தவழ்ந்தாய் வாழி, காவேரி
நான்கு தலைமுறைக் காலத்திற்கும் மேலாக இழுத்தடித்த காவிரி நீர் குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பலவகைகளிலும் கவனத்திற்குரியதாக இருக்கின்றது. தீர்ப்பின் முதல் அலை கர்நாடகத்திற்கு வாய்ப்பாக அமைந்திருந்தது. கர்நாடகத்தின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அதனை ஆரவாரத்துடன் உடனே வரவேற்றனர். தமிழக நிலைமை தலைகீழாக இருந்தது. “எங்களுக்குக் கிடைத்த வெற்றி” என்று முதலில் முழங்கிய கர்நாடக முதல்வர் சித்தராமையா மறுநாள், “இது வெற்றியுமல்ல, தோல்வியுமல்ல,” என்றார். தமிழகத்திற்குரிய பங்கிலிருந்து 14.75 டி.எம்.சி. நீர் கர்நாடகத்திற்கு ஒதுக்கப்பட்டது. இது தமிழகத்திற்குத் தீர்ப்பு தந்த முதல் அடியாகக் கர்நாடகம் எண்ணியது. தம் வெற்றிக் கணக்கு தொடங்கிவிட்டதாகக் கர்நாடகம் கருதியிருக்கக் கூடும். தீர்ப்பின் அடுத்த நகர்வு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதாகும். இது கர்நாடகத்தை மருளச் செய்திருக்கிறது. வெற்றிக் களிப்பில் இருந்தவர்களை மடக்கிப் போட்டிருக்கிறது இந்த உத்தரவு. அதிலும் வாரியத்தை ஆறு வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது.
தீர்ப்பில் பாதகம் இருந்தாலும் தமிழகம் இதனை அணுகப் போகும் முறையிலிருந்து வெற்றிக் கணக்கைத் தொடங்க முடியும். முன்னர் அறியப்பட்டிருந்த தகவலின்படி காவிரியில் நீர் பற்றாக்குறையாக இருந்த காலங்களில் டெல்டா மாவட்டங்களின் நெல் உற்பத்தி அதிகரித்திருந்தது. கிடைக்கும் நீரைக் கச்சிதமாகப் பயன்படுத்தினால் தமிழகம் உற்பத்தியில் தலைநிமிரும் வாய்ப்பு இல்லாமல் போகவில்லை என்பதை அத்தகவல் சுட்டிக்காட்டியிருக்கிறது. தீர்ப்பின் சாராம்சப்படி இன்னும் 15 ஆண்டுகளுக்கு இதுதான் விதி. இதற்குமுன் காவிரியில்
192 டி.எம்.சி. நீர் ஒதுக்கப்பட்டிருந்தாலும் ஒவ்வொரு கனஅடி நீருக்கும் கர்நாடகத்தை நோக்கித் தொண்டைத் தண்ணீர் வற்றிப்போகும் அளவுக்குக் கத்த வேண்டியிருந்தது. மழை கூடுதலாகப் பெய்திருந்தாலொழிய இதர நாள்களில் தமிழகத்துக்கு 192 டி.எம்.சி. நீர் முழுமையாக வந்து சேர்ந்திருக்கவில்லை. கிடைக்கப்பெற்ற நீரிலிருந்தே நெல் உற்பத்தியை மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் இப்போது 177.25 டி.எம்.சி. நீரைக் கர்நாடகம் கண்டிப்பாகத் தந்தாக வேண்டும். இதற்கு மேல் மழைக்காலங்களில் நிச்சயம் இந்த அளவை மீறித் தன்போக்கில் காவிரி அதிக நீரைத் தமிழகத்தில் கொண்டுவந்து சேர்க்கும். இவற்றைப் பயன்படுத்தும் புத்திசாலித்தனம்தான் இன்று நமக்குத் தேவை.
தீர்ப்பை எதிர்த்து இனி எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில், கிடைக்கும் நீரைச் சேமிக்கும் வழிமுறையைக் கண்டிப்பாகச் சிந்திக்க வேண்டிய நெருக்கடி நமக்கு உருவாகியிருக்கிறது. தமிழகம் தன்னிடமிருந்த ஏராளமான நீராதாரங்களைக் குடியிருப்புகளாக மாற்றிவிட்டது. இரு கழகங்களின் போட்டிகளில் நம் நீர்நிலைகளைச் சூறையாடுவதும் ஒன்று. 2015இல் சென்னையில் பெரும் மழை பெய்து வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியது. ஆனால் 2017இல் அதே சென்னை குடிக்க நீரின்றித் தவிக்க நேரிட்டது. புவியியல் ரீதியாக இப்படி ஓர் அவலம் நேர முடியாது. இடைப்பட்ட ஓராண்டிற்குள் சென்னை காய்ந்துபோனதின் மர்மத்தைக் கணக்கெடுப்போம்; நாம் நம்முடைய நீர் மேலாண்மையில் இன்னும் தேர்ச்சியற்றவர்களாகவும் அலட்சியம் கொண்டவர்களாகவும் இருக்கிறோம் என்பது தெரியவரும்.
இந்தத் தீர்ப்பு காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் நீர்நிலைகளைக் காப்பதிலும் நீர்ச் சேமிப்பை வேகப்படுத்துவதிலும் நமக்கு உதவ வேண்டும். சுதந்திரம் அடைந்த பின், குறிப்பாக 1967க்குப் பின் தமிழகத்தில் புதிய குளங்கள் வெட்டப்படவில்லை; ஆறுகளோடு குளங்களும் அணைகளும் தூர் வாரப்படவில்லை. இப்போது மணல் கொள்ளையும் நடக்கின்றது.
நமக்குக் கிடைத்த இயற்கை வரங்கள் அனைத்தையும் பாழ்படுத்திவிட்டோம். இப்போது நம் குடிநீர்த் தேவைக்கும் வேளாண்மைக்கும் பிற மாநிலங்கள் கருணை காட்டினால் பிழைப்போம். இந்த இரந்து உயிர்வாழ வேண்டிய கட்டத்திற்கு நாம் வந்தது ஏன்? தொலைநோக்கற்ற அரசியல் விளையாட்டுகள் காவிரி விவகாரத்தை ஒட்டுமொத்த தமிழகத்தின் ஜீவநாடிப் பிரச்சினையாக மாற்றிவிட்டன. இந்தத் தீர்ப்பை நமக்குப் பாதகமான தீர்ப்பென்று நாம் கருதிக்கொள்வது நல்லதுதான். இதன்மூலம் தன் தண்ணீர்த் தேவைக்குப் பெய்யும் மழையின் ஒவ்வொரு துளியையும் பொன்போல் போற்றிக் காப்பாற்றும் நல்லறிவைத் தமிழகத்திற்கு வழங்கும்.
தீர்ப்பில் தமிழகத்தின் நிலத்தடி நீர் ஒருபொருட்டாகக் கருதப்பட்டிருக்க வேண்டாம். டெல்டா மாவட்டங்களின் பல பகுதிகளிலும் கடல்நீர் உட்புகுந்து குடிக்கவும் இலாயக்கற்ற நிலைக்குப் போய்விட்டது. குடிக்க இலாயக்கற்ற நீர் வேளாண்மைக்கு அச்சாரமாக இராது. அப்பகுதி மக்கள் குடிநீருக்கு அல்லாடும் நிலையில் தீர்ப்பின் இந்த அம்சம் ஏற்கத்தக்கதாய் இல்லை. கூடவே வளர்ந்துவரும் பெங்களூர் கணக்கிடப்பட்ட அதே அளவுக்குத் தமிழகத்தின் வளர்ச்சியும் கவனத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம். இன்னும் 15 ஆண்டுகள் கழித்து தீர்ப்புக்கு எதிரான மனுக்கள் தாக்கல் செய்யப்படும்போது உச்ச நீதிமன்றம் இந்த அம்சத்தில் நிச்சயம் தடுமாற்றம் அடையும் சூழல் ஏற்படும். அப்போது பெங்களூர் இன்னும் வளர்ச்சி அடைந்திருக்கும். கர்நாடகம் இத்தீர்ப்பைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்துக்கு நெருக்கடி கொடுக்கக் கூடும்தானே?
நிற்க, காவிரி விவகாரத்தில் இதுவரை கர்நாடகம் ஏகபோக உரிமையாளர் போல நடந்துவந்திருப்பதும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளைக்கூட அது கடைப்பிடிக்க மறுத்ததும் இந்திய ஜனநாயக அமைப்பின் பலவீனத்தைக் காட்டியது. அந்த நிலையில் உச்ச நீதிமன்றம் அதிகப்படியான உத்தரவுகள் பிறப்பித்தபோதும் கர்நாடகம் அவற்றையும் மீறித் தன்னிச்சையாகச் செயல்பட்டது. அன்று உச்ச நீதிமன்றம் கைபிசைந்து நின்றதை எவரும் மறந்துவிட முடியாது. இந்நிலையில் இப்போது ஒதுக்கப்பட்டிருக்கிற 177 டி.எம்.சி நீரும் தமிழகத்திற்கு வந்து சேர்வதனை உச்ச நீதிமன்றம் கண்காணிக்க வாய்ப்பிருக்கிறதா? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சித்தராமையா கடும் எதிர்ப்பு காட்டுகிறார்; எடப்பாடி பழனிசாமியோ வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என்று நம்புகிறேன் என்று தன் உறுதியின்மையைக் காட்டுகிறார்.
இந்த வாரியம் அமைக்கப்படாமல் போனாலோ, இல்லை அதை அமைக்க மத்திய அரசுக்குத்தான் உரிமை உண்டு என்று மோடி அரசு வாளாவிருந்தாலோ உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தை எப்படி கையாளும் என்பதற்குத் தெளி வில்லை. பதினைந்து ஆண்டுகளுக்கு, மேல் முறையீடு கிடையாது என்று அது பிறப்பித்த உத்தரவு மாநிலங்களுக்கு மட்டும்தானா அல்லது அது தனக்குத் தானேயும் இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறதா? இக்கட்டான இந்த நேரத்திலும் இப்படியான சுவாரஸ்யமான கேள்விகள் எழாமல் இல்லை.
காவிரி விவகாரத்தின் மற்றொரு கோரமான உண்மை பா.ஜ.க., காங்கிரஸ் இரண்டுமே இந்த விவகாரத்தை வெற்று அரசியல் ஜம்பமாகவே பாவித்துவருவது. குறிப்பாக பா.ஜ.க., நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கு ஊடேயும் கடினமான தேசபக்த உணர்ச்சியலையை எழுப்பிக் குளிர் காய்கிறது. மதவாத நோக்கில் துவேஷத்தை ஊட்டித் தன் அரசியல் அறுவடையைச் செய்யும் அதே சமயத்தில் மாநிலங்களின் மோதல்களை அது தேசவிரோதக் கண்ணோட்டத்தில் அணுகி வருவதை அவதானிக்க வேண்டியிருக்கிறது. இரு மாநிலங்களின் நீர் தாவாக்கள், எல்லைப் பிரச்சினைகளில் பாஜக தன் ஆதாயம் கருதி இந்நாட்டின் இறையாண்மையைப் பலியிடச் சிறிதளவும் தயங்குவதில்லை.
இதே கர்நாடக மாநிலத்திற்கு கோவாவிலிருந்து பாயும் மகதாயி நீர்ப் பங்கீட்டில் குறை உள்ளது. சில வாரங்களுக்கு முன்னால் மகதாயி நீர்ப்பிரச்சினையில் கர்நாடகம் கொந்தளித்தபோது கர்நாடக பாஜகவும் காங்கிரஸும் ஒரே அணியில் இருந்தன. துரதிர்ஷ்டவசமாக கோவாவில் ஆட்சி புரிவது பாஜகதான். அது ஏன் கர்நாடகத்திற்கு மகதாயி நீரின் உரிமையை மறுக்கின்றது?
எதிர்வரும் கர்நாடகச் சட்டசபைத் தேர்தலின் ஆதாயங்களைக் கருதி மோடியும் மத்திய அரசும் தமிழகத்தின் தேவையான காவிரி மேலாண்மை வாரியத்தைப் பலியிட்டுவிடக் கூடாது. அதில் மோடி தன் தேசிய ஒருமைப்பாட்டுணர்வைத் துறந்துவிடுவாரேயானால் தமிழகத்தின் அமைதிச் சூழல் கெடுவதுடன், இரு மாநிலங்களுக்குமான கசப்புணர்வுகள் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவிவிடும் ஆபத்தும் ஏற்படும். ஏனெனில் இன்னும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாநிலங்களுக்கிடையே நதிநீர்த் தாவாக்கள் காலங்காலமாகத் தீர்க்கப்படாமல் கிடக்கின்றன. தீர்ப்புகளும் வரையறையில்லாமல் தள்ளிப் போகின்றன. இவையெல்லாம் ஜனநாயகத்தின் அடிப்படையைக் கேள்விக்குள்ளாக்கிவிடும்.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைப்பதும் இரு மாநிலங்களின் உறவைப் பாதுகாப்பதும் மோடி அரசின் தலையாயக் கடமை என்பதை நினைவுறுத்துகிறோம். தமிழக அரசும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் கவனம் செலுத்தித் தன்னிறைவை எய்தும் திட்டங்களை வகுத்துப் பாதகங்களையும் சாதகங்களாக்கிட முயல வேண்டும்.