மதிமயக்கம்
ஓவியம்: வின்சென்ட் வான்கோ
மதிமயக்கம்
நான் என்னுடைய மாபெரும்
சிறிய துயரங்களிலிருந்தெல்லாம்
விடுதலை அடைந்துவிட முடிவு செய்தேன்.
ஒரு புகைப்படத்தில் நான் கண்ட
சிட்டுக்குருவி
சூரியனை விழுங்கிக் கொண்டிருந்தது.
ஆவேசம் கொண்ட என் உவகை கரையைக் கடந்தது.
நான்
கற்பூரவள்ளிகளையும்
தொட்டாச்சிணுங்கிகளையும்
கொடிமுல்லைகளையும்
பவளமல்லிகளையும்
கொண்டு என் பால்கனியை நிறைத்தேன்.
அலங்காரத் தொட்டிகளில் வெண்ணிறக் கூழாங்கற்களைப் போட்டு அழகிற்கு அழகூட்டினேன்.
ஒரு
சோகமான வெண்ணிற சிற்பத்தின் வாயிலிருந்து கொட்டுகிற நீரூற்றை ஒரு மூலையிலும்,
சிறிய கண்ணாடிக் குடுவையில்
சர்வகாலமும் நீந்துகிற
செந்நிற மீன்கள் இரண்டை
இன்னொரு மூலையிலும் உலவ விட்டேன்.
மணி பிளான்ட்டும், கொடி முல்லையும்
இன்னும் க்ரில் கம்பிகளைப் பற்றிப் படரவில்லை.
கிளிகள் என் நந்தவனத்தைச் சுற்றி
இன்னும் வட்டமிட ஆரம்பிக்கவில்லை.
நீரூற்ற போகும் சமயங்களில் பட்டாம்பூச்சிகள்
இறக்கைகள் படபடக்க
அலங்காரப்
பூச்சட்டிகளுக்கு மேலே பறக்கவில்லை .
மனதில் விரிந்து வாசனை பரப்பும் எந்த மலரும் இன்னும் தொட்டிகளில்
வளரவில்லை.
மலரவில்லை.
போகவர கைகால் பட்டால்
தொட்டாச்சிணுங்கி
சினுங்கிப் பிணங்குகிறது.
ரோஜா செடியின் வேர்களுக்கு அருகே
இரண்டு கம்பளிப் புழுக்கள் நெளிந்து
கொண்டிருக்கின்றன.
காற்றுக்கு அசைகிற ஊஞ்சலோ,
செடிகளிலும்,
மீன் தொட்டியிலும்
மோதி உடைப்பேன் என பயமுறுத்துகிறது.
ஒரு சிட்டுக்குருவி
சூரியனை தன் சிறிய வாயால்
கொத்திக் கொத்தி விழுங்குவது அழகுதான்.
ஆனால் அதற்கெல்லாம்
நான் மதிமயங்கி இருக்கக் கூடாது.
மின்னஞ்சல்: deepunithila@gmail.com