நானா பயங்கரவாதி?
அண்மைக் காலங்களில் எழுத்துரிமை, பேச்சுரிமை, கருத்துரிமை போன்ற அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு அரசுகள், அடிப்படைவாத அமைப்புகள், தனிமனித உதிரிக் குழுக்களிடமிருந்து ஒருவித வேறுபாடுகளும் இன்றித் தொடர்ந்து எதிர்ப்புகள் உருவாகி வருகின்றன; இது புதிதில்லை. காலங்காலமான ஜனநாயக மறுப்பின் தொடர்ச்சிதான் இது. இப்போக்கு சுதந்திரச் செயற்பாடுகளையும் உரையாடல்களையும் முடக்கும், அதன் குரல்வளையை நெரிக்கும் நோக்கம் கொண்டது. இந்தப் போக்குகள் இனம், மதம், சாதி, பால் அடையாளங்களைத் தேர்ந்தெடுத்து எதிர்ப்பவையல்ல; தான் நம்பும் கருத்தைத் தவிர மற்றைய கருத்துகளை அழித்தொழிக்கும் சர்வாதிகாரப் பண்பாட்டிலிருந்து ஜனநாயக மரபைத் தகர்ப்பதற்கு முயற்சி செய்பவை. இலங்கையில் அஹ்னாப் ஜஸீம், சிங்கள மேடை நாடக நகைச்சுவை நடிகை நடாஷா ஆகியோர் கைது செய்யப்பட்டமையும் ஜெனார்த்தன், டேனியல், ஜெனாத் ஆகிய இளம்படைப்பாளிகள் எதிர்ப்புக்கும் கண்டனத்துக்கும் உள்ளானதையும் பாரிஸில் தமிழ்த் தேசியக் கருத்தியலை விமர்சித்ததற்காகப் பெண்ணொருவர் தாக்கப்பட்டமையும் என இந்த வன்முறைகள் விரிந்துகொண்டே செல்வது அச்சமளிக்கிறது. தற்போது இலங்கை அரசின் இந்தத் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பவர் கவிஞர், நாவலாசிரியர் தீபச்செல்வன்.
- பொறுப்பாசிரியர்
இலங்கையைப் போலப் போரால் உருக்குலைந்த நாட்டில் இலக்கியம் வழியாகவும் தேசத்தையும் மனங்களையும் கட்டியெழுப்ப முடியும். போரால் நிர்மூலமாக்கப்பட்ட ஈழ மண்ணில் இலக்கிய வழியான உரையாடல், வாழ்தலுக்கும் தேடலுக்குமான பெருவெளியை உண்டுபண்ணுகின்றன. 2009இல் முள்ளிவாய்க்கால் இனவழிப்புடன் இலக்கியக் குரல்கள் பலவும் மெளனமாகிவிட்ட சூழலில் பல படைப்பாளிகள் புலம்பெயர்ந்துதான் போரைப் பேசத் தலைப்பட்டார்கள். நாட்டில் வாழ்ந்துகொண்டு, நடந்த போரைப் பற்றியும் தொடரும் இன ஒடுக்குமுறைபற்றியும் பேசுவது ஆபத்து மிக்கதாகவே கருதப்பட்டது. ஒருவகையில் தற்கொலைக்குச் சமனான முயற்சியே அது. எனினும் சில படைப்பாளிகள் அந்த ஆபத்தான பயணத்தில் இறங்கினார்கள். “ஈழத்தில் வாழ வேண்டுமா? நீ மெளனியாக இரு, அல்லது அரசை எதிர்த்து எழுதாதே” என்ற நிலையைக் கடந்து எழுதுபவர்களுக்கு எதுவும் நிகழ்ந்துவிடலாம் என்ற சூழ்நிலையே இப்போது நிலவுகிறது. என் இலக்கியப் பயணத்தில் அந்த நெருக்கடியே சிறையெனச் சூழ்கிறது.
2020இல் மன்னாரைச் சேர்ந்த கவிஞர் அஹ்னாப் ஜஸீம், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையகுற்றச்சாட்டில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டிருந்தார். அஹ்னாப் ஜஸீம் பள்ளி ஆசிரியரும்கூட. அவர் எழுதிய கவிதை நூல் ‘உயிர்த்த ஞாயிறு’ தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் அறையிலிருந்தது என்பதற்காகவே அவர் கைதுசெய்யப்பட்டார். சிறைக்கும் நீதிமன்றத்திற்கும் வீட்டிற்கும் அவரின் அம்மா கண்ணீரோடு அலைந்துலைந்தார். ஓராண்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 2021ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார். அவரது விடுதலையில் சிங்களப் படைப்பாளிகளின் குரல் பெரும் பங்கு வகித்தது. இலங்கையில் சிறுபான்மை மக்கள்மீது மிகவும் கடுமையான ஒடுக்குமுறைகளை மேற்கொள்ளும் நோக்கில் பயங்கரவாதத் தடைச்சட்டம் படைப்பாளிகளின் குரலையும் ஒடுக்குகிறது. அது தமிழர்களை மாத்திரமின்றிச் சிங்களவர்களையும் பேதமின்றி ஆபத்திற்கு உள்ளாக்குகிறது. அதனால் பல சிங்களப் படைப்பாளிகள் நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 10ஆம் திகதி கிளிநொச்சியில் மூத்த ஈழ எழுத்தாளர் நா. யோகேந்திரநாதனின் ‘நீந்திக்கடந்த நெருப்பாறு’ நாவலை வெளியிட்டிருந்தோம். அந்த நாவல் வெளியாகி இரண்டு மாதங்களின் பின்னர் அதாவது ஏப்ரல் 11ஆம் திகதி பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அந்த நாவலை வெளியிட்டமைக்காக என்னை விசாரணைக்கு அழைத்திருந்தது. இந்நாவல் விடுதலைப் புலிகளின் ஆனையிறவுத் தாக்குதலுக்கு உறுதுணையாக நடத்தப்பட்ட குடாரப்புத் தரையிறக்கம் பின்களச் சமரைப் பற்றிய புனைவாக எழுதப்பட்டது. நாவலைப் படிக்கும் புதிய தலைமுறையினர் இத்தகைய தாக்குதல்களை நடத்த முடியும் என்றும் இது விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முனைகிறது என்றும் என்மீது விசாரணை தொடுக்கப்பட்டது. ‘அத்தகைய நூலை நீங்கள் ஏன் வெளியிட்டீர்கள்’ என்பதுதான் என்னிடம் வைக்கப்பட்ட பிரதான கேள்வி. அவர் மூத்த எழுத்தாளர், அவருக்கு மதிப்பளிப்பதற்காக நிகழ்வை நடத்தியதாகக் கூறினேன். அத்துடன் முதுமையில் நோய்வாய்ப்பட்ட நிலையில் அவர் இருப்பதனால் இந்த நிகழ்வின் தலைமையைப் பொறுப்பேற்று நடத்திக் கொடுத்ததாகவும் கூறினேன்.
விசாரணை இடம்பெற்று இரண்டு மாதங்களுக்குப் பின்னர் கடந்த ஜூன் மாதம் 16ஆம் திகதி ‘பயங்கரவாதி’ நாவல் தொடர்பில் வாக்குமூலம் வழங்க விசாரணைக்கு வருகை தருமாறு எழுத்துமூல அழைப்பாணை எனக்கு விடுக்கப்பட்டிருந்தது. நான் பள்ளிக்குச் சென்றிருந்த சமயத்தில் இக்கடிதத்தை எனது தாயாரிடம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு வழங்கிச் சென்றிருந்தது. அம்மா அச்சமடைந்தார். அவர்களின் வருகை நான் வசிக்கும் பகுதியில் பதற்ற நிலையை ஏற்படுத்திற்று. தகவலை எனக்குத் தெரிவிக்காமல் இருக்க முயன்ற அம்மா தன்னால் இயலாத நிலையில் எனக்குத் தொலைபேசிமூலம் அறியத் தந்தார். வகுப்பறையில் கற்பித்துக்கொண்டிருந்த நான் தொடர்ந்து கற்பிக்க முடியாமல் பதகளிப்புக்கு உள்ளாகினேன். நெருக்கடியை மறைத்துக்கொண்டு பள்ளிப் பணியை முடித்துத் திரும்பிய அன்றைய நாள் உக்கிரமாய்க் கடந்துபோனது.
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அழைத்திருந்த நேரத்தில் விசாரணைக்கு முன்னிலையாகி இருந்தேன். “நீங்கள் பிரபாகரனைப் பற்றி எழுதி மீண்டும் பிள்ளைகளை ஆயுதம் ஏந்திப் போராட வைக்கப் போகிறீர்களா” என்று விசாரணை அதிகாரி தொடக்கத்திலேயே கேட்டார். “நாங்கள் பிரபாகரன் என்ற பெயரை உச்சரிக்கத் தடுக்கப்படுகிறோம். அவரின் புகைப்படத்தை நாங்கள் வைத்திருக்கவில்லை. ஆனால் அவரைப் பற்றிச் சிங்களத் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் பேசாத நாட்களில்லை. கமால் குணரத்தின என்ற உங்கள் இராணுவ அதிகாரி பிரபாகரன் ஒழுக்கமுள்ள சிறந்த தலைவர் என்று புத்தகம் எழுதுகிறார். ஆனால் எங்களை மாத்திரம் பிரபாகரன் பற்றி எழுதக் கூடாது என்று சொல்கிறீர்கள். சிங்களத் தலைவர்கள் பிரபாகரனின் பெயரை உச்சரிப்பதைக் கேட்டுவிட்டுத்தான் என் வகுப்பறையில் பிள்ளைகள் வந்து யார் அந்த பிரபாகரன் என்று கேட்கிறார்கள்” என்றேன்.
சிங்கள அரசியல்வாதிகள் பிரபாகரன் என்று பேசி அரசியல் செய்வதைத் தான் ஏற்றுக்கொள்வதாக அந்த விசாரணை அதிகாரி கூறினார். ஆனால் சிங்கள அரசியல்வாதிகளும் தமிழ் அரசியல்வாதிகளும் நினைத்திருந்தால் இந்தப் பிரச்சினையைச் சுமூகமாகத் தீர்த்திருக்க முடியும் என்றும் கூறினார். அப்படி நடந்திருந்தால் இத்தனை இழப்புக்களையும் வலிகளையும் நாங்கள் சந்தித்திருக்கவும் தேவையில்லையென்றும் பதில் அளித்தேன். பின்னர் நான் பிறந்ததுமுதல் கல்வி கற்று ஆசிரியர் தொழிலுக்கு வந்ததுவரையான வாழ்க்கை வரலாறு வாக்குமூலமாகப் பெறப்பட்டுப் பதிவுசெய்யப்பட்டது. அதன் ஊடாக விடுதலைப் புலிகளின் அமைப்பில் இருந்திருக்கிறேனா என்று அவர்கள் ஆராய்ந்திருக்க வேண்டும்.
அவர்களிடம் என்னைக் குறித்துத் திரட்டப்பட்ட பெரும் தகவல் கோப்பு இருந்தது. சிங்களத்தில் எழுதப்பட்ட முப்பதுக்கும் மேற்பட்ட கடிதங்களைத் தட்டிவிட்டு ஒரு தாளை எடுத்து இதுவா உங்கள் வீடு என எனது வீட்டின் புகைப்படத்தைக் காண்பித்தார்கள். நான் எழுதிய புத்தகங்களின் பட்டியல் முழுமையாக அவர்களிடம் இருந்தன. அவற்றை ஒவ்வொன்றாகப் படித்துச் சரிபார்த்துக் குறித்துக்கொண்டார்கள். ‘2008இல் யாழ்ப்பாணத்தில் இருந்துகொண்டு முதல் புத்தகத்தை எப்படி இந்தியாவிலுள்ள காலச்சுவடு பதிப்பகத்தில் வெளியிட்டீர்கள்’ என்று கேட்டார்கள். போர்ச் சூழலில் புத்தகம் இங்கு அச்சிட முடியாது என்றும் இணையவழித் தொடர்பு மூலமாக அங்கு வெளியிட்டேன் என்றும் கூறினேன். ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’ என்ற அந்த நூல் எதனைப் பற்றியது என்றும் கேட்டுக் குறித்துக்கொண்டார்கள்.
பின்னதாக, ‘பயங்கரவாதி’ நாவல் தொடர்பில் காவல்துறைமா அதிபர் விசாரணை மேற்கொள்ளப் பணித்திருப்பதாகக் கூறிக் கேள்விகளை முன்வைத்தார்கள். நாவலில் இடம்பெறும் மாறன் என்ற பிரதான கதாபாத்திரம் யார், அவர் இப்போது எங்குள்ளார் என்று முதல் கேள்வி முன்வைக்கப்பட்டது. அது ஒரு கற்பனைக் கதாபாத்திரம் என்றும் போரில் தாய் தந்தையரை இழந்து கல்வியை விடாமுயற்சியுடன் கற்ற பல மாணவர்களின் பாதிப்பாகவும் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று முன்னிலை வகித்த மாணவர்களின் பாதிப்பாகவும் அந்தக் கதாபாத்திரத்தைப் புனைந்ததாகச் சொன்னேன். நாவலில் வரும் இராணுவக் கதாபாத்திரங்கள் யாரைக் குறிக்கின்றன என்று கேட்கப்பட்டது. அவையும் கற்பனைப் பாத்திரங்களே என்றேன். இராணுவத்தால் மாறன் கொல்லப்படுவதாக எழுதியுள்ளீர்களா என்று கேட்கப்பட்டது. 2009ஆம் ஆண்டுச் சூழலில் பல மாணவர்களும் மாணவத் தலைவர்களும் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்றும் அத்தகைய பாதிப்பின் பின்னணியை வைத்தே இவ்வாறு எழுதியிருப்பதையும் சுட்டிக்காட்டினேன்.
இராணுவத்தினர் மத்தியிலுள்ள நல்ல இராணுவ அதிகாரிகளையும் விடுதலைப் புலிகளால் காப்பாற்றப்பட்ட இராணுவச் சிப்பாய்களையும் பற்றி ‘பயங்கரவாதி’ நாவல் பேசுவதையும் விளக்கினேன். நாவல் தொடர்பாகப் பல பக்கங்கள் கொண்ட நீண்ட அறிக்கையை வாசித்து நாவலின் பல்வேறு பகுதிகள், கதாபாத்திரங்கள் குறித்தெல்லாம் வாக்குமூலம் பெறப்பட்டது. இறுதியாக என்ன சொல்லப்போகிறீர்கள் என்று விசாரணை அதிகாரி கேட்டார். எந்தச் சூழ்நிலையிலும் கல்வியைக் கைவிடாத மாறன் என்ற கதாபாத்திரம் வழியாக இந்த நாவல் கல்வியைத்தான் பேசுகிறது என்றும் இனிவரும் காலத்தில் போரும் மரணங்களும் அழிவுகளும் இடம்பெறக் கூடாது என்பதை வலியுறுத்தவே நாவலை எழுதியிருப்பதையும் தெளிவுபடுத்தினேன். அத்துடன் எனது சகோதரர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் எந்தக் காலப் பகுதியில் இணைந்தார், அவரது இயக்கப் பெயர் என்ன, எப்போது மரணமடைந்தார், எந்தப் படையணி போன்ற விவரங்களையும் வாக்குமூலமாகப் பெற்றுப் பதிவுசெய்தார்கள். மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டால் முன்னிலையாக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இரண்டு மணிநேரம் தீவிர விசாரணை இடம்பெற்றது. இதற்கு முந்தைய விசாரணை மூன்று மணிநேரம் நீண்டிருந்தது. என்னை எழுதாமல் தடுப்பதற்கே இந்த விசாரணை. இதற்கான அழைப்பு, அலைச்சல் என்பன மிகவும் தந்திரமான சித்திரவதைகளைக் கொண்டது. என்னைப் பதற்றப்படுத்துவதும் தனிமைப்படுத்துவதும் தான் அவர்களின் நோக்கம்.
2009இல் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பொதுச்செயலாளராக இருந்த சமயத்தில் எனக்கு அரசப் படைகள் கொலை அச்சுறுத்தல் விடுத்தன. பிற்காலத்தில் குற்றத்தடுப்புப் பிரிவினர் (CID) நான் வசிக்கும் பகுதியில் அடிக்கடி வந்து விசாரிப்பதை வழக்கமாக்கிக்கொண்டனர். அவர்கள் எனது வீட்டிற்கு வராமல் எனது வீட்டுச் சூழலிலும் நண்பர்களிடமும் விசாரிப்பதுதான் எனக்கு மிகுந்த அச்சத்தையும் மனவுளைச்சலையும் உண்டு பண்ணியது. அதுவே அவர்களின் அணுகுமுறையும் நோக்கமும். இப்போது அது பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் விசாரணையாக வந்துநிற்கிறது.
ஈழத்திலும் சரி, புலம்பெயர் தேசத்திலும் சரி தமிழ்ப் படைப்பாளிகளின் மௌனம் பெரும் கவலையைத் தந்தது. அவர்களின் மௌனமும் என்னைப் பயங்கரவாதி என அழைப்பதைப் போலிருந்தது. தனிப்பட்டரீதியில் சிலர் ஆதரவைப் பகிர்ந்தாலும் நாட்டிற்கு வந்து செல்ல வேண்டும் என்பதனால் வெளிப்படையாகக் காட்ட முடியாதிருப்பதாகவும் கூறினார்கள். நாட்டில் வாழ்ந்துகொண்டு இப்படி எழுத எப்படி முடிகிறது என்று கேள்வி எழுப்பப் பலர் இருந்தனர். இப்போது அவர்களும் மௌனம். ஆனால் இத்தகைய அநீதிகளின்போது படைப்பாளிக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கப் பலரும் முன்வருவதில்லை.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஜெனாத் என்ற இளைய படைப்பாளி தான் எழுதிய கதை ஒன்றுக்காக ஊர் அமைப்புக்களின் கடுமையான அச்சுறுத்தல்களுக்கும் புறக்கணிப்புக்கும் உள்ளாகியிருக்கிறார். தமிழ்நாட்டில் பெருமாள் முருகனுக்கு நடந்த அதே கொடுமைதான் ஜெனாத்திற்கு ஈழத்திலும் நடக்கிறது.
‘சினம்கொள்’ என்ற ஈழப் படம் வாயிலாகக் கவனத்தை ஈர்த்தவர் ரஞ்சித் ஜோசப். அவர் இயக்கியுள்ள புதிய படைப்பான ‘ஊழி’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழை வழங்குவதில் இழுத்தடிப்பை மேற்கொண்ட திரைப்படக் கூட்டுத்தாபனம், பின்னதாக எட்டு இடங்களில் தணிக்கை செய்திருந்தது. 2009இல் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில் ஒரு தந்தை கைது செய்யப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டு அவரது குடும்பம் சிதைகின்ற கதையைப் பேசும் அத்திரைப்படத்திற்கு நான் வசனம் எழுதியிருந்தேன். அதில் ஒரு ஆசிரியராக நடித்ததுடன் ஈழத்துக் கவிதைகள்பற்றிக் கற்பிக்கும் ஒரு காட்சியில் சண்முகம் சிவலிங்கம், சு. வில்வரத்தினம், சேரன், புதுவை இரத்தினதுரை, வ.ஐ.ச. ஜெயபாலன் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டிருந்தேன். அதனைக்கூட ஒலித்தணிக்கை செய்திருந்தது இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனம். வெட்டிக் கொத்தித் தணிக்கை செய்த பிறகும் திரையரங்குகளில் படத்தை வெளியிட முயற்சி செய்தபோது விசாரிப்புக்களாலும் வேறு பல மறைமுக இடையூறுகளாலும் படத்தைத் திரையிடுவதற்குப் புலனாய்வுத்துறையால் பல தடங்கல்கள் ஏற்படுத்தப்பட்டன.
பௌத்த மதத்தை அவதூறு செய்தார் என்ற பெயரில் சிங்கள நாடக நடிகை ஜெயனி நடாஷா எதிரிசூரியா கடந்த மே மாதம் கைதுசெய்யப்பட்டிருந்தார். தொலைக்காட்சிகளில் நகைச்சுவை நிகழ்ச்சியை நடத்தும் அவர், ‘மோடிபிமானயா’ (முட்டாள்களின் பெருமை) என்ற நிகழ்ச்சியில் பௌத்தத்தை இழிவுபடுத்தினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். அத்துடன் அவருடைய நிகழ்ச்சிக்கு உதவியவர்கள், அனுசரணை வழங்கியவர்மீதும் விசாரணை நடத்தப்படுகிறது. இலங்கைத் தீவில் இப்படிப் பல வழிகளில் கருத்துச் சுதந்திரம் மீதான ஒடுக்குமுறைக் கரங்கள் படிகின்றன. கருத்துகள் எப்படியும் இருக்கலாம். அதனை விமர்சிக்கும் உரிமை எவருக்கும் இருக்கிறது. ஆனால் கருத்து வெளிப்பாட்டை அடக்கி ஒடுக்குவது ஜனநாயக விரோதமானது.
இவற்றைப் படைப்பாளிகள் தட்டிக் கேட்க வேண்டும். இவற்றிற்காகப் படைப்பாளிகள் குரல் கொடுக்க வேண்டும். இப்படியான அநீதிகளின்போது படைப்பாளிகள் மௌனியாக இருப்பது அறமல்ல. “எழுத்தாளர்கள் பாதுகாப்பான எல்லைக்குள் நின்றுகொண்டு தங்களுடைய நூற்பிரதிகளை விற்பனை செய்யத் தெரிந்தவராக, எவரையுமே தொந்தரவு செய்யாத எழுத்துகளுக்குச் சொந்தக்காரர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்றும் யாரையும் தொந்தரவு செய்யாத எழுத்து எதற்கு” என்றும் சொல்கிற அருந்ததி ராயின் கேள்வி கணிசமான நமது படைப்பாளிகளுக்கும் பொருந்தும்.
இனவழிப்புப் போர் நிகழ்ந்த மண்ணில் இன்றும் அது பல வடிவில் தொடரும்போது அவற்றைப் பேசாமல் தமக்கு எந்த வகையிலும் ஆபத்து வராத விடயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்போம் என்று இலக்கியம் படைக்க நினைப்பது மிகப்பெரிய அறப் பிறழ்வு.
மின்னஞ்சல்: deebachelvan@gmail.com