சுந்தர ராமசாமியின் நினைவுகளில் துலங்கும் எழுத்தாளர்கள்
சு.ரா. என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் சுந்தர ராமசாமி (1931-2005), நவீன தமிழின் மகத்தான இலக்கியப் படைப்பாளர்களுள் ஒருவர். கவிதை, புனைகதை, உரைநடை, மொழியாக்கம், இதழ்ப்பணி, சொற்பொழிவு, இலக்கியக் கூடுகை எனத் தான் தெரிவுசெய்துகொண்ட அனைத்து இலக்கியச் செயல்பாடுகளிலும் நூறு சதவீத உழைப்பைச் செலுத்தியவர். தன்னையே கடந்து கடந்து முழுமையைத் தேடியவர். கறாரான இலக்கிய விமர்சகர். தன் இருபதாவது வயதில் புதுமைப்பித்தனுக்கு இலக்கிய மலர் வெளியிட்டுத் தமிழ் இலக்கிய உலகிற்குள் நுழைந்தவர். சொந்தமாக வருமானம் ஈட்டாத அந்த வயதில், புதுமைப்பித்தன் குடும்பத்திற்குத் தன்னாலான உதவியைச் செய்துவிடத் துடித்த அந்த மனம்தான் இறுதிமூச்சுவரை சு.ரா.வை இலக்கியத்தில் இயங்க வைத்தது. இளம் வயதிலிருந்தே இலக்கியவாதிகளைத் தேடித் தேடிப் பார்த்திருக்கிறார். இளம் பிராயத்து உடலின் நொய்ம்மையை மீறி இவரது இலக்கியச் செயல்பாடு அமைந்திருக்கிறது. அப்பாவின் கண்டிப்பும் அம்மாவின் அன்பும் சு.ரா.வின் இளமைக்கால வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. நவீன இலக்கியம் குறித்து விரிவாக அறிந்துகொள்வதற்கும் உரையாடுவதற