உறங்கும் கடல்
மறதியிலிருந்து ஆரம்பித்தால் சரியாக இருக்கும். ஏனென்றால் திரு.எம். அங்கிருந்துதான் ஆரம்பித்தார். அவருடையப் பெயரை முழுசாகச் சொல்லிவிட முடியும்; ஆனால், அது தொழில் அதர்மம். மாநில அரசு ஊழியர், ஐம்பது வயதை எட்டியவர், மதுரையில் பிறந்து வளர்ந்தவர், அங்கேயே வசிப்பவர் என்று பொத்தாம்பொதுவான தகவல்கள் சொல்லலாம். இந்தத் தகவல்களால் ஒரு பிரயோசனமும் கிடையாது தான். ஆனால், வெறுமனே அவர் அவர் என்றே தொடர்ந்து பேசுவதில், உங்களுக்கும் அவருக்கும் இடை யில் பெரிய அகழி உருவாகி விடுவது மட்டுமல்ல, எனக்கும் சொல்கிற விஷயத்தின் மீது ஈடுபாடு குறைந்து விட வாய்ப்பிருக்கிறதே. திரு.எம். என்றே வைத்துக் கொள்வோம்.
தொழில் தர்மம் பற்றிச் சொன்னேன். அதன் பிரகாரம், திரு.எம், சொன்ன சமாச்சாரங்களை என் மனத்தின் இருட்டறைக்குள் பூட்டி வைப்பதுதான் சரி. பாதிரியார்கள் அப்படித்தானே செய்கிறார்கள். ஆனால், என் மூதாதையர் காட்டிய வழி வேறு மாதிரி. பிரச்சினையையும், அதைத் தாங்கள் தீர்த்து வைத்த விதத்தையும் பெயரையோ, கால தேச வர்த்தமானங்களையோ குறிப்பிடாமல் பதிந்து வைத்ததன் மூலம் என்னை மாதிரிச் சீடர்கள் எத்தனை பேரை உருவாக்கி