கடிதங்கள்
ஞாநி குறித்து மிக ஆழமான, அழகான, சிரத்தையான செய்திகளைப் பகிர்ந்துகொள்வதாக தலையங்கம் அமைந்திருந்தது சிறப்பு. உண்மையின் பக்கம் தன் கொள்கையை எப்போதும் விட்டுக்கொடுக்காமல் இறக்கும்வரை ஒருவர் வாழ முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் ஞாநி. அவருடைய நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துரைத்தது தலையங்கம். எட்வர்ட் செய்த் சொன்ன அறிவுஜீவிக்கான இலக்கணத்தை, ஞாநிக்கு ஒப்பிட்டுக் கூறியது அழகு.
ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் நிலைப்பாடு விஷயத்தில் காலச்சுவடு தன் கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. “சொல்ல ஏதுமற்ற இடைவெளியைப் பாவனைகளால் இட்டு நிரப்புகிறார். மீசையின் நிறத்தைச் சாயத்தால் மறைக்கலாம். ஆனால் உண்மையின் உருவத்தைப் பாவனைகளால் மறைக்க இயலுமா?” என்று கேட்டது அட்டகாசம்.
ஞாநி நம் காலத்து நாயகன் என்ற பொன். தனசேகரன் கட்டுரையில் ஞாநி பற்றிய வாழ்க்கை வரலாற்றை, கொள்கையை,சமூகப்பிரக்ஞையை, பல்வேறு தளங்களில் இயங்கிய அவரது செயல்பாடுகளை மிக எளிமையாகச் சொல்லியிருப்பது வாசகர்களுக்குப் பயன் தருவதாக இருக்கிறது.
பிராமணமயமாக்கலும் எம்.எஸ்.சுப்புலட்சுமியும் என்ற தலைப்பில் எழுதிய அரவிந்தன் கண்ணையனின் கட்டுரை ஆகச்சிறந்த கட்டுரை. பல்வேறு தரவுகளைக் கூர்ந்து நோக்கி அதனூடாக சுப்புலட்சுமி அடைந்த சிக்கல்கள், சாதனைகளைச் சொல்லியிருப்பது கவனிக்கத்தக்கது. வீட்மேன், பிருந்தா, பாலசரஸ்வதி, சதாசிவம், நம்பி ஆரூரன், கிருஷ்ணாவின் விமர்சனம் அதன் போக்கு என்று கட்டுரை நகர்ந்தவிதம் நன்று. மியூசிக் அகாடமி, ருக்மணி அருண்டேல், அவருடைய செயல்பாடு, கலாசேத்திரா, தமிழ் இசை என்று கட்டுரையாளர் சரியான விதத்தில் அணுகி இருப்பது அவருடைய தெளிவையும் ஈடுபாட்டையும் காட்டுகிறது.
பொதுமகளும் குலமகளும் என்ற ஸ்டாலின் ராஜாங்கம் கட்டுரையில் 1990களில் தமிழ் சினிமா திரும்பத்திரும்ப எடுத்துக்கொண்ட கதையாடலை விரிவாகவே விளக்கியுள்ளார். அனாதை, அப்பா, பெயர் தெரியாதவர் என்ற பொருண்மையை எடுக்கப்பட்டதின் சூழல் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. எதிர்ப்பு வாதத்தை முன்னிறுத்துகின்ற படைப்புகளின் பின்னணி கூறப்பட்டுள்ளது. கிழக்குவாசல், தெய்வவாக்கு,சின்னத்தாய் போன்ற திரைப்படங்களின் தேவதாசி மரபு உட்சார்ந்த கதையாடலைத் தொடங்கி விளக்கியுள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட பற்றிசியா ஜேனட் அவர்களுடனான நேர்காணல் வரவேற்கத்தக்கது. குடும்ப வன்முறை குறித்த தெளிவான பார்வையைத் தருவதாக இது அமைந்துள்ளது. குடும்ப வன்முறையை ஒழிக்கும் திட்டங்கள், முன்மாதிரிச் செயல்பாடுகள் எனப் பல்வேறு விடயங்களைத் தருவதாக இந்நேர்காணல் அமைந்துள்ளது. வன்முறையில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலானவர்கள் தங்கள் வீடுகளில் வன்முறைகளைப் பார்த்து வளர்ந்தவர்கள். இது சுழற்சி வடிவம் கொண்டது .
நேர்காணல் செய்தவர் சரியான கேள்விகளைக் கேட்டுள் ளார். அதற்குத் தெளிவான பதில்கள், வேறொருவர் நம்மைத் தாக்கினால் அவருக்குத் தண்டனை வாங்கித் தருவோம் நாம், அதுவே நம் குடும்ப உறுப்பினர்கள் என்றால் ஏன் தயங்குகிறோம் என்ற கேள்வி சரியானது. குடும்ப வன்முறையில் ஆணின் இடம் என்ன என்றும் தக்க தகவல்களைச் சொல்லியிருப்பது சிறப்பு. நேர்காணலை யார் எடுத்தார் என்ற செய்தியும் கொடுத்திருக்கலாம். தமிழில் கொடுத்த லக்ஷ்மிக்கும் இதழிற்கும் பாராட்டுகள். 41 ஆவது சென்னைப் புத்தகக் காட்சி குறித்த பதிவுப்பகுதி வரிசைக்கிரமமாக கொடுக்கப்பட்டது நன்று. இப்பகுதியைப் படிப்பவர்கள் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி குறித்த தகவல்களை அடைவர். அந்தவகையில் எஸ்.இ. ஜெபாவின் பதிவு குறிப்பிடத்தக்கது.
மயிலம் இளமுருகு
திருவேற்காடு
இலக்கியம், கலை, ஊடகங்கள் அனைத்தும் மனித வாழ்வின் குறிக்கோளை இயம்புவது அவசியம் என்பதை அறிவுறுத்திய அறிவுஜீவி ஞாநி; மக்களுடைய விழுமிய கருத்துக்களை விதந்தோதி, அவை செம்மையுறவும் மேம்பாடடையவும் பத்திரிகையாளராக, சமூகக் கடமைகளால் கட்டமைக்கப் பெற்ற கருத்தாளராக, துணிச்சலாகப் பணியாற்றிய தீரர்! உண்மையை ஊடுருவிப் பார்த்து உள்ளத் திண்மையோடு உரைக்க ஆசைப்பட்ட உன்னத, நல்லிலக்கியப் படைப்பாளர். பொதுச் சமூகத்தைக் கட்டமைக்க வேண்டிய கடப்பாடு, சமூகச் செயற்பாட்டாளர்களுக்கு மட்டுமின்றி, இதழாளர்களுக்கும் இருக்கிறது என்பதை உரத்த குரலில் சொன்னவர் ஞாநி.
‘ஞாநியின் மறைவு உள்ளபடியே பத்திரிகை உலகத்திற்கும் ஊடகங்களுக்கும் பெரும் இழப்பே! துணைத் தலையங்கமான ‘அசட்டுப் பாவனைகளுக்கு மதிப்புக் கூட்டும் தாலிபானியம் அழுத்தமாக எழுதப்பட்டுள்ளது. கல்வியும் நுண்ணறிவும் கவித்துவமும் பெற்று இயங்கும் நம் சங்ககாலப் பெண்மணிகளின் இன்னொரு பக்கத்தைக் காட்ட வேண்டும்
என்ற விழைவால் கவிஞர் வைரமுத்து எல்லை தாண்டிவிட்டார். வருத்தம்
தெரிவித்த பின்னரும் அவரை வருத்துவதில் பொருள் இல்லை.
நவீன்குமார்
நடுவிக்கோட்டை
‘உண்மைகள் சொன்னவர் வண்மைகள் செய்தவர் ஞாநி தலையங்கம் படித்தேன். இத்தனை உண்மையானவர் இப்படி இறந்து விட்டாரே என்று கலங்கிப்போனேன். நானும் இறப்புச் செய்தி கேட்டு அவர் இல்லம் விரைந்தேன். அதே முகம். இறந்த மாதிரியே தெரியலே. ‘மேக்கப்’ இல்லாத உணமை முகம். அண்மையில்தான் இவரிடம் பழகும் வாய்ப்பு கிடைத்தது. ‘ஞானபானு’ பதிப்பகம், சிறிய ஸ்டாலில் அந்தப் பெரிய மனிதர். எந்தச் சமரசத்திற்கும் உடன்படாதவர். உடல் உபாதைகளைத் தாங்கிக்கொள்ள அவருக்கு உறுதுணையாக இருந்தது அவரின் உண்மை என்றால் மிகையில்லை. அதுவும் வறுமையில் செம்மை. அதுதான் உண்மையானது உறுதியானது கூட. ஞாநியின் இழப்பு பெரும் வேதனையைத் தந்தது.
ஆண்டாள் - வைரமுத்து பிரச்சினை அரசியல் ஆக்கப் படுகிறது. தனிமனிதனுக்குக் கருத்துச் சுதந்திரம் மிக முக்கியமானது. கருத்தை கருத்தால் எதிர்க்க வேண்டும்.
‘எவரும் பிராமணராகலாம்’ கட்டுரை சிந்திக்க வைத்தது. இப்போது, பிராமணர்கள் அர்ச்சகர் ஆவதையும் விரும்பவில்லை, அரசு அதிகாரிகளாகவும் விரும்பவில்லை என்பது கண்கூடு. அவர்கள் அமெரிக்கா நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிட்டனர். ஆனால் இன்றும் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது கானல் நீர்தான். ஆகம விதிகளை அத்துபடியாகக் கற்றாலும், இதை எதிர்ப்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள். கடவுள்மீது கொண்ட பக்தி குறைந்துபோய்விட்டது. ஆனால் சாதியம் தீயாய் இந்தியா முழுவதும் பரவி வருகிறது. முதலில் சாதி, அப்புறம்தான் மதம்.
‘குடும்ப வன்முறை - அன்பில் ஏன் பாரபட்சம்’ அருமையான நேர்காணல். பெண்ணிற்கு அதிகாரம் இல்லை. பொருளாதாரம் இல்லை. பெண்ணிற்குச் சுதந்திரமே இல்லை. இதனால்தான் இந்த வன்முறை. இது சுழற்சிதான்; தலைமுறை தலைமுறையாக வந்துகொண்டே இருக்கிறது. குடும்ப வன்முறையை ஒரு பெண் வெளியே சொன்னால் அந்தப் பெண்ணைத்தான் சமூகம் பழித்து ஒதுக்குகிறது. குடும்ப வன்முறை உலகளாவிய பிரச்சனை எனக் கருதுகிறேன்.
ஞா. சிவகாமி
போரூர்
பொன். தனசேகரன் எழுதியுள்ள ‘நம் காலத்து நாயகன்’ என்னும் கட்டுரை ஞாநியின் வாழ்க்கை வரலாற்றைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் பதிவு செய்திருந்ததால் ஒரு பெரிய நூலைப் படித்து முடித்த உணர்வையே தந்தது.
சமரசமில்லாத வாழ்க்கை என்பது பொதுவாக யாருக்கும் சாத்தியமில்லை என்னும் நிலையில் ஞாநி எத்துணை பெரிய நிறுவனங்களுடன் மோதி வெற்றியும் கண்டிருக்கிறார் என்பது இளம் எழுத்தாளர்களுக்கு மனத் தெம்பை அளிக்கும் செய்தியாகும்.
பாரதியின் தலைப்பாகையை வரைந்த ஓவிய முறையிலிருந்து மாறி, கூரிய கண்களையும் மீசைகளையும் மட்டுமே கொண்டு பாரதியை வடிவமைத்த ஞாநியின் கற்பனையும் கைவண்ணமும் நினைவிற் பதியத்தக்கன. அவருக்கிருந்த நோய்களின் பட்டியல் எவரையும் நிலைகுலையச் செய்துவிடும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எந்த நோயின் அறிகுறியும் தெரியாதவாறு அவர் மிக இயல்பாகத் தோன்றியது வியப்புக்குரியதே.
ஆண்டாள் குறித்து வைரமுத்து எழுதிய கட்டுரையில் மேற்கோளாக அவர் எடுத்துக்காட்டிய ஒற்றை வரியைப் பிடித்துக்கொண்டு ‘சோடா பாட்டில் வீசுவேன்’ என்று ஜீயர் ஒருவர் கூறுமளவுக்கு வன்முறை தலைவிரித்தாடிய சூழலில் ஞாநி நம் இறுதிப் பதிவில் “பேச வேண்டிய பிரச்சனைகள் வேறு ஏராளமாக இருக்கின்றன. இந்தப் பிரச்சனைகளிலிருந்து திசைதிருப்பி இந்துக்கள் மனம் புண்படுகிறது என்ற அந்த மையத்தை மட்டுமே நோக்கி நகர்த்துவதே பிஜேபி சங்பரிவாரத்தினுடைய நோக்கம்’ என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். சாகப்போகும் தருணத்திலும் சமூகக் கடமையை மறவாது செய்த ஞாநி மாமனிதர்; மிகச் சிறந்த சிந்தனையாளர். கண்ணதாசன் கூறியதைப் போன்று “எடுத்துரைப்பேன், நில்லேன், அஞ்சேன்!” என்று முழங்கி வாழ்ந்தவர் ஞாநி. அரசு, அது எந்தக் கட்சியினுடையதாக இருந்தாலும், தவறொன்று புரிவதைத் தட்டிக்கேட்கத் தயங்காத பண்பு ஞாநி போன்றவர்களுக்கு இருப்பதை இளைய சமுதாயம் ‘சிக்‘கெனப் பிடித்துக்கொள்ள வேண்டும்.
தெ. சுந்தரமகாலிங்கம்
வத்திராயிருப்பு
‘அசட்டுப் பாவனைகளுக்கு...’ என்ற ஆசிரியவுரை ஒரு தற்செயல் வினையாக இருக்கலாம். ஞாநி பாவனைகளுக்கு அப்பாற்பட்டவர். வைரமுத்துவோ பாவனைகளின் உருவானவர். ‘தமிழை ஆண்டாள்’ என்ற கவியரசு கண்ணதாசனின் தொடரைத் தன் கட்டுரையின் தலைப்பாக எடுத்துக்கொண்ட கவிதை வணிகர் வைரமுத்து, தான் கவிப்பேரரசு என்று பரவலாகச் சொல்லப்படுவதில் பரவசமும் பெருமையும் பெற்றுக்கொள்பவர். இவரைப் பற்றிய ஆசிரியவுரையிலுள்ள விமரிசனங்கள் அனைத்தும் கடுகளவு கலப்படமும் இல்லாத மெய்ம்மையின் வெளிப்பாடுகளேயாம்.
ஆண்டாள் வாழ்நாளில் தேவதாசிமுறை இருந்திருந்தால் அக்காலச் சமூகத்தின் வணக்கத்துக்கும் பக்திக்கும் உரியதாகவே அது விளங்கி இருக்கும். ஆனால் இன்றையச் சமூகத்தில் அது இழிநிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. காலத்துக்குக் காலம் சில சொற்களின் பொருள்கள் மாறுபட்டுப்போவதை இந்தக் கவிப்பேரரசு அறியாமலிருக்க முடியாது. திருவள்ளுவர் காலத்தில் கொழுநன் என்பது கணவன் என்று பொருள்பட்டது. இன்றோ அச்சொல் ஒருத்தியின் கணவனுடைய தம்பியைக் குறிப்பதாக அல்லவா மாறிவிட்டது?
“இற்றைக்கும் ஏழேழு பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம், உனக்கே நாம் ஆட்செய்வோம்,” என்று ஆண்டாள் கடவுளிடம் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் பக்தி மனம் வரைமுத்துவுக்கு இல்லாமல் இருக்கலாம். அதைப் புரிந்துகொள்ளக் கூடிய வாசிப்புத் திறன் அவருக்கு இருக்காது என்பதை எப்படி நம்புவது?” என்று கேட்கிறீர்கள். வைரமுத்து பாவனைகளின் மொத்த உருவல்லவா? ‘மீசையின் நிறத்தைச் சாயத்தால் மறைக்கலாம். ஆனால், உண்மையின் உருவத்தைப் பாவனைகளால் மறைக்க இயலுமா?’ மிகமிகச் சரியான கேள்வி இது. இதனை அவர் எப்படி எதிர்கொள்வார்?
உ.வே. சாமிநாதய்யர் பற்றிய கட்டுரை வாசிப்பின் முடிவில், ‘ஆரிய அய்யருக்குத் திராவிடத் தமிழனின் வணக்கம்,’ என்று வைரமுத்து குறிப்பிட்டதை நினைவு கூர்கிறீர்கள். திருவள்ளுவரைப் பற்றிய கட்டுரைக்கு “வள்ளுவம் முதற்றே அறிவு” என்று தலைப்பிட்டார். வள்ளுவருக்குப் பிறகுதான் அறிவே உதயமாயிற்றா? வாலறிவின் தொடர்ச்சியே வள்ளுவம். “நூலோர் தொகுத்தவற்று ளெல்லாம் தலை,” என்று முடிகின்ற ஒரு குறளையாவது இந்தக் கவிப்பேரரசு நினைவுப்படுத்திக்கொண்டிருந்தால் இப்படியொரு தவறான தலைப்பைத் தமது கட்டுரைக்கு இட்டிருக்கமாட்டார்.
க.சி. அகமுடைநம்பி
மதுரை 20
பத்திரிகைப் பிரிவில் எடிட்டோரியல் செக்ஸன் மட்டும் கூடுதல் பரபரப்போடு இயங்கக்கூடிய ஒன்று. இதில் மனிதனின் மனவெளி பல வினோதங்களை உள்ளடக்கித் தனது செயல்பாட்டைத் தீவிரமாக்கி மனிதர்களை ஆட்டிப் படைத்து வருகிறது. இதில் சிக்காத அறிவுஜீவிகளே இல்லையெனலாம். அந்த வகையில் ரகுராமும் சிக்கிக்கொண்டுள்ளது வியப்பொன்றும் இல்லை. கதையின் தலைப்பான ‘இறந்தவர் நடமாட்டம்’ ரகுராமின் மனவெளி மனோதத்துவ இயலுக்குள் எப்படி அடைப்பட்டுள்ளது, தனக்கு வேண்டப்பட்ட - சதா எரிந்து சாம்பலான நிகழ்வு, தீய்ந்துபோன இரத்தத்தின் சுடுவாசனை அவனது மனத்தை எப்படி ஆலிங்கனம் செய்கிறதென்பதே கதையின் சாரம்.
தான் பணிபுரியும் தொழில் சார்புச் சூழ்வெளியினுள் அவனால் காணப் பெறுகிற காட்சி மனத்தை ஆக்கிரமிப்பு செய்வதாகவே கதையோட்டம் உயிர்ப் பிக்கப்படுகிறது. ரகுராமைப் பொறுத்தவரை அவனை வந்தடைகிற News Room
இன் செய்திகள் அநேகமானவை மரணமாகத்தான் இருக்க இயலும். ஒரு விபத்தின் மரண நிகழ்வுக் அடுத்த மரண நிகழ்வு, அடுத்த மரண நிகழ்வுக் காட்சி வருகிறவரை இதே காட்சியோடுதான் ரகுராம் போராடிக் கொண்டிருக்க வேண்டும். இப்படியெல்லாம் கதை எழுத தீவிரமான உளவியல் பகுப்பாய்வைக் கோருகிற அம்சம்தான் கதாசிரி யனைக் கலைஞனாக இனம் காட்டுகிறது. கதையின் ஒவ்வொரு அடுக்கிலும் நம்மை ஒன்றிப் போகச்செய்த ஆசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் சரியே.
பா. செல்வவிநாயகம்
சென்னை 82
ஆண்டாள் நாச்சியார், தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே. சாமிநாதையர் ஆகியோர் குறித்த வைரமுத்துவின் கருத்துகளுடன் சிலப்பதிகாரத்தின் கவுந்தியடிகள் குறித்த அவரது கருத்தையும் இணைத்துச் சிந்தித்தால்தான் வைரமுத்துவைப் பற்றி முழுமையாக சரியாகக் கணிக்க முடியும் எனலாம்.
சென்னையில் கடந்த 7.7.2017இல் ‘தமிழைத் துறக்காத துறவி’ எனும் தலைப்பில் வைரமுத்து இளங்கோவடிகளைப் பற்றி உரையாற்றினார். இவ்வுரை தினமணி நாளிதழில் 8.7.2018இல் நடுப்பக்கக் கட்டுரையாக வெளியிடப்பட்டது. அதில், “தெய்வமென்று கண்ணகியை முதலில் ஏத்தியவர்கள் குன்றத்துக் குறவர்களே” எனக் குறிப்பிட்டார்.
இதற்கு முன்பே சமணசமயப் பெண்பாற்துறவி கவுந்தியடிகள், மதுரை மாநகர் புறஞ்சேரியில் வாழ்ந்த ஆயர்குலப் பெண் மாதரியிடம், கோவலனையும் கண்ணகியையும் அடைக்கலமாக ஒப்படைக்கும்போது.
“கற்புக்கடம் பூண்ட வித்தெய்வ மல்லது
பொற்புடைத் தெய்வம் யாங்கண் டிலமால்,” என்று கூறி (சிலப்பதிகாரம் / அடைக்கலக்காதை / வரி: 143_144) கண்ணகியைத் தெய்வமென்று முதலில் ஏத்திப் பெருமை சேர்த்தார்.
சிலப்பதிகாரத்தை இயல்பாக யார் படித்தாலும் இவ்வுண்மை எளிதில் நன்கு விளங்கும். இந்நிலையில் வைரமுத்துவின் இதுபோன்ற தடுமாற்றங்களுக்குக் காரணம் அவர் தானாகச் சிந்திக்காமல், உதவியாளர்கள் எழுதிக் கொடுப்பதை அப்படியே வெளிப்படுத்துகிறார் என்பதால் இருக்குமோ?
தி. அன்பழகன்
திருச்சி 26./b>
சென்ற இதழ் ‘புதிதினும் புதிது’ பகுதியில் இளம் படைப்பாளிகள் பற்றிய சிறுகுறிப்புகளை எழுதியவர்களின் பெயர்கள் தவறுதலாக விடப்பட்டிருந்தன. ரீட்டா பரமலிங்கம், அனோஜன் பாலகிருஷ்ணன், ஆதிபார்த்திபன் ஆகியோர் பற்றிய குறிப்புகளை கருணாகரனும் ஏ.எம். சாஜித் அகமட், நஸீஹா முகைதீன் ஆகியோர் பற்றி அனாரும் தீபு ஹரியைக் குறித்து தி. பரமேஸ்வரியும் அ. ரோஸ்லின் பற்றி சிவகுமார் முத்தையாவும் எழுதியிருந்தனர். அவர்கள் பெயர்கள் விடுபட்டமைக்கு வருந்துகிறோம்
- பொறுப்பாசிரியர்