கவிதையில் எல்லாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது
காப்ரியேலா மிஸ்ட்ரால், பாப்லோ நெரூதா, நிக்கனோர் பார்ரா மூவரும் உலக இலக்கியத்துக்கு சிலி நாடு வழங்கியிருக்கும் கவிதைக் கொடை. மூவரும் ஒரே மண்ணில் உழன்றவர்கள், ஒரே மொழியில் எழுதியவர்கள், சிலியின் கவிதைப் போக்கைத் திசைமாற்றியவர்கள் என்ற ஒற்றுமை இருக்கிறது. எனினும் இவர்கள் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்கள். காப்ரியேலாவின் கவிதை சிலியின் தாய்மையையும் குழந்தைமையையும் மையமாகக் கொண்டவை. நெரூதாவின் முதன்மையான அக்கறையோ அரசியல் நீதியை வலியுறுத்துவது. நிக்கனோரின் செயல்பாடு, மொழியை நவீனத்துவப்படுத்துவது. நெரூதாவிடம் காப்ரியேலாவின் தன்னுணர்வையும் நிக்கனோரிடம் நெரூதாவின் சரளத்தன்மையையும் காணமுடியும். இந்த மறைமுகத் தொடர்ச்சியை மீறியே இவர்கள் தமது கவியாளுமையை முன்வைத்தார்கள். சிலியின் கவிதையின் ஒவ்வொரு காலப் பகுதியையும் அடையாளம் காட்டினார்கள். காப்ரியேலாவும் நெரூதாவும் சிலியின் கவிதை மரபை ஓரளவுக்கு ஒட்டி எழுதியவர்கள். ஆனால் நிக்