இது எனக்கொரு புது அனுபவம். இதுவரை இத்தகைய விருது விழாக்களில் விருதுபெறும் ஒருவனாக நான் இருந்ததில்லை. விருதுகளுக்கு எதிரான ஒரு மனநிலையில் இவ்வளவு காலமும் இருந்துவிட்டேன். இன்று இவ்விருதினைப் பெற்றுக்கொண்டு ஏற்புரையாக என்ன பேசுவது என்று யோசித்தேன். எழுத்தாளர்கள்,
பரிசுகள், விருதுகள், பாராட்டுகள் பற்றியே பேசலாம் என்று நினைத்தேன்.
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் ‘காத்திருங்கள்’ என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதினேன். எனக்கு அறுபது வயது பூர்த்தியாவதை முன்னிட்டு எனது சில நண்பர்களும் மாணவர்களும் எனக்கு ஒரு விழா எடுக்கும் நோக்கில் என்னை அணுகிய போது அதை மறுதலித்த மனநிலையில் பரிசுகள் விருதுகள் பாராட்டுகளுக்கு எதிராக எழுதிய கவிதை அது. கவிதை இதுதான்:
மன்னிக்கவேண்டும்
எனக்கு எதற்கு இப்போது பாராட்டு,
பட்டம், பரிசு, விருதுகள்,
விழாக்கள் எல்லாம் . .?
காத்திருங்கள்
நான் இறந்து நூறாண்டுகள் ஆகட்டும்
நான் புதைக்கப்பட்ட இடத்தில்
புல் முளைக்கட்டும்
இன்னும் நூறாயிரம்பேர் புதையுண்டு போகட்டும் <