புலம்பெயர் இலக்கியம்
புலம்பெயர் இலக்கியம் என்ற சொல்லாடல் நவீன தமிழ் இலக்கியத்தில் சில பத்தாண்டுகளாகப் புழக்கத்தில் இருக்கிறது.
“புலம்பெயர் படைப்புகளில் கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய இலக்கிய வடிவங்களே முக்கியமானவையும் கவனத்திற்கு உரியவையும் ஆகும். இவை தவிர ஏனைய கலை இலக்கிய முயற்சிகளாகப் பின் வருவனவும் நடந்தேறி வருகின்றன. அவற்றுள் நாடகம், சஞ்சிகை பத்திரிகை வெளியீடுகள், நூல் வெளியீடுகள், ஒலி, ஒளி செயற்பாடுகள், தமிழர் அடையாளத்தைத் தக்க வைக்கும் கலாச்சாரச் செயல்பாடுகள் ஆகிய முக்கியமானவை” என்று விக்கிப் பீடியா கூறுகிறது. எனில் இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், வாசாப்பு கூத்து போன்ற நாட்டுப்புறக் கலைகள், விளிம்பு நிலையினருக்கான தன்வரலாற்றுப் பிரதிகள் போன்றவை புலம்பெயர் இலக்கியத்துக்குள் அடங்காதா என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.
இலக்கியத்துக்குக் கறாரான வரையறைகளை உருவாக்க முடியாவிட்டாலும் உரையாடலுக்காக, புரிதலுக்காக இவ்வாறான வகைமைகள் இருக்கின்றன. அவை மேம்போக்காக இல்லாது பன்முகத்தன்மையாக உரையாட வேண்டும்.
உலகமயமாதலுக்குப் பின் பொருளாதாரக் காரணங்களுக்காகப் புலம் பெயர்ந்தவர்கள் எழுதுவது புலம்பெயர் இலக்கியமாகாதா என்ற கேள்வியும் இருக்கிறது. புலம்பெயர்ந்தவர்கள் புலம்பெயர்ந்த வாழ்வைக் குறித்து எழுதுவது, வேறு தேசத்தில் இருந்துகொண்டு தங்கள் ஊர் ஏக்கங்களை, வாழ்வை எழுதுவது இதில் எது புலம்பெயர் இலக்கியம் என்பவை இன்னும் விவாதங்களாகவே இருக்கின்றன. இவையிரண்டுமே புலம்பெயர் இலக்கிய வகைமைக்குள் அடங்கும் என்றும் சொல்கிறார்கள். பொருளாதாரக் காரணங்களுக்காகப் புலம்பெயர்ந்தவர்களுக்கும், போர் காரணமாகப் புலம்பெயர்ந்தவர்களுக்கும் பொதுவான பிரச்சினைகள் இருந்தாலும் இரு தரப்பின் அகச்சிக்கல் வேறானது. பொருளாதாரக் காரணங்களுக்காகப் புலம்பெயர்ந்தவர்களைவிடப் போர் காரணமாக இடம்பெயர்ந்தவர்களின் சுதந்திரமான நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டது. இவை தவிர வேறு காரணங்களுக்கான புலப்பெயர்வுகளும் நடக்கின்றன.
உள்நாட்டு இடப்பெயர்வில் பொருளாதார நெருக்கடியுடன் வாழ்க்கைச் சூழல் மாறுபடுமே தவிர பண்பாடு, மொழி போன்றவை பெருமளவு மாறுவதில்லை.
வெளிநாட்டுப் புலப்பெயர்வால் நிறைய வாழ்வியல் சிக்கலுடன் மொழி , கலாச்சாரம், பண்பாடு, உணவு, உடை, சீதோஷ்ண நிலை உட்பட அனைத்தும் சிரமத்திற்குள்ளாகின்றன; மாற்றத்திற்குள்ளாகின்றன. புலப்பெயர்வில் எத்தகைய பெரும்பான்மைச் சமூகத்துக்குள் புலம்பெயர்கிறார்களோ காலப்போக்கில் அதுவாகவே கலந்துவிடும் நிலையிருக்கிறது. உதாரணத்திற்கு, தமிழகம் வந்த இலங்கை அகதிகள் தற்போது தமிழ்நாட்டவர்களாகவே மாறியிருக்கிறார்கள். ஆவணங்கள் மட்டுமே அவர்களுக்குள் மாறுபடும்.
தமிழகச் சூழலில் முதல் புலப்பெயர்வாக இலங்கையின் மலையகம், மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற பல நாடுகளுக்கு (சுமார் நாற்பது நாடுகள் என்று மதிப்பிடுகிறார்கள்) பிரிட்டீசாரால் உடல் உழைப்பாளர்களாக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் உள்ளார்கள். இது நவீனகாலத்தில் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன், காலனிய ஆட்சிக் காலத்தில் நடந்த புலப்பெயர்வு. அப்படி அழைத்துச்செல்லப்பட்டவர்களில் பெரும்பகுதியினர் அந்தந்த நாடுகளிலே நிரந்தரமாக வாழ்கிறார்கள். இலங்கையின் மலையகம் சென்றவர்களில் சுமார் ஆறு லட்சம் பேர் அரசியல் காரணங்களுக்காக உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவுக்குத் திரும்பும் நிலை ஏற்பட்டது. இலங்கைப் போரைத் தொடர்ந்து மலையகத்தைச் சேர்ந்தவர்களும் கணிசமாக மேற்கத்திய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்திருக்கிறார்கள்.
மலையகம் குறித்த இலக்கியப் பதிவுகள் இருக்கும் நிலையில், இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி ஆறு லட்சம் பேர் தாயகம் திரும்பிவந்தவர்கள் எதிர்கொண்ட வாழ்வு போதுமான அளவு இலக்கியத்தில் பதிவு செய்யப்படவில்லை; இல்லையென்றுகூடச் சொல்லலாம். இதுகுறித்துப் ‘பச்சை இரத்தம்’ ஆவணப்படத்தை எடுத்த தவமுதல்வனிடம் பேசியபோது, “மலையகம் சென்றது பற்றிய வரலாறும் புனைவுகளும் ஏராளம் இருக்கின்றன. ஆனால் தாயகம் திரும்பியவர்கள் எதிர்கொண்ட வாழ்க்கை குறித்துப் பதிவுகள் இல்லை” என்றார். அதுகுறித்துத் தன் அனுபவத்தை நாவலாக எழுதிக்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். புலம்பெயர் இலக்கியத்தில் இந்த அலைக்கழிப்பான வாழ்வு ஏன் எழுதப்படவில்லை என்பதையும் சேர்த்துப் பேச வேண்டும். இதனைப் புலம்பெயர்தலின் எந்த வகைமைக்குள் வைத்து உரையாடுவது என்பதும் கவனத்தில்கொள்ளப்பட வேண்டும். இவர்கள் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். காலனிய ஆட்சிக் காலத்தில் மலையகம் சென்று நீண்டகாலம் இலங்கைக் குடியுரிமை மறுக்கப்பட்டுப் பின் இரு நாட்டு, இரண்டு ஒப்பந்தம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு இந்தியாவில் நிரந்தரக் குடிகளானவர்கள்.
இதற்கடுத்து 1983இல் இலங்கையில் நடந்த கலவரத்தைத் தொடர்ந்து திரள்திரளாகத் தமிழகத்திற்கு அகதியாக வந்தவர்கள் இருக்கிறார்கள். 1983முதல் 2012வரை சுமார் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தமிழகம் வந்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையில் பெரும்பகுதியினர் வெளிநாடுகளுக்குப் போயிருக் கிறார்கள்; இலங்கைக்குச் சென்றிருக்கிறார்கள். இன்று 106 முகாம்களில் எஞ்சியிருக்கும் அறுபதாயிரம் பேர்களில் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மலையகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் நாடற்றவர்களாகவும் இருக்கிறார்கள். புலம்பெயர் இலக்கியம் குறித்து உரையாடப்படும் அதே வேளை நாடற்றவர்கள் குறித்து இலக்கியத்தில் உரையாடப்படவில்லை. நாடற்றவர்களும் அகதிகளும் சட்டவிரோதக் குடியேறிகள் என்று அகதிகள் முகாமிற்குள் அடைத்து மிகுந்த கண்காணிப்பின் கீழ் ஒன்றிய அரசு வைத்திருக்கிறது. எல்லா சுதந்திரங்களும் மறுக்கப்பட்ட நிலையிலிருந்தாலும், அகதிகள் குறித்த இலக்கியப் பிரதிகள் ‘அகதிகள் இலக்கியம்’ என்ற வகைமைக்குள் சமீபகாலமாகக் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக வந்துகொண்டிருக்கிறது.
1980களுக்குப் பின் தொடர்ந்து உதிரிகளாக ஐரோப்பா, கனடா, அவுஸ்ரேலியா போன்ற மேற்கத்திய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்கள் சுமார் பத்துலட்சத்திற்கும் மேல் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் கல்வி, பொருளாதாரம், சாதியிலும் உயர்ந்தவர்களாகள் இருப்பதால் எழுதுவதற்கும் அதனை வெளியிடுவதற்குமான சுதந்திரமான சூழல் கைவரப்பெற்றவர்கள். அதனால் இவர்களின் பிரதிகள் துருத்திக்கொண்டு மேல்நோக்கித் தெரிவதால் புலம்பெயர் இலக்கியம் என்றால் இவர்கள் எழுதுவதுதான் என்ற போக்கு பொதுப்புத்தி மனநிலையில் பதிவாகியிருக்கிறது.
தமிழ் இலக்கியத்தின் மையமான தமிழகத்தில், இலங்கையிலிருந்து மேற்கத்திய நாடுகளுக்குச் சென்ற வர்கள் எழுதிய பிரதிகள் புலம்பெயர் இலக்கியம் என்ற வகைமைக்குள் வைத்துப் பேசப்பட்டதுபோல், மலையகம் சென்றவர்கள் எழுதிய பிரதிகள் ஏன் புலம்பெயர் இலக்கியமாகப் பேசப்படவில்லை. மேற்கத்திய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தவர்களைவிட அதிகமானவர்கள் மலையகம் சென்றிருக்கிறார்கள். அவர்கள் மலையகம் சென்ற காலம் தொட்டுத் தொழிற்சங்க நிகழ்வுகள், நாட்டுப்புறப் பாடல்கள் போன்றன ஆரம்பக்காலங்களில் இருந்தாலும் பின்னர் ஆய்வுகளும் புனைவுகளும் போதுமான அளவு வெளிவந்திருந்தும் அவை ஏன் புலம்பெயர் இலக்கியங்களாக உரையாடப்படவில்லை? புலம் பெயர்ந்த இலங்கையர்களுக்கும் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கும் உறவுப் பரிமாற்றம் இருப்பதுபோல் மலையகத் தமிழர்களுக்கும் தாயகம் திரும்பியவர்களுக்கும் ஏன் உறவுப் பரிமாற்றம் நிகழவில்லை? புலம்பெயர்ந்த இலங்கையர் இலக்கியங்களைத் தமிழ் இலக்கியம் உள்வாங்கியதைப்போல் மலையக இலக்கியத்தை ஏன் தமிழ் இலக்கியம் புலம்பெயர் இலக்கியமாக ஏற்கவில்லை? காலனியகாலம், அதற்குப் பின்னான காலங்கள் முக்கிய காரணங்களாக முன்வைக்கப்பட்டாலும் இதற்குள் சாதியும் புதையுண்டிருப்பதை விரிவான தளத்தில் உரையாட வேண்டும்.
புலம் பெயர்ந்த இலங்கையர்கள் பெரும்பகுதியினர் வெள்ளாளர்களாகவும், மலையகம் சென்றவர்களில் பெரும்பகுதியினர் தலித்துகளாகவும் இருந்தார்கள். இலங்கைத் தமிழர்களின் போர்குறித்த அரசியல் உரையாடல்களும் அது உருவாக்கிய கழிவிரக்கமும் காரணமாக இருந்தாலும் அதற்குள்ளும் சாதி பிரதானப்பட்டு நிற்பதை மறுப்பதற்கில்லை.
1990களுக்குப் பின் எழுச்சி பெற்று வந்த தலித்திலக்கியம்கூட இதைப் போதுமான அளவு கவனிக்கத் தவறிவிட்டது. புதுமைப்பித்தனின் ‘துன்பக்கேணி’ சிறுகதையிலும், ப. சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ நாவலிலும் புலம்பெயர்வு குறித்த பதிவுகள் அந்தக் காலப்பகுதியில் அறிமுகமாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கன.
நவீன கால வரலாற்றின் அடிப்படையில் பார்த்தால் மலையகமே புலம்பெயர் இலக்கியத்தின் ஆரம்பப் புள்ளி. இலக்கியம், விளிம்பு நிலையினருக்கானதும்தான். ஆகவே புலம்பெயர் இலக்கியம் ஒற்றைத்தன்மையானது இல்லை; பரந்துபட்ட நிலையில் விரிவான ஆய்வுக்குட்பட்டது.
மின்னஞ்சல்: pathixyz@gmail.com