கபில நிறம்
கபில நிறம்
கபில நிறத்தில் ஒரு எண்ணம்
இரவைக் கொண்டு எவ்வளவு அலசியும்
அது போகவில்லை
அதன் காதுகள் இறந்த காலத்தில் இருந்தன
அதன் வழிகளில் பறவை வடிவிலான சொற்கள்
ஒரு கல் மயங்கித் தரையில் கிடக்க
சொற்கள் என்னுடைய அறையையே
வட்டமடித்து வந்தன
இப்பொழுதைக்கு இந்த எண்ணம்
என்னிடம் இருக்கின்ற ஒரு சிறிய விசாரணை
எனக்குக் கிடைத்துள்ள சிறிய ஒரு பிரார்த்தனை
என்னையே குனிந்து பார்த்துக்கொள்ள ஏதுவான
ஒரு குவளை தெளிந்த நீர்.
தூய எடை கொண்ட சருகு
தூய எடை கொண்ட சருகொன்று
மரத்திலிருந்து முறிந்தது
உள்ளங்கையில் காற்றை நிரப்பியவர்
நடுவிலாகச் சருகை எடுத்து மிதக்கவிட்டார்
அதால் நீந்தமுடியவில்லை
உள்ளங்கை தரையில் அது வீற்றிருந்தது
தன் உடலை ஒரு இலையைக் கிள்ளுவதுபோல
இந்தப் பூமியிலிருந்து கிள்ளிப் போட்டார்
அவ்வளவு சீக்கிரத்தில் உடலை அப்படிச்
சீவ முடியாது
அந்த மாதிரி ஒரு சொல் இருக்கிறதென்று
உடல் தெரிந்துகொள்ள வேண்டும்
ஒரு சருகு வானில் அலையை எழுப்புவதற்கு
இவ்வளவு கூட நடக்கவில்லையென்றால்
பின்னென்ன.
பூந்தோட்டம்
ஒருமுறை விளையாட்டாகக் கூறினால் கூட
சாகக்கூடிய திறமை வாய்ந்தவன்
அவனது மன உறுதியை வசைபாடுகிறார்கள்
அவனுக்கு இருப்பதெல்லாம் ஒரு நினைப்பு
அவன் யார் மனதிலும் சாகக் கூடாது
விளையாட்டாக நடந்துவிட்டால் கூட
ஒரு நொடி அவனால் உயிர் வாழ முடியாது
அவனை மாதிரியே யாவரையும்
கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வருகிறான்
இந்த உலகம் ஒரு பூந்தோட்டமாக வேண்டும்
அப்படித்தானே எல்லோரும் கனவு காணுகிறோம்
மின்னஞ்சல்: selvasankarand@gmail.com