ஈழக்கூத்தன் தாசீசியஸ்
நாடகர்-ஊடகர்- ஏடகர்
(ஈழக்கூத்தன் ஏ.சீ.தாசீசியஸ்
பவளவிழா மலர் 2016)
வெளியீடு:
தமிழர் கலை பண்பாட்டு நடுவகம்,
சுவற்சலாந்து.
பக். 760
ரூ. 600
முன்னாளில் பிரதம மந்திரியாக இருந்த ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் கொலைப்பட்ட பின்பு (1991 மே 21) இந்திய தமிழருக்கும் ஈழத்தமிழருக்கும் உள்ள உறவு சரிந்து விட்டதாக அக்கால ஊடகங்கள் ஒருமித்த குரலில் வெளிப்படுத்தின. 1983இல் மொத்த தமிழகமும் ஈழத்துக்காகக் குரல் கொடுத்த காலம் போய்விட்டது என்று 1992க்குப் பின் இந்திய தமிழ் ஊடகங்கள் கூறிய காலத்தில்தான் ஈழக்கூத்தனின் நாராய் நாராய் பயணம் தமிழகத்தில் நடந்தது.
1997 மார்ச் 26இல் ஆரம்பித்த நாராய் நாராய் பயணம் பாண்டிச்சேரி, மதுரை, தஞ்சை, விழுப்புரம் என பதினைந்து இடங்களில் தொடர்ந்தது. இந்த இடங்களில் ஈழக்கூத்தன் தயாரித்த நாடகங்கள் நடந்தன. மகாகவியின் புதியதோர் வீடு, மா. சண்முகசுந்தரத்தின் எந்தையும் தாயும், ஈழக்கூத்தனின் பொறுத்ததுபோதும் என்னும் நாடகங்களில் 33 பேர் பங்குபெற்றனர்.
பேராசிரியர் வீ. அரசு இந்த நாடகங்களைப் பற்றிக் கூறும்போது ஈழத்தமிழனுக்கும் இந்திய தமிழனுக்கும் 1991க்குப் பின் ஏற்பட்ட விரிசல், ஊடகங்களால் பெரிதுபடுத்தப்பட்டது. ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் உள்ள உறவில் விரிசலை உருவாக்கியது. அந்தச் சூழ்நிலையில் உண்மையென்று நம்பினோம். ஆனால் அது இல்லையென்பதை இந்த நாடகங்களைப் பார்த்தவர்கள் எதிர்வினையாக்கியபோது தெரிந்தது என்கிறார்.
யாழ்ப்பாணம் தாழையடி என்ற கிராமத்தில் பிறந்த (1940) ஈழக்கூத்தன் என்ற ஏ.சீ. தாசீசியஸ் நாடகாசிரியர், ஊடகவியலாளர், கவிஞர், கட்டுரையாளர், கல்வியாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். இப்போது லண்டனில் வாழ்ந்து வருகிறார். இவரது பள்ளி, கல்லூரிப் படிப்புகள் பேராதனை ஸ்ரீலங்கா, கொழும்பு பல்கலைக்கழகங்களில் நடந்தன. அரங்கக்கலை பற்றிக் கொழும்பு, அக்குவைன்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்றார். லண்டனில் எம்.பில் பட்டம் பெற்றார்.
ஈழக்கூத்தன் ஆரம்பத்தில் மீன்வள அமைச்சகத்தில் மொழிபெயர்ப்பாளராக இருந்தார். பின்னர் கல்வியமைச்சகத்தில் பதிப்பாசிரியர், கல்வி அதிகாரி, கல்லூரிப் பேராசிரியர், இலங்கை வானொலியில் நிகழ்ச்சிப் பொறுப்பாளர், லண்டன் பி.பி.சியில் தமிழ் ஒலிபரப்புநர், ஜெர்மனியில் பாடத்திட்ட உறுப்பினர் எனப் பல பணிகள் செய்தார். இவரது மனைவி விமலா. மக்கள் கவிதா, நிவேதிதா. ஈழத்தில் பணியாற்றியபோது நாடகராக அறியப்பட்டார். பீட்டர் புறுக், ரிச்சட் ஸ்கெச்சலர் போன்றோரிடம் நாடகப் பயிற்சி பெற்றவர். தமிழகத்தில் இராமாநுஜம், ந. முத்துசாமி போன்றோரின் நண்பர்.
அடேல் பாலசிங்கம் எழுதிய Will to Freedom என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார். இவரது குறுநூல்களில் தமிழ் நாடகர்களுக்கு (1994), இரை மீட்டல் (2008 இயல் விருது ஏற்புரை), புலம்பெயர் நாடுகளில் அரங்கக்கலை (1998) ஆகியன முக்கியமானவை. இவை தவிர கவிதைகளும் உண்டு. இவரது நாடகப் பனுவல்கள் ஏன் ஓடுகிறாய், ஒரு கவளம் சோறு, பஞ்சவடிக்காரன், பொறுத்ததுபோதும், கோடை, கந்தன் கருணை, புதிய தொரு வீடு, நாராய் நாராய் என 15க்கும் மேல் உள்ளன.
இந்திய தமிழ் ஆய்வாளர்களிடமும் படைப்பாளி களிடமும் ஈழத்து அறிஞர்கள் பற்றி நல்ல மரியாதை உண்டு. ஆறுமுகநாவலர், விபுலாநந்தர் என்ற வரிசையில் கைலாசபதி, சிவத்தம்பி என அது தொடர்கிறது. ஈழத்துப் போராட்டமும் புலப்பெயர்ச்சியும் ஓர் இடைவெளியை ஏற்படுத்திவிட்டன. இந்த வெளி இந்திய தமிழகத்திற்கு இழப்பு; என்றாலும் புலம்பெயர்ந்தவர்கள் சும்மா இருக்கவில்லை. அவர்களின் நன்கொடை அதிகம்.
இப்படி புலம்பெயர்ந்தவர்களில் ஈழக்கூத்தன் மிகமிக முக்கியமானவர். இவரது 75ஆவது ஆண்டு நிறைவு பவளவிழா (2016) மலர் குறிப்பிடத்தகுந்த ஒன்று. இந்தத் தொகுப்பு இவரைப் பற்றிய பல செய்திகளை வெளிக்கொண்டு வந்துள்ளது. இந்த மலரில் தமிழகத்திலிருந்தும் ஈழத்திலிருந்தும் புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்தும் பலர் எழுதியுள்ளனர். ஆரம்பத்தில் 28 கட்டுரைகள் இவரைப்பற்றி விரிவாகப் பேசுகின்றன. ஈழக்கூத்தனின் அரங்க ஆற்றுகை அனுபவங்கள், அரங்க நினைவுகள் பற்றிப் பதின்மூன்று பேரின் கட்டுரைகள் உள்ளன. ஈழக்கூத்தனின் நேர்காணல்கள் 5, பேச்சுகள்- எழுத்துக்கள் 5, பாடல்கள் 14, நாடகப் பனுவல்கள் 9 ஆகியனவும் இத்தொகுப்பில் உள்ளன. இவை ஒட்டுமொத்தமாக ஈழக்கூத்தனை அடையாளம் காட்டுகின்றன.
அபாரமான கற்பனையும் ஆற்றலும் கடின உழைப்பும் விடாமுயற்சியும் கொண்ட ஆளுமை ஈழக்கூத்தன் என்கிறார் மவுனகுரு. நூலின் இறுதியில் ஈழக்கூத்தனின் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் உள்ளன.
மின்னஞ்சல்: perumalfolk@gmail.com