சால்வை
ஸ்டெல்லா, குளிர், குளிர், நரகத்தின் குளிர்மை. மாக்தா ஒரு சால்வைக்குள் பொதியப்பட்டு, ரோசாவின் வலிமிகுந்த மார்பகங்களின் இடையே சுருண்டு கிடந்தாள். சாலைகளில் அவர்கள் ஒன்றாகவே நடந்து சென்றனர். சில நேரங்களில் மாக்தாவை ஸ்டெல்லா சுமந்து சென்றாள். ஆனால் அவள் மாக்தாவின் மேல் பொறாமை கொண்டிருந்தாள். மெலிந்த உடலையும் மெலிந்த மார்பகங்களையும் கொண்டு, உருவத்தில் மிகவும் சிறுத்திருந்த பதினான்கு வயதுச் சிறுமியான ஸ்டெல்லாவிற்கு, தானும் ஒரு சால்வைக்குள் பொதியப்பட்டு, மறைக்கப்பட்டு, கரங்களில் ஏந்தப்பட்ட உருண்டை வடிவிலான சிசுபோல, இந்த அணிவகுப்பு நடையில் அசைந்தாடியபடியே செல்ல விரும்பினாள். மாக்தா ரோசாவின் முலைக்காம்புகளைப் பற்றினாள், நடக்கும் தொட்டில் போன்றிருந்த ரோசா தான் நடந்துசெல்வதை நிறுத்தவேயில்லை. போதிய அளவு தாய்ப்பால் அவளிடமில்லை; சிலநேரங்களில் காற்றை உறிஞ்சினாள் மாக்தா; பின் வீறிட்டாள். ஸ்டெல்லா கொடும்பசியுடன் இருந்தாள். அ