திருமாவளவனின் வரலாற்றுத் தருணம்
தமிழகத்தில் டாக்டர் ராமதாஸ் ஊதி வளர்த்தெடுத்த சாதிய வன்மத்தை அவரது முக்கிய எதிரியாக வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டிருக்கும் தொல். திருமாவளவன் பண்பட்ட அணுகுமுறையுடன் எதிர்கொண்டு வருவது பாராட்டப்பட வேண்டியது. பா.ம.க.வினரின் வன்முறையையும் தீஞ்சொற்களையும் வன்மத்தால் எதிர்கொள்ளாமல் ஜனநாயக முறையிலும் அரசியல் செயல்பாடுகளாலும் திருமாவளவன் எதிர்வினையாற்றி வருவது விவேகமான தலைவராக அவரை உயர்த்திக் காட்டுகிறது. ராமதாஸைத் தனிப்பட்ட முறையில் தாக்குவதையும் வன்னியர்களைப் பழிப்பதையும் அவர் முற்றாகத் தவிர்த்து வருகிறார்.
பா.ம.க.வினரின் கொடுஞ்செயல்களுக்கு எதிர்வினையாகச் சாதிய முரண்பாடுகளை மேலும் கூர்மைப்படுத்துவதைத் தவிர்த்து, அனைத்து ஜனநாயக சக்திகளையும் இயக்கங்களையும் ஒன்றுதிரட்ட அவர் மேற்கொண்டுள்ள முயற்சி வரவேற்கப்படவேண்டியது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை நன்குணர்ந்து திமுக கூட்டணியின் எல்லைகளைத் தாண்டி அவர் செயல்படத் துவங்கியிருப்பது முக்கியமானது. ராமதாஸின் செயல்பாடுகள் வன்னியர்களுக்கும் தலித்துகளுக்கும் இடையில் கலவரத்தைத் தூண்டுவதாக இருக்க, திருமாவளவன் அதைச் சாதியத்திற்கும் சாதிமறுப்பிற்குமான முரண்பாடாக மாற்றுவதில் கணிசமான வெற்றி கண்டிருக்கிறார்.
கடந்த ஆண்டுகளில் ராமதாஸுடன் இணைந்து செயல்பட அவர் கையாண்ட தமிழிய அரசியல் தோல்வியடைந்திருப்பது தவிர்க்க முடியாததாக இருக்கலாம். ஆனால் இம்முயற்சியால் கடந்த பத்தாண்டுகளில் வட தமிழ்நாட்டில் சாதியக் கலவரங்களால் அதிக ரத்தம் சிந்தப்படவில்லை, காலனிகளில் குடிசைகள் அன்றாடம் எரியவில்லை என்பது மறுக்க முடியாத செய்தி. ஒடுக்கப் படுபவரும் ஒடுக்குபவரும் இணைந்து சாதிய முரண்பாட்டிலிருந்து விடுதலை பெறும் ஒரு கற்பனை சாத்தியப்பாட்டை இந்த அணுகுமுறை தக்கவைத்துக் கொண்டிருந்தது. இன்று அந்த உயர்முயற்சி கசப்பானதாக முடிந்துவிட்டது.
தனிப்பட்ட முறையில் திருமாவளவன் அன்புக்கும் நட்புக்கும் நேசத்திற்கும் பாசத்திற்கும் இணங்கும் மனிதராக இருக்கலாம். ஆனால் ஒரு தலைவராக தலித் மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் யதார்த்தத்தின் அடிப்படையிலேயே அவரது அரசியல் முன்னெடுப்புகள் இருக்க முடியும். இடதுசாரிகள் நீங்கலாகத் தலித் மக்களுக்காகக் களத்தில் போராடுபவர்கள் யாரும் இல்லை. எனவே தேர்தல் களத்தில் பிற கட்சிகளுடன் அவருக்குத் தொகுதி உடன்பாடுகள் சாத்தியப்படலாம். ஆனால் எந்தக் கட்சியுடனும் கொள்கை அடிப்படையிலான அரசியல் கூட்டணி சாத்தியமில்லை.
இருப்பினும் திருமாவளவனின் இன்றைய அணுகுமுறை அவரது ஆளுமையை உயர்த்தியிருக்கிறது. அவரது பொறுப்பையும் அதிகரித்திருக்கிறது. திமுக ஆட்சிக்காலம் முழுவதும் திருமாவளவனின் அணுகுமுறை தலித் பிரச்சனைகளைப் பின்னகர்த்தித் தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுப்பதாகவே இருந்தது. இந்த அணுகுமுறையில் அவர் களத்தில் பலவீனம் அடைந்தது உண்மை. நெருக்கடியான இக்காலகட்டத்தில் தமிழ்த் தேசிய அரசியல் அவருக்குக் கைகொடுக்கவில்லை.
தற்போதைய அரசியல் சூழல் தலித் அரசியலைக் கைவிடாமலேயே பரந்துபட்ட ஜனநாயக அரசியலை முன்னெடுக்கும் தருணத்தை அவருக்கு வழங்கியிருக்கிறது. இந்தத் தருணத்தை அவர் கையாளும் பக்குவத்திலிருந்தே வரலாற்றில் அவர் தலைமை நினைக்கப்படும்.
நீதி மறுக்கும் தீர்ப்பு
கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு அணுமின் நிலையங்கள் அவசியம் என நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. இத்தீர்ப்பில் நீதிமன்ற வரையறைகள் மீறப்பட்டுள்ளதாகப் பல சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர். நாட்டிற்கு எது தேவை அல்லது தேவையில்லை என்பதை முடிவு செய்வது அரசாங்கத்தின் பணி. சட்டத்திற்கும் உண்மைத் தகவல்களுக்கும் ஆதாரங்களுக்கும் உட்பட்டு மனு மீது தீர்ப்பு வழங்குவதே நீதிமன்றத்தின் பணி.
நாட்டிற்கு அணுமின் சக்தி தேவை, தேவையில்லை என இரு கருத்துகள் உள்ளன. தேவை எனக் கருதுபவர்களும் கூடங்குளம் திட்டத்தில் பயன்படுத்தியுள்ள தொழில்நுட்பத் தரத்தின் அடிப்படையில் எழும் பாதுகாப்புக் கேள்விகளைப் புறமொதுக்க முடியாது. கூடங்குளம் திட் டத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளின் நம்பகத்தன்மையை விஞ்ஞானிகள், வல்லுநர்கள் பலர் கேள்விக்குள்ளாக்கியுள்ளனர். இவற்றை நீதிமன்றம் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.
நாட்டு மக்கள், பொதுநலன் கருதிச் சிறு சிறு இன்னல்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று நீதிபதி அறிவுரை வழங்கியுள்ளா£ர். செர்னோஃபிலிலும் ஃபுகிஷிமாவிலும் ஏற்பட்டப் பெரும் விபத்துகளைச் சிறு இன்னல்களாகக் கருத முடியுமா? நாட்டின் வளர்ச்சிக்கு மக்களின் உயிர், உடைமைகளையும் சுற்றுச்சூழலையும் தியாகம் செய்யத்தான் வேண்டுமா? ழிuநீறீமீணீக்ஷீ லிவீணீதீவீறீவீtஹ் கிநீt நமது அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது எனச் சட்ட வல்லுநர்கள் பலர் கூறியிருக்கும் கருத்தையும் நீதிமன்றம் கணக்கில் கொண்டதாகத் தெரியவில்லை.
அணுசக்தி அதிகாரிகளின் வாக்குறுதிகளை அப்படியே நம்பி ஏற்றுக்கொண்டிருக்கும் உச்ச நீதிமன்றம் அணு உலையின் பாதுகாப்பு பற்றிப் பல விஞ்ஞானிகள் சந்தேகங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. போராட்டக்காரர்களின் அச்சங்களையும் உணர்வுகளையும் பொருட்படுத்தவில்லை. இந்நிலையில் போராட்டத்தைத் தொடர்வதைத் தவிர கூடங்குளம் போராளிகளுக்கு வேறு மார்க்கம் இல்லை.
இருப்பினும் உச்ச நீதிமன்றம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பிற்குப் பல வழிமுறைகளை முன்மொழிந்து 15 ஆணைகளைப் பிறப்பித்துள்ளது. அதில் செறிவூட்டப்பட்ட அணுப்பொருளைப் பயன்படுத்தும் முறை பற்றியும் பயன்பாடு முடிந்த அணுப்பொருளைக் கையாளும் முறை பற்றியும் குறிப்பிட்டுள்ளது. ஐந்து வருடங்களில் பூமியைக் குடைந்து பாதாளப் பெட்டகம் அமைக்கப்பட்டு அங்குச் செயலிழந்த அணுப்பொருள் பாதுகாக்கப்படும் என ழிறிசிமிலி உறுதியளித்திருந்தது. ஆனால் இத்திட்டம் பற்றிய தகவல் எதுவும் இதுவரை தெரியவில்லை. நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை அணுசக்தி அமைப்புகள் எந்த அளவுக்குப் பின்பற்றப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நீதிமன்றம் வலியுறுத்தும் பாதுகாப்பு ஏற்பாடு களைக் கணக்கெடுக்காமல் அணுமின் திட்டத்தை முன்னெடுப்பது மனிதத்திற்கு எதிரான குற்றமாகவே இருக்கும்.