காலக் கணக்கு
ரஜப் தய்யிப் எர்டோகன்
மலையாளத்தில்:
கே.எம். அஷ்ரஃப் கீழுபரம்பு
தமிழில்: கே.எம். முஹம்மது
வெளியீடு:
இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்
138 பெரம்பூர் நெடுஞ்சாலை,
சென்னை - 12
பக். 180
ரூ. 170
துருக்கி நாட்டின் இஸ்லாமியப் பாரம்பரியப் பெருமையை மீட்டெடுத்தவர் என்ற வகையில் துருக்கி அதிபர் எர்டோகன் கொண்டாடப்படுகிறார். அந்நாட்டிலிருந்த கிலாஃபத் ஆட்சிமுறையை முடிவுக்குக் கொண்டுவந்தவர் முஸ்தபா கமால். அவர் உருவாக்கிய மதச்சார்பின்மைத் தன்மையை மாற்றி அந்நாட்டை இஸ்லாமிய ஆட்சிமுறைமையின் கீழ் கொண்டுவர வேண்டுமெனும் எண்ணத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருப்பவர் ரஜப் தய்யிப் எர்டோகன். அவர் நபிமார்கள் பெற்றுக்கொண்டதைப் போல இஸ்லாத்தின் தூய்மையிலிருந்து தனக்கான ஆற்றலைப் பெற்றிருக்கிறார் என்று புகழப்படுகிறார்.
எர்டோகனைப் பொறுத்தமட்டில் வரலாற்றில் தனியிடத்தைப் பெற்றிருக்கிறார். அது இஸ்லாமிய வரலாற்றுக்குள் மட்டும் அடங்குவதாயில்லை. 2016ஆம் ஆண்டில் அவருடைய ஆட்சிக்கெதிராக இராணுவம் போர்க்கொடி தூக்கியது. அப்போது எர்டோகன் தலைநகரில் இல்லை. ஆனால் சமூக இணையதளங்களைப் பயன்படுத்தி அவர் துருக்கியர்களை இராணுவத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுமாறு வேண்டுகோள் விடுத்தார். அது நள்ளிரவாக இருந்தாலும் துருக்கியர்கள் ஆண்களும் பெண்களுமாகத் தாம் அணிந்திருந்த இரவு உடைகளுடன் தெருக்களில் இறங்கினர். இராணுவ வீரர்களையும் டாங்கிகளையும் எதிர்த்து வலிமையாகப் போராடினார்கள். ஒரேநாள் இரவில் அந்த இராணுவத்தின் வியூகம் முறியடிக்கப்பட்டது. இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இப்படியொரு மக்கள் எழுச்சியை உருவாக்கியிருக்கிறார் எர்டோகன். மக்களை ஒருமுகமாகத் திரட்டி இராணுவத்தை முறியடித்தவகையில் எர்டோகனை அகில உலகமும் வியந்து பார்த்தது.
எர்டோகன் பல பொருளாதாரச் சாதனைகளைச் செய்திருப்பதாக இந்நூல் கூறுகிறது. தன் நாட்டின் கடன்களைத் தீர்த்து, சர்வதேச நாணய நிதிக்கும் பங்களிப்பு செய்திருக்கிறார். பொருளாதாரரீதியாக உலக அளவில் 111ஆவது இடத்திலிருந்த துருக்கி, எர்டோகன் வந்தபிறகு 16ஆவது இடத்திற்கு முந்திச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. அவர் அமுல்படுத்திய கொள்கைக்கு ‘எர்டோகா மிக்ஸ்’ என்று பெயர். இந்த அடிப்படையில் அவர் தன் நாட்டை முழுமையாகத் தாராளமயமாக்கினார். பெருநிறுவனங்களைத் தனியாரிடம் ஒப்படைத்தார். இவற்றைக் கணக்கிலெடுத்தால் இஸ்லாமியப் பொருளாதாரமாக அது இல்லை. இஸ்லாமிய ஆட்சியை நிறுவத் துடிக்கிற ஆட்சியாளரான எர்டோகன், பொருளாதாரத்தில் தன் மார்க்கம் சொன்ன வழிமுறைகளை ஏற்கவில்லை. துருக்கியில் எர்டோகனின் பொருளாதாரம் இந்தியாவைவிட பெருந்தோல்வியைச் சந்தித்துள்ளது.
பொருளாதாரரீதியிலான எர்டோகனின் அணுகுமுறைகள் அமெரிக்காவும் மேலைநாடுகளும் வகுத்தளித்த தாராளமயமாக்கலின் கீழ் வருகின்றன. இப்பொருளாதாரம் இனமோ மதமோ அற்றது; அடிப்படையில் உலக வளங்களைச் சூறையாட எடுத்துக்கொண்ட மோசடி வலை. இதை எர்டோகன் கையிலெடுக்கும்போது இஸ்லாம் வலியுறுத்தும் சமூக நீதியை எப்படி அதற்குள் திணித்துச் செயல்படுத்த முடியும்? இதுபோன்ற பல கேள்விகள் இருக்கின்றன. இதற்கான பதில்களைப் பெறுவது மிகச் சிரமமானதாக இருக்கிறது. இலங்கை திவாலானதைத் தொடர்ந்து பல நாடுகள் திவாலாக உள்ளன என்ற செய்தி வருகின்றது. அப்பட்டியலில் துருக்கி இடம்பெற்றுள்ளது. இவ்வாறாகத் துருக்கியின் பொருளாதாரக் குறிப்புகளும் இந்தியாவின் குறிப்புகள்போல பொய்யுரைகளால் ஆகியிருக்குமோ என்ற அச்சம் எழுகிறது.
எர்டோகனைப் பேசும்போது நாம் மோடியைக் குறித்தும் பேச வேண்டியதாகயிருக்கின்றது. இருவரும் சமகாலத்திய மதவாதிகள்; கிட்டத்தட்ட தத்தம் நாடுகளில் மதரீதியான முன்னெடுப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்குகிறார்கள். துருக்கியில் எர்டோகன் செய்யும் அதே செயல்களை மோடி இந்தியாவில் செய்துவருகிறார். ஆனால் மோடியால் இந்தியப் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த முடியவில்லை. தனியார்மயத்தை முழுவீச்சில் பேரளவில் மோடி அமல்படுத்தும்போது இந்தியர்களின் இன்னல்கள் பெருகுகின்றன; விலைவாசி உயர்கின்றது. இதே செயல்பாடுகள் துருக்கியை வலிமையாக்கியதாகச் சொல்வதை எப்படி ஏற்பது? எர்டோகன் மதச் சார்பின்மையை வெறுக்கிறார்; இந்த மதச்சார்பின்மை இஸ்லாத்தை மட்டும் விமர்சனம் செய்கிறது என்று அவர் கூறுகிறார்; இந்தியாவில் மோடியும் அதைத்தான் சொல்கிறார். மோடியின் மதச்சார்பின்மை மீதான தாக்குதல் இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பரசியலைக் கட்டமைக்கும்போது துருக்கியில் எர்டோகனின் அரசியலை எப்படி கணக்கில் எடுத்துக்கொள்வது? எர்டோகனின் நடவடிக்கைகள் சர்வாதிகாரமாய் இருந்தாலும் துருக்கியர்கள் அவற்றை அனுமதிக்கிறார்கள். இதுபோன்ற செய்திகளை எழுதும்போது இந்தியாவில் இது எவ்விதமாக வாசிக்கப்படும் என்ற எச்சரிக்கையை நூலாசிரியர் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்.
கிலாஃபத் அடிப்படையில் எர்டோகனின் சில நடவடிக்கைகள் மெச்சப்படுகின்றன. அவர் இஸ்லாமிய நாடுகளின் பிரச்சினைகளில் கவனம் செலுத்தியிருக்கிறார்; ரோஹிங்கியா முஸ்லிம்களை நேரடியாகச் சந்தித்துப் பேசியிருக்கிறார்; துனீசியாவில் அரசுக்கெதிராக வெடித்த அரபு வசந்தத்தை வரவேற்றிருக்கிறார். முன்பு சவூதி அரசுடன் கொண்டிருந்த இறுக்கத்தைத் தளர்த்தும் முயற்சியிலும் அவர் இறங்கியிருப்பதாகச் செய்தி வருகிறது. சவூதி அரசைக் கடுமையாக விமர்சனம் செய்துவந்த அந்நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கஷோகியை இஸ்தான்புல்லிலிருந்த சவூதித் தூதரகம் சில ஆண்டுகளுக்கும் முன் கொன்றது. அது சவூதிக்குச் சர்வதேசரீதியில் கடும் நெருக்கடியைக் கொடுத்திருக்கிறது. அமெரிக்காவும் இவ்வழக்கில் சவூதிக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. அப்படிப்பட்ட அவ்வழக்கைத் துருக்கியிலிருந்து இப்போது சவூதிக்கு மாற்றிக்கொடுத்திருக்கிறார் எர்டோகன். இதன்மூலம் சவூதி தனக்குகப்பான முறையில் தனக்குத் தானே நிரபராதிக்கான தீர்ப்பை வழங்கிக்கொள்ளும். இவ்வாறு சில விஷயங்களில் விட்டுக்கொடுப்பதும் உரிமையெடுத்துக்கொள்வதுமாகப் பின்வாங்கியிருக்கிறார் எர்டோகன்; அல்லது நீக்குப்போக்குடன் ராஜதந்திரமாக நடந்துகொள்ளப் பார்த்திருக்கிறார். இருந்தபோதும் அதே இஸ்லாத்தைச் சேர்ந்த குர்துக்களின் இனப்பிரச்சினையை மட்டும் எர்டோகனால் இஸ்லாத்தின் அடிப்படையில் தீர்க்க முடியவில்லை. குர்துக்களின் பிரச்சினைதான் துருக்கியின் பெரிய தலைவலியான பிரச்சினை என்று சொல்கிறார் நூலாசிரியர். இஸ்லாத்தின் மேன்மைமிகுப் பண்பாக இருப்பது, இனவாதத்திற்கு எதிரான அதன் கொள்கைதான்; மேலும் ஒரே சமுதாயம் (உம்மத்). இதில் இஸ்லாத்தின் அடிப்படையில் எர்டோகன் செயல்பட அப்படியென்ன சிக்கல்?
பலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் கொடும் தாக்குதல் நடந்துவருவதும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் உட்பட ஆண்களும் பெண்களுமாய்க் கொல்லப்பட்டுவருவதும் நடந்துவருகின்றன. கலீஃபா ஆட்சிமுறைக்காகத் துருக்கியில் தீரமாகப் போராடிவரும் எர்டோகன் பலஸ்தீன விவகாரத்தில் யாதொரு ராஜதந்திர முயற்சியிலும் ஈடுபடவில்லை; அவரிடம் கோபம் இருக்கிறது. முஸ்லிம் நாடுகளை ஒரே குடைக்கீழ் கொண்டுவர அவரால் முடியவில்லை. இஸ்ரேலுக்கு எதிராகத் தன் ஐரோப்பியக் கண்டத்தின் நாடுகளையும் திரட்ட முடியவில்லை. ஜெர்மனி சென்று அதன் அதிபரைச் சந்தித்தபோது, கடும் எதிர்ப்புகள் அவருக்கு. எதையும் ஆதரவாகத் திரட்ட முடியாமல் திரும்புகிறார். துருக்கியில் அமெரிக்கப் படைத் தளங்கள் உள்ளன. அவற்றை அண்மையில் துருக்கியர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியபோது எர்டோகனின் காவல்துறை தன் சொந்த மக்களின்மீது பலப்பிரயோகம் செய்தது; கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியது. குண்டுக்கட்டாகப் போராளிகளைத் தூக்கிப் போட்டது. காரணம், தன் விருந்தாளியாக அன்றைக்கு வரவிருந்த அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் ஆண்டன் பிளிங்கனை உளம்குளிரவைத்து உபசாரம்செய்து வழியனுப்பிவைக்கவே! போரை நிறுத்தச் சொல்லி வற்புறுத்தவோ, அவ்வாறு மறுத்தால் அமெரிக்கப் படைத் தளங்களைக் காலிசெய்யச் சொல்லவோ முடியாமல் விழிபிதுங்கி நின்றார் துருக்கியின் இஸ்லாமியவாதியான எர்டோகன். ஒருமுறை காசாவின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியபோது, காசாவின் பிரதமர் இஸ்மாயில் ஹானியாவைத் தொலைபேசியில் அழைத்து எர்டோகன் பின்வருமாறு சொன்னார்: என்ன விலை கொடுத்தாவது நாங்கள் உங்களுக்கு உதவுவோம். எங்களில் ஒருவர் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலை வந்தாலும் சரி.” (பக்கம் 148) எர்டோகனைச் சரியாக எடை போட இதுவொன்றே போதும்.
இவரிடமிருந்து கற்றுக்கொள்ளவும் ஏராளம் உள்ளன. ஐம்பதாண்டுகளாக ஊக்கமுள்ள மனிதராக எர்டோகன் போராடி வந்திருக்கிறார். முப்பதாண்டுகளாக அரசியல் களத்தில் நின்று படிப்படியாக மேலேறி வந்திருக்கிறார். பதவியில் இருந்தாலும் இஸ்லாமியப் பண்புகளை விடாப்பிடியாகப் பின்பற்றி வந்துள்ளார்.
வரலாற்றில் மதங்களைப் பயன்படுத்தி மக்களின் உணர்ச்சிகளுக்குப் பின்னால் எர்டோகன் போன்றவர்களும் மறைந்துகொள்வார்கள் என்கிற உண்மை மறுபடியும் அம்பலமாகியிருக்கின்றது.