படைப்பு என்பது கதை சொல்வதல்ல
சேலம் தமிழ்ச் சங்கத்தில் காலச்சுவடு, கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சேலம் தமிழ்ச் சங்க அறக்கட்டளை இணைந்து நடத்திய ‘அற்றைத் திங்கள்’ நிகழ்ச்சியில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் கலந்துகொண்டார். சிறந்த சிறுகதையாளராய், தேர்ந்த நாவலாசிரியராய் நுட்பமான வாசகர்களால் கொண்டாடப்படும் அவரை, சேலம் தமிழ்ச் சங்கச் செயலாளர் க.வை. பழனிச்சாமி அறிமுகப்படுத்தினார்.
அடிப்படையில் தான் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவன், ஐம்பது ஆண்டு கால விவசாய வாழ்க்கையில் எவ்வித மாற்றத்தையும் காணாத கசப்பான வாழ்வு அனுபவம் தனக்கு உண்டு எனத் தொடங்கிய நாஞ்சில் நாடன், தன் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பைப் பற்றி விரிவாகக் கூறினார்.
தனக்குக் கிடைத்த நல்ல தமிழாசிரியர்களின் மூலமாக ஆழமான தமிழறிவைப் பெற்றதாகக் குறிப்பிட்ட அவர், கணிதத்தை முதன்மைப் பாடமாகப் படித்ததாகவும் பிற்பாடு தமிழ்மீது கொண்ட ஈடுபாட்டால் ஏராளமான பழந்தமிழ் நூல்களைக் கற்க முடிந்தது என்றும் குறிப்பிட்டார்.
தனது இளமைக் காலத்தில் எல்லோரையும் போலவே திராவிட இயக்கமும் திராவிட இலக்கியமும் தன்னைப் பாதித்ததாகவும் அப்போது புக