மோகன ராமா...
லால்குடி ஜெயராமன் மறைந்து விட்டார் என்று கேள்விப்பட்டதும் கால் நூற்றாண்டுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் சூர்யா கலைவிழா மேடையில் அவர் வாசிக்கக் கேட்ட மோகன ராகம்தான் மனதுக்குள் ஒலித்தது. சொந்த சாகித்தியமான சாமா ராக வர்ணத்துடன் அன்று கச்சேரியை ஆரம்பித்தார். அன்று அவர் வாசித்த ஜானகீ ரமணா (சுத்த சீமந்தினி), பாஹி ஜகஜ்ஜனனி (வாசஸ்பதி), பஜரே மானஸ (பீம்ப்ளாஸ்), எந்த முத்தோ (பிந்துமாலினி), என்ன தவம் செய்தனை (காபி) முதலான எல்லா ராகங்களும் இன்றும் மனதுக்குள் ரீங்கரித்துக் கொண்டிருக்கின்றன. எனினும் அன்று பிரதானமான வாசித்த தியாகராஜரின் ‘மோகன ராமா’ நினைவின் ஆழத்தில் புரண்டு கொண்டே இருக்கிறது. மரணம் வரையிலும் அதை மறக்க முடியாது. அன்று கேட்ட அந்த ‘மோகன’ வாசிப்புக்குப் பிறகு மற்ற எல்லாருடைய மோகனங்களும் லால்குடியின் மோகனத்தில் மறைந்து கொண்டே வருகின்றன. லால்குடியின் மோகனம் மட்டும் அகச் செவிகளில் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது. அது என்னை எப்போதும் தியான நிலைக்கும் அதீத மனவெளிக்கும் உயர்த்திக் கொண்டே இருக்கிறது.
இசை நமக்குள்ளிருக்கும் ஆன்மீக வேட்கையை எழுப்ப