மார்ச் 2018
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜூன் 2023
    • கட்டுரை
      வதனமே சந்திர பிம்பமோ?
      கவிதையில் எல்லாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது
      ஹார்வர்ட் தமிழ் இருக்கை மொழியும் பயனும்
      கோபுரமேறிச் சாடி உயிர்விடுதல்
      பள்ளிப் பாடநூல்கள்:உருவாக்கமும் மொழி அரசியலும்
      ஆறுதல் அணங்குகள்- அதிகாரம் 2
      தமிழ் சினிமா/ அரசியல் சில தோற்றப் பிழைகள்
      மாராட்டியம் காட்டும் மொழி வழி
      “எண்ணிய முடிதல் வேண்டும்“
      மருத்துவத்திற்குச் சோதனை
    • கதை
      பட்சி ஜாதகன்
      பெர்னார்ட் பிறந்தார்
      சால்வை
      அரபுநாடோடிக் கதை
      சிவப்புத் துளசி
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • மதிப்புரை
      தீதும் நன்றும்
      சாவின் நிழலில்
    • தலையங்கம்
      தவழ்ந்தாய் வாழி, காவேரி
    • கவிதை
      நிக்கனோர் பார்ரா கவிதைகள்
      சபரிநாதன் கவிதைகள்
      கன்னடத்திலிருந்து தமிழில்: நஞ்சுண்டன்
      உயர்ந்தவன்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 50
  • ஆண்டுச் சந்தா ரூ. 425
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 725
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1500
  • காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 4,000

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு மார்ச் 2018 மதிப்புரை சாவின் நிழலில்

சாவின் நிழலில்

மதிப்புரை
கே.என். செந்தில்

செல்லாத பணம்

(நாவல்)

இமையம்

வெளியீடு:

க்ரியா பதிப்பகம்,

2(25), 17 th கிழக்குத் தெரு,

காமராஜர் நகர்,

திருவான்மியூர்,

சென்னை - 41

பக்கம்: 222

ரூ. 285


 


 

“ஒலகத்திலேயே மனசு மாதிரி தரம் கெட்டது, வெக்கம் கெட்டது எதுவுமே இருக்காது.”- பக்.57

சில ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென அப்பாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரைத் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கும்படி ஆயிற்று. அவர்களது பணப்பசிக்கு இரைபோட இயலாமல் சில தினங்களுக்குப் பின் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றச் செய்தோம். அதன்பின் அடுத்த ஆறுமாத காலம் அவர் வேறுவேறு பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுக் கொண்டே இருந்ததால் அங்கு அடிக்கடி செல்வது வழமையானது. தினந்தோறும் நூற்றுக்கணக்கானவர்களின் வாழ்க்கைகள் மருத்துவமனை வளாகத்தினுள். சிலர், கண்ணீரோடு ரத்தச் சோதனைகளுக்கு எடுக்கப்பட்ட சிறுகுப்பி ரத்தத்துடன் அதை உரிய இடத்தில் கொடுக்க பதைபதைப்பான முகத்துடன் அலைவதைக் காண்பேன். இன்னொருபுறம் வேறுசிலர் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு வெளியே குறுக்குமறுக்காக நடந்து உள்ளே எட்டி எட்டிப்பார்த்தவாறு பேசுவதற்குச் சொற்கள் தொலைந்துபோனவர்களாக நின்றிருப்பார்கள். திடீரென அந்தச் சொற்கள் கிடைக்கப்பெற்றவர்களாக ஆவேசமாகச் சாபங்கள் இட்டபடி மறந்துபோனவற்றையெல்லாம் வரிசையாக அடுக்கியவாறு வானம் நோக்கிக் கைகூப்பி கண்ணீர் வழிய நிற்பார்கள். ஒவ்வொரு முறை கதவு நீக்கி அழைக்கும்போதும் உயிர் நீங்கி எழுந்து ஓடி வாய்வழியாக வரத்துடிக்கும் இதயத்தை மென்று விழுங்கியபடித் திரும்பி வருவார்கள். அப்போது அவர்களின் கண்கள் புத்தி பிறழ்ந்தவர்களினுடையது போல இவ்வுலகிற்குச் சம்பந்தமற்றதாக பேதைத்தனத்துடன் உருளும். அங்கு மட்டுமல்ல, காவல் நிலையங்களின் வாசல்களில், நீதிமன்றங்களின் படிக்கட்டுகளில் அதற்குச் சற்றும் குறையாமல், இரந்து மருகி நிற்கும் பலநூறு வாழ்க்கைகளைக் காணமுடியும். அவ்வாறான வாழ்க்கையொன்றிலிருந்து இமையம் கிழித்தெடுத்த- பத்துக்கும் குறைவான நபர்கள் சம்பந்தப்பட்ட- ரேவதியின் வாதையே ‘செல்லாத பணம்.’

எங்கும் காணாத ஒன்றையோ இதுவரை அறியாத விஷயத்தையோ இமையம் இந்நாவலில் கைக்கொள்ளவில்லை. அவ்வப்போது கண்ணுற்றிருந்தாலும் சில விநாடி நேர வியப்புக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளான பின் மறந்துபோய்விடும் துர்மரணத்தை அதன் தீய்ந்த வாடையும் கருகல் நெடியும் முகத்தில் படர இணுங்குஇணுங்காகச் சொல்வதற்கு மிச்சமேதுமில்லை எனும்படிக்கு அதன் ஊடும்பாவுமான இழைகளை விரித்துக்காட்டுகிறார்.

சரி தவறுகளின் தராசுகள் பொருளிழந்து, சம்பந்தப்பட்டவர்களுக்கே காரணத்தின் அடிப்படையை விளக்க முடியாமல் போய்விடும் காதல் என்னும் உணர்ச்சிநிலையின் பிடிவாதத்திலிருந்து தொடங்குகிறது நாவல். பொறியியல் கல்லூரிவரை ரேவதி தன் உடன்படித்த எத்தனையோ பையன்களைக் கடந்து வந்திருக்கக்கூடும். ஆனால் தனக்காகக் கையை, உடம்பை பிளேடால் அறுத்துக்கொண்டு பின்தொடரும் முரட்டு ஆட்டோக்காரனிடம் வீழ்கிறாள். அது ‘ஏன்?’ என்ற வினாவுக்கு ‘தெரியாது’ என்னும் மனத்தூய்மையான பதிலையே அவளால் தரமுடிகிறது. எங்கெல்லாம் அந்தப் பதில் சொல்லப்படுகிறதோ அந்த இடங்களிலெல்லாம் நாவலாசிரியர் எந்த தொந்தரவான இடையீட்டையும் விளக்கக்குறிப்பையும் அளிக்கவில்லை. எனவே அந்தரத்தில் அழியாது நிற்கிறது அது. அதன்முன் எதுவும் பொருட்டல்ல. அதனாலேயே சமாதானங்களும் எதிர்ப்பும் அறிவுரைகளும் எட்டாத தொலைவில் அவளால் அமர்ந்திருக்க முடிகிறது. குடும்பத்தவர்களின் உதாசீனத்துடனும் புறமொதுக்குதலுடனும் அவனுடன் வாழத் தலைப்படும் ரேவதிக்கு வாசகர் எதிர்பார்த்தது போலவே நரகமே விதிக்கப்பட்டிருக்கிறது. அவளது ஜாதகப்பலன்கள், சகுனநிமித்தங்கள் அனைத்துமே நல்வாழ்வுக்கான கட்டியங்களையே கூறுகின்றன. ரேவதி ஆஸ்பத்திரியில் மணிநேரங்களை எண்ணிக் கிடக்கையில் அவளது தந்தை நடேசனின் மனஓட்டமாக அவர் செய்த நற்காரியங்கள், புண்ணியங்கள் பட்டியலிடப்படுகின்றன. அவையனைத்தும் அவளைக் காக்கும் என நம்புகிறார். இவற்றிற்கு நேர்மாறாக நடந்தேறுகின்றன அடுத்தடுத்த நிகழ்ச்சிகள்.

மேற்குறித்த காட்சிகள் இடம்பெற்றிருப்பது நாவலின் முதல் முப்பது பக்கங்களுக்குள்ளாகவே. மீதமிருக்கும் இருநூறு பக்கங்களும் ரேவதி தீக்குளித்த செய்தி அவளது கணவனால் தகவல் போல் பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட்டபின் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவுக்குச் சென்றுவிடுகிறது. தீயில் வெந்து கிடப்பவளுக்காகக் காத்திருப்பவர்களின் ஆற்றாமைகள், கழிவிரக்கங்கள், புலம்பல்கள், சாபங்கள்,சுயசமாதானங்கள், நம்பிக்கைகள் போன்றவற்றால் அவளது சிறிய வாழ்க்கையை அதன் வழி பிறரது மன ஆட்டங்களை எவ்வித மனச்சாய்வுமின்றி எழுதிச் செல்கிறார் இமையம்.


 

சமகாலப் புனைவிலக்கியங்களில் பெரும்பாலானவை உரையாடல்களைத் தவிர்த்த நடையிலேயே அமைந்திருக்கின்றன. பேச்சு வழக்குகள், மனக்குமுறல்கள், பாத்திரங்களின் நானாவித உணர்ச்சிகள் என அனைத்தும் ஆசிரியரின் விவரணை மொழியிலேயே சொல்லப்படுகின்றன. இத்தகு ஆக்கங்களுக்கு முற்றிலும் மாறானவை இமையத்தின் படைப்புகள். ஓயாத பேச்சுகளால் வனையப்பட்டவை அவை. அது பெண்களின் உலகால் சூழப்பட்டிருக்கும். ஏனெனில் அவற்றில் மையமாக பெண்ணின் குரலே ஒலிக்கும்(விதிவிலக்கு: ‘எங்கத’). ‘செல்லாத பண’மும் அவ்வாறானதே. நாவலின் ஆதார ஸ்ருதியான ரேவதி கமுக்கமானவள். எனவே பேசுவதேயில்லை (அ) மிகக்குறைவாகவே பேசுகிறாள். அவள் உடல் கருகி ஜிப்மரில் கிடக்கையில் பேசுவதேகூட சொற்பமாக வும், வெளியே கேட்காத மனமொழியுமாகவே இருக்கிறது. மாறாக அவளது அம்மா அமராவதி தனக்குள்ளும் பிறருடனும் வாயாடும் பேச்சு களினூடாகவே நாவல் எழுந்து வருகிறது. இந்தப் பேச்சுகள் ஈக்கள்போல ரேவதியின் சாவைச் சுற்றிச்சுற்றி வந்து மொய்த்துக்

கொண்டே இருக்கின்றன. நாவலில் சில பக்கங்

களில் வந்து செல்லும் உப பாத்திரமான தங்கம் மாள் சாவு அதன் நடைமுறை யதார்த்தம், அது எவரை எங்கு நிறுத்தும் என்பதையெல்லாம் இரக்கமேதுமின்றி வெற்றிலைபோல அவர்கள் முன் அனைத்தையும் கிள்ளி வீசுகிறாள்.

ரேவதியின் உயிரை எப்பாடுபட்டேனும் காப்பாற்றத் துடிக்கும் அவளது சுற்றங்களின் மன ஊசலாட்டங்கள் கௌரவத்தின் பல்லக்கை விட்டு இறங்க முடியாமல் திணறுகின்றன. அவளை ஒதுக்கிவைத்த, பேசமறுத்த முகத்தைக் கூட காணக் கூசிய தந்தையும் அண்ணனும் அவளது ஒரு சொல்லைக் கேட்பதற்காக, பார்ப்பதற்காக கையில் பணக்கட்டுடன் அலைகிறார்கள். அதற்கு எந்தப் பயனும் இருப்பதில்லை.

ஆயுதங்களை நேரடியாகப் பிரயோகித்துப் பழிதீர்க்கும் மூர்க்கத்தைக் கௌரவக் கொலைகள் எனலாம் என்றால் ரேவதியின் சாவையும் அவ்வாறே அழைக்க முடியும். நொடிந்துபோய்த் திரும்பிய பர்மா அகதி என்னும் அடையாளக்குறிப்புடன் குடிவெறி கொண்ட ரவியின் சாதி சொல்லப்படுவதில்லை. ஆனால் ரேவதியின் சாதியை நாவலுக்குள் அங்குமிங்கும் மறைமுகமான சித்தரிப்புகளால் யூகித்துவிட முடிகிறது. சட்டென கண்ணில்படும் ஒரு வரியால் அந்தப் புகைமூட்டம் விலகிச் சாதி துலக்கமாகி விடுகிறது. குடும்ப மானம் என்னும் கௌரவத்தின் வீம்பில் வீட்டு ஆண்கள் உறவைத் துண்டித்துக்கொள்கையில் அம்மாவின் ஒத்தாசையே அவளைச் சிறிதேனும் நடமாட வைக்கிறது. ரேவதியை ரவி கொளுத்தினானா, அவளே தனக்கு நெருப்பு வைத்துக்கொண்டாளா? எது உண்மை என உறுதிசெய்யப்படவில்லை. அந்த ஐயம் அப்படியே விடப்படுகிறது. இரண்டுக்குமே சாத்தியங்கள் உண்டு என்பதற்கான குறிப்புகள் நாவலுக்குள்ளேயே காணக்கிடைக்கின்றன. இதில் கவனத்தைக் குவிப்பது நாவல் பேச விழையும் மைய அச்சை விட்டு விலகிச்செல்வதாக ஆகிவிடும். நாவல், வறட்டுக் கௌரவத்தின் கட்டங்களில் நின்றுகொண்டிருக்கும் ரத்தச் சொந்தங்களின் மன அலைவரிசைகளையே காட்ட விரும்புகிறது.

ரேவதியின் உயிரை எப்பாடுபட்டேனும் காப்பாற்றிவிடத் துடிப்பவர்களின் பேச்சுகள் கௌரவத்தின் பல்லக்கை விட்டு இறங்க முடியாமல் திணறுகின்றன. மகளை மீட்க முனையும் அந்த நிமிடத்திலேயே அதுவரை திரட்டிவைத்திருந்த வெறுப்பனைத்தும் ரவி மீது திரும்புகிறது. அது இயல்பானதே. ரேவதி அளிக்கவிருக்கும் மரண வாக்குமூலத்தை ஒட்டி அதுவரை அவள் அனுபவித்து வந்த எண்ணிலடங்கா அவமானங்களும் வேதனைகளும் அமராவதியால் சொல்லப்படுகின்றன. அவற்றையெல்லாம் அதுவரை ஆண்களின் காதுகளுக்குக் கொண்டுசென்றவள் அல்ல. ரேவதியின் சித்தி அறிந்திருக்கும் விஷயங்களைக் கூட அவளது அப்பாவான நடேசனோ அண்ணனான முருகனோ தெரிந்துவைத்திருக்கவில்லை. வாக்குமூலத்தைப் பாதகமாக ரேவதி மாற்றிச் சொன்ன பின் அவள் இறந்துகொண்டிருக்கிறாள் என்பதை மறந்து கசப்பும் வெறுப்பும் அவள்மீது திரும்புகிறது. அவள் எரிந்துகிடக்கும் கோலத்தைக் கண்டுவந்த பிறகு பேச்சுகள் மீண்டும் வேறாக மாறுகின்றன. அவளை எவர் வீட்டுக்குக் கொண்டு செல்வது, எங்கு எரிப்பது என்பதுவரை கௌரவத்தின் பூச்சுகளை அப்பிக் கொண்டிருந்த பேச்சுகள் ரேவதி மரணமடைந்த செய்தி கேட்டதும் உதிர்ந்து வெளிறிவிடுகின்றன.

மருத்துவமனையின் அந்த ஒன்றிரண்டு நாட்களில் மாறியபடியேயிருக்கும் அவர்களின் மன ஊசல்களும் நடந்துகொள்ளும் முறைகளும் நாவலின் தலைப்பு அளிக்கும் பரிமாணத்தை விடவும் கூடுதலாக இன்றியமையாததாக மேலெழுந்து வருகிறது. உதாரணமாக நாவலின் தொடக்கத்தில் அவளது காதலை அறிந்துகொண்ட அண்ணன் உயிருடனேயே கருமாதி செய்துவிடலாம் எனக் கோபத்துடன் அவளின் முகத்தைக் கூட பார்க்காமல் கிளம்பிச் சென்றுவிடுகிறான். அவனே எண்பது சதவீதம் வெந்துகிடக்கும் தங்கையைக் கண்டு விட்டு அவள் கேட்கும் கேள்விகளுக்குக் கூட பதில்கூற மறந்து நிலைகுலைந்து வெளியேறிய பின் சட்டென நினைவு வந்தவனாகப் பதிலை மட்டும் அவளிடம் சொல்லிவிட்டு வந்துவிடுகிறேன் என நர்ஸிடம் கெஞ்சுகிறான். மரணம் வாயிலில் நிற்கும்போது மனம் போலியாக அணிந்திருந்தவைகளைக் களைந்து அம்மணமாகிவிடும் போலும். அது முதலில் நாடகீயக் காட்சி போலவே பட்டது. ஆனால் அது வேறு எவ்வகையிலும் அமைந்திருக்க முடியாதென மறுவிநாடியே தோன்றிவிட்டது.

நாவல் அணுஅணுவாக மரணத்தின் நொடிகளைச் சொல்லியிருப்பினும் கூட அதனடியில் கிடப்பது வாழ்வதற்கான வேட்கையே. இதுபோல இவ்வளவு எதிர்நிலையிலிருந்து அதைச் சொல்லியிருக்கும் ஆக்கங்கள் தமிழில் அரிதாகவே இருக்கக்கூடும். ஆம்புலன்ஸிலிருந்து இறக்கப்படும் உடல்கள் அதையே தான் மீண்டும் மீண்டும் சொல்கின்றன. ஆம்புலன்ஸின் சத்தமும் அதன் வருகையும் நாவலுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கின்றன. ஒருவகையில் ஆம்புலன்ஸை ஒரு பாத்திரமாகவே கருதிவிட முடியும்; போலவே செக்யூரிட்டிகளின் வார்ப்பையும்.

ரேவதியின் மரணத்திற்குப் பிறகு காவல்நிலையச் சம்பிரதாயங்களுக்குள் சென்றுவிடும் நாவல் ஆவணத்தன்மையை அடைந்துவிடுகிறது. இப்பகுதி சுருக்கப்பட்டிருக்கலாம். ‘ஏன் இந்த நீட்டல்?’ என்னும் சலிப்பும் வந்து விடுகிறது. ரேவதியின் மரணச்செய்தி எட்டியபின் தன்னைத் தேற்றிக் கொள்ள நடேசன் தேவாரத் திருமுறைகளை வாசிக்கும் சிறிய பகுதி நாவலுக்குள் ஒட்டவில்லை. ஆனால் அவர் நாளிதழைத் திறக்கையிலும் தொலைக்காட்சியில் விபத்தும் மரணச் செய்திகளும் வரிசையாக வருகையிலும் அவர் அடையும் எரிச்சலும் அந்தச் சலிப்பை ஓரளவு ஈடுகட்டுகிறது.

இமையத்தின் ஆக்கங்களில் தொடர்ந்து பயின்றுவரும் பிரதான அம்சங்கள் இந்நாவலிலும் தொழிற்பட்டிருக்கின்றன. போன் பேசும் போது மறுமுனையின் பதிலையும் இம்முனையிலிருப்பவரின் குரலிலேயே சொல்லச் செய்வது, செல்போன் போன்ற நவீன சாதனம் குறித்த ஒவ்வாமைகள் என அவற்றை அடுக்கலாம்.


 

நீள்கதையாகவோ குறுநாவலாகவோ சொல்லப்பட வேண்டிய கருப்பொருளை நாவல் அளவுக்குத் தேவைக்கதிகமாக இழுத்து விட்டாரோ என்னும் ஐயமும் எழாமலில்லை. உள்ளது உள்ளபடியே காட்டிவிட்டு நகரும் இந்நாவல், பேச்சுகளின் வழியாகவே வாசகரைப் பிரதியினுள் கிடக்கும் மௌனங்களை, மனமாச்சரியங்களைக் காணத்தூண்டுகிறது. மூர்க்கமாக அகம் நோக்கி இறங்கிச்சென்று கசடுகளைத் தூர்ந்து வெளிக்காட்ட வேண்டிய பல இடங்களையும் நாவலாசிரியர் அடுத்துஅடுத்து என நகர்ந்து சென்றபடியே இருக்கிறார். இதைக் குறையாகவே சுட்டத் தோன்றுகிறது. ஆயினும் இமையத்தின் ஆக்கங்களைத் தொடர்ந்து வாசித்து வருபவர்கள் இக்கதை சொல்லும் முறையையே அவரது தனித்தன்மையாக அடையாளம் காணக்கூடும். ‘செல்லாத பணமு’ம் அதற்கு விதிவிலக்கல்ல.

மின்னஞ்சல்: knsenthilavn7@gmail.com


 

 

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.