எனக்கெ அண்ணாச்சி
நண்பர் யூமா வாசுகி தொலைபேசியில் பதற்றக் குரலில் சேதி சொன்னார். ‘அண்ணாச்சி
ராஜமார்த்தாண்டன் கொஞ்ச நேரத்துக்கு முன் சாலை விபத்தில் இறந்துவிட்டார்’.
நம்பவில்லை. நெய்தல் கிருஷ்ணனைத் தொடர்புகொண்டு விசாரித்தேன். அவரும் சொன்னார்.
‘ஆமாம், அண்ணாச்சி, நான் அங்கேதான் இ ருக்கிறேன். பிறகு விவரமாகச் சொல்கிறேன்’.
நம்பவிரும்பவில்லை. தகவல் பொய்யானதாக இருக்க வேண்டும் என்று மனம் ஆசைப்பட்டது.
முந்தைய தினம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தவர் சில மணி நேரங்களுக்குள் இல்லாமல்
போய்விட்டார் என்ற அபத்த உண்மையை ஒப்புக்கொள்ளத் தயக்கமாக இருந் தது. அதிர்ச்சி
கலையாமலேயே இலக்கிய நண்பர்களுக்குத் தகவல் தெரிவித்துக்கொண்டிருந்தேன். அமைதி
கொள்ளாமல் மறுபடியும் கிருஷ்ணனை அழைத்து விசாரித்தேன். ‘போஸ்ட்மார்ட்டம்
அறைமுன்னால் நிற்கிறேன்’