மாறிவரும் தீபாவளியும் மாறாத அரசியலும்
தமிழக முதல்வர் தீபாவளி வாழ்த்துச் சொல்லாதது இந்த ஆண்டும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லும் திமுக முதலமைச்சர்கள் தீபாவளி போன்ற இந்துப் பண்டிகைகளுக்கு ஏன் வாழ்த்துச் சொல்வதில்லை என்று இந்துத்துவ இயக்கங்கள் நெடுநாட்களாகவே கேள்வி எழுப்பிவருகின்றன. பொதுவெளியில் இந்துத்துவச் சொல்லாடல்களும் இந்துத்துவ அரசியல் கதையாடல்களும் பரவிவரும் இன்றைய சூழலில் இந்தக் கேள்வி பரவலாக முன்வைக்கப்பட்டதில் வியப்பில்லை. மதச்சார்பற்ற அரசின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் மதம் சார்ந்த எந்தப் பண்டிகைக்கும் வாழ்த்துச் சொல்லக் கூடாது என்னும் பார்வை இருக்கிறது. ஜனநாயக அமைப்பில் மக்கள் பிரதிநிதிகளாக ஆட்சி நடத்தும் தலைவர்கள் மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் கொண்டாட்டங்களுக்கு வாழ்த்துச் சொல்வதில் தவறில்லை என்னும் பார்வையும் இருக்கிறது.
வாழ்த்துச் சொல்வது, சொல்லாமல் இருப்பது ஆகியவற்றுக்குப் பின்னால் இருக்கும் அளவுகோல் சீரானதாக இருக்க வேண்டும் என்ற வாதத்தில் நியாயம் இருக்கிறது. அனைத்து மக்களுக்குமான ஆட்சியின் பொறுப்பில் இருப்பவர்கள் இதில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். ஆனால் திமுகவைப் பார்த்து இப்படிக் கேள்வி எழுப்பும் இந்து இயக்கங்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களோ ஒன்றிய பாஜக அரசின் பிரதமரோ அமாவாசை, பவுர்ணமிக்குக்கூட வாழ்த்துச் சொல்வதையும் கிறிஸ்துமஸ், ரம்ஜான் ஆகிய பண்டிகைகளின்போது மௌனம் காப்பதையும் இயல்பாக எடுத்துக்கொள்கின்றன. மத அடையாளம் சார்ந்த அடிப்படையிலான அரசியலை நடத்துபவர்கள் அப்படித்தான் நடந்துகொள்வார்கள் என்றாலும் அவர்களுக்கு இவ்விஷயத்தில் மற்றவர்களைக் கேள்வி கேட்க எந்த உரிமையும் இல்லை. அனைத்து மதங்களையும் சமமாக மதிப்பவர்கள் எழுப்ப வேண்டிய கேள்வி இது. அத்தகைய சிலர் மனதிலாவது இந்தக் கேள்வி எழுந்திருக்கும் என்பதால் இது விவாதத்திற்குரியதாகிறது.
ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லும் திமுக தலைவர்கள் பொங்கல் பண்டிகைக்கு வாழ்த்துச் சொல்லத்தான் செய்கிறார்கள். ஆனால் பொங்கல் விழாவை இந்துப் பண்டிகை என்பதாக அல்லாமல் தமிழர் திருநாளாகக் கருதியே வாழ்த்துச் சொல்வார்கள். ஆயுத பூஜைக்கும் தீபாவளிக்கும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் உள்ளிட்ட அனைத்து முதல்வர்களும் வாழ்த்துச் சொல்லும்போது திமுக தலைவர்கள் வாழ்த்துச் சொல்வதில்லை. விதிவிலக்காகத் திமுகவின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் சிலர் வாழ்த்துச் சொல்வதுண்டு. எடுத்துக்காட்டாக, பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் தமிழகத்தின் நிதியமைச்சராக இருந்தபோது ஸ்டாலின் படத்தைப் பிரதானப்படுத்தி தீபாவளி வாழ்த்துச் சொன்னார். அந்த வாழ்த்துச் செய்தியில் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் படங்களும் இடம்பெற்றிருந்தன.
கடவுள் மறுப்புக் கொள்கையைத் தன் அடிப்படையாகக் கொண்டது திராவிடர் கழகம். திமுகவோ ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பதைத் தன் கொள்கையாக அறிவித்த கட்சி. எனவே கடவுள் மறுப்பு அதன் அதிகாரப்பூர்வமான கொள்கை அல்ல என்றாலும், மதத்தை ஏற்பதாக அது எங்குமே என்றுமே சொன்னதில்லை என்பதால் எல்லா மதம் சார்ந்த பண்டிகைகளிலிருந்தும் அது விலகியிருந்தால் அதில் குறைகாண இடமில்லை. எனினும், கிறிஸ்தவ, இஸ்லாமியச் சமயங்களின் பண்டிகைகளின்போது வாழ்த்துச் செய்திகளை வெளியிடும், பல சமயங்களில் அப்பண்டிகை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் திமுக தலைவர்கள் ஆயுத பூஜைக்கும் தீபாவளிக்கும் ஏன் வாழ்த்துச் சொல்வதில்லை என்னும் கேள்வி எழத்தான்செய்யும். அதே நேரம் ஸ்டாலின் ஆட்சியில் பல அமைச்சர்கள் இந்து மதம் சார் நிகழ்ச்சிகள் பலவற்றிலும் பங்கேற்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.
திமுகவினர் இந்து மதம் சார்ந்த நிகழ்வுகளில் கலந்துகொள்வதோ கோயில்களுக்குச் செல்வதோ ஒருகாலத்தில் நினைத்துப்பார்க்கக்கூட இயலாதவையாக இருந்தன. திமுகவின் ஆதரவாளர்கள், தொண்டர்கள் மத்தியில் மட்டுமின்றித் தலைவர்கள் மட்டத்திலும் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் உண்டு என்றாலும் தலைவர்கள் அதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்வது மிகவும் அரிதாகவே இருந்தது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் அந்த நிலை மாறிவிட்டது. திமுக தலைவர்களின் குடும்பத்தினர் மட்டுமின்றித் தலைவர்களேகூட ஊரறியக் கோயிலுக்குச் செல்வது வழக்கமாகிவருகிறது. திமுக இந்துக்களுக்கு விரோதமான கட்சி அல்ல என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அவ்வப்போது தெளிவுபடுத்திவருகிறார். இந்நிலையில் இந்துக்கள் பெருமளவில் கொண்டாடும் பண்டிகைக்கு வாழ்த்துச் சொல்வதில் திமுக தலைவர்களுக்கு இருக்கும் தயக்கம் விவாதிக்கப்பட வேண்டும்.
தீபாவளிப் பண்டிகைக்குப் பின்னாலுள்ள கிருஷ்ணன்-நரகாசுரன் கதையை ஆரிய-திராவிட மோதலாகவும் கிருஷ்ணனின் வெற்றியைத் திராவிடர்களை ஒடுக்கிய ஆரியச் செயல்பாடாகவும் வாசிக்கும் திராவிட இயக்கப் பார்வை உள்ளது. இதன் அடிப்படையில் அதை வழக்கமான பண்டிகையாகவும் கொண்டாட்டமாகவும் பார்க்க முடியாது என்ற வாதம் முன்வைக்கப்படலாம். திராவிட இயக்கத்தின் அடிப்படைகளில் ஒன்று ஆரியப் பண்பாட்டுக்கும் மேலாதிக்கத்துக்கும் எதிரான அதன் பார்வை என்னும் நிலையில் இந்த வாதத்தைப் புறக்கணிக்க முடியாது. ஆனால் இந்த வாசிப்பின் அடிப்படையில் கிருஷ்ண-நரகாசுரன் தொடர்பான புராணக் கதையை ஆரிய-திராவிட இன மோதலின் குறியீடாகக் காண்பதை ஒரு தரப்பினரின் பார்வை என்று எடுத்துக்கொள்ளலாமே தவிர, வரலாற்று உண்மையாகக் கொள்ள முடியாது. தீபாவளியைக் கொண்டாடுபவர்களில் கிருஷ்ணன்-நரகாசுரன் கதையை மனதில் கொள்பவர்கள் கிருஷ்ணனை ஆரியனாக அல்லாமல் தெய்வமாகவும் நரகாசுரனைத் திராவிடனாக அன்றித் தீய சக்தியாகவும்தான் பார்க்கிறார்கள். இதை ஆரிய-திராவிட மோதலின் குறியீடாகக் காணும் உரிமை திமுகவுக்கு உண்டு. ஆனால் மக்களின் கொண்டாட்டம் அதன் அடிப்படையில் அமைவது அல்ல. கடந்த ஆண்டு தீபாவளிக்கு வாழ்த்துச் சொன்ன பழனிவேல்ராஜன் “தீப ஒளித் திருநாளுக்கு” வாழ்த்து என்றுதான் குறிப்பிட்டார். கிருஷ்ணனையோ நரகாசுரனையோ அல்ல. தீபாவளியன்று பொதுவெளிகளிலும் வாட்ஸப்களிலும் குவியும் வாழ்த்துக்களில் ஒன்றுகூட நரகாசுரனைப் பற்றிக் குறிப்பிடுவதில்லை.
தவிர, தீபாவளிக்கான காரணம் இந்தியா முழுவதும் மாறுபடுகிறது. தமிழகத்தில் நரகாசுரன் வதத்தை வைத்துக் கொண்டாடுகிறார்கள் என்றால், வடக்கில் ராமன் வனவாசத்தை முடித்துவிட்டு அயோத்தி திரும்பிய நாளாகக் கொண்டாடுகிறார்கள். மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் வெவ்வேறு காரணங்கள் உள்ளன. எனவே கிருஷ்ணன்-நரகாசுரன், ஆரிய-திராவிடம் என ஒற்றைச் சிமிழுக்குள் இதை அடைக்க முடியாது.
தமிழக தீபாவளிக்கும் கிருஷ்ணன் - நரகாசுரன் கதைக்கும் தொடர்பு இருந்தாலும் இந்துப் பண்டிகைகள் பலவற்றில் காணப்படும் வைதீகக் கூறுகள் இதில் கிட்டத்தட்ட இல்லை. பிள்ளையார் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, ராம நவமி போன்ற பண்டிகைகளுக்கு இருப்பதுபோலத் தீபாவளிக்கென்று குறிப்பான பூஜை முறைகளோ மந்திரங்களோ சடங்குகளோ இல்லை. பெரும்பான்மைத் தமிழர்கள் வீடுகளில் தீபாவளி அன்று அசைவம் சமைக்கப்படுகிறது. தீபாவளி கொண்டாடப்படும் விதம் காலப்போக்கில் பலவிதமாக மாறிவந்திருக்கிறது. தமிழகத்தில் இன்று அது ஒரு நவீனகாலப் பெருங்கொண்டாட்டத்துக்கான அனைத்துக் கூறுகளையும் கொண்ட வெகுமக்கள் திருவிழாவாக உள்ளது. வணிகம், உணவு, இனிப்புகளைப் பகிர்ந்துகொள்ளுதல், பயணம், உறவினர்களைச் சந்தித்தல், வாண வேடிக்கைகள், திரைப்படங்கள் என அது வெகுமக்கள் விழாவுக்கான எல்லாக் கூறுகளையும் கொண்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் டாஸ்மாக் விற்பனையில் சாதனை படைக்கும் அளவுக்கு மது தாராளமாகப் புழங்குகிறது. அதை வணிகர்களின் திருவிழா என்றுகூட வரையறுக்க முடியும். கிட்டத்தட்ட அனைத்துச் சாதியினரும் அனைத்து வட்டாரங்களைச் சேர்ந்தவர்களும் இதைக் கொண்டாடுகிறார்கள். மதச்சிறுபான்மையினரையும் கொண்டாட்டத்தில் இணைத்துக்கொள்ளும் விழாவாகவே இது இன்று திகழ்கிறது. சாதி, வட்டார அடிப்படையில் தீபாவளி கொண்டாட்ட முறைகளில் வேறுபாடுகள் இருப்பது அதில் தமிழக மக்களால் உள்வாங்கப்பட்டுத் தமக்கேற்பத் தகவமைக்கப்பட்டிருப்பதன் சான்று. பெருமளவில் மதம் கடந்த பண்டிகையாக அல்லது மத அடையாளம் நீக்கப்பட்ட பண்டிகையாக தீபாவளி இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் வெகுமக்கள் இயக்கமான திமுக தீபாவளிக்கு இந்தக் கண்ணோட்டத்தில் வாழ்த்துச் சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்?
தீபாவளியை ஒட்டித் தமிழகம் முழுவதும் மக்கள் பயணம் செய்கிறார்கள். ரயில்களும் பேருந்துகளும் நிரம்பி வழிகின்றன. இதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும் அரசு சிறப்புப் பேருந்துகளை இயக்குகிறது. ஆரிய மேன்மையைக் கொண்டாடும் பண்டிகை என்று சொல்லிப் பயணம் செய்யும் மக்களைப் பரிதவிக்க விடுவதில்லை. இந்த ஆண்டு தீபாவளி ஞாயிற்றுக்கிழமையன்று வந்துவிட்டதால் பொது விடுமுறையில் ஒரு நாள் குறைந்துவிட்டது. இதை ஈடுகட்டத் தீபாவளிக்கு அடுத்த நாளைப் பொது விடுமுறையாகத் தமிழக அரசு அறிவித்தது. மக்களின் உணர்வுகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மதிப்பளித்தே அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது.
மக்கள் மாறிவருகிறார்கள். அவர்களில் பலர் புராணக் கதைகளில் நம்பிக்கை கொண்டிருந்தாலும் அந்தக் கதைகளோடு காலத்தில் உறைந்து நிற்கவில்லை. உயிரோட்டத்துடன் தங்கள் பண்பாட்டுக் கூறுகளையும் வாழ்க்கை முறைகளையும் தொடர்ந்து புதுப்பித்துவருகிறார்கள். இத்தகைய சமுதாயத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் பழைய முழக்கங்களைக் கடந்து வந்து மாறிவரும் சமுதாயத்திற்கு ஏற்பத் தம்மைத் தகவமைத்துக்கொள்வதே சிறப்பு.