தோழர்
ஒரு பொறியாளரின் மகனாக சங்கரய்யா நெல்லை மாவட்டம் ஆத்தூரில் 1922இல் பிறந்தார். அப்போது காந்தியுகம் இந்தியாவில் வந்து விட்டது. கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி யிருக்கவில்லை. கம்யூனிச அறத்தை அறிந்தவர்கள் குழுக்களாகவே இயங்கி வந்த காலம். தமிழ்நாட்டில் சிங்கார வேலர் தலைமையில் ஒரு குழு இயங்கி வந்தது. ஆனால் அவர்கள் இந்திய தேசிய காங்கிரசுக்குள் இருந்துதான் வெகுமக்கள் அரசியலில் இயங்கிவந்தனர்.
2023இல் சங்கரய்யா மறைந்தபோது நாடறிந்த முன்னணி கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவர். நூறாண்டுகள் பெருவாழ்வு வாழ்ந்து மறைந்த தோழர். இந்த நூறாண்டுகளின் அரசியலில் எல்லாப் பரிமாணங்களையும் பார்த்தவர், பங்கேற்றவர். தனது மாணவப் பருவத்தில் மாணவர் சங்கப் பொறுப்புகளில் செயல்பட்டு மாணவருக்கான போராட்டங்களில் ஈடுபட்டதோடு தேசிய அரசியல் சார்ந்த போராட்டங்களிலும வந்துவிட்டவர். அதனால் பட்டப் படிப்பில் தேர்வெழுத முடியாமல் படிப்பும் நின்று போனது. அப்போது அவருக்கு வயது 20.
நாட்டின் விடுதலைப் போரிலும் தொழிலாளர்கள், விவசாயிகளுக்கான உரிமைப் போராட்டங்களிலும் 75 ஆண்டுகளுக்கும் மேல் அறம்சார்ந்து போராடிய யுகத்தின் அடையாளம் அவர். தேசிய விடுதலை இயக்கம். சுயமரியாதை இயக்கத்தின் ஒரு பகுதியான இந்தி எதிர்ப்பு இயக்கம். விவசாயிகள் தொழிலாளர்களைப் பிரநிதித்துவப் படுத்திய கம்யூனிஸ்ட் இயக்கம் என நீண்ட போராட்ட இயக்கங்களில் நேரடிப் பங்களிப்பு ஆற்றியவர் சங்கரய்யா.
பிரிட்டிஷ் இந்தியாவிலும் சுதந்திர இந்தியாவிலும் கடந்து போயிருக்கும் இந்தப் போராட்ட யுகமே இதுநாள்வரை இந்திய மக்களும் விவசாயிகளும் தொழிலாளர்களும் அனுபவித்து வரும் அத்தனை உரிமைகளையும் வென்று தந்தது என்று வரலாறு மெய்ப்பிக்கிறது.
அந்த அறம் சார்ந்த போராட்ட யுகத்தின் அடையாளம் தோழர் சங்கரய்யா. அவற்றை இன்றுவரை பாதுகாக்க நடைபெறும் போராட்டங்களிலும் சங்கரய்யா இருந்தார். ஆரம்பக் கல்வி தூத்துக்குடியில். தேசிய இயக்கம் தீவிரமாக நடந்த காலத்தில்தான் குடும்பம் மதுரைக்குப் புலம் பெயர்ந்தது. மதுரையில் பள்ளிப் பருவமும் கல்லூரிப் பருவமும் மெல்லக் கடந்தன. அக்காலக் கல்லூரி மாணவர்களிடத்தில் இயல்பாக தேசிய விடுதலை இயக்கம் ஒட்டிக்கொண்டிருந்தது. சங்கரய்யா மாணவர் இயக்கங்களில் தலைமைப் பாத்திரம் வகித்தார். 1938இல் திராவிட இயக்கத்தின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இராஜாஜிக்குக் கறுப்பு கொடியும் காட்டியிருக்கிறார்.
1941இல் மாணவர் போராட்டத்தில் முதன்முதலில் சிறைசென்றார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் மாணவர்களைப் பங்கேற்க வேண்டி நடத்தப்பட்ட முகாமில் கைது செய்யப்பட்ட சங்கரய்யா கண்ணனூர் சிறையில் அடைக்கப்பட்டார். கண்ணனூரில் இவருடன் சிறையிருந்தவர்கள் கையூர் விவசாயப் போராட்டத்தில் பங்கு பெற்றவர்களாய் இருந்தார்கள். ஓரளவு வசதியான குடும்பச் சூழ்நிலையில் வாழ்ந்திருந்த சங்கரய்யாவுக்கு விவசாயிகளின் துன்பங்கள் தெரியவந்தன.
1944 இல் சிறையிலிருந்து வெளிவந்த சில மாதங்களில் மதுரையில் பொறியாளராக இருந்த அவருடைய தந்தை காலமானார். சங்கரய்யா ஒரு பெரிய குடும்பத்தின் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் நிலை வந்தது. ஆனால் பொது வாழ்க்கையின் முழுமையான செயல்பாட்டில் தீவிரமாகத் தொடர்ந்தார். மாணவர் இயக்கப் பொறுப்பு களில் இருந்து விலகி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டச் செயலரானார்.
போராட்டங்கள் வரிசை கட்டி வந்தன; போரும் சிறையும் வழக்கமாகின. நேதாஜியின் ஐ.என்.ஏ இராணுவத்தினரைக் கைது செய்யும் வெள்ளை அரசைக் கண்டித்தும், ஜவஹர்லால் நேரு காஷ்மீருக்குள் நுழையத் தடை விதித்ததைக் கண்டித்தும் அப்போது பெரும் போராட்டங்கள் நடந்தன. இவற்றையெல்லாம் முன்னின்று நடத்தியவர் தோழர் சங்கரய்யா. 1946 இல் பம்பாய் கப்பல் மாலுமிகள் நடத்திய புரட்சிக்கு ஆதரவாக மதுரையில் பெரும் போராட்டங்களை நடத்தினார்.
அதே ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியச் செயலாளர் பி.சி.ஜோசி பங்கேற்ற பெரும் பொதுக்கூட்டத்தை மதுரையில் நடத்தினார். அரசுக்கு எதிராகச் சதி செய்து அரசை வீழ்த்த முயற்சி செய்ததாக மதுரை சதி வழக்கைப் போட்டது வெள்ளை அரசு. அதில் பி. இராமமூர்த்தி, சங்கரய்யா, கே.டி.கே. தங்கமணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். சிறப்பு நீதிபதி ஹசீன் என்பவரால், ஜோடிக்கப்பட்ட வழக்கு இது எனத் தீர்ப்பளிக்கப்பட்டு 1947 ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலையில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். சிறை வாசலில் மக்கள் திரண்டு பிரமாண்ட வரவேற்பு கொடுத்தார்கள். மறுநாள் இந்தியா விடுதலை பெற்றது.
விடுதலைபெற்ற மக்கள் இந்தியா அரசிடம் நிறைய எதிர்பார்த்தனர். கம்யூனிஸ்ட்டுகள் மக்கள் பிரச்சினைகளை வீதிக்குக்கொண்டு வந்து தலைமை யேற்றுப் போராடி வந்தார்கள். 1948 மார்ச்சில் கல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் சங்கரய்யா அதன் பிரதிநிதியாகப் பங்கேற்றார். சுதந்திர இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. மாநாட்டில் இருந்து திரும்பும்போதே தலைவர்கள் தலைமறைவாகினர். சங்கரய்யாவும் தலைமறைவு வாழ்க்கைக்குச் சென்றார்.
மூன்றாண்டுகள் தலைமறைவு வாழ்க்கை. கம்யூனிஸ்ட்டுகளின் வாழ்க்கையில் அந்தத் தலைமறைவுக் காலம் பல காவிய விழுமியங்களில் சேர்க்கப்பட வேண்டியவை. அவர்கள் பரம ஏழைத் தொழிலாளர்களின் பாதுகாப்பில் மறைந்து வாழ்ந்தனர். சங்கரய்யா ஒரு சலவைத் தொழிலாளியின் ஆதரவில் தலைமறைவாக அழுக்கு மூட்டைகளுக்கிடையே இருந்தார். தோல் நோய்கள் வந்தன; சிகிச்சைக்குச் சென்றால் பிடிபடலாம்; ஆகவே சிகிச்சையின்றி நோயுடன் வாழ்ந்திருந்தார்.
கட்சி தடைவிலக்கம் பெற்றபிறகு 1952இல் தஞ்சை மாவட்டம் வள்ளுவக்குடியில் நடைபெற்ற மாநிலச் சிறப்பு மாநாட்டில் மாநிலச் செயற்குழுவிற்கும் மாநில நிர்வாகக் குழுவிற்கும் தேர்வு செய்யப்பட்டார். 1957, 1962இல் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டபோது மார்க்சிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்களில் சங்கரய்யாவும் ஒருவரானார். மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் 1967, 1977, 1980 என மூன்று முறை மதுரையின் தொகுதிகளில் வெற்றி பெற்றபோது சட்ட மன்றத்தில் தொழிலாளர், விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக வாதாடினார்.
இவருடைய சட்டமன்ற உரைகள் மக்கள் மீதான அக்கறைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவன. இந்தித் திணிப்பு, தமிழ்நாடு பெயர் மாற்றம், சென்னையின் குடிநீர் பஞ்சம், மாநில கைத்தறித் தொழிலாளர் பிரச்சினைகள், அவற்றுக்கான தீர்வுகள் என்று இவர் ஆற்றிய உரைகள் இன்றைய இளைஞர்களுக்குப் படிப்பினையாக விளங்கக் கூடியவை.
மத நல்லிணக்கத்திற்கான கம்யூனிஸ்ட்களின் இயக்கமானது ஜனநாயகவாதிகளுடன் சேர்ந்தும் தனியாகவும் சளைக்காமல் தொடர்கிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்டபின் தொடர்ந்த மத நல்லிணக்க இயக்கங்களின் ஒரு பகுதியாக தோழர் சங்கரய்யா கடலூரில் பேசிய உரை இன்றும் காலத்திற்குப் பொருந்துவது. தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் புலமைவாய்ந்த சங்கரய்யா கேட்பவர்களை முறுக்கேற்றும் சிறந்த பேச்சாளுமையும் வாசகர்களை ஈர்க்கும் எழுத்தாளுமையும் மிக்கவர். இயக்கத் தோழர்களைத் தன் வாதங்களால் கூர்மைப்படுத்தியவர்.
சாதிக் கலவரங்கள், மதக் கலவரங்களின்போது அமைதிக் குழுக்களில் பங்கேற்று ஒரு கம்யூனிஸ்டாகச் சிறப்புடன் பணியாற்றியிருக்கிறார். 1998இல் கோவையில் மதநல்லிணக்கப் பேரணியை நடத்தி, மதவாதச் சக்திகளுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சியினரையும் தேச நலன் நாடுவோரையும் அதன் பக்தர்களையும் ஒன்றிணைக்கும் அசாதாரணப் பணியை முன்னெடுத்தார்.
1997இல் மதுரையில் அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் தீவிர நிலச் சீர்திருத்தத்தை நோக்கிய பயணமே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும் என்று எடுத்துரைத்தார். நீங்கள் எதைச் சாதித்தீர்கள் என்று சங்கரய்யாவைக் கேட்டபொழுது, “நாட்டுக்கு செய்த ஊழியம். அதுதான் மன திருப்தி அளிப்பது” என்றார்.
இந்த நாட்டின் தரித்திர நாராயணர்களுக்கே தம் வாழ்நாள் முழுதும் உழைத்த பெருமகன் சங்கரய்யா.பொது வாழ்க்கையில் அறம்சார்ந்த வாழ்வு அருகிவிட்டது என்று அயர்ந்திருப்போருக்குத் தோழர் சங்கரய்யாவின் வாழ்க்கை உத்வேகம் தரும். சங்கரய்யாவைத் ‘தோழர் யுகபுருஷர்’ என்று அழைக்கத் தோன்றுகிறது. அதுவே அவருக்குரிய புகழஞ்சலியாகும்.
கட்டுரையாளர்: தொழிற்சங்கச் செயற்பாட்டாளர், திருநெல்வேலியில் வசிக்கிறார். ‘நீலகண்ட பிரம்மச்சாரி’ நூலின் ஆசிரியர்.
மின்னஞ்சல்: thilaga280685@gmail.com