புத்தகப் பண்பாடும் அதன் சவால்களும்
தமிழில் நவீன இலக்கியம் உள்ளிட்ட தீவிரமான நூல்களின் சந்தையை விரிவுபடுத்துவதில் சென்னைப் புத்தகக் கண்காட்சி ஆற்றியுள்ள பங்கு விவாதத்திற்கு அப்பாற்பட்டது. வெகுமக்கள் இலக்கியம் மட்டுமே புத்தகக் கடைகளையும் வாசகப் பரப்பையும் பெரிதும் ஆக்கிரமித்திருந்த நிலையில் மாற்று வகையிலான நூல்களுக்கான சந்தையை விரிவுபடுத்தியது சென்னைப் புத்தகக் கண்காட்சி. சென்னைப் புத்தகச் சந்தையின் தாக்கம் புத்தாயிரத்தில் வளர்ந்துவந்ததும் 1990களில் தமிழின் தீவிர எழுத்துப் பரப்பில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களுமாகச் சேர்ந்து தமிழின் தீவிர நூல்களுக்கான சந்தையை விரிவுபடுத்தியதுடன் இத்தகைய நூல்களை வெளியிடும் பதிப்பகங்களும் நூல்களின் எண்ணிக்கையும் வகைமைகளும் பல மடங்கு பெருக உதவின. சென்னைப் புத்தகச் சந்தையின் வெற்றியைத் தொடர்ந்து மதுரையிலும் அதையடுத்து ஈரோடு, கோவை, திருப்பூர், தர்மபுரி போன்ற மாவட்டங்களிலும் ஆண்டுதோறும் புத்தகச் சந்தைகள் நடத்தும் வழக்கம் தொடங்கியது. இவை தமிழ் நூல்களுக்கான சந்தையை மேலும் விரிவுபடுத்தின. புத்தகப் பண்பாட்டை வளர்த்தெடுப்பதில் பங்களித்த புத்தகக் கண்காட்சி தன்னளவில் ஒரு பண்பாட்டுச் செயல்பாடாக மாறத் தொடங்கியது.
தமிழ்ப் பதிப்புலகின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் பெரிதும் துணைபுரியும் புத்தகச் சந்தை என்னும் பண்பாட்டு நிகழ்வை மேலும் பல மடங்கு வலுப்படுத்தும் நடவடிக்கையைத் தற்போதைய திமுக அரசு தொடங்கி நடத்திவருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டுதோறும் புத்தகச் சந்தைகளை நடத்த வேண்டும் என்னும் அரசின் முடிவு மிக முக்கியமானது. இந்தப் புத்தகக் கண்காட்சிகள் தமிழகம் முழுவதிலும் உள்ள வாசகர்களுக்குப் புத்தகச் சந்தையில் பங்குபெறும் அரிய வாய்ப்பை அளித்துத் தமிழ் நூல்களின் வீச்சைப் பரவலாக்கிவருகின்றன.
இரண்டு ஆண்டுகளாகத் தமிழகம் முழுவதும் நடந்துவரும் இந்தக் கண்காட்சிகளை மேலும் பயனுள்ள வகையில் நடத்துவதற்கான வழிகளைப் பற்றி யோசிக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். மாவட்டங்களில் நடைபெறும் புத்தகக் காட்சிகளில் வாசகர்களின் பங்கேற்பு, விற்பனை, மாவட்ட நிர்வாகம் கொள்முதல் செய்யும் நூல்கள் ஆகியவற்றில் கடந்த ஆண்டுடன் (2022) ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கணிசமான பின்னடைவு ஏற்பட்டிருப்பதைக் காண முடிகிறது. கண்காட்சிகளோடு தொடர்புடைய பல்வேறு தரப்பினரிடம் பேசியதில் இதற்கான சில காரணங்களை அடையாளம் காண முடிகிறது. அவற்றை அரசின் பரிசீலனைக்காக இங்கே முன்வைக்கிறோம்.
மாவட்ட நிர்வாகத்தின், குறிப்பாக மாவட்ட ஆட்சியரின் ஈடுபாடும் பங்கேற்பும் இருக்கும் இடங்களில் கண்காட்சிகள் வெற்றிகரமாக அமைகின்றன. சென்னைக்குப் பிறகு தமிழகத்திலேயே மதுரையில்தான் புத்தகக் கண்காட்சி நடைபெறத் தொடங்கியது. மதுரையின் மாவட்ட ஆட்சியராக உதயசந்திரன் இருந்தபோது அவர் காட்டிய முனைப்பின் காரணமாக மதுரைப் புத்தகக் காட்சி தொடங்கப்பட்டு வேகமாக வளர்ந்தது. கடந்த ஆண்டில் சேலம் புத்தகக் கண்காட்சியில் மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம் சிறப்புக் கவனம் அளித்துச் செயல்பட்டதன் சாதகமான விளைவுகளைக் கண்காட்சியில் காண முடிந்தது. மாவட்ட நிர்வாகத்தின் முன்முயற்சிகளால் கண்காட்சிக்கான வாசக ஆதரவு எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிகமாக இருந்தது. கண்காட்சியைத் திட்டமிட்ட நாட்களுக்கு மேல் நான்கு நாட்கள் நீடிக்குமளவுக்கு அந்த வரவேற்பு இருந்தது.
மாவட்ட நிர்வாகமும் புத்தகக் கண்காட்சியை முன்னின்று நடத்தும் அமைப்புகளும் சிறந்த முறையில் ஒருங்கிணைந்து பணிபுரிவதன் பலன்களை ஈரோடு, கோவை போன்ற மாவட்டங்களில் காண முடிகிறது. இவை இல்லாத இடங்களில் கண்காட்சிகள் எதிர்பார்த்த வெற்றியை அடைவதில்லை. எனவே மாவட்ட நிர்வாகத்தின் முனைப்பும் முழுமையான ஈடுபாடும் புத்தகக் கண்காட்சிகளின் வெற்றிக்கு இன்றியமையாதது என்பதை அழுத்தமாகக் குறிப்பிட வேண்டியிருக்கிறது.
அரசு உத்தரவின் பேரில் அனைத்து மாவட்டங்களிலும் கண்காட்சிகள் நடப்பதற்கு முன்பே சென்னை, மதுரை, ஈரோடு, கோவை, தருமபுரி, திருப்பூர் முதலான நகரங்களில் தென்னிந்தியப் புத்தகப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் அமைப்பு (பபாசி), கொடீசியா, ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை, தருமபுரி தகடூர் புத்தகப் பேரவை, திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் முதலான அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்காட்சிகள் நடந்துவருகின்றன. இந்த அமைப்புகள் பல்லாண்டுக்கால அனுபவங்களின் அடிப்படையில் கண்காட்சிக்கான இடம், தேதி ஆகியவற்றை முடிவுசெய்கின்றன. மாவட்ட நிர்வாகங்களும் இந்தச் செயல்பாட்டில் இணையும்போது நிர்வாகக் காரணங்களால் இவற்றில் சில மாற்றங்கள் ஏற்படுகையில் கண்காட்சிகள் வழக்கமான ஆதரவு பெற இயலாத நிலை உருவாகிறது. இந்த ஆண்டு மிகவும் தள்ளிப்போடப்பட்டு நடத்தப்பட்ட மதுரைக் கண்காட்சியின் செயல்பாட்டை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். வழக்கமாக ஆகஸ்ட் மாதம் இறுதியிலும் செப்டம்பர் முதல் வாரத்திலும் நடக்கும் இந்தக் கண்காட்சி இந்த முறை அக்டோபர் பின்பாதியில், தீபாவளிப் பண்டிகைக்கு நெருக்கமாக, நடந்தது. சென்ற ஆண்டைக் காட்டிலும் பாதிக்கும் குறைவாகவே விற்பனையும் வாசகப் பங்கேற்பும் இருந்தன. மாவட்ட நிர்வாகத்தின் ஆதரவும் போதிய அளவு இருக்கவில்லை.
அதுபோலவே, தருமபுரியில் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நடக்கும் புத்தகக் கண்காட்சி இந்த முறை நிர்வாகக் காரணங்களால் செப்டம்பருக்குத் தள்ளிவைக்கப்பட்டது. தருமபுரியில் செப்டம்பர் மாதம் வழக்கமாக மழைபொழியும் காலம். கண்காட்சி நடந்த பெரும்பாலான நாட்களில் மாலை நேரங்களில் மழை கொட்டித் தீர்த்தது. புத்தகக் கண்காட்சியிலும் நீர்புகுந்து சில இடையூறுகளை ஏற்படுத்தியது. வாசகர் வரவும் விற்பனையும் கணிசமாகப் பாதிக்கப்பட்டன. புத்தகக் கண்காட்சிகள் திருவிழாக்களைப் போலவே மாறிவரும் நிலையில் குறிப்பிட்ட காலத்தில் நடப்பது அவற்றின் வெற்றிக்கு இன்றியமையாததாகிறது. மாவட்ட நிர்வாகங்கள் இதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். கண்காட்சிப் பணிகளில் ஆண்டுக்கணக்கில் ஈடுபட்டுவரும் உள்ளூர் அமைப்புகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும்போதுதான் கண்காட்சி முழு வெற்றியாகப் பரிமளிக்கும்.
கண்காட்சிகள் நடக்கும்போது மாவட்ட நிர்வாகம் கணிசமான அளவில் நூல்களை வாங்கும் வழக்கம் இருக்கிறது. இந்த நடைமுறையை முழுமையான வெளிப்படைத் தன்மையோடு மேற்கொள்ள வேண்டியதும் அவசியம்.
ஊடகங்களும் சமுதாயத்தின் முக்கியப் பிரமுகர்களும் புத்தகக் கண்காட்சியின் வெற்றிக்குப் பெருமளவில் பங்களிக்க முடியும். தமிழில் தினமணி, இந்து தமிழ் திசை, தினமலர் ஆகிய நாளிதழ்கள் கண்காட்சிகளுக்கெனச் சிறப்புப் பக்கங்களை ஒதுக்கிக் கவனப்படுத்துகின்றன. மற்ற நாளிதழ்களும் கண்காட்சிக்கெனச் சிறப்புப் பக்கங்களை உருவாக்கினால் அது வாசகர்களிடையே கண்காட்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒட்டுமொத்தச் சூழலை மேம்படுத்தவும் உதவும். வார இதழ்களும் புத்தகக் கண்காட்சிக்கெனச் சிறப்பிதழ்களை வெளியிடுவது, கண்காட்சிகளுக்கு முன்னதாகச் சிறப்பு நேர்காணல்கள், கட்டுரைகள், புத்தக முன்னோட்டங்களை வெளியிடுவது ஆகியவற்றின் மூலம் இந்தச் சூழலை மேலும் வலுப்படுத்தலாம். இன்று கிட்டத்தட்ட ஒவ்வொரு ஊடகமும் பதிப்பகம் வைத்திருக்கும் நிலையில் இதைச் செய்வதில் ஊடக நிர்வாகங்கள் தனிப்பட்ட முறையிலும் பலனடையலாம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மக்களவை, சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், வணிகப் பெரும்புள்ளிகள், சமயத் தலைவர்கள் முதலானோர் புத்தகக் கண்காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்துப் பொது வெளிகளில் பேச வேண்டும். தங்களைப் பின்பற்றுபவர்களைப் புத்தகம் வாங்கும்படி ஊக்குவிக்க வேண்டும். அவர்கள் புத்தகக் கண்காட்சிகளுக்கு வருகை புரிவதன் மூலம் கண்காட்சியை மேலும் பிரபலப்படுத்த முடியும்.
சிறிய முயற்சியாகத் தொடங்கிய புத்தகக் கண்காட்சி நிகழ்வு இன்று தமிழர்களின் முக்கியமான பண்பாட்டு நிகழ்வுகளில் ஒன்றாக மாறியிருப்பதுடன் தமிழ்ப் பதிப்புலகைச் சர்வதேச வரைபடத்திலும் வைத்திருக்கிறது. சென்னையில் இரண்டாம் ஆண்டாக நடைபெறவிருக்கும் சர்வதேசப் புத்தகக் கண்காட்சிக்கான சிறப்பான முன்னேற்பாடுகள் தமிழ்நாட்டின் புத்தகப் பண்பாட்டின் வீச்சைப் பறைசாற்றுகின்றன. அரசு, புத்தகக் கண்காட்சியை நடத்தும் அமைப்புகள், ஊடகங்கள், பிரபல ஆளுமைகள் ஆகிய அனைவரும் இணைந்து செயல்பட்டால் இந்தச் செயல்பாட்டை மேலும் வலுப்படுத்திக் கொண்டுசெல்ல முடியும். அனுபவங்களின் அடிப்படையில் உரிய மாற்றங்களைச் செய்து இந்தப் பண்பாட்டு நிகழ்வைப் பேரியக்கமாக மாற்றும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது.