பட்சி ஜாதகன்
அதிகாலை நான்கு மணியாகிவிட்டால், அவனுக்குப் படுக்கையில் இருப்புக் கொள்ளாது. முதல் கூவலுக்கு முன், பறவைகளுக்குத் தேவையான அனைத்துத் தயாரிப்புகளையும் செய்தாக வேண்டும் என்ற உந்துதல் அவனுள் தோன்ற ஆரம்பித்துவிடும். கருக்கலில் எழுந்ததும், முதல் வேலையாக முதல் நாள் இரவு ஊறவைத்திருந்த கொண்டைக்கடலை, பட்டாணி, கோதுமைகளைத் தண்ணீர் மாற்றி, அதன் அலர் நாற்றம் போவதுவரை அலசுவான். பின் மொட்டை மாடியில், பறவைகள் இருக்கும் முற்றத்திற்கு அடுத்த வெட்ட வெளியில், பெரிய சாக்குகளை விரித்து அந்தத் தானியங்களை உலர வைப்பான். அதன் பிறகு மோட்டாரைப் போட்டு, சிறியசிறிய பீப்பாய்களில் நீரை நிரப்பிக்கொள்வான். ஒரு நாள், கால்சியம் மருந்து கலந்த தண்ணீர் என்றால், மறுநாள் புரோட்டின், அடுத்தநாள் விட்டமின், நான்காம் நாள் எந்த மருந்தும் கலக்காத வெறும் தண்ணீர் என்று முறை வைத்து சரிவிகித அளவில் பீப்பாய்களைத் தயார் செய்வான். பொழுது விடியுமுன்னரே பறவைகள் சத்தம