சிவப்புத் துளசி
கிமு 337
மழை அப்போதுதான் நின்றிருந்தது. அடமாகத் தொடங்கி, மெதுவாகப் பெரிய பிடிவாதம் பிடித்துவிட்டுப் பின்னர் எதுவுமே நடக்காததுபோல விளையாடும் குழந்தையின் புன்னகைபோல, சூரியன் தனது ஒளியால் மலையெங்கும் பளீரென்று பரவி ஒளிர்ந்தது.
கோரைப்புற்களால் மிகவும் திறமையாகப் பின்னப்பட்ட கூரை. வலுவான பெரிய மூங்கில். அடி மரங்கள் மூன்றடி உயரத்துக்கு இருநூறு சதுர அடி இருக்கும் அந்தக் குடிலைத் தாங்கி நின்றன. மெல்லிய மரத் துண்டுகள்மீது மூங்கிலும் மரப்பட்டைகளும் சன்னமாய் வேயப்பட்ட தளத்தின் மீது புலித்தோல் ஒன்றில் தியானத்தில் இருந்தார் வனரிஷி. மழை நின்று விட்டது. பறவைகளின் ஒலி. பூச்சிகளின் ரீங்காரம் தவிர, குடிலுக்குள் அமைதி தவழ்ந்தது.
வனரிஷி கண் திறக்கக் காத்திருந்தார், கசாரி. நேற்று வந்தபோதும் அவர் தியானத்தில்தான் இருந்தார். தனது காலின் அதிர்வால் ரிஷி சற்றும் பாதிக்கப்படவே இல்லை என்பது கசாரிக்கு ஒவ்வொருமுறையும் வியப்பாகத்தான் இருக்கிறது. வனத்தின் தலைவன் குடும்பமும் சமவெளி சென்று வரும் சில வசதியான வேடுவர்களும் மட்டுமே அணியும் சணலால் ஆன உடை கசாரியுடையது. இடது தோளின் வழி பின்னால