மார்ச் 2018
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜூன் 2023
    • கட்டுரை
      வதனமே சந்திர பிம்பமோ?
      கவிதையில் எல்லாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது
      ஹார்வர்ட் தமிழ் இருக்கை மொழியும் பயனும்
      கோபுரமேறிச் சாடி உயிர்விடுதல்
      பள்ளிப் பாடநூல்கள்:உருவாக்கமும் மொழி அரசியலும்
      ஆறுதல் அணங்குகள்- அதிகாரம் 2
      தமிழ் சினிமா/ அரசியல் சில தோற்றப் பிழைகள்
      மாராட்டியம் காட்டும் மொழி வழி
      “எண்ணிய முடிதல் வேண்டும்“
      மருத்துவத்திற்குச் சோதனை
    • கதை
      பட்சி ஜாதகன்
      பெர்னார்ட் பிறந்தார்
      சால்வை
      அரபுநாடோடிக் கதை
      சிவப்புத் துளசி
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • மதிப்புரை
      தீதும் நன்றும்
      சாவின் நிழலில்
    • தலையங்கம்
      தவழ்ந்தாய் வாழி, காவேரி
    • கவிதை
      நிக்கனோர் பார்ரா கவிதைகள்
      சபரிநாதன் கவிதைகள்
      கன்னடத்திலிருந்து தமிழில்: நஞ்சுண்டன்
      உயர்ந்தவன்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 50
  • ஆண்டுச் சந்தா ரூ. 425
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 725
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1500
  • காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 4,000

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு மார்ச் 2018 கட்டுரை வதனமே சந்திர பிம்பமோ?

வதனமே சந்திர பிம்பமோ?

கட்டுரை
ஜான் சுந்தர்

பார்க்கும் முகங்களின் சாயலை மற்றொன்றில் தேடிப் பிடிப்பதும், அதை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளும்போது அவர்கள் முகங்களில் மிளிரும் வினோதங்களை வேடிக்கை பார்ப்பதும் என் நோய்களில் ஒன்று. நடனக்குழு நடத்துநன் வினோத்தும் நானும் தேனீரகத்தில் நடிகர் சரத்குமாரை வெகு பலவீனராகக் கண்டோம். பேச்சுக்கொடுத்தபோது தன் பெயர் சுப்பிரமணி என்றார். கன்னக்கதுப்புகளுக்குள் பன்(Bun)னைச் செருகி ஸ்வெட்டருக்கு மேல் சட்டையணிவித்ததும் தோளும் மார்பும் தினவெடுக்கப் பயில்வான் மேடையேறி ‘சலக்கு சலக்கு சரிகைச்சேலை’ என்று துள்ளினார். சுவரோவியராயிருந்த ரஜினிகாந்தையும் உணவகச் சிப்பந்தி விஜயகாந்தையும்கூடக் கண்டுகொண்டது இப்படித்தான். எழுத்தாளர் வண்ணதாசன் முகத்தில் (ராபர்ட்) ராஜசேகரனைப் பார்த்த போது உடனிருந்த சாம்ராஜ் ‘அவருக்குப் பாடகர் ஹரிஹரன் சாயலுமுண்டு’ என்றார். நான் பெரியப்பாவிடமே நியாயம் கேட்டேன். ‘நான் ஹரிஹரனா என்பது தெரியவில்லை ஜான். ஆனால், நான்தான் ராஜசேகரன்,’ என்றவர் வெடித்துச் சிரித்தார். குழந்தைகளின் விளையாட்டைக் குலைத்துவிடாதிருந்த நெகிழ்மனக்கலைஞர் வாழ்க. ‘அப்பல்லாம் நீலக்கலர் ஹோண்டா பைக்குல வருவாப்ல... தலைவன்... அழகன்’ என்று சொல்லி சாம் காட்டிய புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்தேன். அப்போது பார்த்திருந்தால் ‘பெரியப்பா’ என்று நிச்சயம் சொல்லியிருக்க மாட்டேன். ‘சார்’ என்று கொஞ்சம் தள்ளியிருந்திருப்பேன். அறிவியல் வாத்தியார் போல அவ்வளவு பெரிய மீசை. அட, இப்போதும்கூட அவர்தானே தாவரவியல் வாத்தியார்!


 

சாம்ராஜின் முகத்து ரோமராஜ்யங்களையெல்லாம் வெள்ளைக்கு நிறம் மாற்றி மீசையைக் கொஞ்சம் முறுக்கிவைத்தால் இன்னொரு ‘தோழர் தியாகு’! தோழருக்குத் தாடியை ஒட்டிக் கண்ணாடி அணிவித்தால் அவரே சாம்ராஜ். கவனம் பிசகினால் ‘இயக்குநர் ராம்’ ஆகிவிடும் வாய்ப்புமுண்டு. பிரபுதேவாவின் அண்ணன் தான் இயக்குநர் ராம் என்றால் என்னுலகில் சரிதான். பிரத்யேகமான ‘ஒரு கோண’த்தில் மட்டும் பாடகர் உண்ணி மேனனின் சாயல் தனக்கு இருப்பதாக சாம்ராஜ் நம்புகிறார். நண்பர்களோ எல்லாக் கோணங்களிலும் அவர் ‘பரோட்டா’ சூரியாகவே தெரிகிறார் என்கிறோம்.

லிபி ஆரண்யாவை நான் மம்மூட்டி என்பேன். சாம் அவரை கிரிக்கெட் வீரர் ஜாவீத் மியாண்டட் என்பார். லிபிக்கு நடிகர் முனீஸ்காந்தும் முனீஸ்காந்துக்கு லியோனியும் உறவுமுறை என்றெல்லாம் போகும் பேச்சு.

ஃப்ரான்ஸிஸ் கிருபாவுடன் தங்கியிருந்த கவிஞர் சாம்சன், மிடுக்காக உடையணிந்து பிரெஞ்சு தாடியெல்லாம் வைத்துக்கொண்டு வந்தாலும் அவரது முகத்தில் நடிகர் ‘செந்தாமரை’ ஒளிந்துகொண்டிருப்பதைக் கண்டுபிடித்துவிடுகிறேன். சாம்ராஜோ சாம்சனுக்குள் ‘இயக்குநர் கௌதம் மேனன்’ இருப்பதாகச் சொல்வார். உடனே என் கையை உதறிவிட்டு ‘பரோட்டா உண்ணி’யின் கரங்களை உணர்ச்சி பொங்கப் பற்றிக்கொள்வார் ‘செந்தாமரை மேனன்’.

கவிஞர் இசையின் முகத்தைப் பிழிந்தால் இரண்டு தேக்கரண்டி ‘பலே பாண்டியா’ சிவாஜி கணேசனும் ஒரு தேக்கரண்டி நடிகர் ராஜேஷும் ஒரு தேக்கரண்டி கவிஞர் அப்துல் ரகுமானும் எஞ்சுவார்கள். கைப்பிடியளவு ‘விக்ஷீ. ஙிமீணீஸீ’ ‘Mr. Bean’ Rowan Atkinson - ஐயும் போதுமான அளவு புத்தர் சிலையின் முகத்தையும் சேர்த்துப் பிசைந்தால் கிடைப்பது பத்திரிகையாளர் கவின்மலரின் முகம். பக்தி இலக்கியம் தந்த பரந்த நெற்றியோடு மரபின் மைந்தனின் முகத்தில் ஒளிர்வது பாரதிராஜாவின் ‘ராஜா’. சிறுகதையாசிரியர் விஷால்ராஜாவுக்குக் கிருஷ்ணாவதாரம் போட்டுவிடுவதாகப் பொய் சொல்லி நீலச்சாயம் பூசிவிட்டால் அவரே ‘Avatar’ நாயகன். கராத்தே மணியின் தமிழ்த் தம்பி கவிஞர் மகுடேசுவரன்! தேவேந்திர பூபதிக்கு சீனக் கராத்தே வீரரின் வாகு. அவருக்கும் விஷ்ணுபுரம் சரவணனுக்கும் சகோதரச் சாயலுண்டு. மஜித் மஜிதி படங்களிலோ ருஷ்யப் படங்களிலோ காலச்சுவடு கண்ணனைப் பார்த்திருக்கிறேன். அவர் கொஞ்சம் சதாம் ஹூசேனைப் போலவுமிருக்கிறார். அரபு ஷேக்குகளின் உடையை அவருக்கு அணிவித்துப் பார்க்க வேண்டும்.

முள்ளும் மலரும், மெட்டி போன்றவற்றில் குணச்சித்திரம் செய்த சாமிக்கண்ணுவின் சாயல் கண்மணி குணசேகரனுக்கு. கவிஞர் மோகனரங்கனின் மீசையைத் திருத்தி நாவலர் நெடுஞ்செழியனுக்கும் கண்ணாடியைக் கழற்றி, வெயிலில் நிறுத்தி ‘இளமையில் காமராஜ்’ என்கிற தலைப்பிற்கும் பொருத்தலாம்.

கவிஞர் அறிவுமதி, ‘மகாநதி’யில் அமைச்சராக நடித்த ‘மோகன் நடராஜனை’யும், ஷோபா சக்தி வெற்றிமாறனின் ‘பொல்லாதவனி’ல் நடித்த ‘பவனை’யும், மொழிபெயர்ப்பாளர் ஜி. குப்புசாமி ‘ரன்’ திரைப்படத்தில் நடிகர் விவேக்கின் தந்தையாக வரும் ‘சாத்தப்பனை’யும், ‘விடம்பனம்’ சீனிவாசன் நடராஜன், எந்திரன் வில்லன் புரபசர் போராவையும் எனக்கு நினைவு படுத்துகிறார்கள். ‘ஹிட்லருக்கும் சாப்ளினுக்கும் ஒன்றேபோல மீசை’ என்று சொல்வதால் இரண்டு தத்துவங்களும் ஒன்றாகி விடாது என்கிற தைரியம்தான் இப்படியெல்லாம் எழுதுகிறது. நீங்கள் ஆலமரம் என்பதை நான் ‘கிளி வீடு’ என்கிறேன். தவறென்ன?

கவிஞர் சுகுமாரனைப் பார்க்கும்போதெல்லாம் பள்ளி நாட்களில் வளர்த்த பச்சைக்கிளி நினைவுக்கு வருகிறது. அவரிடம் நேரில் பேசுவதை விடவும் தொலைபேசுவது வசதியாக இருக்கிறது. நேரில் ‘எடுத்துக்கங்க சார்’ என்று மிளகாய்ப் பழங்களை நீட்டி விடுவேனோ என்று ஒரு பயம். அவரது முகத்திற்குள் கிளியொன்று தங்கியிருப்பதைப் போல் நா. முத்துக்குமாரின் முகத்தில் வெள்ளாடும், நாஞ்சில் நாடனிடத்தில் பெருங்கடுவன் பூனையும், சு. வேணுகோபாலிடம் சிறுபூனைக்குட்டியும், வெய்யிலிடம் சிறுத்தைப்புலியும், ‘கிடாரி’ இயக்குநர் பிரசாத் முருகேசனிடம் கீரிப்பிள்ளையும் உண்டு. மறைந்த ஓவியர் வீரசந்தானத்தின் முகவமைப்பில் ‘fighter fish betta’ என்னும் மீனின் முழுவுடலும் இருக்கும். அசோகமித்திரனும் கி.ராவும் அருகி வரும் ‘டோடோ’ பறவைகள்.

சமுத்திரச் சித்திரத்தைச் சிப்பியில் கண்டு துள்ளும் பித்து இது. அதற்குத் தக்கதாய்த் தினமொரு முகமும் கிடைத்துக்கொண்டேயிருக்கிறது. எல்லாருக்கும் தெரிந்தவர்களாகச் சொல்லுவதைத் தவிர பரவலாகத் தெரியாதவர்களையும் சொல்லுவேன். அது சுவாரஸியக் குறைவாயிருக்கலாம். மதுரை பேருந்து நிலையத்தில் முகம் முழுக்கப் பூத்த மருக்களோடு பாம்படமணிந்து, மூதாட்டி வேடத்தில் பழம் விற்றுக்கொண்டிருந்தார் Hollywood நடிகர் Morgan Freeman. பேசிப் பார்த்தும் பயனில்லை. வியாபாரத்திலேயே கருத்தாயிருந்தார். ஈரோட்டிலிருந்து திருப்பூருக்குத் தினமும் ரயிலில் வருகிற நண்பர் முருக இளங்கோவுக்குப் பழம்பெரும் வில்லன் நடிகர் அசோகனின் முகம்! (எழுத்துப் பிழையாகி ‘பழம் பெறும் வில்லன்’ என்றால் விநாயகரைக் குறிக்குமோ?) ‘ஏனுங் ஜான், சாப்ட்டு போலாமுங்’ என்று கொங்கு பாஷை பேசுகிற அசோகனைக் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?. பாரதியாக நடித்த சாயாஜி ஷின்டேவுக்குத் தற்போது கோயம்புத்தூர் மெல்லிசை நிகழ்ச்சிகளில் கிதார் வாசிக்கிற சுனிலின் பாத்திரம்.

‘என்னோடு பாட்டு பாடுங்கள்’ என்கிற தலைப்பில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் நடத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேஸ் கிதார் வாசித்த தர்மராஜையும், சேலம் ‘தக்கை’ சாகிப் கிரானையும் பார்க்கும்போதெல்லாம் விளையாட்டாக ‘வெயிட்டே இல்ல ஈஸியா இருக்கறது’ என்பேன். ‘வில்லாதி வில்லன்’ திரைப்படத்தில் கோதப்பட்டிக்குள் கவுண்டமணி பொதுவுடைமை பேசுவார். அப்போது ஒருவர் வந்து ‘நேக்கு ஒடம்புல காயம் தழும்பெல்லாம் வேணும்’ எனக் கேட்பார். அவரது சகோதரர்கள்தான் சாகிப்பும் தர்மராஜும்.

‘காசு, பணம், துட்டு, மணி ... மணி’ பாடல் புகழடைந்தபோது, மாதம்பட்டி சென்னனூரைச் சேர்ந்த ‘welder’ நாகராஜை உள்ளூர் துணிக்கடை விளம்பரத்தில் கானா பாலாவாக்கினேன். முகப்பொருத்தத்திற்காகவே அந்த விளம்பரம் கொண்டாடப்பட்டது! தியாகி குமரன் மார்கெட்டில் கூலிமுக்கில் திறந்த மார்போடு நின்று மீசையை முறுக்கும் ‘அண்ணா பாரம் தூக்கும் தொழிலாளர் சங்க’த்தைச் சார்ந்த அண்ணன்களில் பெரும்பாலானோர் ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவின் மன்னர்கள்.

அரசுப் பள்ளிகளுக்கு என்னோடு வருகிற நடிகர் பிரேம்ஜி அமரன், தன்னைக் காகித மடிப்புக் கலைஞர் ‘origamy தியாகசேகர்’ என்று சொல்லிக்கொள்கிறார். முதல் பார்வையிலேயே கண்டுபிடித்துவிட்டேன். சேட்டைகளெதுவும் செய்யாமல் சாதுவாக இருந்தால் நமக்குத் தெரியாதாம்!

‘விஷ்ணுபுரம் வாசகர் வட்ட’த்தைச் சேர்ந்த செல்வேந்திரனைப் பார்த்தால் இயக்குநர் லிங்குசாமியின் உடன்பிறப்பு என்பதாகத் தோன்றும். அதே வட்டத்தில் சுரேஷ் வெங்கடாத்திரியைப் பழைய ‘ஸ்டெப் கட்டிங்’ கமலுக்கும் ரமேஷ் கண்ணாவுக்கும் இடையில் நிற்க வைக்கலாம்.

இரண்டிரண்டு விழிகள், செவிகள், இதழ்கள், கத்தை மயிர், மூக்கு இவற்றை வைத்துக்கொண்டு சரமாரியாக இயற்கை வனைந்து தள்ளும் முகங்கள் எத்தனையெத்தனை? யோசித்தபடியே மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்குக் கிளம்புவதற்கு முன் ஏதாவது வாங்கி வர வேண்டுமா என்று கேட்டதற்குச் சூடாக வடையோ பக்கோடாவோ கிடைத்தால் பரவாயில்லை என்றார்கள். ‘ஒலம்பஸ்’ பேருந்து நிறுத்தத்தில் தள்ளுவண்டியில் வடை போடுகிறவரைப் பார்த்து அதிர்ந்தேன். ‘டிக் டிக் டிக்’ வில்லன்! அத்தனை அக்கிரமங்களையும் செய்துவிட்டு அப்பாவி கமலஹாசனைக் கொலைப்பழிக்கு ஆளாக்கிவிட்டு இங்கே பஸ் ஸ்டாண்டில் வடை தட்டுவது போல் நடிக்கிறாயே உருளைக்கிழங்கே! உன்னை. . .’ மனதுக்குள் கறுவியபடியே பொட்டலம் கட்டச்சொல்லி பணத்தைக் கொடுத்துவிட்டு ‘எனக்கு எல்லா நியாயங்களும் தெரியும், எல்லா தர்மங்களும் தெரியும்,’ என்று அவருக்கு மட்டும் கேட்கும்படி ரகசியக் குரலில் சொல்லி முறைத்தேன். தலையை நிமிர்த்தாமல் கல்லாப் பெட்டியைக் கிளறியபடியே ‘சில்லறை இல்லியாண்ணா’ என்றார் பொருந்தாத கீச்சுக் குரலில்.

‘Kung fu Panda’ பார்த்தபோது திரையரங்கில் துள்ளினேன். ஒரே படத்தில் மூன்று பேரைக் கண்டுபிடித்துவிட்டேன். பாண்டாவின் வளர்ப்புத் தந்தை ஜெயமோகன். பாண்டாவின் உடல் மொழியில் கவிஞர் தென்பாண்டியன். எழுத்தாளர் மணி எம்கே மணிதான் ‘மாஸ்டர் ஷிஃபு!’ ‘மீசையில் கறுப்பேறும் தினங்களின் காஸ்மிக் நடனம்’ சிறுகதைத் தொகுப்பைச சமீபத்தில் வெளியிட்ட மணி, அவரது கூந்தலால் ‘Ice Age’ படங்களைத் துவங்கி வைக்கும் அணிலைப் போலவும் தெரிகிறார். அது போலவே Hollywood நடிகர் Samuel Jacksonஇன் ஸ்த்ரீபார்ட் தான் ‘எலெக்ட்ரா’ தொகுப்பின் கவிதாயினி ஸ்வாதி முகில் (எ) ரேவதி முகில். நடிகை ‘Halle Berry’யின் சிகையலங்காரத்தில் இருப்பதால் மற்றவர்கள் தன்னைக் கண்டுபிடிப்பது கடினம் என்பதாக ஒரு எண்ணம் அவருக்கு.

இப்படியே பேசிக்கொண்டிருந்தபோது இளங்கோ கிருஷ்ணன் ‘சினிமாவுல castingக்கு உங்களை போட்டா நல்லா இருக்கும்’ என்றார். பதிலுக்கு நன்றி சொல்லும் விதமாக அவரது கழுத்தில் கத்தியை வைத்து அழுத்தி ‘வில்லன் நடிகர் ஆர்.பி, விஸ்வமும் நித்தியானந்தாவும் நல்ல பேரெடுக்கத் தேர்ந்துகொண்ட உடல்தானே உங்களுடையது?’ என்று மிரட்டினேன். சம்பவம் நடந்தது கோவையில். சேலத்திலோ ‘தஞ்சை பிரகாஷ்’ சவரம் செய்துகொண்டு தக்கை பாபு என்று சொல்லித்திரிகிறார். கண்கள் காட்டிக்கொடுத்து விடுகின்றன. கோவை இலக்கியச் சந்திப்பைச் சேர்ந்த பொன். இளவேனிலும் பெரியவர் பொதியவெற்பனும் ஒரே ஆள்தான். இரட்டை வேடம்! தந்தை மகன் பாத்திரங்கள் கொடுக்க வேண்டும். இருவருக்குமே வினு சக்கரவர்த்தியின் சாயலுண்டு. ஆரண்ய காண்டத்தில் ஜாக்கி ஷராஃபாக நடித்தவர் கவிஞர் அய்யப்ப மாதவன். வண்ணநிலவனின் முகவரிகளில் மலையாளத் திலகனும் மௌலியும் வி.கே. ராமசாமியும் இன்னும் வசிக்கிறார்கள். கோவை சிறுவாணி வாசகர் மையப்பொறுப்பாளர் பிரகாஷ் ஓவியர் மணியம் செல்வனின் மன்னர்களில் ஒருவர். ம.செ.வின் நவீன நாயகன் கதிர்பாரதி.

இவ்வளவையும் பேசுகிற இந்த மொட்டைத் தலையின் உள்ளும் புறமும் கொஞ்சம் சரக்கைச் சேர்த்தால் இயக்குநர் சுகாவின் சாயலில் இருப்பேன். இல்லையா என்று நண்பர்களிடம் கேட்டேன். புன்னகைத்து ‘இல்லை.... காந்தி...’ என்று அவர்கள் துவங்கியபோது ‘மொட்டைத் தலை, வட்டக் கண்ணாடி... சரிதான்... தேசப் பிதா’ என்றெண்ணி தாடைக்குக் கை கொடுத்தேன். ‘மீசையை மழித்து வெட்கப்பட்டால் அச்சு அசல் அப்படியே நடிகை காந்திமதிதான்’ என்று பதில் வந்தது. இந்த முகத்துக்காகவாவது நான் கொஞ்சம் பழமொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

“மொகத்துக்கு மொகம் கண்ணாடின்னாளாம்

இப்ப அதப் பத்தி ஒனக்கு என்னாடின்னாளாம்.”

மின்னஞ்சல்: ilayanilajohnsundar@gmail.com


 

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.