காளிதாசன் தந்த கொடை
அலுவலகத்துக்கு அருகில் சந்தடியான சாலை மீது இருந்தது கோவில். உள்ளே உஜ்ஜயினி மகாகாளி வீற்றிருந்து அருள்பாலித்துக் கொண்டிருந்தாள். கோவிலுக்கு ஐம்பதாண்டுக்கும் மேலான பழைமை இருக்கலாம்.
“அம்பதா, நூறுக்கும் கூடுதல் காணுமாக்கும். எங்க பாட்டா கொச்சாக இரிக்கும் பொத் தொட்டே உள்ளதாக்கும். அம்ம மகாராணி சேது லட்சுமிபாய் காலம் மொதலே இருக்கிற கோயிலாக்கும்னா நீங்களே கணக்குக் கூட்டிப் பாருங்கோ” என்று சாக்கு மண்டி நாடார் மறுத்தார். கூட்டிப் பார்த்தேன். பூராடம் திருநாள் சேது லட்சுமிபாய் (1895-1985) திருவிதாங்கூரை ஆண்டது 1924 முதல் 1931 முடிய. அந்தக் காலத்துக் கோவில் என்றாலும் நூறை எட்டவில்லை. அண்ணாச்சியுடன் சமாதான சக வாழ்வைப் பேணுவதற்காக ஒப்புக்கொண்டேன்.
சாலையை விரிவுபடுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டது. நிம்மதியாக இருந்த உஜ்ஜயினி மகாகாளி- “அது உச்சினிமாகாளி தான் சார். நீங்க சொல்றது ஏதொ வடநாட்டுக் காரியயில்லா” - கோவிலை இடம் பெயர்க்கச் சொல்லி இடதுசாரி அரசு நோட்டீஸ் அனுப்பியது. உச்சினியம்மையின் சார்பாக நீதி மன்றம்வரை போய்ப் பார்த்தார்கள். பலனில்லை. நெ