புதிய சட்டங்கள்: உரிமைப் பறிப்பின் பரிணாம வளர்ச்சி
இந்தியாவிலுள்ள மூன்று கிரிமினல் சட்டங்களை மாற்றிப் புதிதாக மூன்று சட்டங்களை பாஜக அரசு பிறப்பித்திருக்கிறது. கடந்த ஆட்சிக் காலத்தின் இறுதிக் கட்டத்தில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட இந்தச் சட்டங்கள் இந்த ஆண்டு ஜூலை 1 முதல் அமலுக்கு வந்திருக்கின்றன.
• 1860ஆம் ஆண்டின் இந்திய தண்டனைச் சட்டம் (IPC). இந்தச் சட்டம் தற்போது பாரதீய நியாய சன்ஹிதா (BNS) என்ற சட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
• 1973ஆம் ஆண்டின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்கு (CrPC) பதிலாக பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) என்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
• 1872ஆம் ஆண்டின் இந்திய சாட்சியச் சட்டம் (IE Act) பாரதீய சாக்ஷிய அதினியம் (BSA) என்ற சட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்தச் சட்டங்களை மனித உரிமைகளின் நோக்கிலும் இதர கோணங்களிலும் பலர் விமர்சித்துவருகிறார்கள். பல்வேறு மொழிகள் புழங்கிவரும் இந்தியாவில் சமஸ்கிருதமயமான இந்தியில் சட்டங்களுக்குப் பெயர்சூட்டியிருப்பது பரவலான கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. பெயர்களை மட்டுமின்றிச் சட்டத்தின் பல்வேறு அம்சங்களுக்கும் எதிர்க்கட்சியினர், வழக்கறிஞர்கள், சிவில் உரிமைக் குழுவினர் எதிர்ப்புத் தெரிவித்துவருகிறார்கள்.
முதலாவதாக, இந்தச் சட்டங்கள் இந்திய அரசியலமைப்பின் கூட்டுப் பட்டியல் 3இல் இடம்பெறுவதால் மாநில அரசுடன் விரிவான ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அப்படி ஏதும் நடக்காமல் மாநிலங்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க வாய்ப்பு வழங்காமல் இச்சட்டங்கள் இயற்றப்பட்டிருப்பதாகத் தமிழ்நாடு அரசு கூறுகிறது. இச்சட்டங்களின் பல பிரிவுகள் தெளிவற்றவையாகவும் முரண்பாடுகளுடன் இருப்பதாகவும் அது கூறுகிறது.
“இந்தச் சட்டங்களை நாடாளுமன்றத்தில் கொண்டுவருவதற்கு அரசு அவசரப்பட்ட விதமும், அவசரமாக அமல்படுத்திய விதமும் ஜனநாயகத்தில் விரும்பத்தக்கது அல்ல. இந்தச் சட்டங்கள் போதுமான அளவு விவாதிக்கப்படவில்லை. நாடாளுமன்றக் குழுவில் அல்லது அவையில் விரிவாக விவாதிக்கப்படவில்லை, தொடர்புடைய அனைவரிடமும் எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை” என்று முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான அஷ்வினி குமார் குறிப்பிட்டுள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பு கடந்த மார்ச் மாதத்தில் மக்களவையில் 25 சதவீத உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நேரத்தில், விவாதத்தில் பங்கேற்க வாய்ப்பில்லாத நேரத்தில் இந்த மூன்று சட்டங்களும் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டன. இந்தச் சட்டத்துடன் தொடர்புடைய பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை எதுவும் நடக்கவில்லை.
தனக்கு வேண்டிய விஷயங்களில் காட்டும் அவசர அதிரடித்தன்மையும் தன்னிச்சையான போக்கும் பாஜகவின் முதல் இரண்டு ஆட்சிக் காலங்களின் முத்திரைகளாக இருந்தன. தற்போது தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் இதுபோன்ற சட்டங்களை அது எப்படிப் பயன்படுத்தப்போகிறது என்பதும் அரசுக்கு ஆதரவளிக்கும் கட்சிகள் அவற்றை எப்படி எதிர்கொள்ளப்போகின்றன என்பதும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியவை.
18 வயதுக்குட்பட்ட சிறுமிக்கு இழைக்கப்படும் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டப் பிரிவு, சிறு குற்றங்கள் புரிவோரைச் சமூகப் பணிகளில் ஈடுபடுத்தும் சட்டப் பிரிவு, நாட்டின் எந்த ஒரு காவல் நிலையத்திலும் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யும் வசதி, கைது அல்லது நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தும்போது தொடர் குற்றவாளிகளுக்கும் கொடூரமான குற்றவாளிகளுக்கும் மட்டுமே கைவிலங்கு இட அனுமதி, விளக்கமளிக்காமல் காவல் துறையினர் ஒருவரை 24 மணிநேரத்திற்கு மேல் விசாரணையில் வைத்திருக்கத் தடை, சோதனைகள், பறிமுதல்களைக் காணொளி வாயிலாகக் காட்சிப்படுத்துவது கட்டாயம், ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாகப் பொய்யான வாக்குறுதியளித்து அவருடன் உடலுறவில் ஈடுபட்டால் 10 ஆண்டுச் சிறைத் தண்டனை, நீதிமன்ற நடைமுறைகளைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடித்தல், விசாரணை முடிந்து 45 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்குவதை உறுதிசெய்வது உள்ளிட்ட பல்வேறு முக்கியமான அம்சங்கள் இந்தப் புதிய சட்டங்களில் இடம்பெற்றிருக்கின்றன.
அதேசமயம் கடுமையான விமர்சனங்களுக்குரியவையும் இடம்பெற்றிருக்கின்றன. குறிப்பாக, புதிய சட்டங்கள் காவல் துறையினருக்கு ஏகபோக அதிகாரத்தை வாரிவழங்கியிருக்கின்றன. முன்பு காவல் துறையினர் ஒருவரைக் கைதுசெய்தால், 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தை அணுகிக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்க வேண்டும். இப்போது 15 நாட்கள் கெடு 60 நாட்களாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. முன்பு ஒரு குற்றம் நடந்தால் காவல் துறை உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யும். புதிய சட்டமோ முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்ய 14 நாட்கள் காவல் துறையினருக்கு அவகாசம் வழங்குகிறது. குற்றம் நடந்திருக்கிறதா என்று உறுதிசெய்ய காவல்துறை 14 நாட்களை எடுத்துக்கொள்ள பிஎன்என்எஸ் வாய்ப்பு வழங்குகிறது. ஆகவே, 14 நாட்கள்வரை முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்யாமல் இருக்க முடியும். இது குற்றம் சாட்டப்பட்டவருக்கான உரிமையை மீறும் செயலாகும்.
காவல் துறை உயரதிகாரியே ஒருவரைப் பயங்கரவாதக் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யலாம். “குற்றம்சாட்டப்பட்டவருக்கு மின்னஞ்சல் அனுப்புவது, விவாதிப்பது, ஒரு தேநீர் அருந்துவது போன்றவற்றைக்கூட இந்தச் சட்டத்தின்படி குற்றமாகக் காண்பிக்க முடியும்” என்று கர்நாடக மாநிலத்தின் முன்னாள் அரசு வழக்கறிஞரான பி.டி. வெங்கடேஷ் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
பயங்கரவாதச் சட்டப் பிரிவுகளின் கீழிருந்த கடுமையான பிரிவுகள், குற்றவியல் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. முன்பு உபா (UAPA) ) சட்டப் பிரிவுகளின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள்தான் தாங்கள் நிரபராதி என்பதை நிரூபிக்க வேண்டும். இப்போது புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் அரசுக்கு எதிராகச் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டாலே, குற்றம்சாட்டப்பட்டவர்கள்தான் தாம் நிரபராதி என்பதை நிரூபிக்க வேண்டும். “சாதாரண போராட்டங்களைக்கூட அரசுக்கு எதிரான செயல்பாடாகக் காட்டி ஒருவரைக் கைதுசெய்ய முடியும்,” என்று உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் குறிப்பிட்டிருக்கிறார்.
தேசத்துரோகம் (Sedition) என்னும் குற்றம் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக, ‘இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருங்கிணைப்புக்குத் தீங்கு விளைவிப்பது’ குற்றமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இறையாண்மை, ஒற்றுமை, ஒருங்கிணைப்புக்குத் தீங்கு விளைவிக்கும் செயல்கள் பற்றிய தெளிவான வரையறைகள் இல்லாத நிலையில் இந்தச் சொற்களை ஆட்சியாளர்கள் தமது மனம்போல விளக்கமளித்துக்கொண்டு நடவடிக்கை எடுக்கலாம். இதன்மூலம் எதிர்க் கருத்துக்களை முடக்கலாம். “தேசத்துரோகம் தொடர்பான பிரிவையே வேறு பெயரில் இன்னும் கடுமையாகக் கொண்டுவந்திருக்கிறார்கள். தேசத்துரோகத்திற்கு இதற்கு முன்பு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படலாம். இப்போது அதிகபட்சமாக ஆயுள்தண்டனைவரை விதிக்கப்படலாம்” என்றும் ஹரி பரந்தாமன் கூறுகிறார்.
புதிய சட்டங்கள் காவல் துறைக்குக் கூடுதல் அதிகாரங்கள் தருகின்றன. முன்பு காவல் துறை கைதுசெய்யும்போது எவ்விதப் பலப்பிரயோகமும் செய்யக் கூடாது என்று இருந்தது. தற்போது அந்தக் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. காவல் துறை விரும்பினால், விசாரணைக்கு முன்பே சொத்துக்களை முடக்கவும் முடியும்.
புதிய குற்றவியல் சட்டத்தில், பாலியல் குற்றத்தை இரு பாலினத்தினருக்கும் பொதுவானதாக்க வேண்டுமென கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் இந்தச் சட்டம் முன்பைப் போலவே பெண்களுக்கு எதிரான குற்றமாக மட்டுமே அதனைக் கருதுகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் உள்பட அனைவரது அடிப்படை மனித உரிமைகள்மீதான அக்கறை, கருத்துச் சுதந்திரத்திற்கு மதிப்பளித்தல் ஆகியவை நாகரிகத்தில் முதிர்ச்சி அடைந்த அரசுகளிடம் எதிர்பார்க்கப்படுகின்றன. பாஜக அரசு இவற்றுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை இந்தப் புதிய சட்டங்கள் காட்டுகின்றன. காவல் துறையினருக்கு மட்டுமீறிய அதிகாரம் அளிப்பது அந்த அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கே வழி வகுக்கும் என்பது எளிமையானதொரு உண்மை. இறையாண்மை என்னும் பெயரால் மாற்றுக் கருத்துக்களை முடக்குவது மாற்றுக் கருத்துக்களின் பேரில் ஒவ்வாமைகொண்ட பாஜகவுக்கு மிகவும் உதவிகரமான அரசியல் ஆயுதமாகவே அமையும். முதல் தகவல் அறிக்கை, விசாரணைக் காலம் ஆகியவற்றுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பது காவல் துறையினரின் அதிகாரத்தை மேலும் கூட்டுகிறது சாமானிய மக்களின் உரிமைகளையும் சட்டப்படி அவர்கள் பெறக்கூடிய பாதுகாப்பையும் மேலும் குறைக்க உதவுகிறது.
புதிய சட்டங்கள் காவல் துறைக்கு அதிக அதிகாரம் தருவது, குற்றம் சுமத்தப்பட்டவருக்கான உரிமைகளைக் கூடுதலாகப் பறிப்பது, எளிதில் ஒருவர்மீது குற்றம் சுமத்துவது, விசாரணை நடைமுறைக்ளைக் கடுமையாக்குவது முதலான அம்சங்களைக் கொண்டுள்ளது தெரிகிறது. ஏற்கெனவே உள்ள அடக்குமுறைச் சட்டங்களுக்கும் நடைமுறைகளுக்கும் துணைபுரியும் இந்தச் சட்டங்களைக் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் போக்கின் பரிணாம வளர்ச்சியாகவே காண முடிகிறது.
இத்தகைய சட்டங்களை அறுதிப் பெரும்பான்மை இருந்தபோது விவாதமின்றி நிறைவேற்றியதே அரசின் உள்நோக்கத்தைக் காட்டுகிறது. ஜூலை 1 முதல் இதை அமல்படுத்தும் உத்தரவு வெளியானதையடுத்து எதிர்க்கட்சிகள் இந்தச் சட்டங்களை நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தீவிரமான விவாதப் பொருளாக ஆக்கியிருக்க வேண்டும். தற்போது கூடுதல் வலிமையுடன் இருக்கும் எதிர்க்கட்சிகள் இந்தச் சட்டங்களைத் தீவிர விவாதத்திற்கு உட்படுத்தாமல் இருப்பது, குற்றம்-தண்டனை தொடர்பாக எல்லா அரசியல் கட்சிகளின் அணுகுமுறையும் ஏறத்தாழ ஒன்றுதான் என்னும் எண்ணத்தையே வலுப்படுத்தும். இந்நிலையில் மனித உரிமை அமைப்புகளும் ஊடகங்களும் எதிர்ப்புக் குரல் எழுப்புவதில் முக்கியப் பங்காற்ற வேண்டும். நீதிமன்றங்கள் உள்படச் சாத்தியமான அனைத்து மட்டங்களிலும் இந்தச் சட்டங்களுக்கான எதிர்ப்பை முன்னெடுப்பதே மனித உரிமைசார்ந்த உண்மையான அக்கறையின் வெளிப்பாடாக இருக்கும்.