெரும்பாலும் திரும்பி வருவதில்லையென அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 3000 பேர் வரையான இளைஞர்களும் யுவதிகளும் இப்புனர்வாழ்வு முகாம்களிலிருந்து விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் வெளியானதும் மஹிந்த அரசு இத்தகவல்கள் நம்பகமற்றவையென முதலில் மறுத்தது. தொடர்ந்து தனது ஊடகவழித் தந்திரோபாயத்தின் மூலமாக இத்தகவல்களுக்குப் பதிலளித்தும் வருகிறது. இத்தந்திரோபாயப் பதிலளிப்பை இருவழிகளில் மேற்கொண்டு எதிர்காலத்தில் பல்வேறு தரப்பினராலும் எழுப்பப்படக் கூடிய நியாயமான கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவே கருதவேண்டியுள்ளது.
01. வன்னியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப்பகுதிக்கு வந்தவர்களில் இளம் வயதினர் விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்களென இராணுவத்தினரால் அடையாளப்படுத்தப்பட்டு ‘பல்லேகல’ எனும் இடத்தில் பிரத்தியேகமாக நலன்புரிநிலையமொன்றை அமைத்து அங்கே தங்கவைக்கப்பட்டுள்ளதாகச் செய்திகளை வெளியிட்டு வருதல்.
02. புனர்வாழ்வு முகாம்களிலிருந்து விடுதலைப்புலிகளுடன் நெருங்கியத் தொடர்புடைய சிலர் தப்பித்துச் சென்றுவிட்டதாகவும் அவர்களை உடனடியாக எங்கிருந் தாலும் தம்மிடம் சரணடையுமாறு படைத்தரப்பினர் ஒலிபெருக்கிகளில் வீதிவீதியாக அறிவித்து வருகின்றனர். இது ஒரு குள்ளநரித்தனமான தந்திரோபாயம். நீங்கள் எல்லோரும் அநேகமாகச் ‘சாமி’ படம் பார்த்திருப்பீர்கள். உச்சக்காட்சியில் ‘பெருமாள் பிச்சை தப்பியோட்டம்! பொலீசார் வலைவிரிப்பு!’ எனப் பத்திரிகையில் செய்தி கொடுத்துவிட்டுப் பெருமாள் பிச்சையை நாயகன் சுட்டுக்கொல்வதைப் போலத்தான் மஹிந்த அரசும் நடந்து கொள்கிறது. இவ்வாறு ஒலிபெருக்கிகளில் அறிவிப்புச் செய்வதற்கு முன்பாகக் குறித்தவொரு புனர்வாழ்வு முகாமிலிருந்து (யாழ்ப்பாணத்திலுள்ள) இரவு வேளையில் சில இளைஞர்களும் யுவதிகளும் இராணுவ வாகனமொன்றில் ஏற்றிச் செல்லப்பட்டதாக நம்பகமான தகவல் கிடைத்துள்ளது.
மேலும் வன்னியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் மக்கள் குறித்தவொரு பிரதேசத்தைக் கடக்கும்போது முழுநிர்வாணமாகச் செல்ல வேண்டுமென்பது கட்டாய நிபந்தனையாக விதிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு நிர்வாணமாகச் செல்லும் பெண்களை அரச படையினர் பார்த்து ரசிப்பதுடன் வீடியோவில் பதிவுசெய்தும் வருகின்றனர். அத்துடன் புனர்வாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டிருக்கும் பெண்களுக்குக் கருத்தடை ஊசி செலுத்தி இராணுவத்தினர் தமது பாலுணர்ச்சித் தேவைகளுக்குப் பயன்படுத்தி வருவதாகவும் அறிய முடிகின்றது.
மஹிந்த அரசானது எந்தளவுக்குத் தமிழினத்தை ஒடுக்க முடியுமோ அந்தளவிற்கு முழுமூச்சுடன் ஒடுக்கி வருகிறது. ஆனால் ஜனாதிபதியோ அரசின் சார்பில் பேசவல்ல அமைச்சர்களோ ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது ‘புலிகளின் பிடியிலிருந்து அப்பாவிப் பொதுமக்களை மீட்பதற்காகவே இப்போரை முன்னெடுத்து வருகிறோம்’ எனத் தொடர்ந்து கூறிவருகின்றனர். இவ்விடத்தில் அரச படையினரால் மீட்கப்பட்டவையெனக் குறிப்பிடப்படும் பகுதிகளில் அவர்கள் சித்தசுவாதீனமற்றவர்களைப் போன்று அநாகரிகமாக நடந்துகொள்வதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். கிளிநொச்சிப் பகுதிக்குள் நுழைந்த அரச படையினர் ஒரு பெண் போராளியின் உடலைக் கண்டெடுத்தபோது அதை நிர்வாணப்படுத்திப் பாலுறவு கொள்வதைப் படமெடுத்து இணையதளத்தில் உலவவிட்டிருந்தனர். பின்னர் இது அரசின் கவனத்திற்கு வந்தபோது ‘எமது படையினர் மிகவும் ஒழுக்கமானவர்கள். அவர்கள் ஒருபோதும் இத்தகைய அநாகரிகமான செயல்களில் ஈடுபடுவதில்லை. இது விடுதலைப்புலிகளின் மிகமோசமான பொய்ப்பிரசாரம்’ என அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல நற்சான்றிதழ் வழங்கியிருந்தார்.
குறிப்பு (3)
இக்குறிப்பை எழுதிமுடிக்கும் வேளை (18.05.2009) ‘பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் முழுமையாக நிறைவடைந்துவிட்டது என்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் உட்பட விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களான பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனி, பொட்டு அம்மான், நடேசன், ஜெயம், பூலித்தேவன், பானு, ரமேஷ் போன்றோர் இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கொட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாகச் செய்தியொன்று வெளியாகியுள்ளது. கைத்தொலைபேசிகளின் மூலமாகக் குறுந்தகவல் வடிவில் நாடெங்கிலும் இச்செய்தி பரவலாக்கப்பட்டுள்ள நிலையில் தென்னிலங்கையில் மட்டுமன்றி யாழ்ப்பாணமெங்கும் பட்டாசு கொளுத்தி இனிப்புப்பண்டங்கள் வழங்கி ஒரு வெற்றிவிழா நிகழ்வாக இது அரச படையினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் அரச அலுவலகங்கள், பாடசாலைகள், பொது நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் எனச் சகல அமைப்புகளும் சிங்கக்கொடியினைப் பறக்கவிட வேண்டுமென அவசர உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
யுத்தத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குக் கொண்டுவரப்பட்டுப் புனர்வாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள், பிரபாகரன் மரணமடைந்துவிட்டதாக வெளியான செய்தியால் மகிழ்ச்சியுற்றதாகத் தெரிகிறது. அந்தளவுக்குப் புலிகள் மக்களை மிக மோசமாக நடத்தியுள்ளனர். இளம்பிள்ளைகளைப் பலவந்தமாகப் பிடித்துச்சென்று கட்டாய ஆயுதப் பயிற்சி வழங்கி யுத்தத்திற்குப் பலியாக்கியுள்ளனர். இந்நிலைப்பாடானது மக்களிடம் புலிகளின் மீதான வலுவான எதிர்ப்புணர்வு தோன்றக் காரணமாகியுள்ளது. நான் எதிர்பாராதவிதமாக ஒரு குறுகிய நேரத்தில் புலிகளின் அரசியலாய்வாளரும் முக்கியக் கவிஞருமாக இருந்து இப்போது புனர்வாழ்வு முகாமில் தங்கியுள்ள ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. அவர், ‘அங்கே எல்லாமே முடிந்துபோய் விட்டது. தலைகீழாக மாறிவிட்டது. தமிழீழத் தேசியத் தலைவர் இப்போது முள்ளிவாய்க்கால் என்ற மிகக் குறுகிய நிலப்பரப்பிற்கு ஒரு விதானையாராக இருக்கிறார். நினைத்துப் பார்க்க முடியாத ஒரு சர்வாதிகாரியிடமிருந்து தப்பி வந்துள்ளேன்’ எனக் குறிப்பிட்டார்.
உண்மையில் ஒரு மாபெரும் மக்கள் சக்தி ஆயுதங்களுக்குப் பயந்தல்ல, உணர்வுபூர்வமாகவே பிரபாகரனுக்குப் பின்னால் திரண்டிருந்தது. அவர் எதைச் சொன்னாலும் மறு கேள்விகளுக்கு இடமளிக்காமல் செய்து முடிக்கக் காத்திருந்தது. பிரபாகரனையே தமது ஒப்பற்ற தலைவனாக ஏற்றுக்கொண்டது. அவர் தமக்கான சுதந்திரத்தையும் உரிமைகளையும் பெற்றுத் தருவார் என முழுமையாக நம்பியது. ஆனால் பிரபாகரன் எல்லா விதத்திலும் தமிழ் மக்களின் நம்பிக்கையைச் சிதைத்தது மட்டுமல்லாமல் தமிழீழப் போராட்டத்தையே அர்த்தமற்றதாக்கித் தமிழ் மக்களை வகைதொகையின்றிப் பலியிட்டு வரலாற்றின் பக்கங்களில் மிக மோசமான சர்வாதிகாரியாகிவிட்டார். ஒரு தேசத்திற்கான அனைத்துக் கட்டுமானங்களோடும் வன்னிப் பெரு நிலப்பரப்பை உருவாக்கியிருந்த நிலையில் பேராசிரியர் கா. சிவத்தம்பி ‘ஆயுதப் போராட்டத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து இராஜதந்திர ரீதியாகச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது’ என்று சொன்னார். இதைப் பிரபாகரன் செவிமடுத்திருந்தால் தமிழர்கள் இத்தகையதொரு பேரவலத்தைச் சந்தித்திருக்க வேண்டியதில்லை. ஒரு நியாயமான தீர்வும் கிடைத்திருக்கும்.
குறிப்பு (4)
விடுதலைப்புலிகளை முற்றாக அழித்தொழித்துப் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டதாகவும் வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுத்தந்துள்ள படைவீரர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் வெற்றி விழாக் கொண்டாட்டங்களில் குதூகலத்துடன் பங்கேற்குமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே 19.05.2009 அன்று நாட்டின் ‘சகல’ மக்களுக்கும் பகிரங்க அழைப்பொன்றை விடுத்திருந்த தருணம், கொழும்பில் அரசாங்க நிறுவனமொன்றில் பணியாற்றும் நண்பனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். ‘என்னடாப்பா எல்லாம் தலைகீழாய்ப் போச்சு. இப்பிடி நடக்குமெண்டு நான் கனவிலும் நினைக்கேல்ல’. எனச் சோர்ந்து போய் உரையாடினான். ‘உங்கை நிலமை எப்பிடி?’ எனக் கேட்டேன். ‘எல்லா இடமும் வெடி கொழுத்திறாங்கள். சிங்கக்கொடியள் மூலை முடுக் கெல்லாம் பறக்குது. றோட்டு முழுக்கச் சிங்கள ரௌடியள் அட்டகாசம் பண்ணத் தொடங்கியிட்டாங்கள். வீட்டுக்கு வெளியில கால்வைக்கவே பயமாயிருக்குது’ எனப் பரபரப்போடு சொல்லிக்கொண்டிருந்தான். அவன் பயமடைந்ததைப் போலவே கொழும்பில் நடந்து முடிந்துள்ள வெற்றி விழாக் கொண்டாட்டங்களில் இதுவரை பதுங்கியிருந்த இனவெறியென்ற வாளேந்திய சிங்கம் அப்பாவித் தமிழர்கள்மீது பாய்ந்துள்ளது. இந்த முதற்கட்டமான பாய்ச்சலை எதிர் காலத்தில் நிகழ்ந்தேறப்போகும் அசம்பாவிதங்களுக்கான குறிகாட்டியாகவே கொள்ள வேண்டியிருக்கும்.
கொழும்பிலுள்ள தெஹிவளை, வெள்ளவத்த, பம்பலப்பிட்டிய போன்ற இடங்களைச் செல்லமாகச் சிலர் குட்டி யாழ்ப்பாணம் என்றழைப்பதுண்டு. கணிசமான அளவில் தமிழர்கள் செறிந்துவாழ்வதே இதற்குக் காரணம். குறிப்பாக இப்பகுதிகளில் வாழும் தமிழர்களே வன்னிச்சமர் வெற்றிவிழாக் கொண்டாட்டங்களின்போது மிகுந்த அச்சுறுத்தலுக்குள்ளாகியிருந்தனர். வெற்றிவிழாக் கொண்டாட்டம் ஒரு வாரம்வரை நிகழ்ந்தபோது தலையெடுத்திருந்த இனவெறியானது குறித்த பகுதிகளில் வாழும் தமிழர்களை வீடுகளுக்குள் முடங்கியிருக்கச் செய்திருந்தது. குறிப்பாகப் பாலியல் அத்துமீறல், தடியடிப் பிரயோகம், நகை, பணம் பறித்தல், கொலை அச்சுறுத்தல் என்ற ரீதியில் கொழும்புத் தமிழர்கள் மோசமாகத் துன்புறுத்தப்பட்டிருப்பதை சந்தேகத்திற்கிடமின்றி அறிந்துகொள்ள முடிகிறது. எடுத்துக்காட்டாகச் சில அசம்பாவிதங்களைக் குறிப்பிடலாம்.
1. வெள்ளவத்தையிலுள்ள விகாரை வீதியில் சிங்கக் கொடிகளைப் பறக்கவிட்டவாறு ‘ஜெயஸ்ரீ’ முழக்க மெழுப்பியவாறு வந்த சிங்களக் காடையர் கும்பல் அங்கே ஒதுங்கி நின்ற தமிழ்ப் பெண்களைக் கட்டிப் பிடித்தும் அவயவங்களைக் கசக்கியும் பாலியல் அத்து மீறல்களில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அப்பெண்கள் கதறிக் கூக்குரலிட்டு அழுதவாறே சிதறியோடினர்.
2. வெள்ளவத்தையின் வீதிகளில் அகப்பட்ட தமிழ்ப் பெண்கள்மீது வெற்றிக்களிப்பில் மிதந்த கும்பலொன்று தண்ணீர் ஊற்றிக் குளிப்பாட்டியதையும் அப்பெண்கள் அழுது கூச்சலிட்டவாறு ஓடியதையும் பலரும் அனுதாபத்தோடு பார்த்துக்கொண்டிருக்கத்தான் முடிந்தது.
3. வெள்ளவத்தையின் பிறிதொரு பகுதியில் வீதியில் சென்றுகொண்டிருந்த தமிழ் இளைஞர்களைச் சிங்கக்கொடிகளை அசைத்தவாறு வந்துகொண்டிருந்த கும்பலொன்று மிரட்டி அவர்களிடமிருந்த பணம், நகை, கைத்தொலைபேசி ஆகியவற்றைப் பறித்தபோது அவ்விளைஞர்களில் சிலர் எதிர்ப்புக் காட்டியதால் அவர்களை மோசமாகத் தாக்கியதில் அவர்களது தலைகள் பிளந்து குருதி பீறிட்டது. காயமுற்றவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றபோது காவல் துறை அறிக்கை (றிஷீறீவீநீமீ க்ஷீமீஜீஷீக்ஷீt) யின்றிக் காயங்களுக்கு மருந்திட முடியாதென வைத்தியர்கள் கையை விரித்தனர். அவர்கள் குருதிவழிந்த நிலையில் காவல் நிலையத்திற்கு முறைப்பாடு செய்து அறிக்கை பெறுவதற்காகச் சென்றபோது குறித்த அசம்பாவிதம் ஒரு கோஸ்ரி மோதலெனக் கூறிக் காவல் துறையினர் முறைப்பாட்டைப் பதிவுசெய்ய மறுத்ததுடன் அவர்களை விரட்டியடித்துள்ளனர்.
4. வெள்ளவத்தையிலிருக்கும் சவோய் திரையரங்கிற்கு அருகாமையில் சிங்கக்கொடிகளைப் பறக்கவிட்டு முச்சக்கர வண்டியில் வந்துகொண்டிருந்த கும்பலொன்று அங்கே ஒதுங்கி நின்றிருந்த தமிழ்ப் பெண்களை மிரட்டி அவர்களிடமிருந்து நகை, பணம் என்பவற்றை அபகரித்துள்ளதுடன் சிலரிடமிருந்து நகைகளை அறுக்க முற்பட்டபோது அப்பெண்கள் கூச்சலிட்டனர். எனினும் அந்தக் கும்பல் பெருங் குரலெடுத்து ‘ஜெயஸ்ரீ’ முழக்கமெழுப்பி அப்பெண்களின் கூச்சல் கேட்காதவாறு நகைகளை வெற்றிகரமாக அறுத்துச் சென்றுள்ளது.
5. வெள்ளவத்தை மற்றும் தெஹிவளைப் பகுதிகளிலுள்ள தமிழரின் உணவகங்களுக்குச் சென்று உணவருந்திய கும்பல் பணங்கொடுக்க மறுத்து உணவகங்களின் உரிமையாளர்களை இனரீதியாகப் ‘பறத்தெமுழு’ (பறைத்தமிழன்) போன்ற கொச்சைத்தனமான சொற்களால் தூற்றித் தாக்க முற்பட்டுள்ளது.
இவை தவிரச் சில இடங்களில் தமிழர்கள்மீது சிங்களப் பெண்கள் எச்சில் துப்பித் தகாத வார்த்தைகளால் தூற்றியுமுள்ளனர்.
வெற்றிவிழாக் கொண்டாட்டங்களில் பட்டாசு வெடித்து, பாற்சோறு வழங்கி மக்கள் பெருங்களிப்புற்றதாக மஹிந்த ராஜபக்சே முழங்கினார். பட்டாசுக்கும் பாற்சோறுக்கும் செலவிடப்பட்ட பெருந் தொகை தமிழ் மக்களிடமே மிரட்டிப் பெறப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. குறிப்பாக வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, தெஹிவளை, கொட்டாஞ்சேனை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தமிழர்களின் வர்த்தக நிலையங்கள், வீடுகளுக் கும்பலாகச் சென்ற சிங்களக் காடையர்கள் பட்டாசு வாங்கவும் பாற்சோறு வழங்கவும் பணந்தருமாறு மிரட்டியே நிதிசேகரித்துள்ளனர். இவ்வாறு பல கும்பல்கள் பலதடவை சென்று பணந்தருமாறு மிரட்டியபோது இது தொடர்பாகக் காவல் துறையினருக்கு முறைப்பாடு செய்திருந்தபோதும் அவர்கள் இம்முறைப்பாட்டைக் கவனத்திற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக முறைப்பாடு செய்திருந்த சிலருக்குக் காவல் துறையினர் ‘அவர்கள் வந்து பணங்கேட்டால் கொடுத்துவிடுங்கள். அதைப் பெரிதுபடுத்தினால் வீணான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி வரும்’ எனவும் அறிவுரை வழங்கியுள்ளனர்.
தமிழ் மக்களது உணர்வுகளைப் புண்படுத்தாமல் வன்னிச் சமர் வெற்றிக் கொண்டாட்டங்களில்
ஈடுபடு மாறு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) அமைப்பானது சிங்கள மக்களிடம்
கேட்டிருந்தபோதிலும் வெற்றிக் கொண்டாட்டம் என்பது அதன் எல்லையை மீறி இன வன்முறைக்
கொண்டாட்டமாக மாறியிருந்ததை எந்தவொரு கட்சியோ அல்லது அமைப்போ
கவனத்திலெடுக்கவேயில்லை. ஆனால் சிங்கக்கொடியின் கௌரவத்துக்குப் பங்கமேற்படாமல்
கொண்டாட்டங்களில் ஈடுபடுமாறு தம்மின மக்களை ஜனாதிபதியும் அமைச்சர்களும்
கேட்டுக்கொள்ளத் தவறவில்லை. மஹிந்த சிந்தனைப்படி சிங்கக்கொடியின் கௌரவத்திற்குப்
பங்கமேற்படாமல் வெற்றிவிழாக் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது என்பதன் அர்த்தம்
இனவெறியைக் கட்டவிழ்த்துவிடுவதுதான். இவ்விடத்திலே பொலீஸ் மா அதிபர், ‘வெற்றிக்
கொண்டாட்டங்களில் ஈடுபடுவோர் வன்முறையிலிறங்கினால் அவர்களுக்கெதிராகக் கடும்
நடவடிக்கை எடுக்கப்படும்’ என அறிக்கை விடுத்திருந்தமையைச் சுட்டிக்காட்டத்தான்
வேண்டும். (மஹிந்த சிந்தனைப்படி இவ்வறிக்கை வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபடுவோர்
தமிழருக்கெதிரான வன்முறைகளில் தாராளமாக ஈடுபடலாம். அவர்களுக்கு எதிராக எந்தவொரு
நடவடிக்கையும் எடுக்கப்படாது என்பதையே குறிக்கின்றதென்பதை நீங்கள்
உணர்ந்திருப்பீர்கள்). பொலீஸ் மா அதிபர் வெற்றிக் கொண்டாட்டம் தமிழர்களுக்கெதிரான
இனவெறிக் கொண்டாட்டமாக மாறிவிட்டிருந்ததால் தமது கௌரவத்துக்குப்
பங்கமேற்பட்டுவிடக் கூடாதென்பதற்காக இவ்வறிக் கையை விடுத்திருந்தாரேயொழிய
தமிழர்கள்மீது கொண்டிருந்த அக்கறையால் அல்லவென்பது தெளிவாகின்றது.
இதுதவிரச் சில சிங்கள வானொலிகளில் ‘வன்னிச்சமர் வெற்றி தொடர்பாக மக்களின் கருத்துகள்’ என்ற மகுடத்தின் கீழ் ஒலிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகளில் எந்தளவுக்குச் சிங்கள இலத்திரனியல் ஊடகங்கள் தமிழர்களுக்கு எதிரான இன வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதில் பங்காற்றின என்பதைக் கருத்துத் தெரிவித்த பின்வரும் சிங்கள மக்களின் குரல்களிலிருந்து நன்குணர்ந்து கொள்ளலாம்.
குரல் (1) - ஆண்
இலங்கையில் தமிழர் இருப்பது எம்மினத்துக்கு மிகவும் ஆபத்தானது. ஆகவே தமிழர் சகலரையும் அவர்களது இடமான இந்தியாவுக்கு விரட்டியடிக்க வேண்டும். ஏனென்றால் தமிழர்கள் சகலரும் புலிப்பயங்கரவாதிகள். அவர்களால்தான் எமது சுதந்திர இலங்கை இந்தளவுக்குச் சீரழிந்துவிட்டது.
குரல் (2) - ஆண்
இந்தச் சுதந்திர இலங்கை சிங்களவருக்குச் சொந்தமானது. இதில் தமிழர் உரிமை கொண்டாட முடியாது. எதிர்காலத்தில் ஒரு பிரதேசத்தில் ஐம்பது தமிழ்க் குடும்பங்கள் இருந்தால் நூறு சிங்களக் குடும்பங்களைக் குடியமர்த்த வேண்டும். இதை முதலில் யாழ்ப்பாணத்தில் தொடங்க வேண்டும். ஏனெனில் அப்போது தான் இவ்வாறான பிரச்சினைகள் இனிமேல் ஏற்படாது தடுத்து நிறுத்த இயலும்.
குரல் (3) - ஆண்
புலிகள் வேரோடு ஒழிக்கப்பட்டுவிட்டார்கள். இனி எமக்குப் பிரச்சினை எதுவுமில்லை. ஆகவே இனித் தென்னிலங்கையில் குண்டுகள் வெடித்தால் அது இங்குள்ள தமிழர்களின் வேலையாகத்தானிருக்கும். எனவே நாம் இங்குள்ள தமிழர்களை அவதானித்து வர வேண்டும். எமக்கு ஆயுதம் தந்தால் நாமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட முடியும். அதன்மூலம் தமிழரைக் கண்காணிக்க முடியும்.
குரல் (4) - பெண்
இங்கு வெளிநாடுகளின் தலையீட்டைத் தடுக்க வேண்டும். வெளிநாட்டவரை ஐக்கிய தேசியக் கட்சிதான் எமது நாட்டிற்குள் அழைத்துவருகின்றது. வெளிநாட்டவர் வருகையால் இங்கே இப்போது தேவாலயங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. எனவே வெளி நாட்டவரை எமது நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது.
குரல் (5) - பெண்
தமிழரை எமது படையினர் கொல்வதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஒரு தமிழரைக்கூட எமது படை வீரர்கள் கொல்வதில்லை. தமிழர்கள்தான் சிங்களவரையும் படையினரையும் கொல்கின்றனர். அவர்கள்தான் கொலைகாரர்கள். எமது படையினர் அவர்களைப் பாதுகாப்பதற்காகத் தமது உயிரையே தியாகம் செய்கின்றனர்.
குரல் (6) - ஆண்
புலிகளை வளர்த்தது ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும்தான். ஆகவே இனி நாம் ஐக்கிய தேசியக் கட்சியை எந்தவொரு காலகட்டத்திலும் ஆட்சியமைக்கவிடக் கூடாது. ஆட்சியமைக்கவிட்டால் தமிழரும் புலிகளும் மீண்டும் எழுந்துவிடுவார்கள். அது எங்களுக்கு ஆபத்தானது. ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டால் புலிகள் மீண்டும் வந்துவிடுவார்கள்.
குறிப்பு (5)
வன்னிச்சமர் வெற்றிவிழாக் கொண்டாட்ட நிகழ்வில் மேன்மை தங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே உரையாற்றியபோது, “இந்த நாட்டில் பெரும்பான்மையினம், சிறுபான்மையினம் என இருவகையினங்கள் இல்லை. இனி இந்தநாட்டில் தேசப்பற்றுள்ளோர், தேசப்பற்றில்லாதோர் என்ற இரு இனங்களே இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளதையும் தீவிரப் பேரினவாதக் கட்சியான ‘ஜாதிஹெல உறுமய’ இராணுவ வெற்றி குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “வன்னியிலுள்ள அனைத்து வீதிகளுக்கும் சிங்களப் பெயர்களைச் சூட்ட வேண்டும்” என வலியுறுத்தி யுள்ளதையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.
இராணுவ வெற்றிவிழாக் கொண்டாட்டம் என்ற பெயரில் தலைநகரில் நிகழ்ந்துள்ள இனவெறியை வெளிக்காட்டும் சம்பவங்கள் 1983 ஜூலைக் கலவரத்தை மீளவும் ஞாபகப்படுத்தியுள்ளது. 2006 ஓகஸ்ற் மாதம் திரும்பவும் யுத்தந் தொடங்கியபோது விடுதலைப்புலிகளின் அரசியல் விவகாரங்களுக்கான பேச்சாளர் வே. பாலகுமாரன் “இனி வருங்காலங்களில் தமிழர்மீது தாக்குதல் நிகழ்த்தி விட்டுச் சிங்களவர்கள் நிம்மதியாக இருக்க முடியாது” எனக் கூறியிருந்தார். ஈழவிடுதலைப் போராட்டமென்பது புலிகளால் எந்த விதமான தீர்க்கதரிசனமுமின்றி முன்னெடுக்கப்பட்டிருந்ததன் வெளிப்பாடாகவே பாலகுமாரனின் கூற்று அமைந்திருந்தது. இப்போதுள்ள நிலைமையில் சிங்களவர்மீதான எந்தவொரு தாக்குதலும் தமிழரின் உயிரைக் காவு கொள்வதாகவே அமையும். குறிப்பாகக் கொழும்பில் வாழும் தமிழரின் நிலைதான் ஆபத்தானது. இந்த வெற்றி விழாக் கொண்டாட்டங்கள் ஒருவாறு முடிவுக்கு வந்திருந்த நிலையில் கொழும்பிலுள்ள எனது நெருங்கிய உறவினரொருவர் தொலைபேசியில் கதைத்தார். ‘உங்க நிலமை என்ன மாதிரி?’ என்று கேட்டேன். “இங்கை சரியான நெருக்கடியாய் இருக்கு. மகளை வெளியில எங்கையும் அனுப்புறதில்லை. என்னநேரம் என்ன நடக்குமோ எண்டு பயமாயிருக்கு. நிரந்தரமாய் யாழ்ப்பாணத்துக்கே வந்திடலாம் போலயிருக்கு’ என்று சொன்னார். கொழும்பில் வசிக்கும் எல்லாத் தமிழர்களது உணர்வைப் பிரதிபலிக்கும் ஒரு கூற்றாகவே எனது உறவினர் கூறியதை நான் எடுத்துக்கொண்டேன். இராணுவ வெற்றிவிழாக் கொண்டாட்டம் என்ற பெயரில் நடந்துமுடிந்துள்ள இனவெறித்தனமான சம்பவங்கள் கொழும்பு வாழ் தமிழருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாகவே அமைந்துள்ளன. தந்தை செல்வா (எஸ்.ஜே.வி. செல்வநாயகம்) ஒரு கட்டத்தில் சொன்னார், “தமிழர்களை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று. பின்னாளின் விடுதலைப்புலிகள் இராணுவரீதியாகப் பலம் பெற்றிருந்த காலகட்டத்தில் ஈழவேந்தன் சொன்னார், “தந்தை செல்வா குறிப்பிட்ட கடவுள் பிரபாகரனே” என்று. இப்போது எல்லாம் தலைகீழாகிவிட்ட நிலையில் தமிழர்களின் பாதுகாப்பு மிகவும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள நிலையில் மஹிந்த அரசு எவ்விதத்திலும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தப் போவதில்லை என்பதும் தெளிவாகி விட்டது. எனவே கொழும்பு வாழ் தமிழர்கள் மிகவும் புத்திசாதுரியமாகச் செயல்பட்டுத் தந்திரோபாயமான வழிகளில் தமது பாதுகாப்பைத் தாமே உறுதிப்படுத்திக் கொள்வதுதான் அவர்களுக்கு எஞ்சியிருக்கும் ஒரேயொரு மாற்றுவழி.