கடிதங்கள்
இன்றைய காலகட்டத்தின் பெரு ஓட்டத்தில் நாம் இழந்தது உடல் நலத்தையும் மனநலத்தையும்தான். துரித உணவு என்ற அரக்கன் குழந்தைகளையும் மூத்த குடிமக்களையும் பெருநுகர்வுக் கலாச்சாரம் இளைய தலைமுறையும் சூழ்ந்துகொண்டது. வாழ்க்கை தொலைந்துபோனது. இது மருத்துவர் கு. சிவராமன் நேர்காணலில் பதிவாகியுள்ளது. மருத்துவம் சார்ந்த பதிவுகளை முன்னெடுத்துச் செல்லும் காலச்சுவடுக்கு நன்றி.
ஜெயராம் ஜி
கடையநல்லூர்
நீண்டகாலக் காலச்சுவடு வாசகன். கடந்த இதழில் தொடர் 80+ பகுதியில் எஸ்.வி. ஆர். குறித்த கட்டுரை வெளியாகியிருந்தது. தியடோர் பாஸ்கரன் ஆன்றவிந்தடங்கிய அறிவுசார் பெரியார்; பல்துறை அறிஞர். எஸ்.வி.ஆரின் மனம் நிறைந்த நெடுநாள் தோழர்.
எஸ்.வி.ஆருக்கும் அவரை ஒத்த பேராசான்களுக்கும் இருக்கிற சிறப்புத் தகுதிகளில் அறிவாற்றலும் நினைவாற்றலும் குறிப்பிடத்தக்கவை. எஸ்வி.ஆருடன் உரையாடும்போதெல்லாம் அவருடைய நினைவாற்றல் கண்டு வியப்பது வழக்கம். தான் நக்சல் இயக்கத்தின் ஒரு அங்கமாக கோங்காடு பண்ணையார் கொலை வழக்கிலிருந்து இன்றுவரை உளவுப் பிரிவின் கண்காணிப்பில் இருப்பதை அச்சப்படாமலும் ஒளிவு மறைவு இன்றியும் ஒத்துக்கொள்வார். இந்திய கம்யூனிஸ்ட் மாநிலப் போராளிகளில் ஒருவராகத் தொழிலாளர் தலைவராகத் திகழ்ந்த தேனி சுந்தரராஜனோடு உரையாடுகையில் ‘லும்பன்’ என்ற வார்த்தைக்கு ‘உதிரிப் பாட்டாளி’ என்கிற வார்த்தை சரியா தவறா என்கிற விவாதத்தில் லெனின் கிரேட்டிலிருந்து நாகப்பட்டினம் கம்யூனிஸ்ட் கூட்டம்வரை பொருள் தேடிக் கொண்டிருந்தார்.
எஸ்.வி.ஆரின் தந்தை காளியப்பா. தன் சாதியைப் பின்னொட்டாகச் சேர்த்ததில்லை. அவரது கையொப்பம்கூடக் காளியப்பா என்றுதான் இருக்கும். எஸ்.வி.ஆரின் கல்லூரிப் படிப்பின் இரண்டாம் ஆண்டின்போதுதான் அவரது தந்தை காலமானார். அவர் தந்தை தமிழாசிரியர் அல்லர். எட்டாம் வகுப்புவரை கற்பித்த நடுநிலைப்பள்ளி ஆசிரியர். நாகராஜனுடன் சேருவதற்கு முன்பே எஸ்.வி.ஆர். ஒரு கம்யூனிஸ்ட். ரஜ்னி கோத்தாரி, நீதியரசர் வி.எம். தார்க்குண்டே ஆகியோரின் வற்புறுத்தலின் பேரில் 1982இல் பியுசிஎல் அமைப்பில் சேருவதற்கு முன்பே ‘பீப்பிள் டெமாக்ரடிக் ரைட்ஸ் அசோசியேஷன்’ என்ற அமைப்பில் செயல்பட்டுக்கொண்டிருந்தார். அவரது நேசத் துணைவியார் ஈரோட்டில் மிஷன் மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்தார். 1978-90 காலகட்டத்தில்தான் நீலகிரி மாவட்டம் நடுவட்டம் ப்ராஸ்பெக்ட் எஸ்டேட் மருத்துவமனையில் வேலைசெய்தார். ‘லோகியான் ப்ராஜெக்ட் சேர்ந்ததற்கான சூழலின் காரணம். இவையெல்லாம் எஸ்விஆர் பல நேர்வுகளில் என்னோடு பகிர்ந்தவை.
தியடோர் பாஸ்கரனின் கட்டுரையில் தகவல் பிழைகளைச் சுட்டிக்காட்டினால் எஸ்விஆரும் பாஸ்கரனும் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்கிற எண்ணம் சங்கடத்தை உருவாக்கினாலும் காலம் கடந்தும் நின்று பேசும் காலச்சுவட்டில் ஒரு பேராசானின் வாழ்க்கை நிகழ்வுகள்குறித்த பதிவு தவறுகளோடு இடமபெற்றுவிடக் கூடாது என்கிற நல் உட்கிடக்கையோடு இதை எழுதுகிறேன்.
கே. விஜயன், வழக்குரைஞர்
உதகை