“வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் - அதில் மானுடர் வேற்றுமை இல்லை” என்ற பாரதியின் வரிக்கு ஏற்ப இந்தியாவில் மாற்றுப் பாலியல் (ஒருபாலீர்ப்பு, இருபாலீர்ப்பு கொண்ட ஆண்களும் பெண்களும், எதிர் பால்நிலை விழையும் மக்கள் - அரவானிகள், ஆண் பாலடையாளம் ஏற்கும் பெண்கள்) கொண்டவர்களின் குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. சென்னையிலும் மாற்றுப் பாலியலாளர்களின் குரல்கள் வலுவாக ஒலிக்கத் துவங்கியிருக்கின்றன. உலகெங்கிலும் ஜூன் மாதம் மாற்றுப் பாலியல் கொண்டவர்களின் சுயமதிப்பைக் குறிக்கும் மாதமாகவும் தம் பால்விழைவைப் பெருமிதத்துடன் ஏற்றுக்கொள்ளும் காலமாகவும் குறிக்கப்படுகிறது. 1969ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் Stonewall Inn என்ற இடத்தில் தம் பாலியல் வேறுபாடு காரணமாகக் காவல் துறையினரின் வன்முறைக்கு உள்ளானவர்கள் தொடங்கிய புரட்சி ஒருபால் உறவாளர் இயக்கமாக விரிவடைந்தது. ஆண்-பெண் இடையிலான பாலியல் உறவு மட்டுமே சரியானது என்ற கண்ணோட்டத்தை இவ்வியக்கம் கேள்விக்குள்ளாக்கியதுடன் பால் விழைவு, அதற்கான சுதந்திரம், உடல் அரசியல், உடலின்பம் குறித்த விவாதங்களுக்கும் வலுசேர்த்துள்ளது.
தமிழகத