இலக்கணக் கல்வியும் ஆய்வும்
தமிழ் இலக்கிய இதழ்களிடையே ‘இலக்கணம்’ என்னும் காலாண்டுச் சஞ்சிகையைக் காணும்போது விழிகள் வியப்பால் விரிகின்றன. இது இலங்கை மட்டக்களப்பிலிருந்து வெளிவருவது இன்னும் சிறப்பு. தமிழ் இலக்கணத்தில் பள்ளி மாணவர்க்கு எழும் பொதுவான ஐயங்களுக்குத் தீர்வுகாணும் முறையை விளக்கிக் கற்பித்தல், இலக்கணம் பற்றிய உயராய்வுச் சிந்தனைகள் அடங்கிய கட்டுரைகளை வெளியிடுதல் என இரு சக்கரங்களில் பயணிக்கிறது இச்சஞ்சிகை.
இலங்கைத் தமிழ் இலக்கண அறிஞர்களான ஆறுமுக நாவலர், ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ. சதாசிவம், ஆ. வேலுப்பிள்ளை, பொ. பூலோகசிங்கம், சு. வீரகத்தி, க. கைலாசபதி, கா. சிவத்தம்பி, அ. சண்முகதாஸ், எம்.ஏ. நுஃமான் ஆகியோரை முன்னிறுத்தி அவர்களின் இலக்கணப் படைப்புக்களைத் தமிழ் இலக்கண உலகத்திற்கு நினைவூட்டும் ஊடகமாக இச்சஞ்சிகை வெளிவந்துகொண்டிருக்கிறது. இவர்களின் இலக்கணப் பங்களிப்புகளைச் சுருக்கமாக வெளியிட இச்சஞ்சிகைக்கு வாய்ப்புள்ளது. இலங்கைத் தமிழ் இலக்கணப் பேராசிரியர்கள் பங்கேற்கும் இச்சஞ்சிகையில் தமிழக இலக்கணப் பேராசிரியர்களின் கட்டுரைகளும் இடம்பெறுகின்றன. இதைப்போலவே மலேசிய, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பள்ளிக் குழந்தைகள் தமிழ் இலக்கணத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும், அவற்றுக்கான தீர்வுகளையும் விளக்கும் கட்டுரைகள் இடம்பெற வேண்டும்.
இலக்கணத்தைத் தத்துவம், தருக்கம், உளவியல், சமூகவியல், மானுடவியல், மொழியியல் போன்ற சமூக விஞ்ஞானங்களின் நோக்கில் அணுகி அறிமுகம் செய்யும் கட்டுரைகளும் இடம்பெறுமானால் பல்கலைக்கழகங்களில் இலக்கண ஆய்வைப் பன்முகநோக்கில் மேற்கொள்ளும் வாய்ப்புப் பெருகும். பழைமைவாதங்களிலிருந்து இலக்கணத்தை விடுவித்து அறிவியல் சிந்தனையுடன் காணும் நோக்கத்தையும் இணைத்துக்கொள்ளுமானால் தொடர்ச்சியான வரலாற்றுப்பாட்டையை இச்சஞ்சிகை தக்கவைத்துக்கொள்ள முடியும்.
‘இலக்கணம்’, தமிழ் இலக்கண வெளியில் ஒரு சஞ்சிகைக்கான தளத்தைத் துல்லியமாக இனங்கண்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து காலத்தைக் கடந்து முன்னேறும் அறைகூவல் இதற்கு உள்ளது. ஏனெனில் இலக்கணத்திற்கான வாசகர் வட்டம் குறுகியது. இந்நிலையில் எந்த நிறுவனச் சார்பும் இல்லாமல் இப்பணியை மேற்கொண்டிருக்கும் இதன் ஆசிரியர் த. யுவராஜன் தமிழ் இலக்கண உலகத்தின் பாராட்டிற்குரியவர்.
கதிர்
ஆசிரியர்: இலக்கணம்,
515/161, திருமலை வீதி,
மட்டக்களிப்பு, இலங்கை.
மின்னஞ்சல்: djuwan@gmail.com
கைப்பேசி: +94714496621