ஈன்றாள் துயர் காண்பாராயின்...
அன்னையர் தினம் கொண்டாடத் தொடங்கி ஒரு நூற்றாண்டு கடந்திருக்கிறது. வழக் கம்போல் இந்த தினமும் நுகர்வோர் கலாச் சாரத்தின் பகுதியாக மாற்றப் பட்டுவிட்டது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான அரசு சாரா நிறுவனத்தின் அறிக்கை ஒரு கசப்பான உண்மையைச் சொல்லியிருக்கிறது-உலகிலேயே அதிகமான பிரசவ இறப்புகள் இந்தியாவில்தான் நிகழ்கின்றன. ஆண்டுக்கு 56,000 பெண்கள் பிரசவத்தின்போது இறக்கின்றனர். சென்ற ஆண்டு வெளியான உலகச் சுகாதார அமைப்பின் அறிக்கையும் இதை உறுதிசெய்கிறது. உலகில் ஆண்டுக்கு 2,87,000 பெண்கள் பிரசவ காலத்தில் இறக்கின்றனர். இவற்றில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவிலும் நைஜீரியாவிலும்தான் நிகழ்கின்றன என உலகச் சுகாதார அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது. உலகின் மிகச் சிறிய நாடுகள்கூட பிரசவ இறப்புகளைத் தடுப்பதில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் கண்டுள்ளன. இந்தியாவைவிட அதிக மக்கள்தொகை கொண்ட சீனாவிலும் பிரசவ இறப்பு விகிதம் 37 (லட்சம் பேருக்கு 37 பேர்). இது மிகக் குறைந்த விகித அளவு. ஆனால் மத்திய அரசுடைய மாதிரிப் பதிவுமுறை விவரங்களின்படி இந்தியாவில் பி.இ.வி. (பிரசவ இறப்பு விகிதம்) 212.
1990ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் உலக பிரசவ இறப்புகள் ஆண்டுக்கு ஐந்தரை லட்சத்தைத் தாண்டியிருந்தன. அதைத் தொடர்ந்து 1994இல் எகிப்தில் நடந்த மக்கள் வளர்ச்சிக்கான உலக மாநாட்டில் சுகாதாரம் குறித்துக் கலந்தாலோசிக்கப்பட்டது. மகப்பேறு நலன் அந்த ஆலோசனையில் பிரதானமான அம்சமாக இருந்தது. வளர்ந்த நாடுகளைவிட வளரும் நாடுகளில்தான் பிரசவ இறப்புகள் மிக அதிகம். அதாவது 90 சதவிகித பிரசவ இறப்புகள் வளரும் நாடுகளில்தான் நடக்கின்றன. 2000ஆம் ஆண்டிற்குள் அப்போதிருந்த பிரசவ இறப்பை ஐம்பது சதவீதம் கட்டுக்குள் கொண்டுவர உலக நாடுகளால் தீர்மானிக்கப்பட்டது. இம்மாநாட்டுக்குப் பிறகுதான் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் சுகாதாரத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் கவனம் எடுத்துக்கொண்டன. இந்தியாவில் ஆண்டுக்கு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பிரசவ காலத்தில் இறப்பது குறித்து அக்கறை கொள்ளப்பட்டது. அப்போது உலகின் மூன்றில் ஒரு பங்கு பிரசவ இறப்புகள் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய தெற்காசிய நாடுகளில் நிகழ்ந்தன. 1980ஆம் ஆண்டு இந்தியாவில் இறப்பு விகிதம் 753ஆக இருந்தது. ஆனால் இன்று குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை இந்தியா பெற்றிருக்கிறது. என்றாலும் ஐநா நிர்ணயித்த 2007ஆம் ஆண்டுக்கான புத்தாயிர வளர்ச்சி இலக்கான பி.இ.வி.210ஐ 2010ஆம் ஆண்டில்தான் இந்தியாவால் அடைய முடிந்தது.
2000ஆம் ஆண்டில் உலக நாடுகள் புத்தாயிர வளர்ச்சிக்கான உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டன. அதாவது ஐநாவால் முன்வைக்கப்பட்ட புத்தாயிர வளர்ச்சிக்கான இலக்கை எட்டிவிட ஓரு கெடு நிர்ணயிக்கப்பட்டது. வறுமை ஒழிப்பு, பாலின வேறுபாடு, குழந்தை இறப்புத் தடுப்பு உள்ளிட்ட எட்டு இலக்குகள் தீர்மானிக்கப்பட்டன. மகப்பேறு நலன் அதில் ஐந்தாவது இலக்காகக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தகுந்த விஷயம். இதற்குப் பிறகுதான் இந்தியாவில் தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தியாவைப் பொறுத்தளவில் பிரசவ இறப்புகள் மிக அதிகமாக நிகழ்ந்தபோதும் அவற்றுக்கான காரணங்கள் முறையாகப் பதிவுசெய்யப்படவில்லை என்பது முதன்மைப் பிரச்சனை. பிரசவ இறப்புகளைத் தடுக்க அப்பதிவுகள் அவசியமானவை. அதையொட்டி 1998-99க்குப் பிறகு 2002-04 ஆண்டுக்கான மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலன் கணக்கெடுப்பு-12 நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இந்தக் கணக் கெடுப்பில் இரண்டு வருடத்திற்குள் நாட்டில் நிகழ்ந்த பிரசவ இறப்புகள் கணக்கெடுக்கப் பட்டன. இறப்பின்போது பெண்களுக்கு இருந்த அறிகுறிகள் சேகரிக்கப்பட்டன. அதன் மூலம் இறப்புக் காரணங்களை ஓரளவு அறிய முடிந்தது. ஆனால் அது மிகத் துல்லியமான கணக்கெடுப்பு எனக் கொள்ள முடியாது. அந்தக் கணக்கெடுப்பின் மூலம் இறக்கும் பெண்களின் சமூகப் பொருளாதாரப் பின்புலம் அறியப்பட்டது.
அக்கணக்கெடுப்பின் மூலம் பிரசவ இறப்புகள் கிராமப்புற இந்தியாவில்தான் அதிகம் நிகழ்கின்றன எனத் தெரியவந்தது. 78.1 சதவிகிதப் பிரசவ இறப்புகளுக்குக் கிராமப்புறப் பெண்களே ஆளாகிறார்கள். பிரசவ இறப்புகள் மட்டுமல்லாது குழந்தைகள் இறப்பு, கருவுற்றிருக்கும் காலத்தில் ஊட்டச்சத்துக் குறைபாடால் ஏற்படும் ரத்தசோகை போன்ற சுகாதாரப் பிரச்சினைகள் கிராமப்புற இந்தியாவில்தான் அதிகமாக உள்ளன. இப்பிரச்சினைகளை எதிர்கொள்ள 2005ஆம் ஆண்டு தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்து நடைமுறைப்படுத்தியது. இதன் மூலம் பேறுகாலப் பெண்கள் நலனுக்காக ‘ஜனனி சுரக்ஷா யோஜனா’ திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் அடிப்படையில் 1000 பெண்களுக்கு ‘ஆஷா’ என அழைக்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் கிராமந்தோறும் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் கிராமப்புறத்தில் கருவுற்றப் பெண்களைக் கண்டறிந்து, பேறு காலத்திற்கு முந்தைய/பிந்தைய மருத்துவச் சேவையை அளிக்கிறார்கள். ஆனால் மாதிரிப் பதிவுமுறை விபரங்களின்படி 2005-2006க்கான பி.இ.வி. 254. 2007-2009இல் பி.இ.வி. 212. ஆக மத்திய அரசின் திட்டங்களால் மிகப் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட 2015க்கான இலக்கை எஞ்சியிருக்கும் கால அவகாசத்துக்குள் அடைய இத்திட்டங்கள் கைகொடுக்கும் என நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது. சுகாதாரம், அரசியலமைப்புச் சட்டத்தின்படி மாநிலப் பட்டியலுக்குள் வருகிறது. எனவே இத்திட்டங்கள் மத்திய அரசினுடையதாக இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் மாநில அரசுகளின் பங்கு முக்கியமானதாகிறது.
அந்த வகையில் பெரும்பாலான மாநிலங்களுடன் ஒப்பிடும்போது பிரசவ இறப்பைத் தடுப்பதில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது. மகப்பேறு நலனுக்கு நிதியளிக்கும் வகையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டமும் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பிரசவத்திற்கு முன்பு, பிரசவ காலத்தில், பிரசவத்திற்கு பின்பு என மூன்று தவணைகளாக மொத்தம் 12,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் 2010-11 ஆண்டுக் காலகட்டத்தில் 5,43,000 பேர் பயனடைந்திருப்பதாகத் தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை அறிக்கை தெரிவிக்கிறது.
இருப்பினும் வீட்டில் நிகழும் சிக்கலான பிரசவ இறப்புகள் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அரசு மருத்துவமனைகளிலும் தொடர்வது வருத்தத்திற்குரியதே. பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் கருவுற்ற தாய்மார்கள் குறித்த அக்கறையின்மை, உடல் தகுதியை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தலைமை மருத்துவமனைக்கோ மருத்துவக் கல்லூரிக்கோ பரிந்துரை செய்யாமல் இக்கட்டான நிலையில் கைவிடுதல், மருத்துவர்கள் பற்றாக்குறை, பணிநேரங்களில் தங்களது மருத்துவமனைகளிலும் பிற தனியார் மருத்துவமனைகளிலும் பணியாற்றும் மருத்துவர்கள், நெருக்கடி நேரங்களில் மருத்துவர்கள் பணியில் இல்லாதபோது முறையான பயிற்சியற்ற செவிலியர்கள் மேற்பார்வையில் நிகழும் பிரசவங்கள், தேவையான இரத்தம் கையிருப்பில் இல்லாதது, தவறான சிகிச்சை மற்றும் அதிக உதிரப்போக்கினால் ஏற்படும் இறப்புகள், சிக்கலான பிரசவங்களின்போதும் அறுவைச் சிகிச்சையின்போதும் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு, ஜெனரேட்டர் போன்ற மாற்று ஏற்பாடுகளுக்கு முறையான வசதி ஏற்படுத்தாதது, ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் பற்றாக்குறை, லஞ்சம், சுகாதாரமற்ற கழிப்பறைகள், குறைவான நீர்வசதி போன்றவற்றில் மாநில அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்த இயலும்.
பிரசவ இறப்புகளைத் தடுப்பதில் 108 ஆம்புலன்ஸ் சேவை முக்கியப் பங்காற்றி வருகிறது. தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கி இரண்டு ஆண்டுக்குள் (2008-10) 1,10,480 பிரசவ சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் கிராமப்புற மக்களிடம் இந்த இலவச சேவை குறித்துப் போதிய விழிப்புணர்வு இல்லை. அதனால் திட்டங்கள் இயற்றுவதோடு நின்றுவிடாமல் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அரசின் கடமையாகிறது.
பிரசவ கால இறப்புக்கான காரணங்களாக மருத்துவப் பிரச்சினை களை மட்டும் சொல்லிவிட முடியாது. முறையற்ற கருக்கலைப்பின் மூலமும், சிறு வயதில் கர்ப்பம் தரிப்பதாலும் பிரசவ இறப்புகள் நிகழ்கின்றன. அடிப் படைக் கல்வியறிவு போதிய அளவு இல்லாத நிலையும் சமூகத்தில் நிலவும் பழமைவாதமும் இதற்கான காரணங்கள். உதாரணமாகக் கல்வியறிவில் முன்னணியில் உள்ள கேரளாவில் பிரசவ இறப்புகள் நாட்டிலேயே மிகக் குறைவாக (பி.இ.வி. 95) நிகழ்கின்றன. பிரசவ இறப்புகளுக்கு வயதும் ஒரு காரணமாக இருக்கிறது. பிரசவத்தின்போது இறக்கும் பெண்களில் 42 சதவிகிதத்தினர் 15-19 வயதிற்கு உட்பட்டவர்கள். 41 சதவிகிதத்தினர் 40-44 வயதிற்கு உட்பட்டவர்கள். எனவே இளம் வயதுத் திருமணங்களைத் தடுப்பது குறித்தும், குடும்பக் கட்டுப்பாடு குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்க வேண்டியதும் பிரசவ இறப்புகள் தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாகிறது. குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையின்போது நிகழும் இறப்புகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதே.
இந்தியாவில் பிரசவத்தால் இறக்கும் பெண்களில் 84 சதவிகிதம் பேர் சுத்தமான குடிநீர் வசதி கிடைக்கப்பெறாதவர்கள். 72 சதவிகிதம் பெண்களுக்கு முறையான கழிப்பிடம் இல்லை. அதுபோல வாழ்வியல் அடிப்படைகளை வைத்து மேற்கொண்ட ஆய்வில் சமூகப் பொருளாதார அளவில் மிகவும் பின்தங்கிய தலித், பழங்குடியினப் பெண்கள்தான் அதிகம் பிரசவ இறப்பு களுக்கு ஆளாகிறார்கள் எனத் தெரிய வந்துள்ளது. பிரசவ இறப்புகளைத் தடுப்பது என்பது பிரசவ காலத்தில் மட்டும் மேற்கொள்ளக்கூடிய மருத்துவப் பணிகள் மட்டுமல்ல. அவர்களுக்குச் சுகாதாரமான குடிநீர், கழிப்பறை, குடியிருப்புகள் இவற்றை ஏற்படுத்தித் தருவதும் அவசியமாகிறது. கிராமப்புறப் பெண்கள் குடிநீர்த் தேவைக்காக தினமும் 10 கி.மீ. தூரம் செல்கிறார்கள் என யுனிசெஃபின் அறிக்கை தெரிவிக்கிறது. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் பேர் திறந்தவெளியைத்தான் கழிப்பறையாகப் பயன்படுத்துகிறார்கள். இது பெண்கள் எதிர்கொள்ளக்கூடிய மிக முக்கியமானப் பிரச்சினை. தனிக் கழிப்பறை பெண்களுக்கு மிக அவசிய மான ஒன்று. முறையான கட்டமைப்பு வசதியற்ற வாழ்விடங்களில் வசிப்ப தாலும் கிராமப்புறப் பெண்கள் பிரசவ காலத்தில் எளிதாக நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்.
எனவே பிரசவ இறப்புகளைத் தடுக்க முதற்கட்டமாக அனை வருக்கும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். கருக்கலைப்பு, குடும்பக் கட்டுப்பாடு, திருமண வயது ஆகியவை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். ஏற்கனவே அரசு அறிவித்திருக்கும் பாதுகாப்பான கருக்கலைப்புத் திட்டம் ஆஷா பணியாளர்கள் மூலம் துரிதமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். பிரசவ இறப்புகளில் 13 சதவிகிதம் முறையற்ற கருக்கலைப் பால்தான் நடக்கிறது. அதுபோல் பிரசவ இறப்புத் தடுப்பில் முக்கியப் பங்கு வகிக்கக்கூடிய சுகாதார மையங்களின் பணியாளர் பற்றாக்குறை இந்திய அளவில் 40 சதவிகிதமாக உள்ளது. பணியாளர் நியமன வரையறைகளைக் கவனத்தில் கொண்டு போதிய சுகாதாரப் பணியாளர்களை அரசு நியமிக்க வேண்டும். மேலும் இந்திய அரசின் மருத்துவச் செலவீனம் வெறும் 4.1 சதவிகிதம். அதுவும் தனியாரின் பங்களிப்பை உள்ளடக்கியதுதான். அரசின் பங்களிப்பு 1.6 சதவிகிதம் மட்டுமே. 1.8 டிரில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தி உடைய ஒரு நாடு மருத்துவத்துக்காக ஒன்றரை சதவிகிதமே செலவிடுகிறது என்பது அதிர்ச்சியானதுதான். மருத்துவத்துக்கான அரசின் பங்களிப்பையும் அதிகரித்தால்தான் இலக்கை அடைவதற்கான பாதையை எளிதாக்க முடியும்.
பிரசவ இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்துவது என்பது வெறும் புள்ளிவிவரங்களைக் குறைப்பதல்ல; ஒரு உயிரைக் காப்பாற்றுவது. ஒரு உயிரைக் காப்பாற்றுவது என்பது ஜனநாயக அரசின் சமூகக் கடமை. 2015க்கான இந்தியாவின் இலக்கு பிரசவ இறப்பு விகிதம் 109. பிரசவ இறப்பைத் தடுப்பதில் புத்தாயிர இலக்கை இந்தியா தவறவிடக்கூடுமென யுனிசெஃப் ஏற்கனவே எச்சரித்துள்ளது. ஊழியர் பற்றாக்குறை, மிகக் குறைந்த மருத்துவச் செலவீனம், அக்கறையின்மை போன்ற பலவீனங்களைக் கடந்து இந்த இலக்கை அடைவது என்பது சவாலான விஷயம்தான். ஆனால் சவாலாக இருக்கும் இந்தச் சமூகக் கடமைக்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இவ்விலக்கு எண்களால் மட்டும் ஆனதல்ல.